உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, ஜூலை 28, 2007

அரசியல்வாதிகளும் குரங்குக்கூட்டமும்

ஒரு நாளு ஒரு தொப்பி வியாபாரி காட்டு வழியே தனியா நடந்து போய்கிட்டு இருந்தான்.. ஊர் விட்டு ஊர் போய் தொப்பி விக்கிறது அவன் வேலை. அது மாதிரியே ஒரு நாள் போகும் போது வெயில் அதிகமாக இருந்ததுன்னு அப்படியே அசதியா காட்டுல இருந்த மரத்தடியில் கட்டய சாச்சுட்டான். எழுந்து பார்த்தா கூடையில இருந்த தொப்பில ஒண்ணை கூட காணோம்... அட இது என்னட சோதனைன்னு பரபரன்னு தேடி பாத்தான்..

குர்ரு.. குர்ருன்னு ஒரே சத்தம்.. செம சவுண்டு.. என்னடன்னு அண்ணாந்து பாத்தாக்கா.. நம்ம மூதாதையருங்க எல்லாம் சாலியா காலை ஆட்டிக்கிட்டு ஆளுக்கு 3-4 தொப்பிய மாட்டிக்கிட்டு ஒரே குஜால்ஸ் தான்..

விட்டா இவனுக்கே தொப்பிய விக்கற மூட்ல இருக்காங்க.. இருக்கிற அத்தனை பல்லையும் காட்டி பழிப்பு வேற... நம்மாளுக்கு வேற மரம் ஏற தெரியாதா... என்ன பண்றதுன்னு முழிக்கிறான்..

ஏய் சூ சூ.. அப்படின்னு விரட்டறான்.. குரங்குகளும் அப்படியே.. எகிறி எகிறி எட்டி புடிக்க குதிக்கறான்.. நம்ம மரத்து ஆளுங்களும் அப்படியே குதிச்சு அவனை வெறுப்பேத்தறாங்க...

உடனே நம்மாளுக்கு ஒரு ஐடியா.. தலையில இருக்கிற தொப்பிய தூக்கி அடிக்கிறான்... குரங்குங்க ஒரு தடவ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிடுச்சு.. உடனே தொப்பிய அவன மாதிரியே தூக்கி வீசிட்டு அப்படி ஒரே எக்காளம்.. நம்மளுக்கு சந்தோஷம் பிடிபடலை.. அட முட்டாப்பய குரங்குகளான்னு சிரிச்சுட்டே எல்லத்தையும் பொறுக்கிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடி போயிட்டான்..

காலம் வேகமா போச்சு.. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறுச்சு..

ஆனா நம்மாளுங்க என்னைக்கு முன்னேறி இருக்காங்க..

முதல்ல போன அந்த தொப்பிக்காரனோட பையனும் அதே வேலை பண்ணிட்டு, அவனோட மகனும் அதே வேலைக்கு வந்துட்டான்...

அதே காட்டு பாதை... அதே மரம்.. அதே வெயில்.. அதே மாதிரி இவனுக்கும் தூக்கம் வந்துடுச்சு... என்ன செய்ய அப்படியே தொப்பி கூடையை ஓரமா வெச்சுட்டு இவனும் கட்டையை சாச்சுக்கிட்டான்...

அதே குரங்குக்கூட்டம்.. அழகா இறங்கி வந்து எல்லா தொப்பியையும் எடுத்து போட்டுக்கிட்டு மரத்து மேல போய் உக்காந்துக்குச்சு...

நம்மாளு கனவுல நமீதா கூட டூயட் பாடிட்டு பொறுமையா எந்திரிச்சு பாத்தா தொப்பியை காணோம்.. திக்குனு ஆயிடுச்சு...
மரத்து மேல ஒரே கூச்சல்.. அண்ணாந்து பாத்தாக்கா குரங்கு எல்லாம் இவனோட தொப்பிய ஆளுக்கு 2-3ன்னு போட்டுக்கிட்டு ஒரே அலம்பல்..

இவன் அசரலை.. என்ன பண்றதுன்னு யோசிச்சான்..


அட நம்ம தாத்தா தான் சொல்லியிருக்காறே?.. இதே மாதிரி அவருக்கு நடந்தப்ப என்ன பண்ணாருன்னு...

உடனே ஆ ஊன்னு கத்தி குரங்கும் திருப்பி பண்ணுதான்னு செக்கெல்லாம் பண்ணாம சட்டு புட்டுன்னு தலையில இருந்த தொப்பிய தூக்கி வீசியெறிஞ்சான்...

மேல கூட்டத்துல மயான அமைதி.. என்னடா ரியாக்சனே காணோம்.. அப்படின்னு டென்ஷனா பாத்துக்கிட்டு இருக்கும் போதே.. ஒரு குரங்கு.. ஸ்லோ மோஷன்ல இறங்கி வந்துது... தலைவன் குரங்கு போல.. நேரா போய் அவன் வீசி எறிஞ்ச தொப்பிய எடுத்துக்கிட்டு மரத்து மேல உக்காந்துக்குச்சு...

இது என்னடா புதுசா இருக்குன்னு நம்ம பய ஆடி போயிட்டான்.. மரத்து மேல இருந்து ஒரு குரல்..

"டேய் உனக்கு மட்டும் தான் தாத்தா இருக்காரா.. எங்களுக்கும் இருக்காரு.. போடா"

என்னடா இந்த கதை இப்ப எதுக்குன்னு பாக்கறீங்களா?

நம்ம அரசியல்வாதிங்களும் இப்படி தான் பாட்டன் பூட்டன் காலத்து தந்திரமெல்லாம் மக்கள் கிட்ட ட்ரை பண்ணிட்டு இருக்காங்க.. குரங்கு கூட்டம் மாதிரி நம்ம மக்கள் என்னைக்கு முழிச்சிக்க போறாங்கன்னு தெரியலை...

வியாழன், ஜூலை 19, 2007

புகைப்படப்போட்டியில் நானும்...

எனது 2 MP Nokia 6630 மொபைல் போனில் எப்போதோ எடுத்த எனக்கு பிடித்த இரண்டு புகைப்படங்கள்

என்னுடைய மாமாவின் 5 வயது மகன் விக்னேஷ்...







காகிதப் பூக்கள் கசங்காமல்...

(clarity பற்றி கவலை பட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்..)

செல்லாவின் நல்ல முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்....


திங்கள், ஜூலை 09, 2007

மாலன் VS செல்லா - சில கருத்துக்கள்

பத்திரிகைகளுக்கு ஒரு இப்படி தான் செய்திகளை தர வேண்டும் ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது... அல்லது உள்ளதாக நினைத்துக் கொள்கின்றன... அதன் அடிப்படையில் நாகரீகம் என்று தங்களுக்கு படுவதை செய்திகளாக வெளியிடுகிறது..

அங்கே ஒரு எடிட்டர் இருப்பார், பப்ளிஷர் இருப்பார் ஒரு கொள்கை இருக்கும், கட்சி சார்பு இருக்கும், மக்களிடம் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும்... இவை எல்லாம் சேர்ந்தோ, தனி தனியாகவோ இருக்கும்... இருந்தே தீரும்.. ஒரு எழுத்தாளர் தான் நினைத்ததை அப்படியே எழுதி வெளியிட முடியாது... இந்த கட்டுக்குள் அடங்கியே தீர வேண்டும்...

ஆனால் வலைப்பதிவுகள் அப்படி அல்ல... அது ஒரு தனிப்பட்ட மனிதரால் எழுதப்படுவது... எண்ணங்களின் பிரவகங்களை அப்படியே எழுத முடியும்...யாரும் கட்டுப்படுத்த முடியாது... கிட்டத்தட்ட லாபநோக்கு இல்லாத ஒரு சிற்றிதழ் போல.. அது அப்படி உணர்ச்சி பூர்வமாக தான் இருக்கும்...

பத்திரிகைகளில் எப்படி குமுதம், விகடன், தந்தி, நக்கீரன், தராசு, நெற்றிக்கண், ஹிந்து என்று ஆரம்பித்து, வார மாத தினசரி, காலாண்டு, தேசிய, மாநில, மொழி வாரியாக, பொருளாதரம், அரசியல், நடப்பு, ஆட்டோமொபைல், கணினி என்று வகை வாரியாக நல்ல இதழ்களிருக்கிறதொ, அதே போல சரோஜாதேவி போன்ற வேறு விதமான பத்திரிகைகளும் வருவதில்லையா...?

அய்யோ கெட்ட பத்திரிகைகள் வருகிறதே நான் பத்திரிகையே படிக்க மாட்டேன் என்பது அறிவீனம் இல்லையா?

அப்படி தான் வலைப்பதிவும்... நல்லதும் கெட்டதும் நிறைந்து இருக்கும்.. ஆன்மீகமா அய்யா இருக்கு, நாத்திகமா அதுவும் இருக்கு, நகைச்சுவையா, நையாண்டியா? நாட்டுநடப்பா, அரசியலா, பொதுஅறிவா பொருளாதாரமா? எல்லாமே இலவசங்க... மெனக்கெட்டு தேடி தேடி பதிவுகள் எழுதி தமிழ் கட்டுரைகள் வளர்க்க பாடு படறாங்க... பொத்தாம் பொதுவில வலையுலகை குறை சொல்வதை நான் ஒத்து கொள்ள மாட்டேன்...

மாலன் அய்யா நல்ல கருத்துக்கள் பலவும் சொல்லியிருக்கார்.. ஆனால் வலையுலகில் கெட்டதும், பின்னூட்ட கயமைகளும் மட்டும் நடப்பது போல ஒரு தோற்றம் உண்டாக்குவதை ஒப்புக்கொள்ள இயலாது...

பதிவர்கள் பலர் தாங்கள் நம்பும் கருத்தை நேசிக்கறாங்க அய்யா... அதை ஒருத்தர் மறுக்கும் போது தாங்கிக்க முடியாம தனிமனித தாக்குதல்ல இறங்கிடறாங்க... பத்திரிகை உலகத்துல கூட இது நடக்குங்க..... மாத்திப்பாங்க.. அதையும் மீறி அப்படி தொடர்ச்சியா தனிமனித தாக்குதல்ல ஈடுபடறவங்க தானாவே மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுருவாங்க....

//தனிநபர் புகழ்ச்சி, தனிந்பர் தாக்குதல் இல்லாமல் பதிவுகளை எழுதுவேன். பின்னூட்டம் இடுவேன், பின்னூட்டங்களைப் பிரசுரிப்பேன்.//

ஒப்புகொள்கிறேன்...


//எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்//
கும்மியடிக்கும் மக்கள் பாவம்ங்க... ஆபாசம் இல்லைன்னா அனுமதிக்கறதுல என்ன தப்பு? அது என் பதிவை ஒருத்தர் படிச்சிருக்கார் அப்படிங்கறது ஒரு அங்கீகாரம்ங்க... மனிதன் உணர்ச்சிகளால் ஆனவன்... என்ன செய்ய?

//மாற்றுக் கருத்துக்களை பொறுமையுடனும், சமனுடனும் அணுக முயற்சிப்பேன்;//
நிச்சயமாக முயற்சி பண்றேன்..

//ஒருவரது கருத்துக்களை மறுப்ப்தையோ, நிராகரிப்பதையோ, தரவுகளின் அடிப்படையில் செய்வேன்
தான் சார்ந்துள்ள ஜாதி, மதம், அரசியல் கட்சி, அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரம் இவற்றை மற்றவர்கள் மீது திணிக்கும் வன்முறையை
அனுமதியேன்.//


வன்முறை என்று எதை சொல்கிறீர்கள்.. ரத்த களரியாக பத்திரிகைகளிலும் TVயிலும் நடக்கும் விமரிசனங்களை என்ன செய்ய முடிகிறது? தான் சார்ந்துள்ள ஜாதி அடிப்படையில் சாதகமான ஒரு விமரிசனம் வரும் போது சாதி அடிப்படையில் தான் எதிர்வினையும் இருக்கும்.. நியாயப்படுத்தவில்லை.. சமூகத்தில் மலிந்து கிடக்கும் விஷயங்கள் பதிவுலகிலும் எதிரொலிக்கிறது... பதிவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்லவே?.. நம்ம மக்கள் தானேய்யா? காலம் கனியும்ங்க

//வெறும் பரபரப்பிற்காக்வோ, கவனம் பெறவோ, எழுதுவதையும் அப்படி எழுதுவதையே தங்கள் இயல்பாகக் கொண்டவர்களையும் தவிர்ப்பேன்//

பரபரப்பான தலைப்புகளை எழுதினால் தான் உங்களால் பத்திரிகையே விற்க முடிகிறது... பல சமயம் அவர்களும் நல்ல கருத்துக்களையும் எழுதுகிறார்கள்... இடுகைகளை ஒதுக்கலாமே தவிர பதிவர்களை அல்ல... நல்லதை எடுத்து கொண்டு கெட்டதை விட்டால் போச்சு... உங்கள் பதிவில் செய்தது போல...

எழுத்தார்வமிக்க எல்லோரும் அவ்வளவு எளிதாக பத்திரிகையில் எழுதி விட முடியாது... தங்கள் எழுத்தார்வத்துக்கு ஒரு வடிகாலாக தான் வலைப்பதிவை பயன்படுத்துகிறார்கள்...
சில சமயம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகளை விடவும், கவர் ஸ்டோரிகளை விடவும் வலைப்பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன என்பதை மாலன் கூட மறுக்க மாட்டார் என்று நம்புவோமாக...

வலையுலகில் இல்லாவிட்டால் மாலனுடனும் மற்றும் பல மூத்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்களோடு பேசக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா? அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறி.. அய்யா எழுதுங்க.. அம்மா எழுதுங்கன்னு.. கேட்டுக்கறேன்...

ஞாயிறு, ஜூலை 08, 2007

கவுண்ட்டர் அடித்து வாழ்வாரே வாழ்வார்...

முன்பு ஜூனியர் போஸ்ட் என்ற ஆ.வி குடும்ப இதழ் ஒன்றில் ஒரு செய்தியை எடுத்து அதற்கு வாசகர்கள் கவுண்ட்டர் போடுவார்கள்.. செம கலக்கலாக இருக்கும்..
அந்த பாணியில் நான் சில செய்திகளை கவுண்ட்டர் செய்திருக்கிறேன்..


சிவாஜி பட கெட்டப்பில் திருட்டு வி.சி.டி விற்றவர் கைது...

கூவி கூவி விக்க முடியுமா? அதான் பார்த்தவுடனே எந்த சி.டி விக்கிறார்னு தெரியற மாதிரி வித்துருக்கார்னு நினைக்கறேன்...

கேபிள் டி.வியை அரசே ஏற்று நடத்த திட்டம்?

இனிமே கேபிள் கனக்சன் கட் ஆனா அதுக்கும் மனு எழுதி போட வேண்டியது தான்.. என்ன இதுக்கு மகளிர் சப்போர்ட் அதிகமா இருக்கும்...

இங்கிலாந்தில் வெடி வைத்து ஏராளமானோரை கொல்ல முயற்சி செய்த டாக்டர்கள் கைது...

மக்கள் தொகை அதிகமாயிட்டே போகுது.. ஒத்தை ஒத்தை ஆளா ஆப்பரேஷன்ல எப்பய்யா அவங்க கொன்னு முடிக்கறது.. அதான் அந்நியன் மாதிரி ஒரே ஆபரேஷன்ல ஒரேடியா அட்டவணை போட்டு தூக்கிடலாம்னு பாத்திருக்காங்க... (டாக்டர்கள் மன்னிக்க)

கொட்டிவாக்கத்தில் அடிக்கடி மின்வெட்டு..

வெட்டிவாக்கம்னு பேரை மாத்திடலாமா?

தாம்பரத்தில் குறைகளா? டயல் செய்தால் போதும்...

உடனே ஆட்டோ அனுப்பிடுவாங்களா... அட்ரஸ் தெரிஞ்சுக்க என்னா டெக்னிக் பாத்தீங்களா?

பிரபல ரவுடி வெட்டிக் கொலை..

வெட்டியா எல்லாம் கொல்லலீங்க.. காசு வாங்கிகினு தான் கொன்னோம்.. கூலிப்படையினர் தகவல்...

முகமூடி அணிந்த கணவரை தாக்கிய மனைவி...

முகமூடி இருந்ததால தான் அடி கம்மியா விழுந்தது.. முகமூடி மட்டும் இல்லைன்னா மரண அடி விழுந்திருக்கும்..கவர்மென்ட்டு ஆஸ்பத்திரியில் கணவரின் கலவர பேட்டி..

வந்தனாவோட சேர்ந்து வாழ சம்மதிப்பாரா ஸ்ரீகாந்த்?

ஸ்ரீகாந்த் உங்க மிஸஸ் பேரை கவனிங்க.."வந்த"னா.. அதான் வந்து ரொம்ப தொல்லை பண்றாங்க.. "சென்ற"னான்னு பேரை மாத்திடுங்க.. பொயிடுவாங்க...

திருமண சிக்கலில் பிரபலங்கள்.. ஏன்?

அவிங்க சிக்கல்லாம் வெளியே தெரிஞ்சுடுது... எங்க சிக்கல் எல்லாம் வெளியே தெரியறது இல்லை அவ்ளோ தான் .. அங்கலாய்த்து கொள்கிறார் அப்பாவி பொதுஜனம்..

ஜனாதிபதி தேர்தல் தலைமை செயலகத்தில் நடக்கும்..

அதுலயாவது கள்ள வோட்டு இல்லாம பாத்துக்குங்கய்யா என்கிறார் கள்ள ஓட்டால் கடுமையாக பாதிக்கப்பட்ட நண்பர்..(பின்ன அவர் குடும்பத்தோட அத்தனை ஓட்டையும் ஆட்டைய போட்டுட்டாங்க இல்ல?)


கவுண்ட்டர் அடித்து வாழ்வாரே வாழ்வார்... மற்றோரெல்லாம் கவுண்ட்டர் வாங்கியே சாவார்..

சனி, ஜூலை 07, 2007

புரட்சி என்றால் என்ன?

புரட்சி புரட்சி என்று எல்லோரும் பேசுகிறார்களே.. புரட்சி என்றால் என்ன..? அரசாங்கத்தை கவிழ்ப்பதா?... முதலாளிகளை எதிர்ப்பதா.. ஆயுத போராட்டம் நடத்துவதா?...

எதை புரட்சி என்று எண்ணிக்கொண்டு பேசுகிறோம்..?

புரட்சி என்றால் புரட்டி போடுவது...( A drastic and far-reaching change in ways of thinking and behaving)

பெரும்பான்மையிலிருந்து பெரும்பான்மை வித்தியாசப்படுவது...

நாம் சமூக, பழக்க வழக்கங்களில் ஏற்படும் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட உடனடி மாற்றம்... (உடனடி என்பது அது சார்ந்த சமூகத்தின் அளவை பொறுத்து கால அளவில் மாறும் என்பதை நினைவில் கொள்க...)

புரட்சி எது சம்மந்தப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. பொருளாதாரம், விவசாயம், அரசியல், கல்வி... இப்படி..

யாரால் வேண்டுமானாலும் திட்டமிடப்படலாம்.. சிறு குழு, பெரும் மக்கள் வெள்ளம்... அரசியல் குழுக்கள், ஏன் அரசாங்கமே கூட புரட்சிகள் செய்யலாம்.

எங்கே பார்த்தாலும் புரட்சி குறித்து விவதம் நடப்பது போல் எனக்கு ஒரு பிரமை.. எந்த புரட்சியை பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவு இருக்கிறது என்றால் மகிழ்ச்சியே.. விவதத்தில் பங்கெடுக்கும் அனைவரும் அதே புரட்சியை பற்றி தான் பேசுகிறார்களா என்பதும் முக்கியம்..

நான் புரட்சி என்றால் இவைகளை தான் சொல்லுவேன்

இந்தியாவில் அரசாங்கத்தின் செயல்பாடுகளில், அது செயற்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடையும் வகையில் புரட்சி நடக்க வேண்டும்..

அரசை இன்னும் செம்மையாக்க, அது செயல்படும் ஹைதர் அலி காலத்து நடைமுறைகளை மாற்றி நவீனத்துவப் படுத்துவதில் புரட்சி வேண்டும்... (கவனிக்க கணினி மயமாக்கல் வேறு.. நான் குறிப்பிடும் நவீனப்படுத்துதல் வேறு.. இருக்கும் நடைமுறைகள் அப்படியே கணினிமயமாக்கப்படுதல் நவீனத்துவம் ஆகாது )

உதாரணம் சொல்கிறேன் ஒருவருக்கு அரசிலிருந்து எதற்கோ இழப்பீடு வழங்கப்படுகிறது... காசோலைகளை மட்டும் நம்பியிருந்த காலத்தில் அதற்கு 15 நாள் தேவைப்பட்டது என்று வைத்து கொள்வோம்.. இப்போது ECS எல்லாம் வந்து விட்ட காலத்தில் இன்னும் 15 நாட்கள் நேரம் கேட்பது நவீனப்படுத்துதல் ஆகாது...

கடமை தவறும் அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் செயல்பாடுகளில் புரட்சி வேண்டும்..

மக்கள் நலனை பேணுவதிலும் காப்பதிலும் புரட்சி வேண்டும்...

அரசு சாரா நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் புரட்சி வெண்டும்...

முதலாளிகளின் நலனை(சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதாக சொல்லிகொண்டாலும்) பாதுக்காக்கும் SEBI-க்கு இருக்கும் அதிகாரங்களை போல.. வரி வசூலிக்கும் வருமான வரித்துறைக்கும், வணிகவரித்துறைக்கும் இருக்கும் அதிகாரம் போல, சமூக நலத்துறைக்கும், சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதார துறைக்கும் இருப்பதாக தெரியவில்லையே...

அப்படியே இருக்கிறது என்றாலும் அந்த அதிகாரங்களை நடைமுறை படுத்துவதாக தெரியவில்லையே...
இதிலெல்லாம் மாற்றம் வர வேண்டும்.. புரட்சி வேண்டும்...

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் நம்மால் அனுப்பப்படும் நண்பர்கள் நன்றாக செயல்படுகிறார்களா என்பதை மதிப்பீடு செய்வதில் புரட்சி வேண்டும்.. 5 வருடத்துக்கு ஒரு முறை ஆட்சியை மக்கள் மாற்றி விட்டால் அது புரட்சி ஆகாது... யார் ஆட்சி வந்தாலும்… மக்கள் நலம் தழைக்கும் வகையில் நடக்கவும், தவறினால் தண்டிக்கவும் புரட்சி வேண்டும்..

ஜனநாயம் செயல்படும் முறைகளை மாற்ற தான் புரட்சியே தவிர... ஜனநாயகத்தையே மாற்றுவது புரட்சி அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...

புதன், ஜூலை 04, 2007

ஏழைகளின் நட்சத்திர கலை விழா...

இன்னைக்கு செய்தித்தாள் பார்த்தீங்களா?.. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடடம் கட்டுறதுக்காக நட்சத்திர கலை விழா நடத்த போறாங்களாம்...

இது என்ன அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்கள் சங்கமா? இல்லை அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படும் காண்டிராக்டு ஊழியர் சங்கமா...

கோடி கோடியாய் சம்பாதிக்கும் வர்க்கம் தானே? பெரிய-சிறிய நடிகர், நடிகைகளிடம் ஒரு லட்சமோ, 2 லட்சமோ வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப நன்கொடை வாங்கி அந்த கட்டிடத்தை நடிகர் சங்கமே கட்டி கொள்ள கூடாதா?

அதற்கு ஒரு கலை விழா ஏற்பாடு செய்து அதற்கு டிக்கெட் போட்டு வசூலித்து தான் கட்டிடம் கட்ட வேண்டுமா?

அதற்கும் ரசிகர்கள் என்ற ஏமாளிகள் தலையில் தான் கைவைக்க வேண்டுமா?

என்னமோ மனசுல பட்டுச்சு...

ஞாயிறு, ஜூலை 01, 2007

இலக்கியவாதிகளும் வெகுசன இலக்கியமும்..

பதிவர்கள் இடையே நடைபெறும் விவாதங்களும், கருத்து மோதல்களும் நிச்சயம் அறிவை வளர்ப்பதாக இருக்கிறது.. பற்பல நூல்களையும், இலக்கியங்களையும், சமூக கலாச்சார பின்னனிகளையும் ஆராய்ந்து அறிந்த பின்னரே பலரது வாதங்கள் அமைகிறது... பதிவர்களின் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து பார்த்தால் பதிவுலகம் அறிவுச்செறிவு நிறைந்ததாகவே இருக்கிறது..

ஆனால் பல கருத்து மோதல்கள் நான் ஏற்கனவே எனது பதிவொன்றில் சொன்னது போல்.. ரொம்ப கனமான பொருள் கொண்ட விவாதங்களாய் இருக்கிறது.. விவாதங்களை பற்றிய புரிதலுக்கு அதன் பின்புலங்களை சென்று ஆராய வேண்டிய அளவிற்கு கனம்...

உதாரணத்திற்கு சு.ரா-வின் எழுத்து குறித்த விவாதங்கள்...

நிற்க... சமூகத்தின் தன் தாக்கங்களை பெரிய அளவில் வெளிப்படுத்துவது இவர் போன்ற எழுத்தாளர்களாய் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? சினிமா கவிஞர்கள், வெகு சனங்கள் படிக்கும் கிரைம் இன்னபிற நாவல்கள், பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களே பெரும்பான்மையான தாக்கத்துக்கு காரணமாக இருக்க முடியும்...

இலக்கியங்கள் என்று பொதுவாக சொல்லப்படுகின்ற Conventional இலக்கியம்.. நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது, சமூகத்தில் ஒரு புரட்சியை, மாற்றத்தை உண்டு பண்ணும் கருத்துக்கள் பெரும்பாலும் கடினமான வெகு சனங்கள் படிக்க முடியாத இலக்கிய வகையாகவே உள்ளது...
அதனாலேயே அதில் சொல்ல படும் கருத்துக்கள் எல்லாம் நல்லவையாக தான் இருக்கும் என்ற பொதுக்கருத்தும் ஏற்ப்பட்டு விடுகிறது...

வெகு சன இலக்கியங்கள் அதிகமாய் பயன்பட்டில் இருக்கும் ஊடகங்களை யாரும் விமரிசப்பதே இல்லை.. அதன் விவாதங்களும் கனமானவைகளாகவோ, கருத்து செறிந்தவையாகவோ இருப்பதில்லை...

இந்த வெகுசன இலக்கியங்கள் நிறைய அந்நிய வார்த்தைகளை சேர்த்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி நமது மொழியின் போக்கையே மாற்றி இலக்கிய வகைகளை நமக்கு புரியாத ஒரு பொருளாகவே செய்து விட்டது...

இத்தகைய ஆற்றல் மிக்க வெகுசன இலக்கியங்கள் கேட்பாரற்று, எந்த தணிக்கையும் இல்லாமல், எந்த விமரிசனமும் இல்லாமல் மக்களை எளிதாக சென்றடைந்து அவர்கள் வாழ்வியலையும் சிறிது சிறிதாக மாற்றி கொண்டே தான் இருக்கிறது..

திராவிட இயக்கங்களின் வெற்றிக்கும், வீச்சுக்கும் முக்கிய காரணம் இந்த வெகுசன இலக்கியங்களை சரியாக பயன்ப்படுத்தி கொண்டது தான் என்பதில் இருந்தே வெகுசன இலக்கியங்களின் ஆற்றலை புரிந்து கொள்ளலாம்

வெகுசன இலக்கியங்களை பெரும்பாலும் தரமான, விஷய ஞானம் மிக்க, சமூக ஆர்வலர்களும், சமூக இலக்கியவாதிகளும் விவாதிக்க தயங்க காரணம்.. அதைகுறித்து விவாதிப்பதோ, விமரிசப்பதோ தங்கள் தகுதிக்கு ஒவ்வாத செயல் என்று எண்ணுவது...

மக்களை சென்றடையாத எந்த இலக்கியமும், விமரிசனமும் நாம் எதிபார்க்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. ஒரு வேளை ஏற்படுத்தினாலும்... அதற்கு வெகுக்காலம் பிடிக்கும்...


இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும் புதுமையை பேச விழையும் இலக்கிய ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் இலக்கியங்களை விவாதிப்பதை பொருத்தவரை பழமைவாதிகளாகவே இருப்பதாய் தோன்றுகிறது..