இந்திய பொருட்களையே வாங்குங்கள் என்று யாராவது சொல்லும் போது உங்களுக்கு என்ன தோன்றும்...
தேசப் பற்று கொழுந்து விட்டு எரியுமா?.. இந்திய பொருட்களை வாங்குவோம் என்று முடிவெடுத்து.. இந்தியர், இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் ஆளா நீங்கள்?
இந்திய பொருட்களை வாங்குவதால் இந்திய பொருளாதாரம் உயரும் என்று நினைப்பவரா நீங்கள்?
நான் எனக்கு தெரிந்த சில விவரங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...
நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா?.. FMCG எனப்படும் Fast Moving Consumer Goods-ல் இந்திய தயாரிப்புகள் என்று நம்பி வாங்கி கொண்டிருக்கும் பல பொருட்களை தற்போது தயாரித்து கொண்டிருப்பது வெளிநாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல் படும் பன்னாட்டு நிறுவனங்களே...
அவற்றில் கிடைக்கும் லாபங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே ஏதோ ஒரு வழியில் போகிறது...
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய இந்தியாவின் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் ஒரு இந்திய கம்பெனியை ஆரம்பிக்கின்றன. அல்லது ஒரு இந்திய கம்பெனியை விலைக்கு வாங்கி இணைத்து வியாபரத்தை செய்கின்றன. பார்லே சாஃப்ட் ட்ரிங்க்ஸை கோகோ கோலா நிறுவனம் வாங்கியதை ஒரு உதாரணமாக சொல்லலாம். லிம்கா பானம் இந்திய தயாரிப்பு என்று வாங்கினால் லாபம் என்னவோ கோக் நிறுவனத்துக்கு தான்...
சரி பிராண்டு, FMCG நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் தான் இந்த பிரச்சினைகள் என்றால்.. உள்நாட்டு பொருட்களை எடுத்துக் கொள்வோம்..
லிம்கா, கோக் போன்ற பானங்களை குடித்தால் தானே பிரச்சினை.. அதற்கு பதில் இளநீர் குடிப்போமே...
பெரிய நிறுவனத்தின் தேநீருக்கு பதில் இந்திய சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் தேநீர் வாங்கலாமே... பன்னாட்டு நிறுவனங்களின் துணிகளுக்கு பதில் கதராடைகள் வாங்கலாமே.. என்று தோன்றுகிறதா...
வெளிநாட்டு தேநீரில் இருக்கும் தரம் இந்தியாவில் தயாராகும் தேநீரில் இருக்கிறதா?
துபாயில் இருந்து நம் நண்பர் வாங்கி வரும் முந்திரி, பாதாம், பிஸ்தாவின் தரம் இந்தியாவில் கிடைக்கும் முந்திரி, பாதாம், பிஸ்தாவில் இருப்பது இல்லையே என்று நீங்கள் யோசித்தது உண்டா? ஐரோப்பாவில், அமேரிக்காவில் சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமான வாழைப்பழங்களையோ, ஆப்பிள்களையோ பார்த்து நீங்கள் வியந்தது உண்டா?
அங்கே கிடைக்கும் மசாலா பொருட்கள், இளநீர் போன்றவை தரமாக இருப்பதை எண்ணி அது போல நம் ஊரில் கிடைப்பது இல்லை என்று ஏங்கியது உண்டா?
ஆனால், மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படுபவை என்றால் நமக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.
இந்தியாவில் விளையும், தயாராகும் அனைத்து பொருட்களுக்கும் அநேகமாக ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. அனைத்து பொருட்களுக்கும் முதல் தரம், இரண்டாம் தரம் என்றெல்லாம் உண்டு.. ஆப்பிள்,வாழைப்பழம் உட்பட அனைத்து பழ வகைகள், தேயிலை, வாசனைப் பொருட்கள், மளிகை பொருட்கள், அரிசி உட்பட அனைத்து தானிய வகைகள் என எல்லாவற்றிலும் முதல் தரமான பொருட்கள் ஏற்றுமதி தான் செய்யப்படுகின்றன.
அயல்நாடுகளில் முதல் தர பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதால் மட்டும் இவை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை...
முக்கியமான இன்னொரு காரணம் இருக்கிறது... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களூக்கு கடுமையான தரக் கட்டுப்பாடுகளை அந்தந்த நாடுகள் விதிக்கின்றன..
எல்லாம் தம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்...
இரண்டாம் தரம் மற்றும் அதற்கு கீழே உள்ள பொருட்கள் தான் உள்நாட்டு சந்தையில் விற்கப் படுகின்றன...
1. நம் மக்களால் வெளிநாடுகள் தரும் விலையை தர முடியாது..
2. உள்நாட்டில் தரத்தை பற்றி யார் கவலைப் பட போகிறார்கள்?
ஒரு வேளை அப்படி தப்பித் தவறி ஏதாவது நல்ல பொருள் கிடைத்தால் அதை வாங்கும் சக்தி பெரும்பான்மையான மக்களுக்கு கிடையாது...
நல்ல பொருட்களை கமுக்கமாக ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசும் ஊக்கம் கொடுக்க தான் செய்யும்.. நிறைய அந்நிய செலவாணி கிடைப்பதால் மத்திய அரசு அதை ஆதரித்து தான் ஆக வேண்டும்...
பொருட்கள் உற்பத்தியில் நாம் முதலில் தன்னிறைவு அடைய வேண்டும்... நம் தேவை போக மற்றதை ஏற்றுமதி செய்யும் நிலை வர வேண்டும்...
தரமான முதல் தர உள்நாட்டு பொருட்களில் விலை குறைய வேண்டும். அப்போது தான் இந்திய பொருட்களையே வாங்குங்கள் என்ற கொஷத்துக்கு அர்த்தம் கிடைக்கும்.. அது வரை நாம் எதை வாங்கினாலும் அதை கேள்விக் கேட்க யாருக்கும் அருகதை கிடையாது...