உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, ஏப்ரல் 10, 2010

மக்கள், மாவோயிஸ்ட்கள், ராஜினாமா


தண்டேவாடா படுகொலையில் உயிர் துறந்த போலீஸ் வீரர்களின் குடும்பங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்..
 
உள்துறை அமைச்சர் . சிதம்பரம் தண்டேவாடா படுகொலைகளுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முடிவெடுத்தாராம். அதை மன்மோகன் சிங்கும் சோனியாவும் நிராகரித்தார்களாம்...

அரசியலிலேயே சாயம் போய் வெளுத்து கிழிந்து தொங்கும் அரதப் பழசான நாடகம் இந்த ராஜினாமா நாடகம் தான்.. ஏதோ ஓட்டுக்கு கொஞ்சம் காசு வாங்கிக் கொண்டு போடுகிறார்கள் என்றால் மக்கள் என்ன சொன்னாலும் நம்புவார்கள் என்று எண்ணுவதா?

அரசியலில் செய்வது மாதிரியே அரத பழசான தாக்குதல் திட்டங்களை பயன் படுத்தியால் தான் அந்த படுகொலைகளே நடந்தது என்று நிபுணர்கள் கடுமையாக சாடுகின்றனர்..

ராஜினாமா செய்வதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை... இந்த மாதிரி ஓட்டரசியல் ஸ்டண்டுகளை ஓரம் வைத்து விட்டு மாவோயிஸ்ட்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.. இது ஓரிரண்டு வருட பிரச்சினையல்ல உடனே தீர்ப்பதற்கு.. ஆனால் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆக்கப் பூர்வமான வழியில் முதல் அடியை இன்றே வைத்தால் 5 வருடத்திலோ, 10 வருடத்திலோ நிச்சயம் இந்த பிரச்சினைகள் தீர்க்கப் பட்டு விடும்... நான் இந்த பதிவில் எளிதாக எழுதி விடுவது போல் அல்ல தீர்வுக் காண்பது.. இருந்தாலும் ஒரு மத்திய உள்துறை அமைச்சருக்கு இருக்கும் அளப்பறிய அதிகாரத்தின் மூலம் என்ன மாதிரியான தீர்வை வேண்டுமானாலும் முன் வைக்கலாம்.. முன்னெடுத்துச் செல்லலாம்..

வேண்டியது எல்லாம் என் ஆட்சிக்கு பிறகு, எனக்கு பிறகு, என்ற எண்ணம் இல்லாமல், ஓட்டு அரசியலாக இதை பார்க்காமல் நாட்டு நலனை மட்டும் கருத்தில் கொள்ளுதல் மட்டுமே..

ராஜினாமா நாடகங்களை நடத்துவதை விட்டு விட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.. எல்லாவற்றையும் ஓட்டரசியலாக பார்க்காதீர்கள்... இது போன்ற விஷயங்கள் ஓட்டு போட்டு பிரதிநித்துவத்தை தேர்ந்தெடுக்கும் ஜனநாயகத்துக்கு எதிரானது.. இது வலுப்பெற்றால் ஜனநாயகமே இருக்காது.. அதற்கு பிறகு ஓட்டரசியலை வைத்துக் கொண்டு மணியாட்டிக் கொண்டு போக வேண்டியது தான்….

பின் குறிப்பு

இத்தனை மாற்று கட்சிகளுடன், ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறக்கூடிய ஜனநாயக அமைப்பிலேயே இவ்வளவு ஊழல்களும், சர்வாதிகாரமும் தலைவிரித்தாடுகிறதே, இந்த அதிகாரமெல்லாம், ஒரே கட்சியிடமோ, ஒரேகுழுவிடமோ போய் சேர வழி வகுக்கும் மாவோயிஸ்ட்களின் நோக்கம் நிறைவேறினால் என்ன ஆகும் என்று, ஏன் அவர்களை ஆதரிக்கும் மக்கள் யோசிப்பதேயில்லை….

வியாழன், ஏப்ரல் 08, 2010

ஸ்ரீசாந்த்- விளையாட்டுப் பிள்ளை

கவுண்டமணி சிலப்படங்களில் செந்திலைப் பார்த்து சொல்லுவார்.. "அது என்னவோ தெரியலைங்க.. அந்த மூஞ்சிய பார்த்தாலே நல்லா அப்பு அப்புன்னு அப்பணும் போல இருக்கு"

அது போல இந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை பார்த்தாலே எனக்கு அப்பு அப்பென்று அப்ப வேண்டும் போல தோன்றுகிறது...

இவர் அப்படியொன்றும் சாதாரண ஆளில்லை.. பெரிய பெரிய சாதனைகள் பலப் படைத்தவர்... "வார்னிங்" பெறுவதில்...

அநேகமாக உலகின் எல்லா அம்பயர்களும் இவரை "வார்ன்" செய்தி இருப்பார்கள் என்று தோன்றுகிறது...

பொதுவாக பேஸ் போலர்கள் பந்து வீசி விட்டு பேட்ஸ்மேனை முறைப்பது எல்லாம் கிரிக்கெட்டில் சகஜம். எதிராளியின் மன உறுதியை குலைப்பதற்கு அதையே ஒரு ஆயுதமாக அநேகமாக எல்லா பந்து வீச்சாளர்களும் பயன் படுத்துவார்கள்.

ஆனால் இவர் தேவையில்லாம் ஆக்ரோஷம் என்ற பெயரில், எதிரணி ஆட்டக்காரர்களை முறைப்பது, திட்டுவது போன்ற செயலகளில் ஈடுபடுகிறார்.. உலகெங்கிலும் இதுபோல நிறைய ஆட்டக்காரர்கள் நடந்து கொள்வது உண்டு என்ற போதிலும்.. IPL மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் சக இந்திய ஆட்டக்காரர்களிடம் அவர் காட்டும் ஆக்ரோஷமும், அபத்தமான சைககளும் தேவையற்றது என்றே தோன்றுகிறது...






இவர் ஆடிய “Booty Dance” யூ ட்யூப் காணொளி தளத்தில் மிகப்பிரபலமானது.






ஒரு தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளரின் பந்தை பவுண்டரிக்கு விரட்டி விட்டு இவர் செய்த அளப்பறையை பார்த்து முகம் சுளிக்காதவர்களே இருந்திருக்க முடியாது...





சைமெண்ட்ஸிடமும், ஹேய்டனிடமும் இவர் செய்த சைகைகள், சேட்டைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின...






இவரை விட பெரிய கோபக்காரரான இன்ஜமாமிடம் எப்படி வாய்விட்டு பின் பம்முகிறார் என்று பாருங்கள்...


கோபத்தை கொஞ்சம் கூட கட்டுப் படுத்தத் தெரியாமல்.. ஏடாகூடமாக ஏதாவது செய்து பல உள்ளூர் போட்டிகளிலும் தண்டனை அடைந்துள்ளார்.. எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த அக்டோபர் மாதம் இவரது நடத்தையை கண்டித்து இறுதி எச்சரிக்கை ஒன்றை BCCஈ வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது...

சென்ற IPL-ல் தன் நடத்தைக்கு ஹர்பஜனிடம் ஒரு அறையை பரிசாக பெற்றார்..
எனக்கு தெரிந்து இவரது நன்னடத்தைக்காகவே இவரை இந்த வருட உலகக்கோப்பைக்கான 20-20 அணியிலிருந்து கழட்டி விட்டிருப்பார்கள் என்று நினைக்க தோன்றுகிறது..
இவ்வளவு நடந்தும் இவர் இன்னும் திருந்திய பாடில்லை.. நேற்று நடந்த ஒரு IPL போட்டியில் 3 ஓவரில் 40 ரன்களை வாரிக்கொடுத்த கடுப்பிலும், வரிசையாக இரண்டு நோ பால வீசிய கடுப்பிலும் "தோடா நாட்டாமை வந்துட்டாரு தீர்ப்பு சொல்ல" என்கிற ரேஞ்சில் நடுவரை பார்த்து கைத்தட்டியிருக்கிறார்...

இதைப் பார்த்துக் கடுப்பான அவருடைய சக வீரர் யுவராஜ் சிங் ஸ்ரீசாந்தை அழைத்து, கண்டிக்கும் அளவுக்கு அவரது நடத்தை அமைந்தது.. எதிர்ப்பார்க்கப் பட்டது போலவே ஸ்ரீசாந்துக்கு அபராதம் விதிக்கப் பட்டது.. எனக்கு தெரிந்த வரையில் அவர் அபராதம் கட்டிய எண்ணிக்கை அவர் இதுவரை எடுத்த விக்கெட் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும்...

உடனே யாராவது ஸ்ரீசாந்தை மட்டும் குறை சொல்கிறீர்களே, அவரை பாருங்கள் இவரைப் பாருங்கள் அது நியாயமா, இது நியாயமா என எண்ணக் கூடும்..

அடுத்த நாட்டு வீரன் ஏதோ செய்து விட்டு போகட்டும்.. அவன் நாட்டு மக்களுக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுக்கட்டும் எனக்கு அதில் அக்கறை கிடையாது...
என்னைப் பொருத்த வரை இவரைப் போன்ற போட்டியாளர்களை வைத்துத் தான் என்னையும், உங்களையும், நம் மக்கள் அனைவரையும் வேற்று நாட்டு ரசிகன் எடைப் போடுவான்...

நாமும் ஒரு வரையறைக்குள் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் தவறே கிடையாது.. ஆனால் ஸ்ரீசாந்த் செய்வது கொஞ்சம் ஓவர் தான்..

110 கோடி ஜனத்தொகை உள்ள நாட்டில் 11 பேருக்கு தான் கிரிக்கெட் போட்டியில் ஆட இடம் கிடைக்கிறது.. இவரைப் போன்ற வீரர்கள் தான் நம் நாட்டின் மதிப்பை முன்னெடுத்துச் செல்லும் பிரதிநிதிகள்.. அதில் அவர்கள் தவறு செய்துக் கொண்டே இருந்து நாட்டின் மதிப்பை குறைப்பார்களேயானால் குறைச் சொல்ல தான் தோன்றும்..


Bonus Video

வெள்ளி, ஏப்ரல் 02, 2010

இசை- எண்ணங்கள்


வாசிப்பு மட்டுமே கட்டுடைத்தலை நிகழ்த்தும் என்பதில்லை.. இசையும் பல சமயங்களில் கட்டுடைப்பை நிகழ்த்துகிறது...

கேட்கும் ஒவ்வொரு முறையும் புது புது உலகங்களை திறந்து விடக் கூடிய பாடல்கள் சாத்தியம் தான்...

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் "மன்னிப்பாயா" பாடலைக் கேட்டு பாருங்கள்..

***********************

எனது தமிழய்யா தான் இசைக் கேட்கும் ஆர்வத்தை எனக்கு தூண்டியவர்.. நான் பள்ளிப் போகும் காலத்தில் பண்பலை வரிசை இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது.. ஆனால் பண்பலை வரிசையில் இயங்கும் திறன் பெற்ற வானொலி பெட்டிகளை நான் கல்லூரி போகும் வயது வரை பார்த்ததே இல்லை

அப்போதெல்லாம் விவித்பாரதியில் இரவு 11 மணிக்கு பழைய பாடல்கள் ஒலிபரப்பு செய்வார்களாம்.. அதை மெலிதான சத்தத்தில் வைத்துக் கேட்டப் படியே உறங்க செல்வது வழக்கம் எனத் தமிழய்யா சொல்ல கேட்டு அதே போல் நானும் முயற்சித்து பார்க்க இசை என் வாழ்க்கையில் நுழைந்தது.

*************************

நிறைய பேர் சொல்லக் கேட்டிருப்போம்.. காலையில் எழுந்து பக்தி பாடல்கள் கேட்டால் மனம் அமைதியாகும்... கஜல் கேளுங்கள் மனம் லேசாகும்.. என்றெல்லாம் உங்களுக்கு ஏதோ ஒரு சமயத்தில் யாரேனும் சொல்லியிருக்க கூடும்.. அத்தனையும் உண்மை. அவரவரை பொருத்தவரை.

எந்த மாதிரி இசையை கேட்டால் உங்கள் மனம் அமைதி அடைகிறதோ.. அது தான் உங்களுக்கு உற்சாமூட்டி.. அது திரையிசை பாடல்களாயிருக்கலாம், கர்நாடக சங்கீதமாயிருக்கலாம், மேனாட்டு ராக் இசையாக இருக்கலாம்.. நமக்கு எது மன அமைதிக் கொடுக்கிறதோ அதுவே நமக்கு பக்திப் பாடல், கஜல் எல்லாம்.

*************************

உலகில் இரண்டே விஷயங்களுக்கு தான் நம் வாழ்க்கையில் நடந்த பழைய சம்பவங்களை நினைவுப் படுத்தி அப்படியே அதே கணத்தில் மீண்டும் சில நிமிடங்கள் வாழ்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய சக்தி உண்டு...

1. இசை / ஒலி
2. மணம்

குண்டுகள் விழுந்த பின்பு அவற்றின் விளைவை குறைப்பதற்காக ஜெர்மானிய ராணுவம் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தப்படுத்துமாம். இரண்டாம் உலகப் போருக்கு பின் ப்ளீச்சிங் பவுடர் மணத்தை நுகர்ந்தாலே பழைய போர் நினைவுகள் வந்து விடுமாம் ஜெர்மானிய மக்களுக்கு..

அதே போல இசை.. நம் வாழ்வின் முக்கியமான தருனங்கள் ஏதோ ஒரு ஒலியுடனோ, இசையினுடனோ தொடர்புக் கொண்டிருக்கும்... பள்ளியில் கேட்ட மணிச் சத்தம், பள்ளிக்கு போகையில் காலை நேரத்தில் கேட்ட பாடல்.. பக்கத்துக் கோவில் திருவிழா சமயத்தில் கேட்ட திருவிளையாடல் ஒலிச்சித்திரம்... இப்படி

************************************