உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

மக்களும் மலிவு விலைக் கார்களும்

விலை குறைவான கார்களை கார் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அறிமுகப் படுத்தும் நாள் வெகுத் தொலைவில் இல்லை.. அப்படி விலைக் குறைவான கார்கள் அறிமுகப் படுத்த பட்டால் என்னாகும்....

வாகனம் நிறுத்தும் வளாகத்தில்,

சார்.. உங்க கார் வேணா விலை குறைவா இருக்கலாம்... ஆனா இதுக்கெல்லாம் ஸ்கூட்டர் டோக்கன் போட முடியாதுங்க... கார் டோக்கன் தான் வாங்கியாகணும்....

************************************************************************

உள்ளூர் ரேஷன் கடையில்

சார்.. நீங்க விலை குறைவான கார் வாங்கினதால ரேஷன்ல வந்து கெரோசினுக்கு பதிலா பெட்ரோல் கேக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்லை...

********************************************************************

இந்த காரை வெச்சுக்கிட்டு ரொம்ப அவமானமா படறேன்யா...

ஏன் என்னாச்சு?

முந்தா நாள் ஒரு சைக்கிள் காரனை தெரியாம இடிசசுட்டேன்.. என் காஸ்ட்லி சைக்கிளை இடிச்சுட்டியான்னு கத்திக்கிட்டே சண்டைக்கு வந்துட்டான்...

***************************************************************


ஏன்யா காரை இப்படி வெய்யில்ல நிறுத்தி வெச்சிருக்க?

என்ன பண்ண? கார் கவர் வாங்கி போடலாம்னு ஆசை தான்.. ஆனா கவர் விலை கார் விலையை விட ஜாஸ்தியா இருக்கே?

**************************************************************

என்னடா சோகமா உக்காந்திருக்க?

நைட் காரை வீட்டு வாசல்ல நிறுத்தி வெச்சிருந்தேன்.. எவனோ பைக்ல வந்து.. கால்ல தள்ளி காரை டோ பண்ணி திருடிட்டு போயிட்டான்டா...

நீ ஏண்டா சோகமா இருக்கே? உன் காரையும் டோ பண்ணிட்டு போய்ட்டாங்களா?

இல்லடா... நிறுத்தி வெச்சிருந்த காரை பக்கத்து வீட்டு நாய் ஏதோ பொம்மைன்னு நெனச்சு தூக்கிட்டு ஓடிடுச்சு...

***************************************************************

ஆர்.டி.ஓ அலுவலகத்தில்,

"சார்.. கார் சின்னதுங்கறதுக்காக உங்க 6 வயசு பையனுக்கு எல்லாம் கார் ஓட்ட லைசென்ஸ் கொடுக்க முடியாது..."

*****************************************************************

மாயப் பலகை 28.07.09எந்த வலியை வேண்டுமென்றாலும் தாங்கி கொள்ளலாம் ஆனால் பல்வலியையும், காது வலியையும் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்வார்கள்...

அப்படிப் பட்ட பல்வலி சில வாரங்களுக்கு முன் என்னை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது... எனக்கு பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருந்ததால் இதோ அதோ என்று மாதக்கணக்காய் இழுத்து சென்ற வாரத்தில் பல் மருத்துவரிடத்திடம் சென்றே விட்டேன்..

சிறிய வயதில் பல் பிடுங்கப் பட்ட அனுபவம் இருந்தாலும், கொஞ்சம் பயமாகவே இருந்தது.. நல்ல வேளை அந்த பல் மருத்துவர் சிறிது கலகலப்பாக பேசி பதற்றத்தை தணித்தார்...

“ஹவ் ஓல்டு ஆர் யூ” என்று வழக்கமாய் கேட்பதற்கு பதில்... "ஹவ் யங் ஆர் யூ" என்று வித்தியாசமாய் என் வயதைக் கேட்டறிந்தார் அந்த மருத்துவர்… “இப்படி கேட்டா வர்ற பேஷண்ட்ஸ் ரொம்ப சந்தோஷப் படறாங்க… முக்கியமா பெண்கள்..." என்றார் கண்ணடித்து...

ஆனால் சும்மா சொல்லக் கூடாது... வாங்குகிற பணத்துக்கு ஸ்க்ரூ ட்ரைவர் போன்ற ஒரு ஆயுதம், கட்டிங் ப்ளேயர் போன்ற ஒரு ஆயுதம் என்று எல்லாம் விதவிதமாக கருவிகளைக் கையில் வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்…

பல் வலி நேரங்காலம் தெரியாமல் வந்து படுத்தி எடுக்கும் என்பது ஒரு புறம்... அப்படியே கவனிக்காமல் விட்டால் இதய சம்மந்தமான நோயில் கூட கொண்டு விடும் என்றெல்லாம் பூச்சி காண்பித்து பீதியைக் கிளப்புகிறார்கள்...

நான் என் தோழியிடம் சொன்ன ஜோக்..

"பேசாம டென்டிஸ்ட் ஆயிருக்கலாம்னு தோணுது..."

"இக்கறைக்கு அக்கறை பச்சை... எவ்வளவோ கஷ்டம் தெரியுமா அவங்க வேலை?"

"தெரியும்.. ஆனா நான் இந்த வேலைக்கு வரணும்னு நினைச்சதுக்கு காரணம் வேற..."

"என்ன?"

"ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணுங்களும்… அவரை பார்த்தா மட்டும் உடனே ஈன்னு பல்லை காட்டுறாங்க..."

"தூ"

பல் சிறிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கும் போதே அதை கவனித்து சரி செய்து கொள்வது எளிது மட்டுமல்ல.. நேரமும், பணமும் விரயம் ஆகாது... பற்சிதைவு அதிகம் ஆன பின் அதை சீர் செய்வது ஆகட்டும், பிடுங்கி எறிவது ஆகட்டும், சற்று சிக்கலான விஷயம் தான்..

பல் மருத்துவ துறை மற்ற துறைகளை போலவே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது...(பல் பிடுங்குவதில் மட்டுமல்ல.. பீஸ் பிடுங்குவதிலும் தான்)

அப்படியே போகிற போக்கில் பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்

1.பிரஷ்ஷில் சுத்தம் செய்யும் போது பேஸ்ட் போட்டு தேய்ப்பதை விட வெறும் பிரஷ்ஷில் தேய்ப்பது அதிக பலன் தருமாம்... ஏனெனில் எங்கு அழுக்கு உள்ளது என்பதை சரியாக உணர்ந்து தேய்க்க முடியுமாதலால்...

2. சிலர் வாயில் பிரஷ்ஷை வைத்து மணிக்கணக்கில் அரைத்து எடுப்பார்கள்... ஆனால் 2 நிமிடம் பற்களை பிரஷ்ஷினால் தேய்த்தால் போதுமானதாம்… (இருக்கிறது 32 பல்லு.. எவ்வளோ நேரம் தேய்ப்பீங்க).. அதன் பிறகு வேண்டுமானால் ஒரு முறை பற்பசை போட்டு தேய்த்து விட்டுக்கொள்ளுங்கள்...

3. 3-4 மாதத்துக்கு ஒரு முறை பிரஷ்ஷை மாற்றி விடுவது நல்லது...

4. ஃப்ளோரைடு கலந்த பற்பசைகளை உபயோகிப்பது நல்லது…

5. பகலில் ஒரு முறை பற்களை சுத்தம் செய்வது என்பது.. கிருமிகளை கட்டுப்படுத்தும்..

6. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பல் தேய்ப்பது நல்லது.. அதற்கு மேற்ப்பட்ட முறைகள் பற்களை சுத்தம் செய்பவர்கள் நல்ல சைக்கால்ஜிஸ்டை பார்க்கவும்..

====================================================

முன்னர் வேலைப் பார்த்த நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி..

என்னுடைய டீமில் இருந்து சிலரும்.. வெவ்வேறு துறையில் இருந்தும் பலர் வந்திருந்த ஒரு பயிற்சி வகுப்பு...

BPO என்று நாம் பொதுவாய் சொன்னாலும் BPO-வில் வாய்ஸ்(Voice), நான் வாய்ஸ்(Non-Voice) என்று இரண்டு பிரிவுகள் உண்டு.. இதில் வாய்ஸ் என்பது வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியில் தொடர்ப்ய்க் கொண்டு பேசும் பிரிவு.. நான்-வாய்ஸ் என்பது தொலைபேசியில் வாடிக்கையாளருடன் பேசுதல் என்பது குறைவான ஒரு பிரிவு... அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம், பணம் வசூலிப்பது, பொருட்கள், சேவைகள் விற்பது, குறை கேட்பது, தொழில்நுட்ப உதவி செய்வது.. என இந்த பிரிவில் வேலை பார்க்கும் எல்லோரும்.. நன்றாக நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்கள்..

எங்கள் பக்கத்து ஃப்ளோரில் ஒரு டீம் இருந்தது... பொதுவாகவே அலப்பறை அதிகம் செய்யும் கூட்டம் அது.. அதுவும் ஆங்கிலம் சரியாக பேச வராத யாராவது அவர்களிடம் சிக்கினால் அவ்வளவு தான்.. அழ வைத்து நாமெல்லாம் இந்த உலகத்தில் பிறந்தது வீண் என்று எண்ண வைத்து விடுவார்கள்...

அவர்களும் இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தனர்.. முதல் நாள் வகுப்பெடுக்க வந்த பயிற்சியாளரையே கேலி, கிண்டல் செய்து வெறுப்பேற்றினார்கள் என்றால் சக அலுவலர்கள் கதியை பற்றி சொல்லவும் வேண்டுமா...

சகட்டு மேனிக்கு மிக கேவலமான ஏ ஜோக்குகளும்.. மற்றவருடைய உடை.. நடை பாவனை வரை எல்லாவற்றையும் விமர்சித்து... என்னவோ இவர்கள் லண்டனில் பிறந்து வளர்ந்தாற் போல் ஒரு நினைப்பு..(அந்த குழுவில் இருந்த பெண்கள் விட்ட பந்தாவுக்கு அளவேயில்லை)...


மறுநாள் பயிற்சி துவங்கியது.. கணக்கு பதிவியலின் புதிய பரிமானங்கள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களை பற்றின ஒரு வகுப்பு.. அன்றும் நம் மக்கள் செம ரகளை செய்தனர்... ஆனால் அன்று வந்திருந்த பயிற்சியாளர் அவ்வளவு ஏமாந்தவரில்லை... இவர்களை பற்றி வந்த ஒரு மணி நேரத்தில் புரிந்துக் கொண்டவராய்.. அவர்களையே நிறைய கேள்விகள் கேட்க தொடங்கி விட்டார்... சும்மா பேசினால் அவர்கள் சிக்ஸர் அடிப்பார்கள்.. கேள்விக்கு பதில் அல்லவா சொல்ல வேண்டும்... சொன்னால் நம்ப மாட்டீர்கள் மாலை வரை அவர்களை வறுத்து எடுத்து விட்டார்... மொத்தக் கூட்டமும் களையிழந்து போய் விட்டது...

கடைசியாக போகும் போது ஒரு பன்ச் டயலாக் வேறு சொன்னார்...

"நுனி நாக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே என்று உங்களில் சிலர் வருத்தப்படுவது போல் தெரிகிறது... தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் நாகரீகமான உச்சரிப்போ, நுனி நாக்கில் பேசுவதோ அல்ல.. நாம் கூற வருவதை தெளிவாக அடுத்தவர் புரிந்து கொள்வதே ஆகும்... அதை சரியாக செய்யும் யாவரும் அதில் வல்லவர்கள் தான்.. இன்னுமொரு விஷயம்.. 'English is a Language… it’s not Knowledge...' ஆங்கிலம் பெசுபவர்களை பார்த்து பயப்படாதீர்கள்… ஆங்கிலேயர்களிலும் கை நாட்டு பேர்வழிகள் உண்டு" என்றாரே பார்க்கலாம்…

மாயப் பலகை 19.07.09

ஒன்றரையணா சம்பளத்துக்கு பார்க்கும் வேலைக்கே பெர்ஃபார்மன்ஸ் அப்ரைசல், ரேட்டிங்க் எல்லா எழவு கருமாந்திரமும் எடுத்துத் தொலைக்கும் இந்த காலத்தில், 5 வருட காலம் நாட்டை ஆளும் மந்திகளுக்கும், எம்.பி -களுக்கும், எம்.எல்.ஏக் களுக்கும் ஏன் எதுவுமே இல்லை?

டுபாக்கூர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் வெற்றுப் பயல்கள் கூட கோல் செட்டிங்க், டார்கெட் என்று காற்றில் கணக்கு போட்டுக் கொண்டு அலையும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு ஏன் அப்படி எதுவும் இல்லை?

****************************************************************************************
ஒரு காலத்தில் ஒரு தொலைப்பேசி இணைப்பு வாங்க வேண்டுமென்றால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்...

தொலைப்பேசி இலாகா ஜே.ஈ, ஏ.ஈ எல்லாம் கடவுள் போல... அவர்களை சாதாரண வாடிக்கையாளர்கள் பார்க்க கூட முடியாத காலம் எல்லாம் இருந்தது.....
எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இணைப்புக்கு சிபாரிசு செய்து பணம் பார்த்த காலம் எல்லாம் கூட இருந்தது...

தனியார் நிறுவனம் எல்லாம் களத்தில் குதித்திருக்கா விட்டால் இன்று நாமெல்லாம் அலைபேசியோடு அலைந்து கொண்டிருப்போமா என்பதே சந்தேகம் தான்...
இந்த தனியார் போட்டியால் திருந்திய இன்னும் சில அரசுத் துறைகள் உள்ளன..

வங்கிகள்... அட சாமி இவர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? வாடிக்கையாளர்கள் தான் முதலாளிகள் என்று இவர்களுக்கு புரிய உலகத்தின் பல வங்கிகள் இங்கே வந்து சேவை செய்து காண்பிக்க வேண்டியிருந்தது...

எனக்கு தெரிந்த ஒரு வங்கி ஊழியர் அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணி புரிந்து வந்தார்.. அவருடைய வேலை.. கிளிரயன்ஸுக்கு வரும் 10 செக்குகளுக்கு சீல் போட்டு லெட்ஜரில் என்ட்ரி போடுவது மட்டும் தான்.. ஆனால் அவர் கையில் எப்போதும் ஒரு ப்ரீஃப்கேஸ் இருக்கும்.. அதற்குள் குமுதம், ஆவி, ஜூவி, கல்கண்டு, சாவி, கல்கி உள்ளிட்ட இன்னபிற வாராந்திர, மாதாந்திர வஸ்துக்கள் அடுக்க பட்டிருக்கும்...

செக்குக்கு சீல் போட்ட கையோடு தலைவர் அவைகளுக்கும் சீல் போடுவார்... யார் புத்தகத்தை சொன்ன நேரத்துக்கு திருப்பி தர வில்லையோ அவர்களிடம் சண்டை போடுவார்.... இப்படி வாடிக்கையாளர்களுக்காக உழையோ உழையென்று உழைப்பார்...

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலேயும், வங்கியிலேயும் நன்றாக வேலை பார்க்க தெரிந்த, பார்க்க முன்வரும் இளிச்சவாய் அலுவலர் ஒருவர் அல்லது இருவர் இருப்பார்கள்... அவர்களால் தான் அந்த அலுவலகமே ஓடிக் கொண்டிருக்கும்...

தொலைகாட்சி (தூர்தர்ஷன்)....
என்ன பாடு படுத்தினார்கள்... தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்ப்பதென்றாலே அவர்கள் இஷ்டத்துக்கு தான் காண்பிப்பார்கள்..

தொலைக்காட்சியில் தோன்றுவதென்றால்.. அய்யோ... ஒருவர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி செய்கிறார் என்றால்.. அவார் நிஜமாகவே பிரபலம் அல்லது இயக்குநருக்கு வேண்டப்பட்டவர் என்று அர்த்தம்...

தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு அய்யகோ.. தூர்தர்ஷன் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை...


சொல்லி கொண்டே போகலாம்.. என்ன தான் பசில தனியார் நிறுவனங்கள் சொதப்பினாலும் அவர்களின் வாடிக்கையாளர் சேவையும், அணுகுமுறையும் அரசுத்துறைகள் நடத்தும் நிறுவனங்களிடம் வர வில்லை என்பதே உண்மை..வரிப்பணமும், வழிப்பறியும்

எனக்கொரு விஷயம் ரொம்ப நாளாக புரியவில்லை...

நாம் வரிக்கட்டுகிறோம்...


வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, வணிக வரி(இது வணிகர்கள் தானாக கட்டுவதல்ல. நம்மிடம் பிடித்தம் செய்து கட்டுவது).

இது போக இன்னும் என்னென்னவோ வரிகள்....

சாலை வரியும் அவற்றுள் ஒன்று....

நாம் கட்டும் அத்தனை வரிகளும் மத்திய மாநில அரசுகள் மக்களாகிய நமக்கு தேவையான வசதிகளை பெருக்குவதற்கும், நமக்கு தேவையான வாழ்வாதாரங்களை உண்டாக்குவதற்கும், நம் நாட்டை பகைவர்களிடமும், தீவிரவாதிகளிடமும் இருந்து தற்காத்து கொள்ளவும், நாட்டு முன்னேற்ற பணிகளை செய்யவும் பயன்படுத்தப் படுகிறது எனக் கூறப்படுகிறது...

(நாட்டு முன்னேற்ற பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு பணியாளர்கள், ராணுவம், காவல் அனைத்து துறை சம்பளங்களும் உள்ளிணைந்து...)

இப்படி இருக்க,

சாலை அமைத்தலும், பராமரித்தலும் அரசாங்கத்தின் அடிப்படை கடமை தானே?

புறவழிச்சாலை அமைக்கும் போதும், விரைவு வழிசாலை அமைக்கும் போதும், முக்கிய பாலங்கள் கட்டும் போதும்..

அதை கடக்க ஒவ்வொரு முறைக்கும் வாகனங்களிடம் ஏன் கட்டணம் வசூலிக்கபடுகிறது?

சாலை வரியும் கட்டி விட்டு, வருமான வரி மற்றும் இன்னபிற வரிகளையும் கட்டி விட்டு, நாம் ஏன் நம் வரிப் பணத்தில் அரசாங்கம் போட்ட சாலையில், நாம் செல்ல கட்டணம் கட்ட வேண்டும்?

எனக்கு புரியவில்லை...


இதை எப்படி அரசாங்கம் நியாயப்படுத்துகிறது?

இதை எதிர்க்கும் இயக்கம் ஏதாவது இருக்கிறதா?

வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா?

யாராவது தெரிந்தவர்கள் விளக்குவார்களா?


(நாம் போகின்ற வழியில் வாங்குகின்ற அநியாய கட்டணமான இவற்றை வழிப்பறி என்று சொல்லலாமா?)

பிற்சேர்க்கை-சென்ற வாரத்தில் மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலையில் சுங்க கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர்..

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..