கண்ணாடி....
கண்பார்வை கோளாறுக்காக போடப்படும் கண்ணாடிக்கு மூக்கு கண்ணாடி என்று பெயர் வைத்தது யார் எனத் தெரியவில்லை... அங்கேயே ஆரம்பித்து விட்டது பிரச்சினை...
இந்த கண்ணாடிகள் யாரால், எப்போது கண்டுப்பிடிக்கப்பட்டு உபயோகத்துக்கு வந்தன என்பதும் தெரியவில்லை... (வவ்வால் இதைப் பற்றி ஒரு பதிவு எழுதினால் தெரிந்துக்கொள்ளலாம்...)
நான் இதைப்பற்றி பேச வந்தது ஒரு ஜாலிக்காக...
நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருக்கையில் கண்ணாடிகள் பற்றி பேச்சு வந்தது.. தூரத்தில் காஃபி சாப்பிட்டு கொண்டிருந்த யாரோ ஒருவர் அணிந்திருந்த கண்ணாடியை பார்த்து விட்டு, "அந்த காலத்துல ப்ரதாப் போத்தன் போட்ட கண்ணாடி மாதிரியே இருக்கு" என்று சிரித்து கொண்டிருந்தார் நண்பர்..
ஆனால் ஒன்று ஒப்பு கொள்ள வேண்டும், கேரக்டருக்காக கண்ணாடி போட்டு எவ்வளவோ பேர் நடித்திருக்கலாம். ஆனால், ஒரு ஹீரோவாக பயப்படாமல் இமேஜ் பார்க்காமல் கண்ணாடிப் போட்டு நடித்தவர் பாக்கியராஜ் தான்.
அதுவும் சாதா கண்ணாடியல்ல பூதக்கண்ணாடி...
என்னென்ன வித்தை காட்டுவார்.... அதை கழட்டி வைத்தால் ஃபைட் செய்யப்போகிறார் என்று அர்த்தம்.. அதை லைட்டாக அட்ஜஸ்ட் செய்தார் என்றால் ஏதோ காமெடி வசனம் பேச போகிறார் என்று அர்த்தம்...
யோசித்து பார்க்க வேண்டும்.. கண்பார்வை கோளாறுக்காக தான் கண்ணாடி போடுகிறார்கள். ஆனால் சமூகம் அதை எவ்வாறெல்லாம் எதிர்கொள்கிறது...
உதாரணமாக திரைப்பட கதாநாயகிகள், சிறு வயதில் கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலையை அடைவதாக திரைக்கதை இருக்கிறது என்றால் ஒரு கண்ணாடியை அந்த நாயகிக்கு மாட்டி விடுவார்கள்.. முடிந்தது.. அவள் கலெக்டர் என்றோ, டீச்சர் என்றோ மக்கள் ஒப்புக் கொண்டு விடுவார்கள்...("சூர்ய வம்சம்" படத்தில் கூட பார்க்கலாம்...தேவ்யானி ஆட்சியர் ஆன உடனே கண்ணாடியுடன் தோன்றுவார்)... கண்ணாடியென்றால் சாதாரண கண்ணாடி அல்ல... பஸ் முன்பக்க கண்ணாடி அளவிற்கு பெரிய கண்ணாடி போட்டால் தான் செல்லும்...
விஜய் கூட தனக்கிருந்த ப்ளே பாய் இமேஜை உடைத்து நல்ல பையன் இமேஜுக்கு மாற கண்ணாடி அணிந்து சில படங்களில் தோன்றினார்... அதற்கு பலனும் கிடைத்தது...
கண்ணாடி போட்டால் அறிவாளி, அறிவுஜீவின்னு ஒரு நினைப்பு பரவலாக இருக்கவே செய்கிறது... இது எப்படி ஏற்பட்டது என்று தான் புரியவில்லை...
ஆனால் இந்த கண்ணாடியை போட்டு கொண்டு நம்மாட்கள் செய்யும் அக்கப்போர் இருக்கிறதே... சொல்லி மாளாது...
பஸ்ஸில், கண்ணாடியை ஸ்டைலாக கழற்றி அதை "ஹா..." என்று வாயினால் ஊதி லாவகமாக கர்ச்சீப்பினால் துடைப்பர்கள்... உடனே நாமும் நம் முகத்தை துடைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால்.. கவுண்டமணி மாதிரி ஆவி அடிச்சிடுச்சிப்பா என்று மயங்கி சரிய வேண்டியது தான்...
சினிமாவில் டாக்டர்கள் கண்ணாடி போடுவதே கடைசி சீனில் அதை கழட்டி "காட் ஈஸ் க்ரேட்" என்று சொல்வதற்கு தான் என்று ஒரு S.V. சேகர் நாடகத்தில் கூட வரும்...
கண்ணாடி போடாத ஆளை ஆசிரியர் என்றோ, டாக்டர் என்றோ, விஞ்ஞானி என்றோ, கலெக்டர் என்றோ நம் மக்கள் சினிமாவில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவர்களுக்கு ஒரு நினைப்பு போல...
நிஜத்தில், கண்ணாடி போட்ட மாணவர்கள் என்றாலே படிப்பாளிகள் என்று சக மாணவர்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்...எனக்கு தெரிந்து என் நண்பன் ஒருவன் ஒவ்வொரு பரீட்சையிலும் சொல்லி சொல்லி கோட் அடிப்பான்... ஆனால் அவன் கண்ணாடி போட்ட ஒரே காரணத்துக்காக சாரின் பிரம்படியில் இருந்து தப்பி விடுவான்...
இப்படி கண்ணாடி அணிந்த பையனை படிப்பாளி என்று நம்பி, அவனை பார்த்து காப்பி அடித்து, பெயில் ஆகி அப்புறம் அவனை அடித்த கதையெல்லாம் உண்டு எங்கள் பள்ளியில்...
கண்ணாடி அணிந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் நம் பையன்கள்.. ரொம்ப இன்ஃபீரியராக ஃபீல் பண்ணுவார்கள் போல.. கண்ணாடி போட்ட பையன்களும் இதற்கு விதி விலக்கல்ல... ஒரு வேளை ரொம்ப நல்ல பெண்.. நம்மிடம் பேச, பழக துணிய மாட்டாள் என்ற எண்ணமோ என்னமோ...
கண்ணாடி போட்டா ஓவர் டீசண்டா தெரிது மச்சி என்று காண்டாக்ட் லென்ஸ் போட்ட நண்பர்களும் இருக்கிறார்கள்...
ஒரு காலத்தில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமணம் நடப்பதற்கே கண்ணாடி போடுதல் என்பது ஒரு ஸ்டிராங்கான முட்டுக்கட்டையாக இருந்து இருக்கிறது... மாப்பிள்ளை கொஞ்சம் வயசானவர் மாதிரி தெரியலை? என்று கேட்டு குழப்பி கல்யாணத்துக்கு கும்மி அடித்து விடும் பக்கத்து வீட்டு அக்காக்கள் எவ்வளவோ பேர் இருந்திருப்பார்கள்... என்னடா பெண்ணுக்கு நாலு கண்ணாமே என்று மாப்பிள்ளையை ஓட்டி கல்யாணத்தை கெட்டுக்கும் நல்ல நண்பர்களுக்கும் பஞ்சம் இருந்து இருக்காது...
இப்போ இதிலெல்லாம் கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது போல படுகிறது... (எல்லாம் எங்க தலைவி சிம்ரன் கண்ணாடி போட்டு போஸ் கொடுக்க ஆரம்பித்தது தான் என்று யாரேனும் சொல்லக்கூடும்)
நம் சமூக அமைப்பு தவிர வெளி சமூக அமைப்புகளில் இது போன்ற வித்தியாசங்கள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை...
கண்ணாடி அணிதல் என்ற விஷயம் ஏன் இவ்வளவு முக்கியமானதாக, பல முரண்களுடன், அணிபவரைப் பற்றி ஒரு தீர்மானத்தை கொடுப்பதாக நம் சமூகத்தில் இருந்தது, இருக்கிறது(?) ஒரு புதிராக தான் இருக்கிறது...
தங்கள் கருத்துக்கள் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்கு