நாம் எவ்வளவோ திரைப்படங்களை பார்க்கிறோம். சில நாட்களிலேயே மறந்தும் போகிறோம்.
சில திரைப்படங்கள் மட்டும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் அப்படியே படிமனாய் படிந்து விடும்... அதற்கு காரணங்கள் எவ்வளவோ இருக்கும்...
என் மனதில் பதிந்த இந்த ஆங்கில திரைப்படத்தை பற்றி கொஞ்சம்...
"The Last of the Mohicans"(1992)
சிறந்த ஒலியமைப்பிற்கான ஆஸ்கார் விருது வாங்கிய ஆங்கில திரைப்படம்.
1992-ல் வெளி வந்த இத்திரைப்படம் 1750-களில் நடந்த ஆங்கில-பிரெஞ்ச்/அமெரிக்க பூர்வகுடியினர் இடையே நடந்த போர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலையும், 1936-ல் எடுக்கப்பட்ட Last Of the Mohicans (1936) திரைப்படத்தையும் தழுவி எடுக்க பட்டது.
ஆங்கிலேயர்களும் பிற ஐரோப்பிய குடிகளும் காலனி குடியேற்றங்களுக்காக ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்யும் பின்னனி... பிரெஞ்சு படைகள் சிவப்பிந்தியர்களோடு சேர்ந்து ஆங்கிலேயரோடு யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் பிரதான அம்சம் உயிரோட்டமான போர் காட்சிகள்,
உயிரோட்டமான இசை.. துல்லியமான ஒளிப்பதிவு... சிறந்த கதையமைப்பு.. கதைக்களன்..
கதைப்படி MOHICANS என்ப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பேர் தங்களுக்கு பழக்கமான ஆங்கிலேய குடும்ப நண்பர் ஒருவரின் மகள்களுடன் அவர்கள் தந்தையின் இருப்பிடம் நோக்கி புறப்படுகிறார்கள். ஆங்கிலேய ராணுவ அதிகாரியான அவர் பொறுப்பில் உள்ள கோட்டை கடும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவரை போல போலி கடிதம் அனுப்பி மகள்களை கடத்த, அவரால் பாதிக்கப்பட்ட மாகுவா (Magua)(Actor-Wes Studi) எனப்படும் பூர்வகுடி முயற்சிப்பது 3 பேருக்கும் தெரிய வருகிறது. கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்து கோட்டையை அடைந்து, திரும்பவும் அங்கே இருந்து கோட்டை வீழ்ந்த காரணத்தால் எதிரிகளிடம் தப்பித்து, மாகுவாவிடமும், அவருக்கு உதவும் ஹியுரான் இனத்தவரிடமும் சிக்கி கொள்கின்றனர்.
அவர்களுக்கு என்னாகிறது என்பதை க்ளைமேக்ஸ் சொல்கிறது.
அழிவை காட்டுவதற்காகவும், போர்களின் தன்மையை அவற்றின் விளைவுகளை சித்தரிக்கும் திரைப்படங்களில் காதல் காட்சிகள் அவ்வளவு உயிரோட்டமாக இருக்காது. மாறாக இப்படத்தில் சகோதரிகளில் அக்கா கோரா(Cora) (actress- Madeleine Stowe)விற்கும், கதாநாயகன் ஹாகேயேக்கும்(Hawkeye)(Actor- Daniel Day-Lewis) இடையே ஏற்படும் காதலும், இளையவள் அலைஸுக்கும்(Alice)(Actress-Jodhi May) அன்காஸுக்கும்(Uncas)(Actor- Eric Schweig) ஏற்படும் காதலும் மென்மையாக சொல்லப்பட்டுள்ளது..
படத்தில் இடம்பெறும் விலாவரியான சண்டை காட்சிகள் காலனி ஆதிக்க வெறியில் ஐரோப்பியர்கள் செய்த கொடுமைகளை உலகிற்கு தெரிவிப்பதாக உள்ளது. காலனி அமைப்பதிலும், தத்தம் மக்களை குடியேற்றுவதிலும் அவர்களுக்கு இடையே இருந்த போட்டியும் பொறாமையும், போர்களும்.... இத்திரைப்படம் தோலுரித்து காட்டுகிறது.
தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் கொடுமை செய்த ஆங்கிலேயர்களை பழி வாங்க துடிக்கும் அமெரிக்க பூர்வகுடியினரின்(சிவப்பிந்தியர்கள்) கோபம் தான் படத்தின் முக்கியமான கரு.
சண்டைக்காட்சிகள் அருமையாக படம் பிடிக்க பட்டுள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.
மாகுவாவும் ஹியுரான்(Huron) இனத்தவரும் பிடிப்பட்ட சகோதரிகளை பங்கு பிரித்து கொள்கிறார்கள். கோராவிற்கு பதிலாக தன்னுயிரை இழக்க முன்வருகிறார் ஒரு ஆங்கிலேய தளபதி. (Actor-Steven Waddington) பதிலுக்கு கோரா ஹாகேயேவிடம் ஒப்படைக்க படுகிறாள்.
மாகுவாவால் கொண்டு செல்லப்படும் அலைசை காப்பாற்ற போராடுகிறான் அன்காஸ். போராட்டத்தில் மாகுவாவால் கொல்லபடுகிறான். மாகுவாவிடம் சிக்கி சின்னாபின்னமாகி சாக விரும்பாமல் அன்காஸ் செத்து விழும் அதே இடத்தில் அலைஸும் குதித்து உயிரை விடுகிறாள்.
இவை அனைத்தும் கோராவை மீட்டு கொண்டு ஹாவேகேயும், சிங்காகுகும் (Chingachgook) (Actor-Russell Means), வருவதற்குள் நடந்து விடுகிறது.
தப்பி செல்லும் மாகுவாவையும் அவன் ஆட்களையும் இருவரும் விரட்டி செல்கிறார்கள்.
மாகுவாவை சின்காகுக் கொல்கிறான். கோராவும், ஹாவேகேவும், சின்காகுக்கும் காலனி ஆதிக்கம் எப்போது முடிந்து எப்போது அமைதி திரும்பும் என்று எதிர்காலத்தை பற்றிய கவலைகளோடும், கனவுகளோடும் பேசிக்கொள்வதோடு படம் நிறைவடைகிறது.
உச்சக்கட்ட காட்சி மொத்தம் பத்தே நிமிடங்கள் தான் அந்த பத்து நிமிடங்கள் காரணமாக படம் பத்தாயிரம் மடங்கு நம் மனதினுள் விசுவரூபம் எடுத்து விடுகிறது.
கண்களில் மட்டும் கொலை வெறி காட்டி மிரட்டும் மாகுவா, கண்களில் இயலாமையை வெளிக்காட்டும் அன்காஸ், தன் வாழ்க்கை சூனியமானதை சிறு உணர்ச்சி ததும்பலில் வெளிபடுத்தும் அலைஸ் இப்படி…..
பத்து நிமிடத்தில் பதற வைக்கிறார்கள். கோராவிற்கு பதிலாக உயிர் துறக்க சம்மதித்து நெருப்பில் இறக்கப்படும் ஸ்டூவர்ட் எனப்படும் ஆங்கிலேய அதிகாரியை ஹாவேகே தூரத்தில் இருந்து சுட்டு கருணை கொலை செய்யும் காட்சியில் கலங்காத உள்ளத்தை கூட கலங்க வைக்கிறார் இயக்குனர் மைக்கேல் மேன் (Michael Mann). மனதை விட்டு அகலாமல் வெகு காதினுள்ளே ரீங்காரமிடும் இசை (Randy Edelman & Trevor Jones).
செல்டிக் வயலின்(CELTIC Violin) எனப்படும் பத்து நிமிட உச்சக்கட்ட இசை, இசை ரசிகர்கள் இடையே வெகு பிரபலம்.
பிரமாதமான இந்த திரைப்படத்தை நேரம் ஒதுக்கி அவசியம் பார்த்து விடுங்கள்.
க்ளைமேக்ஸ் காட்சியை பார்க்க விரும்பும் அன்பர்களுக்காக...
நன்றாக விமர்ச்சித்திருக்கிறீர்கள், மாயன். பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டியதாக அமைந்தது.
பதிலளிநீக்குமெக்சிகனைத்தான் அவர்கள் விளிக்கும் ஸ்டைலில் மெஹிகோ என்று விளித்திருக்கிறார்கள்...
நன்றி, மாயா!!