உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வியாழன், ஜூன் 18, 2009

சினிமா என்னும் குடிசைத் தொழில்

முன்பெல்லாம் ஒரு சினிமா படம் வெளியாக போகிறது என்றால் அவ்வளவு பரபரப்பாக இருக்கும்..

இப்போதெல்லாம் அப்படி இல்லை... வெள்ளிக்கிழமை தினத்தந்தி பார்த்தால், இந்த படம், அந்த படம் என்று ஏராளமான படங்களுக்கு பூஜை போடப்படுவதாக விளம்பரங்கள் வருகின்றன.

அப்பாவியான கிராமத்து தோற்றத்தில் கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல், நாயகன் நாயகி படங்களுடன் ஏதாவது ஒரு பெரிய மனிதரின் நல்லாசியோடு படப்பிடிப்பை தொடங்குவதாக ஏராளமான விளம்பரங்கள்...

கதாநாயகன் கதாநாயகியை பார்த்தால் நம்பவே முடியவில்லை... இவர்கள் எல்லாம் நடித்தால் யார் பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது... ஆனால் பசங்க, சுப்ரமணியபுரம், தூத்துக்குடி என்று சில படங்கள் வெற்றியடைய தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் எல்லா படங்களும் இந்த படங்களை போல் நேர்த்தியாக இருப்பதாக தெரியவில்லை...

இவர்கள் இப்படி படம் எடுக்கக் காரணமாய் அமைவது எது?

டிஜிட்டல் தொழில்நுட்ப வரவால் பிலிம் இல்லாமல் குறைந்த செலவில் படம் எடுக்க முடிவது...

பணப்புழக்கம் அதிகரிப்பு,

படமெடுப்பதற்கு உண்டான பணத்தேவைக்கும், கையிருப்புக்கும் உள்ள இடைவெளி குறைவு...

தொழில்நுட்பத்தின் வீச்சு...

மற்றும் தொழிநுட்பம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... போன்றவற்றை சொல்லலாம்...

பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாதவர்களின் படங்களை பார்க்கும் போது எனக்கு இப்படி தான் தோன்றும்

1. நிறைய பணம் உள்ள நபர் விளம்பரம், புகழுக்கு ஆசைப்பட்டு படம் எடுக்கிறார்.

2. கலைத்தாய்க்கு தன்னால் தான் சிறப்பு செய்ய முடியும் என்று கண்மூடித்தனமாக நம்பும் இயக்குநரிடம் ஏமாந்த தயாரிப்பாளர்.

3. எப்படியும் போட்ட காசை எடுத்து விடலாம் என்று எண்ணி வேறு வியாபாரத்தில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள்.

4. வேறு வியாபாரத்தில் வரும் எக்கசக்க லாபத்தில் கறுப்பு பணமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாய் மாற்ற, அல்லது கறுப்பு பணமாய் மாற்ற சினிமா எடுக்கும் பணக்காரர்கள்.

5. மகனையோ, மகளையோ வைத்து படம் எடுத்து அவர்கள் பிரபலமானால் வெளி படங்களில் நடிக்க வைத்து நிறைய துட்டு பார்க்கலாம் என்றெண்ணும் இரண்டாம் நிலை சினிமாக்காரர்கள்.


சார் கண்டிப்பா கலெக்ஷன் அள்ளிரலாம் சார் என்று இயக்குநர்களின் வார்த்தைகளுக்கு மயங்கி கையைச் சுட்டு கொள்பவர்கள் பலர்.

அப்படி எடுக்கும் படங்களின் பாடல்கள் சிறப்பாக வராததையோ, அடிப்படைகளான ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்புகள் சரியாக அமையாததையோ கண்டுபிடிக்க தெரியாத அப்பவிகளாய் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இருப்பது தான் வேதனை.

அதே சமயம் திறமையான இயக்குநர் அமைந்து சிறப்பாக படம் எடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் படத்தை வெற்றியடைய வைத்து விடுவார்கள் என்பதும் உண்மை.. கதாநாயகனோ, நாயகியோ தோற்றப் பொலிவோடு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்பதை 70-களில் இருந்து மக்கள் பலமுறை புரிய வைத்து இருக்கிறார்கள்..

ஆனால் பெரும்பான்மையான படங்களில் ஒரு தொழில் நேர்த்தி இருப்பதில்லை... கதை, நல்ல பாடல்கள், நல்ல நடிப்பு, கோர்வையான காட்சி அமைப்புகள் என்று எதுவுமே இருப்பதில்லை...

ஏனோ தானோ என்று, சில சண்டைகள், ஐட்டம் பாட்டுகள் என்று எதைக் கொடுத்தாலும் படம் ஓடி விடும் என்பது போல அமைச்சூர்த்தனமான சிந்தனைகள் தான் காரணம்.

சமீபத்தில் வெளிவந்த மிக பிரபலமான சண்டை இயக்குனர் ஒருவரின் படமும் இதற்கு விதிவிலக்கல்ல..

சி சென்ட்டர்ல கலெக்ஷன் பாத்துரலாம், பி சென்ட்டர்ல கலெக்ஷன் பாத்துரலாம், என்றெல்லாம் கனவுக் காணும் பல படங்கள்.. உலக தொலைக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்பது போன்ற குறைந்தபட்ச அலட்டல்கள் கூட இல்லாமல் நேரடியாக இரவு பதினோரு மணிக்கு கே.TV போன்றவற்றில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கனவுத் தொழிற்சாலையாய் இருந்த சினிமாவை குடிசைத் தொழிலாக்கியவர் என்று ஒரு இயக்குநரை பற்றி குறிப்பிடுவார்கள்... அப்படி சொல்வது சரியாகாது என்பது என் தாழ்மையான கருத்து…

சினிமா என்பது ஒரு ஊடகம்... இது ஜனநாயக நாடு... யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்... ஆனால் செய்வதை திருந்த செய்தால் மக்களுக்கும் நல்ல படங்களை பார்த்த திருப்தி இருக்கும், தயாரிப்பாளரும் இன்னொரு படத்தை எடுத்து சினிமா தொழில் வளர ஊக்குவித்தது போலவும் இருக்கும்...

அவ்வளவு தான் என் ஆதங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக