உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

செவ்வாய், ஏப்ரல் 08, 2008

வலையுலகிற்கு ஒரு வேண்டுகோள்

நாம் எத்தனையோ பதிவு எழுதுகிறோம்... சில பதிவுகள் புள்ளி விவரங்கள் எல்லாம் சேகரித்து எழுதி வெளியிடுவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி விடுகிறது...

எல்லா பதிவர்களுமே ரொம்ப மெனக்கெட்டு தான் பதிவெழுதுகிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....

ஆனால் ஒரு பெரிய விஷயத்தில் நாம் அனைவரும் கோட்டை விடுகிறோமோ என்று எனக்குப் படுகிறது...

பதிவர்கள் எல்லா விஷய்ங்களையும் பற்றியும் எழுதுகிறார்கள்... அறிவியல் ஆரம்பித்து அடுத்த வீட்டு ஆன்ட்டி வரை( சும்மா ஆனாவுக்கு ஆனா ஒரு ரைமிங்க்..)

எனக்கு ஒரு விஷயம் பற்றி பதிவுகளில் என்ன என்ன யார் யார் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.. இல்லை நான் தேடும் அந்த விஷயத்தை பற்றி யாராவது ஒரு கட்டுரை எழுதியுள்ளார்களா என்று தேட என்ன வழி இருக்கிறது...

குறிச்சொற்களை (label) பயன்படுத்தி தேடுவோம்...

அங்கே தான் பிரச்சினையே... அனைவரும் ஒரே மாதிரியான குறிச்சொல் பயன் படுத்துவதில்லை....

உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவை பதிவு எழுதப்படுகிறது என்று வைத்து கொள்வோம் ... ஒரு பதிவர் நகைச்சுவை என்று லேபிள் கொடுத்தால் மற்றொரு பதிவர் மொக்கை என்று லேபிள் கொடுப்பார். இன்னொரு பதிவர் எழுத்து பிழையோடு நகச்சுவை என்று கொடுப்பாராய் இருக்கும்... இப்படி வித விதமாய் குறிச்சொற்கள் கொடுக்க படும் போது... தேடுப்பொறிகளின் நேரம் வீணடிக்கப் படுவதோடு... செயல் திறனும் பாதிக்கப்படும்....

நமக்கும் நாம் தேடும் கட்டுரையோ, விஷயமோ கிடைப்பது கடினம்.. நாம் தேடும் பொருளில் நல்ல கட்டுரைகள் பல இருக்கும்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிச்சொல்லை கொண்டு இருக்கும்... ஒரு குறிச்சொல் போட்டு தேடும் பொது ஒரு சில கட்டுரைகள் தேடுபொறியில் வெளிவரும்...

நாமெல்லாம் உயிரை கொடுத்து எழுதுவது நாம் மட்டும் படித்து பயன்பெற அல்ல... பலரும் படிக்க வேண்டும்... பலருக்கும் நம் எழுத்துக்கள் பயன் பட வேண்டும் என்று தான் நினைக்கிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது...

எப்படி அச்சில் ஏற்றப்படும் புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், கதை, கவிதை, கட்டுரைகள் எல்லாம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களோ... அதே போல் வலையுலக எழுத்துக்களும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்...

பாதுக்காக்கப் பட்டால் மட்டும் போதாது.. அனைவரும் பயனுற வேண்டும் என்பதும் முக்கியம்...

சரி இதற்கு என்ன செய்ய முடியும் என்று கெட்கிறீர்களா?

நாம் பேசி கொண்டிருக்கும் இது ஒரு சாதாரண விஷயம் அல்ல... வலையை முற்றிலுமாக நம்பியிருக்க போகும் நம் எதிர்கால சந்ததிகள் பயன் பெற போகும் ஒரு இயக்கம்...

இதுவரை வெளிவந்திருக்கும் லட்சக்கணக்கான கட்டுரைகள் சரியான ஒரே சீரான குறிச்சொல்லை கொண்டிருக்கவில்லை என்பது ஒரு பயமுறுத்தும் விஷயம் ஆக இருந்தாலும்... இனிமேலும் இது தொடரக்கூடாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்....

என்ன செய்ய வேண்டும்

1) கட்டுரைகள், இடுகைகள் இவற்றுக்கு தேடுசொற்கள்(குறிச்சொற்கள்) அமைப்பதில் ஒரு ஒற்றுமை இருப்பது அவசியம்...

2) நகைச்சுவை கட்டுரைக்கு, பதிவுக்கு இந்த குறிச்சொல் தான் கொடுக்க வேண்டும், அறிவியல் பதிவுக்கு இந்த மாதிரி குறிச்சொல் தான் தரப்பட வேண்டும் என்று எல்லாவற்றிர்கும் என்ற நிச்சயமான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்....

3) ஒவ்வொரு கட்டுரையிலும் இடுகையிலும் அதை எழுதியவரின் பெயர் அதே பாட்டர்னில்(Pattern) இடம் பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட பதிவரின், எழுத்தாளரின் எழுத்தை தேடும் போது இது உதவியாக இருக்கும்...

4) உடனடியாக ஒரு குறிச்சொல் அகராதி உருவாக்கப்பட்டு அதிலுள்ள குறிச்சொற்கள் மட்டுமே பதிவுகளில், கட்டுரைகளில் குறிச்சொற்களாக கையாளப்பட வேண்டும்...

5) இது ஒரு சாதாரண பணியல்ல... ஒரு முக்கியமான மிகுந்த முயற்சியும் உழைப்பும் தேவைப்படுகிற விஷயம்... ஒரு பதிவர் சந்திப்பிலோ, ஒரு பதிவர் பட்டறையிலோ பதிவர் வட்டத்தில் இது போன்ற முயற்சிகளில் துணிந்து ஈடுப்படும் அன்பர்கள், பதிவர்கள் இதை அஜெண்டாவில் சேர்த்து ஒரு பொருளாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

(பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை என்பதை விட குறிப்பிட முடியாத ஒரு கசப்பான சூழ்நிலை வலையுலகில் நிலவுகிறது என்பதே உண்மை)

என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்ய காத்திருக்கிறேன்...

6) ஒரு சீரான குறிச்சொல் அகராதி உருவாக்கப்பட்ட பின் அவரவர் வெளியிட்டுள்ள இடுகைகள், கட்டுரைகளுக்கு முடிந்த அளவுக்கு குறிச்சொற்களில் மாற்றம் செய்ய வேண்டும்...(கஷ்டமான காரியம் தான்... பரிசீலிப்பதில் தவறில்லை... நம் தமிழ் மக்களுக்கு நம் எழுத்துக்களை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சி)...

பதிவர்கள் விவாதத்துக்கு என் கருத்துக்களை முன் வைக்கிறேன்.. சரியா தவறா என் புரிதலில் ஏதேனும் குழப்பமா என்று தெரிவிக்கவும்....

7 கருத்துகள்:

  1. நல்ல விஷயம் தான் செஞ்சிரலாம்

    வால்பையன்

    பதிலளிநீக்கு
  2. கண்டிப்பா செய்யனும் வால்பையன்.. இன்னைக்கு தெடுபொறியில ஒரு விஷயத்தை தேட நாம படும் கஷ்டத்தை நம்ம எதிர்காலத்தில் யாரும் படக்கூடாதுன்னு ஒரு ஆதங்கம்....

    பதிலளிநீக்கு
  3. இது சாத்தியமும் இல்லை.தேவையும் இல்லை.

    தேடு பொறி முடிவுகள் குறிச்சொற்களை அடிப்படையாக மட்டும் வைத்து அமைவதில்லை.

    குறிச்சொற்களின் சிறப்பே ஒன்றுக்கு மேற்பட்டு பலவாறும் குறிக்க இயல்வது தான். சிரிப்பு, நகைச்சுவை, தமாசு, டமாசு, humour, joke என்று ஒரு இடுகை குறித்து தோன்றும் எல்லா சொற்களையும் குறிச்சொற்களாகத் தரலாம். தமிழூற்று, வேர்ட்பிரெஸ் போன்ற பல தளங்களில் தொடர்புடைய குறிச்சொற்கள் வசதி இருக்கிறது. அதை வைத்து மாற்றுக் குறிச்சொற்களை அடையாளம் காண்பது இலகு.

    சரி, பதிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பட்டியலை இறுதி செய்து கடைப்பிடிக்கிறோம் என்றே வையுங்கள். அது நமக்கு மட்டும் தான் தெரியும். பதிவுகளைப் பற்றி அறியாத சாதாரண வாசகர்கள் எப்படி அறிவார்கள். நாம் மலர் என்ற குறிச்சொல்லை இறுதிப்படுத்தி அவர்கள் பூ என்று தேடிக் கொண்டிருந்தால்?? அதனால் எல்லா வகை குறிச்சொற்களும் இருக்க வேண்டியது அவசியம்.

    கண்டபடி சிதறிக் கிடப்பது போல் தோன்றும் இணையத்துக்குள்ளேயே ஒரு ஒழுங்கு தானாக அமையும். அடுக்கி வைப்பது மட்டும் ஒழுங்கு இல்லை :)

    பதிலளிநீக்கு
  4. ரவிஷங்கர்

    //தேடு பொறி முடிவுகள் குறிச்சொற்களை அடிப்படையாக மட்டும் வைத்து அமைவதில்லை.//

    உண்மை... ஆனால் குறிச்சொற்களை பயன்படுத்தி தேடலாம் இல்லையா? சாதாரணமாக தேடுவதை விட குறிச்சொல்லை வைத்து தேடுவது ஒஉ ஷார்ட்கட் போல தானே?

    டெக்னோராட்டி போன்ற வலைத்திரட்டிகளில் குறிச்சொற்கள் குவிந்து கிடப்பதை பாருங்கள்... அவற்றை வகைப்படுத்தினால் எவ்வளவு உதவியாக இருக்கும்?

    //தமிழூற்று, வேர்ட்பிரெஸ் போன்ற பல தளங்களில் தொடர்புடைய குறிச்சொற்கள் வசதி இருக்கிறது. அதை வைத்து மாற்றுக் குறிச்சொற்களை அடையாளம் காண்பது இலகு.//

    யூனிபார்மான குறிச்சொற்களை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்தால் எதற்காக தொடர்புடைய குறிச்சொற்களில் தேட வேண்டும்....

    அந்த தொடர்புடைய குறிச்சொல்லில் இருந்து Desired Result-ஐ பெற ஒரு நிமிடம் Extra ஆகிறது என்று வைத்து கொண்டாலும் எவ்வளவு இணைய நேரத்தை எதிர்காலத்தில் மிச்சப்படுத்தலாம்....

    //சரி, பதிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பட்டியலை இறுதி செய்து கடைப்பிடிக்கிறோம் என்றே வையுங்கள். அது நமக்கு மட்டும் தான் தெரியும். பதிவுகளைப் பற்றி அறியாத சாதாரண வாசகர்கள் எப்படி அறிவார்கள்.//

    அந்த பட்டியலை பயன்பாட்டிற்கு வெளியிடாமல் நாமேவா வைத்துக் கொள்ள போகிறோம்? அதுவும் இணையத்தில் கிடைக்க தானே போகிறது....

    //கண்டபடி சிதறிக் கிடப்பது போல் தோன்றும் இணையத்துக்குள்ளேயே ஒரு ஒழுங்கு தானாக அமையும். அடுக்கி வைப்பது மட்டும் ஒழுங்கு இல்லை :)//

    மீண்டும் மீண்டும் உபயோகப்பட போகும் எந்த ஒரு DATA-வுக்கும் சீரான ஒழுங்கமைவு அவசியம் என்பது அடிப்படை DATABASE விதி இல்லையா?
    அப்போது தானே FETCH செய்வது எளிது..?

    பதிலளிநீக்கு
  5. சரி மாயன், நீங்கள் சொல்வது போல் பயன் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், இதைச் செய்வது, இணையத்தை ஒழுங்கமைப்பது என்பது சாத்தியம் இல்லாத வேலை என்பதை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    உலக இணையத்தில் ஏன் இது போல் யாரும் செய்ய முற்படுவதில்லை என்று ஒரு நொடி எண்ணிப் பாருங்கள்.

    ஒன்றை வரையறுத்து இப்படிச் செய்யுங்கள் என்று சொல்வது இணையத்தில் நடக்காது. இணையம் ரொம்ப பெரிசுஉஉஉஉஉ..

    கன்னா பின்னாவென்று கண்டபடி நடந்த பின் அதற்குள் உள்ள ஒழுங்கமைப்பு என்ன என்று ஆய்ந்து செயலிகள் செய்வது தான் நுட்பக்காரர்கள் வேலை.

    **
    பதிவை எழுதுகிறவர்கள் கொடுப்பது மட்டும் தான் குறிச்சொல் என்றில்லை. அதே பதிவை delicious போன்ற தளங்களில் சேர்க்கும் போது நாம் தரும் குறிச்சொற்களும் கணக்கில் வரும். தமிழ் இணையம் வளர வளர இது போல் பலரும் பல முனைகளில் குறிச்சொல் இடும் போது ஒரு ஒழுங்கும் சீர் நிலையும் வரும். எல்லாவற்றையும் பதிவை எழுதுகிறவரே செய்வார் என்று எதிர்ப்பார்க்க இயலாது.

    **

    தயவுசெய்து ரவிசங்கர் என்றே அழையுங்கள் :)

    பதிலளிநீக்கு
  6. சில காலம் முன்பு அனைத்து தமிழ் இடுகைகளுக்கும் 'தமிழ்ப்பதிவுகள்' என்று கேட்டகரி வைக்கும் வேண்டுகோள் உலாவி வந்தது. அந்த மாதிரி எளிமையாக நிறைவேறக்கூடியதே வாய்க்கவில்லை :(


    ---இந்த மாதிரி குறிச்சொல் தான் தரப்பட வேண்டும் என்று எல்லாவற்றிர்கும் என்ற நிச்சயமான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்....---

    என்னை மாதிரி பேராசைக்காரன் இருந்தால், இந்தப் பட்டியலில் நூறு குறிச்சொல் (திரைப்படம்/கட்டுரை/கதை/நகைச்சுவை...) இருந்தால், எல்லாப் பதிவுக்கும் எல்லா குறிச்சொல்லையும் இணைத்துக் கொள்வேன்.

    இப்படி செய்வதனால், டெக்னோரட்டி/கூகிள் குழம்பும். எதைத் தேடினாலும் என்னுடைய பதிவு வந்துசேரும். எல்லாரும் என்னுடைய எல்லா இடுகைகளையும் வாசித்தே தீருவார்கள்.

    இந்தப் பட்டியல் முடிவை வரவேற்கிறேன் ;)

    ---ஒவ்வொரு கட்டுரையிலும் இடுகையிலும் அதை எழுதியவரின் பெயர் அதே பாட்டர்னில்---

    எழுதியவர் பெயர் தெரிந்து தேடுவதாக இருந்தால், இன்னாரின் வலைப்பதிவு முகப்பிற்கே சென்று உலாவ ஆரம்பிக்கலாமே?

    எதற்காக இன்னபிற இடங்களில் தேடவேண்டும்?

    மேலும், 'இந்த வலையகத்துக்குள் மட்டும் தேடினால் போதும்' என்னும் வசதியும் தேடற்பொறிகளில் இருக்கும்.

    இதையே தவறுதலாக பயன்படுத்த விழைந்தால், 'ஜெயமோகன்' நான்தான் என்று சுட்ட எண்ணி, இதே பாட்ட்ர்ன் பயன்படுத்தி, ஒருவரைப் போல் இன்னொருவர் காட்சியளிக்க முடியுமா?

    ---யூனிபார்மான குறிச்சொற்களை அனைவரும் பயன்படுத்த ஆரம்பித்தால் எதற்காக தொடர்புடைய குறிச்சொற்களில் தேட வேண்டும்....---

    கூகிளில் தேடுபவரில் பலர் பிழையான சொற்றொடர், பலுக்கப் பிழை, தொடர்புடைய சங்கதி என்று தொடங்குவார். 'ஜெயா' என்றால் காவல்துறையினர் சிலரை நடுங்கவைத்த ஜெயலஷ்மியா, அஞ்சாதே விஜயலஷ்மியா, ஜெயா தொலைக்காட்சியா ... ?

    ---அந்த பட்டியலை பயன்பாட்டிற்கு வெளியிடாமல் நாமேவா வைத்துக் கொள்ள போகிறோம்? அதுவும் இணையத்தில் கிடைக்க தானே போகிறது....---

    Internet user guide மாதிரி இதைப் படித்தால்தான் உள்ளே வர இயலுமா? இந்தப் பட்டியல் ஆல்டாவிஸ்டா, யாஹூ, கூகிள் போன்றவற்றில் முதலில் வரவழைப்பது கஷ்டம்.

    இணையம் மேய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று வருபவர் 'அண்ணா பல்கலை கல்லூரி தரப் பட்டியல்' என்று தேட ஆரம்பிப்பார். (ஆங்கிலம், தமிங்கிலம் கலந்து; கூகிளின் தமிழ் இடைமுகம் உபயோகித்தால் தமிழ்; பல்வேறு வார்த்தைகள்)

    அப்பொழுது இந்தக் குறிச்சொல் பட்டியல் அவருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. சிஃபி மையங்களை பயன்படுத்துவதால் 'சிஃபி தேடல்' மட்டுமே தெரிந்தவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் குறிச்சொல் பட்டியல் குறித்து அறிந்திருக்கும் வாய்ப்பு மிக மிக துர்லபம்.

    இந்தத் தேடலில் அவருக்கு 'எப்படி நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்வது', 'எந்தக் கல்லூரியில் ரேகிங் அதிகம்' போன்ற பல தொடர்புள்ள/தொடர்பில்லாத விஷயங்களும் முக்கியம். இத்தனையும் சங்கிலியாக இணைக்கும் குறிச்சொல் பட்டியல், அனைத்துப் பதிவர்களுக்கும் (ப்ளாகர், வோர்ட்பிரெஸ்,காம், தனித்தளம்), புதியவர்களுக்கும் (பயனர், வாசகர்) எளிதில் சொருகி உபயோகிக்குமாறு இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு பதிவை இடும்போதும் 'தேடலில் இது எவ்வாறு முக்கியப்படும்' என்பதை உணர்ந்து பதிவிட்டாலே போதும். சில....

    1. இந்த இடுகைக்கு தலைப்பு - 'கூகுள் தேடல் - குறிச்சொல் பட்டியல்: வலையில் விஷயத்தை கண்டுபிடிக்கும் நுட்பம்'

    2. ஆங்காங்கே பொருத்தமான உப தலைப்புகள்

    3. மூன்று நான்கு நிழற்படங்கள் - அவற்றிற்கான பெயர் இடுதல் பொருத்தமாக அமைந்திருக்க வேண்டும்.

    4. ஏற்கனவே இது குறித்து எழுந்த விவாதங்களுக்கான தொடுப்புகள்

    5. இடுகை, கட்டுரை, குறிச்சொற்கள், பதிவு, மாயன் போன்றவை பொருத்தமாக இருந்தாலும் எவ்வளவு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அத்தனைக்கும் குறிச்சொல் நிரப்புவது மேலும் சிறப்பாக இருந்திருக்கும். என்னுடைய பரிந்துரை... Tags, Labels, category, Blogs, Blogspot, Search, Google, Index, Links, Semantic, Web 3.0, Thamilamanam, Aggregators (தமிழ் மட்டும்தான் விருப்பம் என்றால், இவை அனைத்திற்கும் பொருத்தமான தமிழ்ப்பதங்கள் :)

    இன்னும் நிறைய செய்யலாம். அது சாதாரணருக்கு சட்டென்று உதவலாம்.

    பதிலளிநீக்கு
  7. பாலா, ரவிசங்கர்.... கருத்துக்களுக்கு நன்றி... நேரன்மின்மை காரணமாக என் பதிலை உடனடியாக தர இயலவில்லை...தொடர்ந்து விவாதிப்போம்...

    ரவிசங்கர்

    மன்னித்துக் கொள்ளுங்கள்... வேண்டுமென்றே அவ்வாறு விளிக்கவில்லை...

    பதிலளிநீக்கு