எங்கு பார்த்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு, உலக வெப்பமயமாக்கம் என்று ஒரே கூக்குரல்...
வளர்ச்சியடைந்த நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் வளரும் நாடுகளான இந்தியா, சீனா மற்றும் இதர கிழக்காசிய நாடுகளையும், வளரும் நாடுகளையும் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாவதற்கு காரணமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதற்கு நம் நாடு உள்பட பல நாடுகளில் உள்ள சமூக ஆர்வரல்களும் ஆமாம் சாமி போட்டு எழுதிக் குவித்து வருகின்றனர்...
வளர்ச்சியடைந்த நாடுகளின் இந்த திடீர் கரிசனத்துக்கு காரணம் புவியின் மீது அவர்களுக்கு உள்ள அக்கறை என்று எண்ணி, இந்தியாவே இப்படி தான், அந்த நாட்டை பார், எப்படி மாசுப்படாமல் இருக்கிறது என்று எழுதி இந்தியாவையும் மற்ற வளரும் நாடுகளையும் குறை கூறுபவர்களை கண்டிப்பது தான் இந்த பதிவின் நோக்கம்
பூமி ஏதோ நேற்றைக்கு சாயங்காலம் தான் மாசுப் பட ஆரம்பித்தது போல உள்ளது இவர்கள் பேச்சு.
உலக வெப்பமயமாகுதல் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல.. அது தொழிற்புரட்சியோடு கைக் கோர்த்து கொண்டு பிறந்த்து.
உலகில் தொழிற்புரட்சி உச்சத்தில் கோலேச்சியது, 1800-களின் இறுதியிலும், 1900-களின் ஆரம்பத்திலும்... 1800-களின் ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப் பட்ட மின்சாரம் தொழிற்புரட்சிக்கு இன்னும் தூபமிட்டது.
General view of Funkville in 1864, Oil Creek, Pennsylvania
அப்போது கிட்டத்தட்ட அனைத்து ஐரோப்பிய நாடுகளும் தத்தமது போருளாதாரத்திலும், தன்னிறைவிலும் அக்கறைக் கொண்டு தொழிற்சாலைகளை நிறுவி இரவு பகலாக வேலை செய்து அதை அடைந்தன.
இப்போது வளரும் நாடுகள் எனச் சொல்லப்படும் பெரும்பாலான நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் நாடு பிடிக்கும் ஆசையிலும், இயற்கை வள சுரண்டலுக்காகவும் அவர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தன..
போதாத குறைக்கு வளரும் நாடுகளிலும் தங்கள் வியாபாரத்தையும், தொழிற்சாலைகளையும் நிறுவி உழைப்பையும் உறிஞ்சிக் கொண்டனர்.
அவர்கள் தன்னிறைவுப் பெற்று கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் செழுமையை எட்டிப்பிடித்த பின்பு தான் காலனி நாடுகள் நிமிர்ந்து சுதந்திரம் அடைந்து மூச்சு விடவே ஆரம்பித்தன.
நாடு பிடிக்கும் ஆசையிலும், சுரண்டல் ஆசையிலும் பேரழிவையும், அணுகுண்டுகளையும் உலகத்துக்கு அறிமுகப் படுத்திய இரண்டு உலக மகா போர்களும் ஐரோப்பாவில் தான் ஆரம்பித்தன…
150 வருடமாக தொடர்ந்து புகை கக்கிய தொழிற்சாலைகளும், வாகனங்களும், அணு உலைக் கூடங்களும் தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம்.. ஆனால் எல்லாவற்றையும் சாதித்து கொண்டு, அதே ஐரோப்பிய நாடுகள், இப்போது வளரும் நாடுகளை நோக்கி கூச்சப்படாமல் கைக்காட்டி நிற்கின்றன.
நம் நாடு தொழிற்புரட்சியின் போது சுதந்திரம் வேண்டி கதர் சட்டை அணிந்து கொடி பிடித்து கோஷம் போட்டு கொண்டிருந்தது.. கிட்டத்தட்ட எல்லா வளரும் நாடுகளின் நிலையும் அது தான்.. பிரிட்டீஷ் காரர்கள் எல்லாவற்றையும் சுரண்டியது போக, மிச்சமிருந்ததை வைத்து நாம் நம் வாழ்க்கையை குற்றுயிரும், குலையிருமாய் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்…
இப்போது நாமும், மற்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் தன்னிறைவு பெற வேண்டி தொழில்களை மேம்படுத்தி கொள்ள முனையும் போது.. சுற்றுச்சூழல் பிரச்சினையோடு களத்தில் குதித்துள்ளன வளர்ச்சியடைந்த நாடுகள்…
1. சுற்றுச்சூழல் குறித்தான விவாதங்கள் 1863-லேயே ஆரம்பித்து விட்டது.சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் விதமாக பிரிட்டன்
British Alkali Acts என்ற சட்டத்தை இயற்றியது. ஏரளமான இயக்கங்களும், ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் பாதிப்பை எதிர்த்து இந்த 150 வருட காலமாக போராடி வந்துள்ளனர்.. அதையெல்லாம் கேட்காமல், காதில் போட்டுக் கொள்ளாமல், அணு ஆயதங்களை தயாரித்து குவிப்பதில் மும்முரமாயிருந்த வளர்ச்சியடைந்த நாடுகள் இப்போது மட்டும் குதிப்பதின் காரணம் என்ன?அப்போதெல்லாம் அவர்களுக்கு அது தவறு, உலகம் அழியும் என்று தெரியவில்லையா?
The nuclear power plant of Dampierre-en-Burly, France
2.G8 மாநாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து வாய் கிழிய பேசும் பிரான்ஸ் நாடு தன் நாட்டின் மின்சாரத் தேவைகளுக்கு அணு உலைகளை மட்டுமே நம்பி உள்ளது என்று எத்தனை பேருக்கு தெரியும். அது போக பக்கத்து நாடுகளுக்கு மின்சாரத்தை விற்று, காசுப் பார்க்கிறது என்பது தெரியுமா? இதுக் கூட பரவாயில்லை.. அந்த அணு உலையில் வெளியாகும் கழிவுகளை எங்கே கொட்டுவது என்று தெரியாமல் எத்தனை பிரான்ஸ் நாட்டு கப்பல்கள் சர்வதேச கடல் எல்லையில் சுற்றித் திரிகின்றன என்பது தெரியுமா?ஏன் வளரும் நாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடு?
3.அமெரிக்காவிலும் மற்றைய வளர்ந்த நாடுகளிலும் சுற்றுச் சூழலையும் மாசுப்படுத்தும் எல்லா தொழிற்சாலைகளையும் மூடி விட்டார்களா என்ன?
4.சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் எல்லா தொழிற்சாலைகளிலும் மாசு கட்டுப்பாட்டு கருவிகளை வளர்ந்த நாடுகள் பொருத்தி விட்டார்களா, யார் இதை கவனித்து உறுதி செய்வது?
5.1000 பேருக்கு 765, 619 என்ற விகிதத்தில் வாகனங்களை இயக்கி சுற்றுச்சூழலைமாசுப்படுத்தும் அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் 1000 பேருக்கு 12 வாகனங்களை இயக்கும் இந்தியாவை பார்த்து சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாதே என்று சொல்வது எந்த வகையில் நியாயம்
சரி வளர்ந்த நாடுகள் மாசு ஏற்படுத்தாத வகையில் வாகங்கள் இயக்க, தொழிற்சாலைகள் நடத்த ஏதோ மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம்... அந்த தொழில் நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு கொடுத்து உதவுவார்களா? சமூக ஆர்வலர்களே கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்…
வளர்ந்த நாடுகள் பெரும்பாலும் முதலாளித்துவ நாடுகள். முதலாளித்துவம் என்றாலே என்பது பெரும் முதலாளிகள் நினைப்பதை சாதிப்பது என்பது என்று அர்த்தம். பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்புரட்சி மற்றும் கணினிப் புரட்சி மூலமாக உள்நாட்டில் உற்பத்தி தன்னிறைவு பெற்று, தங்கள் உபரி உற்பத்தியை விற்க சந்தையைத் தேடி அலைந்தன…
அவர்களுக்கான சந்தைகள் வளரும் நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகள் தான். உள்நாட்டு உற்பத்தியில் இந்த நாடுகள் தன்னிறைவு பெற்று விட்டால், அவர்கள் தங்கள் பொருட்களை விற்க முடியாது... எத்தனை உள்நாட்டு நிறுவங்களை Predatory Pricing மூலம் அழித்தாலும் உள்நாட்டு உற்பத்து உள்ள வரை அவர்களால் சந்தை கைப்பற்ற முடியாது.. அதனால் தான் இந்தியாவிலேயே நிறூவனங்களை பதிவு செய்து, நீண்ட காலத் திட்டமாக ஏதோ செய்கிறார்கள்…
இதை சாதிக்க அவர்களுக்கு வளரும் நாடுகளில் முன்னேறி வரும் தொழிற்பாதைகளை அடைக்க ஒரு காரணம் தேவை. அது தான் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தான பிரச்சாரம்...
இதை வைத்து வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு தொழில் சம்மந்தமாக நெருக்கடி கொடுக்கலாம். மாசுப் படுத்த கூடாது என்று தொழில்களை நசித்து உள்நாட்டு உற்பத்தியை குறைக்கலாம்.
அவர்களின் நோக்கம் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு தொழில் சம்மந்தமாக நெருக்கடி கொடுக்க வேண்டும். தொழில்களை நசித்து உள்நாட்டு உற்பத்தியை குறைக்க ஏதாவது செய்ய வேண்டும். இதையெல்லாம் சும்மா செய்ய முடியாது.. நாம் வேண்டுமானால் சும்மா பல்லை காண்பிக்கலாம். கம்யூனிச நாடான சீனா போன்றவை செருப்பைக் கொண்டு அடிப்பார்கள்.. இவற்றை செய்ய அவர்களுக்கு ஒரு வலுவான காரணம் தேவை... அது உணர்வு பூர்வமானதாகவும் இருக்க வேண்டும் அதே சமயம் எல்லா தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்..
அதற்காக இந்த சுற்றுச்சூழல் மாசு, உலக வெப்பமயமாகுதல் போன்ற பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்..
அதுமட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு தொழில் நுட்பம், அதற்கான சாதனங்கள் என்று எதையாவது சந்தைப்படுத்தி காசுப் பார்க்கலாம் என்ற எண்ணமும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருக்கும்…
முக்கியமாக அவர்கள் மட்டுமே சந்தையில் கோலேச்ச வேண்டும், கொழுத்த லாபம் பார்க்க வேண்டும்.. Colonization-கு பிறகு கிழக்காசிய, ஆப்பிரிக்க நாடுகளை அடிமைப்படுத்த ஏகாதிபத்திய நாடுகளின் புதிய வழிமுறை தான் Globalization.
அதற்கு இடையூறாக இருக்கும் உள்நாட்டு தொழில்களை நசிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்..
அவர்களிடம் ஒரு பலமான ஒரு ஆயுதமாக இந்த உலக வெப்பமயமாகுதல் பிரச்சாரம் கிடைத்திருக்கிறது... எளிதில் உணர்ச்சி வசப்பட கூடிய நம் மக்களும் அதற்கு ஆதரவாக கொடிப் பிடித்து கூச்சல் போட்டு கும்மாளமிடுகின்றனர்..
இந்த நூற்றாண்டின் மோசமான அறிவியல் கட்டுக்கதை என்று உலக வெப்பமயமாகுதல் கருத்தியலை வர்ணிக்கும் ஜப்பானிய சுற்றுச்சூழல் அறிஞர் Dr.கிமிநொரி இடோ மற்றும் பலரின் கருத்துக்கள் இங்கே குறிப்பிடத்தக்கது…
Dr.கிமிநொரி இடோ
சுற்றுச்சூழல் மாசுப்படுவதற்கு மனிதம் 11% மட்டுமே காரணம் என்று கூட ஒரு ஆய்வு சொல்கிறதாம்..
மேலதிக தகவல்களுக்கு படிக்க..
ஆக நம்முடைய நோக்கம் குளோபல் வார்மிங்க் என்பது முற்றிலும் வணிகமயமான நோக்கத்தோடு உண்டாக்கப்பட்ட கருத்தியல் என்ற சந்தேகத்தை பதிவு செய்வது...
இது குறித்த உண்மைகளை முற்றிலும் அறியாமல் வளரும் நாடுகள், முக்க்கியமாக இந்தியா, எந்த விதமான பெரிய பொருளாதார, தொழில் கொள்கை மாற்றங்களை கொண்டு வராமல் இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை பதிவு செய்வது…
அதற்காக சுற்றுச்சூழலை கெடுப்பது எமது உரிமை என்று நாம் சொல்ல வரவில்லை.. சுற்றுச்சூழலைக் கெடுத்து விட்டு, இப்போதும் கெடுத்துக் கொண்டு நம்மை தேவையில்லாமல் வணிக நோக்கத்தோடு நம்மை கைக்காட்ட வளர்ந்த நாடுகளுக்கு உரிமை இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறோம்..
ஒரு வேளை "உலக வெப்பமயமாகுதல்" கருத்தியல் உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட சுற்றுச்சூழல் மாசைக் குறைப்பதறகான முயற்சியில் ஈடுப்பட வளர்ந்த நாடுகளுக்கு 150 வருடங்களாகியிருக்கிறது.. நாம் மட்டும் உடனே செய்ய வேண்டும் என்று நெருக்குவது என்ன நியாயம். நாமும் நம்மால் இயன்ற முயற்சிகளை செய்துக் கொண்டிருக்கிறோம்.. ஒரு வேளை விரைவாக மாசுக் கட்டுப்பாட்டு பணிகளை செய்ய வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் எதிர்ப்பார்த்தால் எந்த பொருளாதார எதிர்ப்பார்ப்புமின்றி தத்தமது தொழில் நுட்பங்களை வளரும் நாடுகளுக்கு அளித்து உதவி செய்ய முன்வர வேண்டும். அதைச் செய்து விட்டு அவர்கள் G8 மாநாட்டில் தீர்மானம் போட்டுக் கொள்ளட்டும்.
குளோபல் வார்மிங்க் பற்றிய எனது பதிவு
குளோபல் வார்மிங்க் பற்றிய எனது பதிவு