உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

இலக்கியவாதிகளும் வெகுசன இலக்கியமும்..

பதிவர்கள் இடையே நடைபெறும் விவாதங்களும், கருத்து மோதல்களும் நிச்சயம் அறிவை வளர்ப்பதாக இருக்கிறது.. பற்பல நூல்களையும், இலக்கியங்களையும், சமூக கலாச்சார பின்னனிகளையும் ஆராய்ந்து அறிந்த பின்னரே பலரது வாதங்கள் அமைகிறது... பதிவர்களின் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து பார்த்தால் பதிவுலகம் அறிவுச்செறிவு நிறைந்ததாகவே இருக்கிறது..

ஆனால் பல கருத்து மோதல்கள் நான் ஏற்கனவே எனது பதிவொன்றில் சொன்னது போல்.. ரொம்ப கனமான பொருள் கொண்ட விவாதங்களாய் இருக்கிறது.. விவாதங்களை பற்றிய புரிதலுக்கு அதன் பின்புலங்களை சென்று ஆராய வேண்டிய அளவிற்கு கனம்...

உதாரணத்திற்கு சு.ரா-வின் எழுத்து குறித்த விவாதங்கள்...

நிற்க... சமூகத்தின் தன் தாக்கங்களை பெரிய அளவில் வெளிப்படுத்துவது இவர் போன்ற எழுத்தாளர்களாய் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? சினிமா கவிஞர்கள், வெகு சனங்கள் படிக்கும் கிரைம் இன்னபிற நாவல்கள், பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களே பெரும்பான்மையான தாக்கத்துக்கு காரணமாக இருக்க முடியும்...

இலக்கியங்கள் என்று பொதுவாக சொல்லப்படுகின்ற Conventional இலக்கியம்.. நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது, சமூகத்தில் ஒரு புரட்சியை, மாற்றத்தை உண்டு பண்ணும் கருத்துக்கள் பெரும்பாலும் கடினமான வெகு சனங்கள் படிக்க முடியாத இலக்கிய வகையாகவே உள்ளது...
அதனாலேயே அதில் சொல்ல படும் கருத்துக்கள் எல்லாம் நல்லவையாக தான் இருக்கும் என்ற பொதுக்கருத்தும் ஏற்ப்பட்டு விடுகிறது...

வெகு சன இலக்கியங்கள் அதிகமாய் பயன்பட்டில் இருக்கும் ஊடகங்களை யாரும் விமரிசப்பதே இல்லை.. அதன் விவாதங்களும் கனமானவைகளாகவோ, கருத்து செறிந்தவையாகவோ இருப்பதில்லை...

இந்த வெகுசன இலக்கியங்கள் நிறைய அந்நிய வார்த்தைகளை சேர்த்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி நமது மொழியின் போக்கையே மாற்றி இலக்கிய வகைகளை நமக்கு புரியாத ஒரு பொருளாகவே செய்து விட்டது...

இத்தகைய ஆற்றல் மிக்க வெகுசன இலக்கியங்கள் கேட்பாரற்று, எந்த தணிக்கையும் இல்லாமல், எந்த விமரிசனமும் இல்லாமல் மக்களை எளிதாக சென்றடைந்து அவர்கள் வாழ்வியலையும் சிறிது சிறிதாக மாற்றி கொண்டே தான் இருக்கிறது..

திராவிட இயக்கங்களின் வெற்றிக்கும், வீச்சுக்கும் முக்கிய காரணம் இந்த வெகுசன இலக்கியங்களை சரியாக பயன்ப்படுத்தி கொண்டது தான் என்பதில் இருந்தே வெகுசன இலக்கியங்களின் ஆற்றலை புரிந்து கொள்ளலாம்

வெகுசன இலக்கியங்களை பெரும்பாலும் தரமான, விஷய ஞானம் மிக்க, சமூக ஆர்வலர்களும், சமூக இலக்கியவாதிகளும் விவாதிக்க தயங்க காரணம்.. அதைகுறித்து விவாதிப்பதோ, விமரிசப்பதோ தங்கள் தகுதிக்கு ஒவ்வாத செயல் என்று எண்ணுவது...

மக்களை சென்றடையாத எந்த இலக்கியமும், விமரிசனமும் நாம் எதிபார்க்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. ஒரு வேளை ஏற்படுத்தினாலும்... அதற்கு வெகுக்காலம் பிடிக்கும்...


இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும் புதுமையை பேச விழையும் இலக்கிய ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் இலக்கியங்களை விவாதிப்பதை பொருத்தவரை பழமைவாதிகளாகவே இருப்பதாய் தோன்றுகிறது..

4 மறுமொழிகள்:

அசுரன் சொன்னது…

//மக்களை சென்றடையாத எந்த இலக்கியமும், விமரிசனமும் நாம் எதிபார்க்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. ஒரு வேளை ஏற்படுத்தினாலும்... அதற்கு வெகுக்காலம் பிடிக்கும்...//

இந்த சில வரிகளுக்காகவே உங்களது இந்த பதிவை பாராட்டுகிறேன். இதனை இன்னும் தெளிவாக மக்களை அவர்களின் வாழ்க்கையைப் பேசாத எந்த ஒரு கலையும், இலக்கியமும், குப்பை என்ற தகுதியை கூட பெற சாத்தியமில்லை. சுரா அந்த வகையே. அவர் அவரை மட்டுமே பேசிய ஒரு சுய மோகி, (ஜே ஜே சில குறிப்புகள்).

குறீப்பாக மேலை நாட்டு இலக்கியங்களையும் இந்திய இலக்கியங்களையும் ஒப்பிட்டு பேசும் போது இந்த இரு பிரதேசங்களும் கடந்து வந்த பாதை தற்போதைய சமூக அமைப்பு இவற்றை கவனத்தில் கொண்டே பேசுவது நலம். ஏனேனில் இந்திய சமூக அமைப்பு ஒரு அரை நிலபிரபுத்துவ, அரை காலனியாக -பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு உள்ளனர். எனவே இங்கு மேலை நாட்டைப் போன்ற ஒரு இலக்கிய போக்கு பெரிய அளவில் எழும் சாத்தியம் மிகக் குறைவே. அப்படி நிகழந்தாலும் அது ஏதோ சில அறிவு ஜீவிகளுக்கிடையிலானதாகவே இருக்கும்.

இந்த பிரச்சனை தவிர்க்க இயலாதது. மாறாக மேலை நாட்டு இலக்கியங்களின் சாதனைகளை இங்கு மக்களின் பிரச்சனைகளை பேசி அவர்களிடம் அறீமுகப்படுத்த பயன்படுத்தும் போதுதான் அது ஒரு பெரும் இயக்கமாக மாறும்.

ஒரு சின்ன உதாரணம் இங்கே. தாமிர பரணி கோக் பிரச்சனையை மையமாக வைத்து அதன் சகலவிதமான அரசியல் சமூக கலாச்சார பின்னணியை பேசும் ஒரு நாவல் எழுதினால் அது படிக்க தெரிந்தவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கமும். ஒரு அல்பவாதி ஜே ஜே என்ற கேனைக் கிறுக்கனின் புலம்பலகளை அதி நவீன நாவல் யுத்திகள் கொண்டு எழுதுவது ஏற்படுத்தும் தாக்கமும் ஒப்பிடக் கூட இயலாத அளவு வெவ்வேறானவை.

எந்தவொரு பெரிய இலக்கிய முயற்சிகளும் இல்லாத சுலபமான நாவல்களான - நினைவுகள் அழிவதில்லை, சோளகர் தொட்டி போன்ற நாவல்கள் இள('ள' தான்)க்கிய மேதாவிகளின் வரவேற்பரையைத் தாண்டிச் செல்லாத பின் தொடரும் நிழல்கள், ஜே ஜே சில குறிப்புகள் போன்ற நாவல்களை விட மிக மிக அதிகமாக மக்களைச் சென்றடந்த நாவல்கள் என்பது இங்கு ஞாபகத்தில் கொள்ளத் தக்கது.

வாழ்த்துக்கள். நல்லதொரு விவாதம் நடக்கும் என்று நம்புகிறேன்.

அசுரன்

மாயன் சொன்னது…

அசுரன்

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

யாருக்கும் புரியாத இலக்கியங்களால் யாருக்கு என்ன பயன்.. சிறந்த உதாரணம் பரதநட்டியமும், தெருக்கூத்தும்... தெருக்கூத்து எனக்கு புரியும் அளவுக்கு பரதம் புரிவதில்லை.. நிற்க.. நன் இங்கே ஆரியம், திராவிடம் பேசவில்லை.. இரண்டுமே நமது இன்றைய சமூகத்தில் விரவி நிற்பதாய் வைத்து கொண்டாலும் அது எளிதாய் இருக்கிறது..? அது போல பல கலைகளிலும், இலக்கியங்களிலும் உதாரணங்கள் சொல்லலாம்.. மக்களை மாற்றுவது என்பது மாபெரும் பணி.. அது முடியும் வரை இலக்கியங்கள் சிறிது காலம் மாறிக்கொள்ளலாமே...

மாயன் சொன்னது…

//குறீப்பாக மேலை நாட்டு இலக்கியங்களையும் இந்திய இலக்கியங்களையும் ஒப்பிட்டு பேசும் போது இந்த இரு பிரதேசங்களும் கடந்து வந்த பாதை தற்போதைய சமூக அமைப்பு இவற்றை கவனத்தில் கொண்டே பேசுவது நலம். //

உண்மை...

ஒரு சமூக அமைப்பில் இருந்து சொல்லப்படும் நகைச்சுவை துணுக்கே கூட பல சமயம் மற்றொரு சமூக அமைப்புக்கு பொருந்தாது.. அப்படியிருக்க சமூகத்தையே அலசும் பணியை செய்ய்ம் இலக்கியங்கள் வெகுசன அமைப்புக்கு புரியும்படி இருத்தல் அவசியம் அல்லவா?

இளமுருகன் சொன்னது…

சரியான சாடல்தான்
தமிழ் தெரிந்தவனுகே தமிழ் புரியாத மாதிரி எழுதபடுவதும் அது விளங்காமல் போவதுமான புதிர் விளையாட்டு தேவைதானா?

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..