உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

என்னை உங்களுக்குத் தெரிகிறதா? - ஒரு சோழப் போர்க்களம்


இடது கையில் சற்று பலமாக தான் அடிப்பட்டிருக்கிறது போலும்... என்னால் கேடயத்தை சரியாக பிடிக்க முடியவில்லை... யோசித்த படியே என்னுடன் சில மணித்துளிகளாக போரிட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய வீரனின் வயிற்றில் பாய்ச்சிய வாளை சிரமமாக எடுக்கிறேன்

இதோ ஒருவன் எதிரே.. என்னை நோக்கி வெறியோடு வருகிறான்.. இப்போது சாய்ந்தவனின் குழுவைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும்

சுற்றிலும் என் தளப்படையைச் சேர்ந்த 2000-த்துக்கும் அதிகமானோர் சிறு குழுக்களாக போர்கள் நடத்திக் கோண்டிருந்ததால் புழுதியும், சத்தமும் மிக அதிகமாக இருக்கிறது..

வந்தவனின் வாள் வீச்சு மேலை சாளுக்கிய நாட்டின் வாள் வீச்சு.. சற்று கனமான வாளை வைத்திருக்கிறான்.. வீச்சு ஒவ்வொன்றும் சம்மட்டி அடியாய் இறங்குகிறது...
கேடயத்தை முன்னுக்கு கொடுத்து தடுத்து திருப்பித் தாக்குவதற்குள் அவனுடைய வாள் வேறு திசையில் என் குருதியை சுவைக்கப் பார்க்கிறது

தலைக்கு மேல் ஆதவன் அவன் பங்கிற்கு வாளை சுழற்றிக் கொண்டிருந்தான்.. நீர் கொடுக்கும் உதவிப்படையினர் அருகே இல்லை என்று உணர்ந்த போது இன்னும் தாகம் அதிகமாக தெரிகிறது

இதோ எதிராளியின் கை சளைக்கத் துவங்குகிறது... வாள் வீச்சில் வேகம் மட்டும் பிரதானமாய் இருந்தால் இப்படி தான்... கேடயத்தை முன்னுக்கு தள்ளி தடுத்து, இம்முறையும் பின்னால் இழுத்து வாளை வீசப்போகிறேன் என்று எதிர்ப்பார்த்தவனை கேடயம் மறுபடியும் முன்னுக்கு வந்து தாக்கவும்... நிலைகுலைந்து போனான்... இம்முறை என் வாள் சரியாக அவன் கழுத்தில் பதிய... இரும்பு மணத்துடன் கூடிய சூடான திரவம் என் மீது பீய்ச்சியடித்தது...

சுற்றிலும் போரிட்டுக் கொண்டிருந்தவர்களின் ..காரங்களையும்.. ஆஹா.. காரங்களையும் கேட்டபடி முன்னேறினேன்... நான் ஒரு சிறு குழுத் தலைவன் என் குழுவில் பதினெண் பரிவாரத்தாரும், சம அளவு வேளைக்காரர்களும் இருந்தார்கள்.. தஞ்சை பழையறையை சேர்ந்தவர்கள் நாங்கள்.. எங்கள் படைப்பிரிவில் லட்சம் பேருக்கு மேல் இருக்கிறார்கள்.. மேலைச் சாளுக்கியர்களுடன் நடக்கும் இந்த போரில் மட்டும் நாற்பதினாயிரம் பேர் போரிட வந்துள்ளோம்..

கீழே கிடந்த புரவி வீரன் ஒருவனை இடறிய போது தான் கவனிக்கிறேன்... இவன் சேற்றூரான் அல்லவா? ஆணைத்தொடரை சுமந்து குறுக்கும் நெடுக்குமாய் புரவியில் நேற்று அதிவேகமாய் திரிந்துக் கொண்டிடுந்தானே?

சாய்ந்து விட்டானா.. பயிற்சிக் களத்தில் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குபவனாயிற்றே?.. மனதில் வெறுமையும், வெறியும் கலந்த ஒரு நினைவு சிறு சணலாய் நேற்றிலிருந்தே போர்வை நெய்ய தொடங்கியிருந்தது... அதன் இருள் என் மேல் கவிழ்வது போல் தோன்றுகிறது

சற்று தூரத்தில் கலவரமான குரல்கள்.. சாளுக்கிய நாட்டின் சிறுங்குழு தலைவன் ஒருவனை 4 பேர் தாக்கிக் கொண்டிருந்தார்கள்... நெருக்கத்தில் சென்று ஐந்தாம் ஆளாக இணைத்துக் கொண்டு... 2 நிமிடத்தில் அவன் அலறலுடன் சாயும் வரை வாள்களை வீசி

கீழே கிடந்த மரக்குடுவையிலிருந்து நீரை வாயிலும் மேலும் சாய்த்துக் கொள்கிறேன்.. காலை யாரோ நிரடுகிறார்கள்.. கிழிந்து கிடந்த உடையையும் ஆரத்தையும் பார்த்தால் சாளுக்கிய வீரன் போல் இருக்கிறதே?.. இரண்டு கால்களும் முக்கால் வாசி அறுப்பட்ட நிலையில் குருதி இழந்து முகம் வெளுத்து பரிதாபமாக பார்க்கிறான்..தாகமா? வெற்று பார்வையோடு நீர் குடுவையை அவன் மேல் போட்டு விட்டு.. மேற்செல்கிறேன்... மாலையில் மருத்துவ படையும் மீட்பு படையும் வரும் வரையோ, வந்து சிகிச்சைக்கு தகுதி உள்ளதா என்று கணிக்கும் வரையோ உயிர் போகும் வரையோ.. அவனும் மற்றவர்களைப் போல் அங்கேயே கிடக்க வேண்டியது தான்..

ஆணையாளனான குதிரைச்சேவகனொருவன் எங்கள் அருகே புரவியில் வேகமாக கடந்தான்.. "முன்னேறுங்கள்.. சோழ வீரர்களே முன்னேறுங்கள்... வலப்புறத்தில் சாளுக்கியன் பின் வாங்குகிறான்... வலப்புறம் முன்னேறுங்கள்...” குரல் கம்ம கம்ம கத்தியவனின் குரல் தேய்ந்து மறைந்தது.. எதிர்ப்புகளை சமாளித்தப் படி காற்காதத்துக்கும் அதிகமான தூரத்துக்கு போர் நடக்கும் பகுதிகள் ஊடே.. பிணக்குவியல்களை தாண்டிச் செய்திச் சொல்ல வேண்டும்

அவன் வழிக்காட்டுதல் ஆணையின் சத்தத்தையும், சுற்றிலும் கேட்கும் உலோகங்களின் ஒலியையும், மாமிசப்பட்சிணிகளாய் அவை இரையெடுக்கும் போது எழும் அலறல் ஒலிகளையும், உதவி கேட்டு ஈனஸ்வரத்தில் கையோ எவையோ அறுப்பட்டு விழுந்து கிடக்கும் வீரர்களின் மரண ஓலங்களையும் மீறி நேற்று எங்கள் குழுவினரால் வன்புணரப்பட்ட அந்த சாளுக்கிய பெண்களின் ஓலம் மட்டும் சத்தமாக இன்னும் காதில் கேட்பது பிரமையா.. நிஜமா?

நேற்று சூறையாடப்பட்ட அந்த சிறு நகரத்தில் அவ்வளவு விலை மதிக்க முடியாத பொருட்கள் கிடைக்கும் யாரும் எதிர் பார்த்திருக்க வில்லை... என் குழு முன்னனியில் அல்லாமல் பின்னனியில் இருந்ததால் நல்ல வேட்டை.. எவ்வளவு முடியுமோ எவ்வளவையும் எடுத்துக்கொண்டு தலைவர் மற்றவற்றை தீக்கிரையாக்கச் சொன்ன போது மனமே வரவில்லை..

.. இதென்ன.. சத்தம்... படைவீட்டு தலைவர்களின் இலங்கையையோ, சேர நாட்டையோ, கடாரத்தையோ சேர்ந்த களிறுகள் எனக்கு நூறடி தொலைவில் வந்துக்கொண்டிருந்தன... இதோ என்னுடன் இருந்த வீரர்கள் சாளுக்கிய நாட்டு களிறின் சாரதி மீதும், களிற்றின் மீது வேலை எறிகிறார்கள்..

பயனில்லை... இதோ களிறுகளின் பிளிறல் வெகு அருகே... புழுதியில் என்ன நடக்கிறது என்று உண்ர்வதற்குள் இரண்டும் ஒன்றை ஒன்று முட்டித்தள்ளிக் கொண்டு

"வீழ்த்து, வீழ்த்து... விடாதே..." சோழ வேலெறி வீரனொருவன் மண்டியிட்டிருந்த சாளுக்கிய களிற்றின் மீது பாய்ந்து சாளுக்கிய படை வீட்டு தலைவனின் வாளுக்கு இரையாகிறான்.. இதோ எங்கள் படைவீட்டு தலைவரின் களிறு சாளுக்கிய நாட்டு படை வீட்டு தலைவன் அருகே வந்து விட்டது.. அதற்குள் ஒரு வில்லெறி வீரனின் அம்பு சாளுக்கிய படைத்தலைவனை சாய்க்கிறது... கூடவே ஆனையாளும் மற்றொரு அம்புக்கு ஒடிந்த கிளை போல சரிந்தான்.

வெறிக்கொண்ட 30க்கும் மேற்ப்பட்ட சோழ வீரர்களின் வாட்களும் வேல்களும் அவரையும், ஆனையாளையும், அவர்களைக் காக்கும் பொருட்டு திரண்ட 5 மற்ற வீரர்களையும் மொய்க்கின்றன... என்ன நடக்கிறது என்று புரிவதற்குள் அந்த குளம்புகளின் ஒலி..

இதோ சாளுக்கிய புரவி வீரர்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர்..
காலாட்படை வீரர்களுக்கு.. முன்னேறி வரும் எதிரியின் விற்படையும், புரவிப்படையும் மிகவும் கெட்டச் செய்திகள்... தேனீக்களாய் பாய்ந்து வரும் அம்புகள் கேடயத்தையும் மீறி விரற்கடை அளவுள்ள இடைவெளி வழியாக உடலுக்குள் புகுந்து விடும்.. அம்பு தைத்தவுடன் உயிர் போகவில்லை என்றாலும் விஷம் தடவப்பட்ட அம்புகள் உடனே நம்மை செயலற்றவர்களாக ஆக்குவதோடு சில நாழிகைக்குள் உயிரை பறித்து விடும்

புரவிப்படையோ வேறு மாதிரி ஆபத்து... கள்ளை உண்டு மதமேறி போயிருக்கும் புரவிகள், நீட்டிய வாள்களுக்கும், வேல்களுக்கும் சிறிதும் அச்சப்படாமல் கூட்டத்தில் வெறியோடு புகுந்து ஆட்களை சிதறடிக்கும்.. புரவி வீரர்கள் உயரமான இடத்தில் அமர்ந்திருப்பதால் ஒரு காலாள் குழுவைக் கடந்துப் போவதற்குள் நான்கு பேரின் தலைகளையாவது தட்டி தரையில் கிடத்தி விடுவர்

இதோ இதோ சாளுக்கியரைச் சேர்ந்த ஏழெட்டு முரட்டு அரேபிய குதிரைகள்.. எங்களின் வெற்றிக் குழாமிற்குள் புகுந்து எங்களை சிதறடிக்கிறது.. எங்கோ எங்கள் புரவிப்படையின் உதவிக்கேட்டு அவசரமாய் சங்குகளும், பேரிகைகளும் வினோத நாதங்களை எழுப்ப, சோழப் புரவிப் படை திரும்பும் சத்தம் எங்கோ தூரத்தில் கேட்கிறது

இதோ ஒரு புரவி வீரன் என்னையும் மற்றும் மூவரையும் நெருங்கி, வாளை சுழற்ற, வேலை ஓங்கிய என் குழு வீரனின் தலை தனியாக கழண்டு போய் தரையில் சொத்தென்ற சத்தத்துடன் விழ... என் நேரமா இது... நான் விலகி பாய வேண்டி, விலக... என் குழுவின் மற்றொரு வீரன் வேரறுந்த மரமாய் சாய்கிறான்

ஓவென்ற பெருங்கூச்சல்... திரும்பிய பக்கமெல்லாம், என் குழு சிதைக்கப்படுகிறது.. இதோ ஆவேசத்துடன் பத்தடி சென்று சென்ற வேகத்திலேயே திரும்பி வருகிறான் எங்கள் குழுவை தாக்கிய புரவி வீரன்.. இம்முறை நாங்கள் இருவர் மட்டுமே... எனக்கு இப்போது ஏற்படும் கண்களின் அதீதமான ஒளியும் கருப்பான இருளும் கலந்த இந்த கலவையான உணர்ச்சி தான்.. மரண பயமா?

வாளை சுழற்றிய என்னுடைய குழு வீரன்... புரவி மோதியதில் சிதறுகிறான்.. நான் விலகிக்கொள்ள, புரவி வீரனின் வேல் என்னை ஒரு புல்லின் கனத்தில் தொலைத்து முன்னே சென்றுவிட்டிருக்க... இப்போது புயலென புகுந்தது சோழ புரவிகள்

என்னுடை குழுவின் மூன்று வீரர்களை சாய்த்த புரவி வீரன் இரண்டு சோழ புரவிகள் இருபுறம் தாக்கவும் தடுமாறி சாய்கிறான்.. விழுந்தவனை புழுதியும், மற்றொரு குழுவும் சூழ, பெரும் வாள்கள் தரையில் மோதும் ஒலி மட்டுமே கேட்க முடிந்தது..

இதென்ன?

இதோ மாற்று பேரிகையின் ஒலி காதில் பெரிதாய் கேட்கிறது.. படைகளின் நிலைகளில் உடனே மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கிறதுமுன்னனியில் போரிட்டுக் கொண்டிருந்த எனக்கு, பின்னே போரிட்டு கொண்டிருந்த குழுக்கள் ஒவ்வொன்றாக களைப்படைந்திருந்த எங்களைக் கடந்து முன்னேற ஆரம்பித்தன...

மூன்றாவது நாளாக களம் கண்டிருந்ததால் எனக்கு சோர்வு ஏற்பட்டிருக்குமோ... அணி அணியாக வந்த வீரர்களில் மருத்துவரணியும், மீட்புக் குழுவும் இருந்தன...

"உனக்கு குருதிப்போக்கு அதிகமாக இருக்கிறது" எச்சரித்தபடியே கடந்த மருத்துவரணியின் ஒரு வீரனை அலட்சியம் செய்து விட்டு முன்னேறுகிறேன்... ஓலங்கள்.. கையிழந்து காலிழந்து துடிக்கும் எதிரிப்படை வீரர்களை கொல்வதற்கான கொலைப்படை ஒழிப்பு வேலையில் ஈடுப்பட்டிருந்தது..

முன்னேறிய படைகள் எஞ்சியர்களை சமாளித்து நிலைக்கொள்ளு முன்.. அதோ காற்காத தூரத்தில் மீண்டும் ஒரு பெரும் புழுதி மண்டலம்... இன்னும் அவசரமாக பேரிகைகளும் சங்குகளும் முழங்கும் சத்தம்...

உயர்த்தப்பட்டிருந்த பன்றிக் கொடி அது சாளுக்கியரின் இரண்டாம் நிலைப்படைகள் என்பதை உணர்த்தியது... எத்துணை பேரோ..

இந்த போர் மட்டும் வராமல் இருந்திருந்தால் வருடந்தோறும் நடக்கும் தேவியர் திருவிழாவில் இருந்திருப்பேன்.. நான் இல்லாமல் என்னைச் சேர்ந்த பெண்டிரும், குடும்பத்தாரும் என்ன செய்கிறார்களோ.. அநேகமாக என் ஊரை சேர்ந்த உறவினர் பலர் இதே போர்க்களத்தில் எங்கோ இருக்கக் கூடும்.. உயிருடனோ.. பிணமாகவோ...

எனக்கு பின்னால் மெதுவாய் முன்னேறிக்கொண்டிருந்த குழுக்கள் முன்னனிக்கு விரைய ஆரம்பிக்கின்றன... வெற்றி வேல் வீர வேல்.. முழக்கங்கள் களத்தை அதிரச்செய்கின்றன..
பேரிகையும் முரசும் வித்தியாசமான ஒலியெழுப்ப முன்னேறிக் கொண்டிருந்த வீரர்கள், முன்னேறிய படியே இரண்டாக பிளந்து வழிவிடுகின்றனர்... பிளந்த வழியே.. சோழ புரவி வீரர்கள்... காற்றை கிழித்துக் கொண்டு எதிரியின் இரண்டாம் நிலைப்படையினரை நோக்கி முன்னேறுகின்றனர்..

வீரர்களின் ஹோவென்ற கூச்சல் புரவி வீரர்களை இன்னும் வேகமாக செல்ல பணித்ததோ...
பிணங்களின் குவியலின் மேல் இடறாமல் நடப்பதற்கு சிரமமாய் இருந்த்து.. முன்னாள் இறந்த கஜமொன்றின் வாடை காற்றை பிளந்து நாசியை கூசுகிறது..

எங்கோ நேற்றைக்கு எரியூட்டப்பட்ட பிணங்களின் வாசமும் சேர்ந்து கொள்ள... தொடர்ந்து முன்னனியில் ஏதோ குழப்பம்.. விர்ரென்ற பரிச்சயமான ஒலி...

.. எதிரியின் விற்படை முன்னனியில் இருக்கிறது... புரவிப்படை வேகமாக முன்னுக்கு சென்றது அதற்கு தானா....

சிறிது கலவையான குழப்பமான ஒலிகளுக்கு பிறகு காட்சிகள் மீண்டும் புலப்பட தொடங்குகின்றன..இதோ எதிரிகள் கைகலக்கிறார்கள்... வாள்கள் மோதிக் கொள்ளும் ஒலிகள்.. புரவிகளில் பிளிரல், அலறல்.. புழுதியுனூடே... எதிரிகள் தலைகள் தென்பட ஆரம்பிக்கின்றன...
தாக்குதலுக்கு தாயாராகுங்கள்..” போர் ஆணையாளனின் ஒலி தெளிவாக கேட்கிறது...
கோளர்ப்படை முன்னேற ஆணை.. வீரசைவர் படை பக்கவாட்டில் குவிக... கொற்கை வேற்படை நிலைக்கொள்ளவும்..” படை வீட்டு தலைவனின் சைகைக்கு ஏற்ப, அறிவிப்புகள்.. முழக்கம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன... முன்னும் பின்னும் குறுக்கும் நெடுக்குமாய் சென்ற குதிரைச்சேவகர்கள் அவற்றை அறிவிப்பதில் மும்முரமாய் இருந்தனர்.

எனது கையின் கனம் கூடிக்கொண்டே வருவது போல தோன்றுகிறதே... இதோ.. வந்து விட்டார்கள்.. குழுக்கள் கூடுவதும் பிரிவதுமாய்.. ஒரு குழுவில் என்னை இணைத்துக் கொண்டேன்.. அகப்பட்டுக்கொண்ட இருவர்.. யாரையோ உதவிக்கு விளித்த படி வாளையும் கேடயத்தையும் சுழற்றிக் கொண்டிருந்தனர்.. பாவம் அவர்கள் எங்கு சிக்கியிருக்கிறார்களோ.. ஒரு குரூரமான புன்னகை எனக்கும் வந்தது போல் தோன்றுகிறது...

இருவரும் சில துண்டுகள் ஆகும் வரை தாக்கி விட்டு, ஆக்ரோஷமான போரில் மெலும் சில உயிர்களை கொன்று ஒரு நாழிகை கழிந்து போர் நிறுத்த சங்கு ஊதப்பட சில மணித்துளிகள் இருந்த போது
அந்த சம்பவம் நிகழ்ந்தது..

என்றோ ஒரு நாள் எல்லா போர் வீரர்களுக்கும் நிகழப்போகும் நிச்சயிக்கப்பட்ட நிகழ்வு.. நாங்கள் எதற்காக இங்கு நிற்கிறோமோ, எதிரிகள் எதற்காக நிற்கிறார்களோ.. அதற்கு.
எங்களுக்கான நேரம்

பிழியின் வெறியில் மரண ஓலம் மயில் பீலியாய் காதுகளை வருடுவதாய் தோன்றுபவர்களுக்கு, மரணம் நெருங்குவதில் எந்த நெருடலும் இருக்க போவதில்லை.. எனக்கு மரணபயமில்லை... ஆனால் என்னை இனி எப்போதும் செயல்படாமல் செய்யப்போகும் ஆழ்ந்த உறக்கமான அதை எனக்கு பிடிப்பதில்லை...

ஆனால் எதிர்பார்த்த நிகழ்வு எதிப்பார்க்காத நேரத்தில் நேர்ந்தால்.. மனதுக்குள் படியும் இருளை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை... இருளை வாள் கொண்டு விலக்க முடியுமா...
சூழ்நிலையின் கனம் தெரிய ஆரம்பித்த அந்த நேரம் சாளுக்கியரின் படையில் வெற்றிகரமாக நடுக்களம் வரை முன்னேறி வந்திருந்த சில பெருங்குழுக்களில் ஒன்று என்னையும் என்னுடன் போரிட்டு கொண்டிருந்த மூவரையும் சூழ்கிறது..

"வீசு, விடாதே, நெருங்கு" எட்டு பேருக்கு மேல் இருந்த குழுவை எங்களால் வெகு நேரம் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.. பார்வையை சுற்றிலும் வீசினால் எங்கள் வீரர்கள் நிறைய பேர் இருந்தாலும் நெருக்கத்தில் யாரும் இல்லை...

இதோ முதலாமவன் வெட்டுப் பட்டு சாய்கிறான்.. அந்த வீச்சு அவனுக்கானது.. கையிலிருந்து என் கேடயம் தேவையில்லாத சுமையாய் எங்கோ பறக்கிறது.. 7 வருடங்களாய் நான் சுமந்து திரிந்த என் கேடயம்.. எத்தனையோ முறை எனக்கான வீச்சுகளை தாங்கிய என் கேடயம்..

என் வாளை அவன் பக்கம் திருப்புகிறேன்.. அதற்குள் மற்றவர்கள் என்னையும் என்னுடன் சிக்கி இருந்தவனையும் நெருக்கத்தில் சூழ்ந்து கொண்டார்கள்.. அவர்களின் ஓங்கிய வாட்கள்... ஆதவனின் கிரணங்களை மறைத்த போது தான் மரண இருள் என் மீது படிவதை நான் உணர்கிறேன்...

இது என்ன என் கழுத்தருகே சுடுகிறதே... .. வெட்டு பட்டு விட்டேன்..    

இதோ ஒருவன் என் முன் வேலோடு பாய்ந்து வருகிறான்.. வேல் என் கண்ணின் வீச்சுக்கு தப்பி என் மார்பின் கீழ் பகுதியில் என்னை ஊடுருவிக் கொண்டு எங்கோ போகிறது.. இது என்ன அடி வயிற்றில் ஏதோ ஒரு பாரம் குறைந்தது போல் ஒரு உணர்வு, எரிச்சல்..

ஏன் நான் சாய்கிறேன்...

கை வாளை நிமிர்த்த முயற்சிக்கிறது.. முடியவில்லை.. கழுத்து ஒரு பக்கமாய் அறுப்பட்டு விட்டிருக்க வேண்டும்.. திருப்ப முடியவில்லை...

மற்ற இரண்டு பேரை விரட்டியப் படி குழு நகர...
என் அங்கிக்குள் ஈரம்...

கழுத்தை அழுத்திப் பிடித்தபடி.. காத்திருக்கிறேன்.. உதவிக்காகவா என்று எனக்கு தெரியவில்லை...

என் மகனும், மகள்களும், மனைவியும், நண்பர்களும், எனக்கு தெரிய ஆரம்பிக்கிறார்கள்..

"வீட்டுக்கொருவர் படையில் சேரும் படி சக்கரவர்த்திகளின் ஆக்ஞை..."

"அவர்கள் இடப்புறம் முன்னேறும் போது.. வலப்புறம்.. முன்னேறும்.."

"அப்பா.. நான் எப்போது போருக்கு போவது..."

"உங்கள் பெயர்கள் வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்க படும்"


"வெற்றி வேல்.. வீர வேல்.."

ஏன் பழையக்காட்சிகள் விரிகின்றன..
********************
"காயம் பலமாக இருக்கிறது.. பிழைப்பது கடினம்... வலி போக்கும் குளிகை மட்டும் கரைத்து வாயில் ஊற்று.. பலனில்லை"... யாரோ யாருக்கோ சொல்கிறார்கள்.. மருத்துவரணி. மாலை போர் நிறுத்தப்பட்ட பின் இருளில் தீப்பந்தங்களோடு குணப்படுத்தக்கூடிய, விரைவில் போரிடக்கூடிய வீரர்களை தேடுகிறார்கள்

"என்னை குணப்படுத்துங்கள்.. இன்னும் நிறைய போர்களில் பங்கெடுத்து நான் சோழ சக்கரவர்த்திகளின் வேட்கையை நிறைவேற்ற வேண்டும்

வார்த்தைகள் மனதிற்குள் புதைந்துப் போயின. எனக்கு கண்பார்வையும் மங்கி விட்டது..
மரண ஓலங்களில் ஏதோ அர்த்தம் இருப்பதாக இப்போது தான் படுகிறது.. என் கால்கள், என் கைகள் எதையும் என்னால் உணர முடியவில்லை..

ஒரு நாழிகை நேரம்.. கொழுத்த வேட்டைகாக களத்தில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த மாமிச பட்சிணிகளின்.. பசிப்போராட்டம்.. சடலங்கள் சலனமின்றி விருந்தில் கலந்து கொண்டன.. சலனம் இருப்பவர்களின் சரீரங்களை சரிசமமாக அவை பங்கு போடும் போது.. அவர்களின் ஈனஸ்வர முனகல்களை என்னால் கேட்க முடியவில்லை..

இதோ எனக்கும் விருந்துக்கு அழைப்பு வந்து விட்டது.. யாரோ அல்லது எதுவோ என்னை இழுக்கிறது... ஆனால் வலியில்லை.. உங்களை யாரோ சுவைப்பதை உங்களால் வேடிக்கை பார்க்க ஒன்று நீங்கள் கட்டிலில் கிடக்க வேண்டும் இல்லை.. இப்படி குற்றுயிராய் களத்தில் கிடக்க வேண்டும்...

மீண்டும் அசைவுகள்.. யாரோ என் கால்களை பிடித்து இழுத்து குவிலாக பிணங்கள் இருக்குமிடத்தில் கிடத்துகிறார்கள்... மருத்துவ உதவியாளர்களாய் இருக்கும்...

இரவின் தனிமையும், இருளும், எங்களைச் சூழ்ந்தது.. தூரத்தில்.. வெளிச்சப்பொட்டுகள்.. சாராய வாடை காற்றில்.. மாமிச வாடையுடன் கலந்து வர.. ஏதோ பேரிகைகள் முழங்க.. எவராலோ வன்புணரப்படும் பெண்களின் ஓலம்.. அதிகார கூச்சல்.. உயிருடன் இருக்கிறோம் என்பதான ஆணவ சிரிப்புகள்...

பிணக்குவியலில் ஒன்றிரண்டு அசைவுகள் இருக்கவே செய்தன..

இரவின் இருளை தாண்டி எனக்குள் இருள் மண்ட ஆரம்பிக்கிறது.. முடிவிலா இருளில் மூழ்க போகிறேன்...

வேலப்பமாறன் சடையன் என்ற என் பெயர் நிச்சயம் உங்களுக்கு தெரிய வரும்...

சக்கரவர்த்தி ராசேந்திர சோழ உடையார் மேலை சாளுக்கியர்களைத் தாக்கி கொன்று அழித்தார் என்று நீங்கள் படிக்கும் போது.. என் பெயரும் அந்த வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பெற்றிருக்கும்... என் பெயர் மட்டுமல்ல இதோ இறந்து கிடக்கும், இறக்கக் காத்திருக்கும் எங்கள் அனைவரின் பெயரும்

என்னை உங்களுக்கு தெரிகிறதா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக