உலகப் பொதுமறை
உலகப் பொதுமறை
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!
வெள்ளி, அக்டோபர் 26, 2007
மனித (உடல்கள்) உரிமை மீறல்..
பதிவுலகம் முழுக்க அவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை இவர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை என்று கேள்விகள்...
போர்க்கைதிகளை, அவர் தம் உடல்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து சர்வதேச அளவில் சட்டங்கள் உள்ளன.
http://www.unhchr.ch/html/menu3/b/91.htm
இவையெல்லாம் இருந்தும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது மன்னிக்கமுடியாத தவறு...
இந்த புகைப்படம் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும், சரியான கவன ஈர்ப்பை பெறவில்லை என்பது வேதனையான உண்மை...
இலங்கை தமிழர்களுக்கும், புலிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக நம்பப்படும் அரசியல், சமூக தலைவர்களின் கண்டன குரல்கள் கூட அடக்கி வாசிக்கப்படும் மர்மம் என்ன என்பது புரிய வில்லை...
(கலைஞர், வைகோ, அய்யா ராமதாஸ் உள்பட தமிழகத்தின் தலைவர்கள் யாருமே கண்டனம் தெரிவித்தார்களா என்று எனக்கு தெரியவில்லை..)
ஒரு வேளை இந்த மாதிரி கொடுமைகள் பழக்கப்பட்டு விட்டதால் எப்போதும் நடப்பது தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டார்களா?..
புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் தான். அதற்கு ஆதரவாக பேசுவது தவறு தான். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் கண்டனங்களை பதிவு செய்வதில் தவறு இருக்க முடியாது...
இந்த விஷயத்தில் யாருமே அவ்வளவு பலமான எதிர்ப்பு குரல் கொடுக்காதது போல் தான் இருக்கிறது..
தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் நாடுகளின் மௌனம் கவலையை அளிக்கிறது...
செய்யப்படும் செயல்களால் தான் தீவிரவாதம் தீர்மாணிக்கப்படுகிறது... யார் செய்கிறார்கள் என்பதால் அல்ல...
அப்படிப் பார்த்தால் இலங்கை அரசு செய்த செயல் கேடு கெட்ட தீவிரவாத செயல் என்றால் அதில் தவறில்லை...
(ஏற்கனவே அந்த புகைப்படங்கள் பலமுறை வெளியிடப்பட்டு விட்டதால் நான் அதை இங்கே வெளியிடவில்லை...)
ஞாயிறு, அக்டோபர் 21, 2007
டூ வீலர் இன்சூரன்ஸ் என்னும் கிரகம்...
வண்டிக்கு இன்சூரன்ஸ் போடுவது...
புதிதாக வண்டி வாங்கும் பொது வண்டி விற்கும் ஷோரூம்காரர்களே ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் செய்து கொடுத்து விடுவார்கள்... வருடா வருடம் சரியாக முடிவு தேதிக்கு முன்னரே அதை புதுப்பித்து வருபவர்கள் பிழைத்தார்கள்..
நம்ம கிரகம், ஒரு முறை அதை புதுப்பிக்க தவறி விட்டால் அவ்வளோ தான்.... தீர்ந்தது...
வாரத்தில் நாம் பிஸியாக இருக்கும் அதே வார நாட்களில் தான் அவர்களும் (இன்சூரன்ஸ் கம்பெனிகள்) பிஸியாக இருக்கிறார்கள்...
வாரக்கடைசியில் ஓய்வெடுக்க போய் விடுகிறார்கள்...
அதுவும் மூன்றாம் நபர் விபத்து காப்பீடு போட வேண்டும் என்றால் கூட வண்டியை ஆய்வு செய்து பார்த்து விட்டு தான் இன்சூரன்ஸ் பொடுவார்களாம்...
அதுவும் வண்டியை பார்த்து ஆய்வு செய்ய அவர்கள் வைத்திருக்கும் நேரம் இருக்கிறதே.. காலை 10-11 மணி வரை... ஒரு மணி நேரம் தான்...
அநேக நிறுவனங்கள் அப்படி தான்... ஒரு வேளை நம் இடத்திற்கே வந்து வண்டியை ஆய்வு செய்ய வேண்டுமானால், அதற்கு அவர்கள் வசூலிக்கும் தொகை இன்சூரன்ஸ் தொகையை விட அதிகமாக இருக்கிறது... இந்த வசதி முக்கால்வாசி கார்களுக்கு தான் இருக்கிறது...
அதுவும் முதன் முதலில் எந்த கம்பெனியில் இன்சூரஸ் போட பட்டதோ அதே நிறுவனத்தில் தான் மறுபடியும் இன்சூரன்ஸ் போட வேண்டும்... நிறுவனத்தை மாற்றினால் பிரிமியம் லோடு செய்ய வேண்டும், அன்லோடு செய்ய வேண்டும் என்று இரு மடங்கு தொகை கேட்கும் அவலமும் உள்ளது...
இன்னும் பல அரசு சார்ந்த காப்பீடு நிறுவங்களில் இரு சக்கர வாடிக்கையாளர்களை இளக்காரமாக பார்க்கும் நிலை தான் உள்ளது... (பிரிமியம் கம்மிங்க.. ஒரு காரின் காப்பீடு பிரிமியத்தில் 10 இரு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடலாம்.)
இன்சூரன்ஸ் இல்லையென்பது வண்டியின் பாதுகாப்புக்கு பெரிய சவால் என்பது ஒருபுறம்.. போலீஸ் சோதனையில் இன்சூரன்ஸ் இல்லாமல் சிக்கினால் 1000 ரூபாய் அபராதம் (பேரம் நேரடியாக 300 ரூபாயில் தான் ஆரம்பிக்கும்.. பெரிய கேஸாம்)...
நம்மால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் வண்டியை கொண்டு சென்று ஆய்வுக்குட்படுத்தி இன்சூரன்ஸ் போட முடிவதே இல்லை...
எந்த நிறுவனமாவது இந்த பிரச்சினைகளை புரிந்து கொண்டு.. வண்டியை ஆய்வு செய்யும் நேரத்தை அதிகமாக்கினால் தேவலாம்.. அல்லது அதிகம் டூ வீலர்கள் கூடும் பெரிய நிறுவனங்களில் அல்லது போது இடங்களில் சின்னதாய் ஒரு கௌண்டர் அமைத்து அங்கேயே வண்டிகளை ஆய்வு செய்து காப்பீடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்..
அவர்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும்.. நமக்கும் அலைச்சல் மிச்சமாகும்..
காப்பீடு என்பது முக்கியமான விடயம்.. இது போன்ற வசதிகளை பெறும் முறைகளை இன்னும் எளிமையாக்கினால் நிறைய மக்கள் அந்த வசதிகளை பெற்று பயனடைவார்கள்..
இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரிடமும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வும், பணமும் இருக்கிறது ஆனால் அதை அணுகும் முறைகளும், பெறும் முறைகளும் எளிமையாக இருந்தால் நலம்...
சனி, அக்டோபர் 20, 2007
ஒரு காஷ்மீரத்து காதல். - தொடர்கதை பாகம்-1
காஷ்மீர்
பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்திய அற்புதம்.
இந்திய அற்புதம் என்று சொன்னதில் காரணம் இருக்க தான் செய்கிறது.
சில அந்நிய சக்திகள் காஷ்மீரை தங்கள் அற்புதம் என்று உரிமை கொண்டாட முயற்சி கொண்டிருக்கும் நேரமிது. விளைவு,
காஷ்மீர் ஒரு அழகான ஆபத்தாக மாறி போய் விட்டது.
இன்று காஷ்மீரில் நிலவும் பதற்றத்தில் எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் வாழ்க்கை நடக்கிறது.
நமது ராணுவம் உயிரை காற்றில் விட்டு, தங்கள் உயிரை கொடுத்தாவது காஷ்மீரை காப்போம்.. காத்தே தீருவோம் என்று கடுமையாக பாதுகாவல் நடவடிக்கைகள் மேற்க்கொண்டு இருக்கின்றனர்.
என்றாலும் எல்லைப்புற மாவட்டங்களில் பதற்றம் தணியவே இல்லை...
தீவிரவாதிகளின் கொட்டம் அதிகமாகி இருக்கும் பகுதிகள் அவை.
ஒரு சுகமான அனுபவம் வேண்டி.,
காஷ்மீரின் அழகைக் காண்போம்.
வளமான நதிகள்.
பனி மலைகள்.
உயர உயரமான மரங்கள். செர்ரி, ப்ளம் பழ மரங்கள். கேட்பாரின்றி உதிர்ந்துக் கிடக்கும் பழக்குவியல்கள்.
உயரமான அந்த மலை பிரதேசத்தில் மேகக்கூட்டம் கூட நம் காலடியில் தான் மிதக்கும்.
சரிந்து சரிந்து போகும் சாலையிலிருந்து திடீரென சரியும் பயங்கர பள்ளதாக்குகள்.
பசுமையும் வெண்மையும் கலந்த பனிக்காடுகள்.
தூரத்தில் எங்கோ தெரியும் இமயத்தின் மறு பாதிகள்.
இந்த பக்கம் பாகிஸ்தானின் தூரமான வானத்து காட்சிகள்.
நான் ஒரு பத்திரிகையாளன். பெயர் விக்கி.
நான் விக்கவில்லை. என் பெயர் விக்கி என்ற விக்னேஷ்வர்.
சென்னையை சேர்ந்த நான்,
அப்பாவின் விபரீத ஆசையால்
பி.ஏ, எம்.ஏ ஜர்னலிசம் படித்து, ஒரு பெரிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் வேலையும் கிடைத்து, காஷ்மீருக்கு அகதியாக துரத்தப்பட்டேன்.
ஆபத்து நிறைந்த காஷ்மீரில் செய்தி சேகரித்து அனுப்பும் நிருபர் பணி என்னுடையது.
நீங்கள் கூட பார்த்திருக்கலாம். போன ஞாயிறன்று தீவிரவாதிகள் சிலர் ஒரு வேனில் ஒருவரை இழுத்துக்கொண்டு ஏறும் ஒரு பரபரப்பான காட்சியை பார்த்து
வியந்து போயிருக்கலாம்.
பயந்து போயிருக்கலாம்.
எடுத்தவன் நானே. சுமார் 200 மீட்டர் தொலைவிலிருந்து பாறை இடுக்கில் மறைந்து நின்று படம் எடுத்தேன். எத்தேச்சையாக தான்.
அவர்கள் என்னை பார்த்திருந்தால்?
இந்நேரம் என்னை படமெடுத்து சுவற்றில் சட்டத்துக்கு நடுவே வைத்து தொங்க விட்டிருப்பார்கள், மாலையையும் போட்டு.
இவ்வளவு ஆபத்தான பணிக்கு எப்படி வீட்டில் அனுமதியளித்தனர் என்கிறீர்களா?
என் அப்பா ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.
அம்மா… மகனை மண்ணுலகின் சொர்க்கத்திற்கு துரத்தி விட்டு,
வாரா வாரம் கடிதம் எழுதும், அடிக்கடி தொலைபேசியில் உடல் நலம் விசாரிக்கும் பரிதாபமான சராசரி இந்திய அம்மா.
ஆரம்பத்தில் காஷ்மீர் வித்தியாசமான அனுபவமாக தான் எனக்கு இருந்தது.
தினசரி சிறு தூறலாவது காட்டும் வானம்.
ஜூன் மாத கோடை உச்சம் கூட 21 டிகிரியை தாண்டாத வெயில் சுகம்.
டிசம்பரிலோ மைனஸ் 10 டிகிரி செல்ஷியஸ் குளிர் ஆளை அங்கம் அங்கமாக அறுக்கும் கொடுமை.
இப்படி.
நான் இருந்த இடம்,
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்ராவிற்கு வரும் மலைப்பாதையிலிருந்து பிரியும் ஒரு சிறு ஊர். பெயர் சோட்டா பூஞ்ச்.
இங்கிருந்து தான் பயங்கரமான எல்லையோர மலைச்சரிவுகள் ஆரம்பிக்கின்றன.
பெயர் தெரியாத ஏராளமான கிளை நதிகளை கொண்டு விளங்கிய அந்த பள்ளத்தாக்கு தீவிரவாதிகளின் நடமாட்டத்திற்கும் இடம் கொடுத்து கொண்டிருந்தது.
எல்லையோர மாவட்டமான பூஞ்ச் இங்கே தான் தன் எல்லையை தொடங்குகிறது.
நான் இருந்த இடம் சிறிது பிரசித்தமானது, இங்கிருக்கும் ஒரு பழமையான சிவன் கோவிலுக்கு.
அந்த கோவிலையும் அதன் எதிரே நீண்டிருக்கும் அந்த சாலையையும், அதன் ஓரங்களில் படர்ந்திருக்கும் கடைகளையும், அவர்கள் வசிக்கும் நெரிசலான பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதியையும் விட்டால் ஊர் என்று ஒன்றுமே கிடையாது.
இருந்தாலும் ராணுவம் இந்த பகுதியில் காவல் புரியும்.
காஷ்மீரில் சகஜமான விஷயமாகி விட்டிருந்தது ராணுவ காவல்.
ராணுவ வீரர்கள் பொதுமக்களுடன் நம்மூர் ட்ராஃபிக் போலீஸ் போல சிரித்து பேசியபடி கையில் அபாயகரமான இயந்திர துப்பாக்கிகளோடு வலம் வருவது சாதாரணமான விஷயம்.
நான் முன்பு கூறியபடி
முதலில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்த காஷ்மீர் வாசம் பின்பு அலுக்க தொடங்கிய காலத்தில்,
மனம் சலிக்க தொடங்கிய காலத்தில்,
அந்த பெண் எனக்கு அறிமுகமானாள்.
ஹசாரிகா.
அற்புதமான பெண்.
அவளை நீங்கள் சந்திக்க வேண்டுமே?
அடட? என்ன மாதிரி பெண் அவள் தெரியுமா?
இந்த உற்சாக பானம், சோம பானம், தேவ பானம், அமிர்தம் எல்லாம் அவள் பேச்சிலேயே வழியும்.
அவ்வளவு அருமையாக பேசுவாள்.
அந்த சலனமற்ற, தூய வெண்மையான பளபளப்பான விழிகளுக்கு எல்லோருமே அடிமையாகி போவார்கள்.
அந்த பூனை கண்களுக்கு சொந்தமான ரோஸ் நிற முகமும் கவர்ச்சியான அதன் பாங்கும் மெலிந்த தேகமும், நாசூக்கான நடை, உடை பாவனைகளுமாய் அவள் என்னை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறாள்.
மனம் சலிக்க மறந்து களிக்க தொடங்கி விட்டது.
தினமும் அந்த பஜார் வீதியில் சுற்றுவேன் (வேறு என்ன வேலை எனக்கு)
சில நாட்கள் மழையில், பல நாட்கள் பனியில்,
சில நாட்கள் அபூர்வமாய் வெயிலில்.
நான் காஷ்மீர் வந்து 3 மாதமிருக்கும். வந்த புதிதில் ஒருநாள் சும்மாவேனும் கோவிலுக்கு போகலாமே என்று நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பினேன்..
பூஜை தட்டுக்கள் இதர சாமன்கள் விற்கும் கடைகளிடையே நான் தேர்ந்தெடுத்தது ஹஸாரிகாவின் கடையை தான்...
என் வயது அப்படி.
சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டு இடையிடையே தன் தம்பியிடம் என்னவோ வேலை வாங்கி கொண்டு,
முதல் நாளே நான் பணிந்து விட்டேன். தினந்தோறும்
மாலை ஃபேக்ஸ் கொடுக்க பஜார் வரும் போது அந்த கடையை பார்த்து கொண்டே போவேன்...
ஒரு நாள் பழக்கத்திலேயே ஹஸாரிகா சிநேகமாய் சிரிக்க தொடங்கியிருந்த நேரமது.
ஏன் என்று ஆயிரம் குண்டூசிகள் உள்ளே தைக்க அடிக்கடி அந்த பக்கம் போவேன்...
எதையாவது சில சமயம் வாங்குவேன்...
பேச்சு கொடுப்பேன். ரொம்ப ஆழமாக இல்லை.
லேசாக. மேலோட்டமாக தான். ஆனால் ஹஸாரிகா ஆழமாகவும், அற்புதமாகவும் பேசுவாள். அவளை எனக்கு அணு அணுவாய் பிடித்திருந்தது.
அடிக்கடி கத்ரா செல்லும் பேரூந்துகள் வந்து போகும். அப்போது ஹஸாரிகாவின் வியாபாரம் சூடு பிடிக்கும்.
அந்த நேரம் நான் தொந்திரவு செய்ய மாட்டேன்.
இரவு நேரங்களில் ராணுவத்தினரோடு சில சமயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போக வேண்டியிருக்கும்...
பல சமயங்களில் நிருபர்கள் சிலர் சேர்ந்து தன்னிச்சையாக கிளம்புவோம். அந்த அடையாள அட்டை இல்லா விட்டால், பல சமயம் நாங்கள் உதைப்பட வேண்டி வந்திருக்கும்.
காஷ்மீரின் எல்லையோர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு ஜீப்பில் தான் போய் வருவோம். உயிரை கையில் பிடித்து கொண்டு.
சில முறை தீவிரவாதிகள் வந்து போய் சில நிமிடங்கள் தான் ஆயின என்று சொல்லும் வகையிலும், அதிர்ஷ்டவசமாக நாங்கள் கிளம்பியவுடனே அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்லும் வகையிலும் எமன் வீட்டை எட்டி பார்த்த நிகழ்வுகள் உண்டு.
இந்த பகுதியில் ஏற்கனவே எங்கள் பத்திரிகை சார்பாக வேலைப்பார்த்த ஆசாமி நடுநிசியில், தீவிரவாதிகள் நடமாட்டத்தையும், சில கொலைகளையும் பார்த்து விட்டு வேலையை விட்டே ஓடி விட்டாராம். சக நிருபர்கள் சொல்லி சிரித்தனர்.
நான் உள்ளுக்குள் திகிலடைந்தாலும், வெளியே சிரித்து வைத்தேன். என்ன செய்வது?
ஆபத்திற்கு நடுவே ஹஸாரிகா எனக்கு ஒரு ஆறுதலாய் இருந்தாள்.
நான் கேட்டேன் என்பதற்காக ஸ்ரீநகரில் இருந்தும், ஜம்முவில் இருந்தும் வரும் பத்திரிகை ஏஜண்டுகளிடம் சொல்லி வைத்து தமிழ் பத்திரிகைகள் சிலவற்றை வாங்கி கொடுப்பாள்.
வழக்காமாக நான் இரவு வேளையில் விரும்பி உண்ணும் வாழைப்பழங்களை எனக்காக எடுத்து வைப்பாள்.
மார்க்கெட் பகுதியில் எல்லோரும் ஹஸாரிகாவுக்கு மரியாதை கொடுப்பார்கள். காரணம் ஹஸாரிகா அமைதியான பெண். எப்போதோ ஒருமுறை அனைவருக்கும் ஏதாவது உதவி செய்து இருக்கிறாள். அந்த நன்றி தான்.
ஹஸாரிகாவிற்கு என்னை விட ஓரிரு வயது கூடுதலாக இருக்கும்.
ஆனால் பார்த்தால் ஹஸாரிக்கவை இளம்பெண் என்பதற்கு மேல் வயதை மதிப்பிட முடியாது
அந்த அடர்த்தியான பிரவுன் நிற ஒற்றை பின்னலும், சூரிதார் உடையும், காற்றில் பறக்கும் ஷாலுமாய் ஹஸாரிகா கவிதையாய் இருப்பாள்.
உடைந்த பூசணிக்காயும் உடைந்த சில மண்டைகளும்..
அதை வைத்து குழம்பு பண்ணலாம்...
பொரியல் பண்ணலாம்..
கிச்சடி பண்ணலாம், பச்சடி பண்ணலாம்,
ஆட்களை விழ பண்ணலாம் என்று கண்டுபிடித்தவர்கள் நம்மூர் ஆட்களாய் தான் இருப்பார்கள்...
திருஷ்டி கழிக்க வேண்டும் அதற்கு பூசணிக்காய் சுற்றி உடைக்க வேண்டும் என்று எந்த சாத்திரத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை...
கோலம் போட்டு அதன் நடுவில் சாணம் வைத்து அதில் பூசணி பூ சொருகுவார்கள்... சரி பூசணிப்பூ சின்னது ஆபத்து கம்மி...
உடைத்த ஒரு பாதி பூசணியில், டூ வீலரின் முன் சக்கரம் போய் சரியாக புதைந்து வண்டியை அடியோடு குடை சாய்க்கும் படி செய்யும் ஜப்பான் டெக்னாலஜி நம்மாட்களுக்கு எப்படி தான் கை வந்ததோ தெரியவில்லை...
டூ வீலர்கள் எவ்வளவு நிதானமாக சென்றாலும், ஆயுத பூஜை என்பது பப்ளிக் எக்ஸாம் மாதிரி...
2 நாளைக்குள், பல பேர் நிறைய ஸ்கோர் பண்ணி விடுவார்கள்...
நம்மூர் கமிஷனர் நேற்று அறிக்கை எல்லாம் விட்டு பார்த்தார்.. ஒன்றும் பலனில்லை...
காலையில் தி.நகர் போய் வருவதற்குள் வண்டியுடன் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் பண்ணி வேண்டியதாயிற்று...
என் கண் முன்னே ஒருவர் ஒரு டர்னிங் பூசணிகாயை சரியாக கணிக்க முடியாமல் திணறி, வண்டியுடன் அனந்த சயன போஸில் படுத்துக் கொண்டே ரோட்டை கடந்து சென்றதை பார்த்து திகிலடைந்து, 20 கி.மீ வேகத்தில் வண்டி ஓட்டி வீட்டை அடைந்தேன்...
அடுத்தவன் எப்படி போனால் என்ன நம்ம கடை வீடு நல்லா இருந்தால் போதும் என்று பூசணிக்காயை ரோட்டில் உடைக்கும் இவர்கள் நல்ல மனதை என்னவென்று சொல்ல?
பூசணிக்காயை ஆபரேஷன் செய்து குங்குமம் காசு போட்டு நிரப்பி, கற்பூரம் ஏற்றி, சுற்றி நடுரோட்டில் போட்டு உடைக்கிறார்கள்....( எப்போ எப்படி ஆரம்பித்தது இந்த பழக்கம்.. வவ்வால் சார் உங்களுக்கு தெரியுமா?)
உடைந்த பூசணிக்காயில் இருந்து காசை எடுக்க இருக்கும் ஆர்வம், அதை ஓரமாய் போடுவதில் இல்லை பாருங்களேன்..
ஏன் உடைந்த பூசணியை திரும்ப எடுத்தால் தீட்டா?.. அதில் வழுக்கி விழுந்து யார் மண்டையாவது உடைந்தால் அந்த பாழாய் போன தீட்டு கிடையாதா?..
ஒன்று சாத்திரங்கள் தப்பு தப்பாய் இருக்க வேண்டும்..
இல்லை அதை யாரோ இவர்களுக்கு தப்பு தப்பாய் சொல்லி கொடுத்திருக்க வேண்டும்...
சனி, அக்டோபர் 13, 2007
போக்குவரத்து நெ(சி)ரிசல்
இதை தவிர்க்க சென்னை போ.காவலர்கள்..(போக்குவரத்து காவலர்கள்!!!) அவர்களால் ஆன வரை முயற்சி செய்கிறார்கள்... முடிந்த வரை எல்லா சாலைகளையும் ஒரு வழிப்பாதையாக்கி அவர்கள் குழம்புவதோடு இல்லாமல் வாகன ஓட்டிகளையும் சகட்டுமேனிக்கு குழப்பி விடுகிறார்கள்...
எழும்பூர், கிண்டியை தொடர்ந்து இப்போது தி.நகர் சாலைகளும் ஒரு வழிப்பாதையாக்கப் பட்டிருக்கிறது....
இது இப்படியே தொடர்ந்தால் என்னாகும் என்று ஒரு கற்பனை...
அலுவலகத்தில்,
“ஏன்யா கண்ணு சிவந்திருக்கு.. ராத்திரி சரியா தூங்கலையா?”
“அத ஏன்யா கேக்கற.. அடிக்கடி ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு எங்க தெருல ரெண்டு பக்கமும் "நோ என்ட்ரி" போர்டு வெச்சுட்டாங்க... வீட்டுக்கே போக முடியலை...”
=========================================
சாலையில் ஒரு போக்குவரத்து காவலரிடம் ஒருவர்,
"சார், ஒன் வே பண்ண ரூட்டை நல்லா சரிப்பார்த்துட்டீங்களா?.. நான் 20வது தடவையா உங்களை க்ராஸ் பண்றேன்... "
=========================================
தொலைபேசியில் இருவர்,
"என்னய்யா? திடீர்னு வீட்டை விழுப்புரத்துக்கு மாத்திட்ட?"
"எல்லா ஒன்வேயும் சுத்திட்டு மயிலாப்பூர்ல இருக்கிற வீட்டுக்கு விழுப்புரம் வழியா தான் போக வேண்டியிருக்கு.. எதுக்கு மறுபடியும் மயிலாப்பூர் போகனும்னு.. வீட்டை விழுப்புரத்துக்கே மாத்திட்டேன்.. ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வந்துடுறேன்பா..."
=========================================
ரெயில் பாதையில் ரெயில் ட்ரைவரும், போ.காவலரும்
"சார் நல்லா விசாரிச்சீங்களா?.. ரெயிலுக்குமா ஒன் வே மாத்த சொல்லியிருக்காங்க?"
=========================================
காரில் போகும் ஒருவர் மொபைலில் அலறுகிறார்,
"அடியே உன்னை தாண்டி.. உடனே வக்கீலுக்கு ஃபோனை போட்டு உயிலை ரெடி பண்ண சொல்லு... பாழா போனவனுங்க.. டைவர்சன் டைவர்சன்னு ஏர்ப்போர்ட் ரன்வேக்குள்ள என் வண்டிய திருப்பி விட்டானுங்க... எதிர்த்த மாதிரி ஒரு ஃப்ளைட் லேண்டிங் ஆயிட்டிருக்கு..."
=========================================
பஸ்ஸில் இருவர்,
"என்னடா நான் கேட்டப்ப வேலை இருக்கு.. ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு.. இப்ப நீயும் திருச்சி பஸ்ஸுல ஏர்ற? மனச மாத்திக்கிட்டயா? அமைஞ்சிக்கர பஸ் அங்கே இருக்கு"
"ஆஃபீஸ் தாண்டா போறேன்.. இந்த பஸ் தான் ஷார்ட்கட்ல சீக்கிரம் போகும்..."
=========================================
ஆஃபீசில் இருவர்
"டேய் எங்கடா உன் காரை காணோம்..."
"அதையேண்டா கேக்கற?.. போன மாசம் ஸ்பென்சர்ல ஷாப்பிங் பண்றதுக்காக போய் வண்டியை பார்க் பண்ணேன்.. ஷாப்பிங் முடிஞ்சு வந்து பார்த்தா என் வீட்டுக்கு போக வழியே இல்லாதபடிக்கு எல்லாத்தையும் ஒன் வே பண்ணிட்டாங்க... மறுபடியும் ரூட் எப்ப மாத்துவாங்கன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்.."
எனது சிறு முயற்சி...
சிறுகதை, நாவல் இரண்டிலும் சேர்க்க முடியாத படிக்கு ஒரு நீளம் கொண்ட எனது சிறுகதை(?) சிலவற்றை தொடராக தர எண்ணியுள்ளேன்...
பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ எதுவாக இருப்பினும் வலைஞர்கள் ஒரு வரி எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்...
முதல் கதையின் முதல் பகுதியை அடுத்த வாரம் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்..
தாள்களில் எழுதி வைத்திருப்பவற்றை தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப இந்த மாதிரி தொடராக தரும் முறை எனக்கு சுலபம் என்பதால் கூட நான் இதை தேர்வு செய்திருக்கலாம்...
இந்த மாதிரி தருணத்தில், இணையம் இந்த அளவு முன்னேறி நான் நினைத்ததை எழுதும் அளவிற்கு வாய்ப்பை உண்டாக்கி தந்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்....(Charles Babbage முதல் இன்றைய கடைநிலை வலை நிரலமைப்பாளர்-வன்பொருள் பொறுப்பாளர் வரை)
முதல் கதையின் தலைப்பு
ஒரு காஷ்மீரத்து காதல்
விஜய் TVயின் ஜோடி நம்.1 நிகழ்ச்சி...
பிரபலங்களின் ஒரு நடனப்போட்டி என்பதில் இருந்து, அமெரிக்க தொலைக்கட்சிகள் நடத்தும் ரியாலிடி கேம் ஷோ போல மாறிக்கொண்டு வருகிறது...
ஒரு போட்டியாளர் எப்படி தன்னை போட்டிக்கு தயார் படுத்திக்கொள்கிறார் என்பதில் ஆரம்பித்து அவர்களின் ஓய்வறை வரைச் சென்று வெற்றி தோல்விகளை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பது வரை காண்பிப்பது தான் ரியாலிட்டி கேம் ஷொக்கள்...
வித்தியாசமான இந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கதே ஆனாலும் பரபரப்பை கூட்டி TRP புள்ளிகளை அதிகப்படுத்த முயற்சிப்பதை வரவேற்க முடியவில்லை...
ஒரு போட்டியாளரின் தாயார் கூச்சல் போட்டதையும், சிம்பு-பப்லு (பிருதிவிராஜ்) மோதலை அப்படியே ஒளிபரப்பு செய்ததும், அதற்காக சிம்புவின் ரசிகர்கள், அவரின் குடும்பம், மக்கள் என அனைவரையும் பப்லுவிற்கு எதிராக பேச விட்டு ஒளிப்பரப்புவதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்...
"அவனை விடக்கூடாது..அவனை என்ன பண்ணட்டும் சொல்லுங்க.. " என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டதாகவும் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று பெரிய மனதுடன் தாங்கள் சொன்னதாகவும் சிம்புவின் சித்தப்பா... கூறியதைக்கூட தணிக்கை செய்யாமல் அப்படியே ஒளிப்பரப்பியது பப்லுவிற்கு எதிராக வன்முறையை தூண்டுவதைப்போல இருந்தது.....
விஜய் TV தன்னுடைய எல்லா போட்டிகளிலும் இந்த பாணியை நுழைத்து வருகிறது..
இது எங்கே கொண்டு போய் விட போகிறதோ...