உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஒரு காஷ்மீரத்து காதல். - தொடர்கதை பாகம்-1


காஷ்மீர்

பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்திய அற்புதம்.
இந்திய அற்புதம் என்று சொன்னதில் காரணம் இருக்க தான் செய்கிறது.

சில அந்நிய சக்திகள் காஷ்மீரை தங்கள் அற்புதம் என்று உரிமை கொண்டாட முயற்சி கொண்டிருக்கும் நேரமிது. விளைவு,

காஷ்மீர் ஒரு அழகான ஆபத்தாக மாறி போய் விட்டது.
இன்று காஷ்மீரில் நிலவும் பதற்றத்தில் எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் வாழ்க்கை நடக்கிறது.

நமது ராணுவம் உயிரை காற்றில் விட்டு, தங்கள் உயிரை கொடுத்தாவது காஷ்மீரை காப்போம்.. காத்தே தீருவோம் என்று கடுமையாக பாதுகாவல் நடவடிக்கைகள் மேற்க்கொண்டு இருக்கின்றனர்.

என்றாலும் எல்லைப்புற மாவட்டங்களில் பதற்றம் தணியவே இல்லை...

தீவிரவாதிகளின் கொட்டம் அதிகமாகி இருக்கும் பகுதிகள் அவை.

ஒரு சுகமான அனுபவம் வேண்டி.,
காஷ்மீரின் அழகைக் காண்போம்.

வளமான நதிகள்.
பனி மலைகள்.
உயர உயரமான மரங்கள். செர்ரி, ப்ளம் பழ மரங்கள். கேட்பாரின்றி உதிர்ந்துக் கிடக்கும் பழக்குவியல்கள்.

உயரமான அந்த மலை பிரதேசத்தில் மேகக்கூட்டம் கூட நம் காலடியில் தான் மிதக்கும்.

சரிந்து சரிந்து போகும் சாலையிலிருந்து திடீரென சரியும் பயங்கர பள்ளதாக்குகள்.

பசுமையும் வெண்மையும் கலந்த பனிக்காடுகள்.

தூரத்தில் எங்கோ தெரியும் இமயத்தின் மறு பாதிகள்.

இந்த பக்கம் பாகிஸ்தானின் தூரமான வானத்து காட்சிகள்.

நான் ஒரு பத்திரிகையாளன். பெயர் விக்கி.

நான் விக்கவில்லை. என் பெயர் விக்கி என்ற விக்னேஷ்வர்.

சென்னையை சேர்ந்த நான்,
அப்பாவின் விபரீத ஆசையால்

பி.ஏ, எம்.ஏ ஜர்னலிசம் படித்து, ஒரு பெரிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் வேலையும் கிடைத்து, காஷ்மீருக்கு அகதியாக துரத்தப்பட்டேன்.

ஆபத்து நிறைந்த காஷ்மீரில் செய்தி சேகரித்து அனுப்பும் நிருபர் பணி என்னுடையது.

நீங்கள் கூட பார்த்திருக்கலாம். போன ஞாயிறன்று தீவிரவாதிகள் சிலர் ஒரு வேனில் ஒருவரை இழுத்துக்கொண்டு ஏறும் ஒரு பரபரப்பான காட்சியை பார்த்து

வியந்து போயிருக்கலாம்.

பயந்து போயிருக்கலாம்.

எடுத்தவன் நானே. சுமார் 200 மீட்டர் தொலைவிலிருந்து பாறை இடுக்கில் மறைந்து நின்று படம் எடுத்தேன். எத்தேச்சையாக தான்.

அவர்கள் என்னை பார்த்திருந்தால்?

இந்நேரம் என்னை படமெடுத்து சுவற்றில் சட்டத்துக்கு நடுவே வைத்து தொங்க விட்டிருப்பார்கள், மாலையையும் போட்டு.

இவ்வளவு ஆபத்தான பணிக்கு எப்படி வீட்டில் அனுமதியளித்தனர் என்கிறீர்களா?

என் அப்பா ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.

அம்மா… மகனை மண்ணுலகின் சொர்க்கத்திற்கு துரத்தி விட்டு,
வாரா வாரம் கடிதம் எழுதும், அடிக்கடி தொலைபேசியில் உடல் நலம் விசாரிக்கும் பரிதாபமான சராசரி இந்திய அம்மா.

ஆரம்பத்தில் காஷ்மீர் வித்தியாசமான அனுபவமாக தான் எனக்கு இருந்தது.

தினசரி சிறு தூறலாவது காட்டும் வானம்.

ஜூன் மாத கோடை உச்சம் கூட 21 டிகிரியை தாண்டாத வெயில் சுகம்.

டிசம்பரிலோ மைனஸ் 10 டிகிரி செல்ஷியஸ் குளிர் ஆளை அங்கம் அங்கமாக அறுக்கும் கொடுமை.

இப்படி.

நான் இருந்த இடம்,
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்ராவிற்கு வரும் மலைப்பாதையிலிருந்து பிரியும் ஒரு சிறு ஊர். பெயர் சோட்டா பூஞ்ச்.

இங்கிருந்து தான் பயங்கரமான எல்லையோர மலைச்சரிவுகள் ஆரம்பிக்கின்றன.

பெயர் தெரியாத ஏராளமான கிளை நதிகளை கொண்டு விளங்கிய அந்த பள்ளத்தாக்கு தீவிரவாதிகளின் நடமாட்டத்திற்கும் இடம் கொடுத்து கொண்டிருந்தது.

எல்லையோர மாவட்டமான பூஞ்ச் இங்கே தான் தன் எல்லையை தொடங்குகிறது.

நான் இருந்த இடம் சிறிது பிரசித்தமானது, இங்கிருக்கும் ஒரு பழமையான சிவன் கோவிலுக்கு.

அந்த கோவிலையும் அதன் எதிரே நீண்டிருக்கும் அந்த சாலையையும், அதன் ஓரங்களில் படர்ந்திருக்கும் கடைகளையும், அவர்கள் வசிக்கும் நெரிசலான பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதியையும் விட்டால் ஊர் என்று ஒன்றுமே கிடையாது.

இருந்தாலும் ராணுவம் இந்த பகுதியில் காவல் புரியும்.
காஷ்மீரில் சகஜமான விஷயமாகி விட்டிருந்தது ராணுவ காவல்.

ராணுவ வீரர்கள் பொதுமக்களுடன் நம்மூர் ட்ராஃபிக் போலீஸ் போல சிரித்து பேசியபடி கையில் அபாயகரமான இயந்திர துப்பாக்கிகளோடு வலம் வருவது சாதாரணமான விஷயம்.

நான் முன்பு கூறியபடி

முதலில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்த காஷ்மீர் வாசம் பின்பு அலுக்க தொடங்கிய காலத்தில்,
மனம் சலிக்க தொடங்கிய காலத்தில்,

அந்த பெண் எனக்கு அறிமுகமானாள்.

ஹசாரிகா.

அற்புதமான பெண்.

அவளை நீங்கள் சந்திக்க வேண்டுமே?

அடட? என்ன மாதிரி பெண் அவள் தெரியுமா?

இந்த உற்சாக பானம், சோம பானம், தேவ பானம், அமிர்தம் எல்லாம் அவள் பேச்சிலேயே வழியும்.

அவ்வளவு அருமையாக பேசுவாள்.

அந்த சலனமற்ற, தூய வெண்மையான பளபளப்பான விழிகளுக்கு எல்லோருமே அடிமையாகி போவார்கள்.

அந்த பூனை கண்களுக்கு சொந்தமான ரோஸ் நிற முகமும் கவர்ச்சியான அதன் பாங்கும் மெலிந்த தேகமும், நாசூக்கான நடை, உடை பாவனைகளுமாய் அவள் என்னை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறாள்.

மனம் சலிக்க மறந்து களிக்க தொடங்கி விட்டது.

தினமும் அந்த பஜார் வீதியில் சுற்றுவேன் (வேறு என்ன வேலை எனக்கு)

சில நாட்கள் மழையில், பல நாட்கள் பனியில்,
சில நாட்கள் அபூர்வமாய் வெயிலில்.

நான் காஷ்மீர் வந்து 3 மாதமிருக்கும். வந்த புதிதில் ஒருநாள் சும்மாவேனும் கோவிலுக்கு போகலாமே என்று நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பினேன்..

பூஜை தட்டுக்கள் இதர சாமன்கள் விற்கும் கடைகளிடையே நான் தேர்ந்தெடுத்தது ஹஸாரிகாவின் கடையை தான்...

என் வயது அப்படி.

சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டு இடையிடையே தன் தம்பியிடம் என்னவோ வேலை வாங்கி கொண்டு,

முதல் நாளே நான் பணிந்து விட்டேன். தினந்தோறும்

மாலை ஃபேக்ஸ் கொடுக்க பஜார் வரும் போது அந்த கடையை பார்த்து கொண்டே போவேன்...

ஒரு நாள் பழக்கத்திலேயே ஹஸாரிகா சிநேகமாய் சிரிக்க தொடங்கியிருந்த நேரமது.

ஏன் என்று ஆயிரம் குண்டூசிகள் உள்ளே தைக்க அடிக்கடி அந்த பக்கம் போவேன்...

எதையாவது சில சமயம் வாங்குவேன்...

பேச்சு கொடுப்பேன். ரொம்ப ஆழமாக இல்லை.

லேசாக. மேலோட்டமாக தான். ஆனால் ஹஸாரிகா ஆழமாகவும், அற்புதமாகவும் பேசுவாள். அவளை எனக்கு அணு அணுவாய் பிடித்திருந்தது.

அடிக்கடி கத்ரா செல்லும் பேரூந்துகள் வந்து போகும். அப்போது ஹஸாரிகாவின் வியாபாரம் சூடு பிடிக்கும்.

அந்த நேரம் நான் தொந்திரவு செய்ய மாட்டேன்.

இரவு நேரங்களில் ராணுவத்தினரோடு சில சமயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போக வேண்டியிருக்கும்...

பல சமயங்களில் நிருபர்கள் சிலர் சேர்ந்து தன்னிச்சையாக கிளம்புவோம். அந்த அடையாள அட்டை இல்லா விட்டால், பல சமயம் நாங்கள் உதைப்பட வேண்டி வந்திருக்கும்.

காஷ்மீரின் எல்லையோர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு ஜீப்பில் தான் போய் வருவோம். உயிரை கையில் பிடித்து கொண்டு.

சில முறை தீவிரவாதிகள் வந்து போய் சில நிமிடங்கள் தான் ஆயின என்று சொல்லும் வகையிலும், அதிர்ஷ்டவசமாக நாங்கள் கிளம்பியவுடனே அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்லும் வகையிலும் எமன் வீட்டை எட்டி பார்த்த நிகழ்வுகள் உண்டு.

இந்த பகுதியில் ஏற்கனவே எங்கள் பத்திரிகை சார்பாக வேலைப்பார்த்த ஆசாமி நடுநிசியில், தீவிரவாதிகள் நடமாட்டத்தையும், சில கொலைகளையும் பார்த்து விட்டு வேலையை விட்டே ஓடி விட்டாராம். சக நிருபர்கள் சொல்லி சிரித்தனர்.

நான் உள்ளுக்குள் திகிலடைந்தாலும், வெளியே சிரித்து வைத்தேன். என்ன செய்வது?

ஆபத்திற்கு நடுவே ஹஸாரிகா எனக்கு ஒரு ஆறுதலாய் இருந்தாள்.

நான் கேட்டேன் என்பதற்காக ஸ்ரீநகரில் இருந்தும், ஜம்முவில் இருந்தும் வரும் பத்திரிகை ஏஜண்டுகளிடம் சொல்லி வைத்து தமிழ் பத்திரிகைகள் சிலவற்றை வாங்கி கொடுப்பாள்.

வழக்காமாக நான் இரவு வேளையில் விரும்பி உண்ணும் வாழைப்பழங்களை எனக்காக எடுத்து வைப்பாள்.

மார்க்கெட் பகுதியில் எல்லோரும் ஹஸாரிகாவுக்கு மரியாதை கொடுப்பார்கள். காரணம் ஹஸாரிகா அமைதியான பெண். எப்போதோ ஒருமுறை அனைவருக்கும் ஏதாவது உதவி செய்து இருக்கிறாள். அந்த நன்றி தான்.

ஹஸாரிகாவிற்கு என்னை விட ஓரிரு வயது கூடுதலாக இருக்கும்.

ஆனால் பார்த்தால் ஹஸாரிக்கவை இளம்பெண் என்பதற்கு மேல் வயதை மதிப்பிட முடியாது

அந்த அடர்த்தியான பிரவுன் நிற ஒற்றை பின்னலும், சூரிதார் உடையும், காற்றில் பறக்கும் ஷாலுமாய் ஹஸாரிகா கவிதையாய் இருப்பாள்.


1 மறுமொழிகள்:

மாயன் சொன்னது…

இந்த கதையை நான் எழுதியது 1998-ம் ஆண்டு.

எனக்கு எப்படி கதை கேட்க பிடிக்குமோ அதே நடையில் தான் இந்த கதையை எழுதியுள்ளேன்..

படித்து விட்டு கருத்துக்களை சொன்னால் கூடுதல் மகிழ்ச்சி.

கருத்துரையிடுக

Disclaimer

கதைகளில் வரும் நிகழ்ச்சிகள், பாத்திரங்கள் யாவும் கற்பனையே.. இங்கு செய்யப்படும் அலசல்கள், முன்வைக்கப்படும் கருத்துக்கள் பத்திரிகைகள்,இணையம் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவரும் செய்திகளை அடிப்படையாக கொண்டவை.. கருத்துக்கள் யார் மனதையேனும் புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்..