உலகப் பொதுமறை
உலகப் பொதுமறை
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!
சனி, டிசம்பர் 19, 2009
இந்திய பொருட்களை வாங்காதீர்கள்
தேசப் பற்று கொழுந்து விட்டு எரியுமா?.. இந்திய பொருட்களை வாங்குவோம் என்று முடிவெடுத்து.. இந்தியர், இந்திய கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்களை வாங்கும் ஆளா நீங்கள்?
இந்திய பொருட்களை வாங்குவதால் இந்திய பொருளாதாரம் உயரும் என்று நினைப்பவரா நீங்கள்?
நான் எனக்கு தெரிந்த சில விவரங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்...
நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா?.. FMCG எனப்படும் Fast Moving Consumer Goods-ல் இந்திய தயாரிப்புகள் என்று நம்பி வாங்கி கொண்டிருக்கும் பல பொருட்களை தற்போது தயாரித்து கொண்டிருப்பது வெளிநாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல் படும் பன்னாட்டு நிறுவனங்களே...
அவற்றில் கிடைக்கும் லாபங்களும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கே ஏதோ ஒரு வழியில் போகிறது...
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் வியாபாரம் செய்ய இந்தியாவின் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் ஒரு இந்திய கம்பெனியை ஆரம்பிக்கின்றன. அல்லது ஒரு இந்திய கம்பெனியை விலைக்கு வாங்கி இணைத்து வியாபரத்தை செய்கின்றன. பார்லே சாஃப்ட் ட்ரிங்க்ஸை கோகோ கோலா நிறுவனம் வாங்கியதை ஒரு உதாரணமாக சொல்லலாம். லிம்கா பானம் இந்திய தயாரிப்பு என்று வாங்கினால் லாபம் என்னவோ கோக் நிறுவனத்துக்கு தான்...
சரி பிராண்டு, FMCG நிறுவனத்தின் பொருட்களை வாங்கினால் தான் இந்த பிரச்சினைகள் என்றால்.. உள்நாட்டு பொருட்களை எடுத்துக் கொள்வோம்..
லிம்கா, கோக் போன்ற பானங்களை குடித்தால் தானே பிரச்சினை.. அதற்கு பதில் இளநீர் குடிப்போமே...
பெரிய நிறுவனத்தின் தேநீருக்கு பதில் இந்திய சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் தேநீர் வாங்கலாமே... பன்னாட்டு நிறுவனங்களின் துணிகளுக்கு பதில் கதராடைகள் வாங்கலாமே.. என்று தோன்றுகிறதா...
வெளிநாட்டு தேநீரில் இருக்கும் தரம் இந்தியாவில் தயாராகும் தேநீரில் இருக்கிறதா?
துபாயில் இருந்து நம் நண்பர் வாங்கி வரும் முந்திரி, பாதாம், பிஸ்தாவின் தரம் இந்தியாவில் கிடைக்கும் முந்திரி, பாதாம், பிஸ்தாவில் இருப்பது இல்லையே என்று நீங்கள் யோசித்தது உண்டா? ஐரோப்பாவில், அமேரிக்காவில் சாதாரண கடைகளில் கிடைக்கும் தரமான வாழைப்பழங்களையோ, ஆப்பிள்களையோ பார்த்து நீங்கள் வியந்தது உண்டா?
அங்கே கிடைக்கும் மசாலா பொருட்கள், இளநீர் போன்றவை தரமாக இருப்பதை எண்ணி அது போல நம் ஊரில் கிடைப்பது இல்லை என்று ஏங்கியது உண்டா?
ஆனால், மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் இந்தியாவில் தயாராகி ஏற்றுமதி செய்யப்படுபவை என்றால் நமக்கெல்லாம் வியப்பாக இருக்கும்.
இந்தியாவில் விளையும், தயாராகும் அனைத்து பொருட்களுக்கும் அநேகமாக ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு. அனைத்து பொருட்களுக்கும் முதல் தரம், இரண்டாம் தரம் என்றெல்லாம் உண்டு.. ஆப்பிள்,வாழைப்பழம் உட்பட அனைத்து பழ வகைகள், தேயிலை, வாசனைப் பொருட்கள், மளிகை பொருட்கள், அரிசி உட்பட அனைத்து தானிய வகைகள் என எல்லாவற்றிலும் முதல் தரமான பொருட்கள் ஏற்றுமதி தான் செய்யப்படுகின்றன.
அயல்நாடுகளில் முதல் தர பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதால் மட்டும் இவை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை...
முக்கியமான இன்னொரு காரணம் இருக்கிறது... வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களூக்கு கடுமையான தரக் கட்டுப்பாடுகளை அந்தந்த நாடுகள் விதிக்கின்றன..
எல்லாம் தம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான்...
இரண்டாம் தரம் மற்றும் அதற்கு கீழே உள்ள பொருட்கள் தான் உள்நாட்டு சந்தையில் விற்கப் படுகின்றன...
1. நம் மக்களால் வெளிநாடுகள் தரும் விலையை தர முடியாது..
2. உள்நாட்டில் தரத்தை பற்றி யார் கவலைப் பட போகிறார்கள்?
ஒரு வேளை அப்படி தப்பித் தவறி ஏதாவது நல்ல பொருள் கிடைத்தால் அதை வாங்கும் சக்தி பெரும்பான்மையான மக்களுக்கு கிடையாது...
நல்ல பொருட்களை கமுக்கமாக ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசும் ஊக்கம் கொடுக்க தான் செய்யும்.. நிறைய அந்நிய செலவாணி கிடைப்பதால் மத்திய அரசு அதை ஆதரித்து தான் ஆக வேண்டும்...
பொருட்கள் உற்பத்தியில் நாம் முதலில் தன்னிறைவு அடைய வேண்டும்... நம் தேவை போக மற்றதை ஏற்றுமதி செய்யும் நிலை வர வேண்டும்...
தரமான முதல் தர உள்நாட்டு பொருட்களில் விலை குறைய வேண்டும். அப்போது தான் இந்திய பொருட்களையே வாங்குங்கள் என்ற கொஷத்துக்கு அர்த்தம் கிடைக்கும்.. அது வரை நாம் எதை வாங்கினாலும் அதை கேள்விக் கேட்க யாருக்கும் அருகதை கிடையாது...
செவ்வாய், ஆகஸ்ட் 04, 2009
போக்கற்றவர்களும், போக்குவரத்து விதிகளும்
போக்குவரத்து நெரிசல்...
என்ன காரணம்? எனக்கு தெரிந்த சில உளவியல் ரீதியிலான காரணங்கள்...
தான் மட்டும் புத்திசாலி மற்றவரெல்லாம் முட்டாள் என்று நினைக்கும் மனப்பாங்கு...
தன்னை ஒருவர் முந்திச் செல்வதைத் தாங்கி கொள்ள இயலாத அதிகார மனப்பான்மை...
வேறு காரணங்கள்...?
விதிகளில் போதிய அறிமுகமின்மை...
அப்படியே அறிமுகம் இருந்தாலும் கடைப்பிடிப்பதில் அலட்சியம்..
எல்லவற்றையும் விட முக்கியமாய் லேன் டிசிப்ளைன் எனப்படும் சாலை ஒழுக்கத்தை மதிக்காமல் இருப்பது...
லேன் டிசிப்ளைன் (Lane Discipline) எனப்படும் சாலை ஒழுக்கம் ஒன்றை மட்டும் எல்லா வாகன ஓட்டிகளும் சரியாக கடைப்பிடித்தால் விபத்துக்களின் எண்ணிக்கையை 80% குறைத்து விடலாம்...
சாலை ஒழுக்கத்தில் பொதுவாக செய்யப்படும் தவறுகள்
- முன்னால் செல்லும் வாகனத்தை கண்ட இடங்களில் முந்துதல்...
- பாலங்களில் தன்னுடைய சாரியிலிருந்து வெளிப்பட்டு எதிர்சாரியில் விரைவது...
- வளைவுகளில் திரும்பும் போது வலது ஓரத்துக்கு சென்று திரும்புவது...
மேற்கூறியவை விபத்துக்களுக்கு காரணம் என்றால்
நெரிசலுக்கு காரணம்... - சாலையில் நெரிசல் ஏற்பட்டு முன்னால் வாகனங்கள் நின்றுக் கொண்டிருக்கும் போது வலது பக்கம் முன்னேறி சென்று எதிரே வரும் வாகனத்துக்கு வழி இல்லாமல் செய்வது..
- ஒரே நேரத்தில் ஒழுங்கற்ற முறையில் பல வாகனங்கள் ஒன்றாக முன்னேறுவது...
- வலது புறமோ, இடது புறமோ திரும்ப இருக்கும் வாகனத்துக்கு வழி விடாமல் போய் கொண்டே இருப்பது...
சிக்னல் நிற்க சொன்ன பிறகும் பச்சை சிக்னலில் முன்னேறி வரும் வாகனங்களுக்கு வழி விடாமல் குறுக்கே செல்வது...
பாருங்கள் இதில்
கொலைவெறியோடு ஓட்டுவது,
படு வேகத்தில் ஓட்டுவது,
அடுத்தவருக்கு ஒலியெழுப்பிய பின்னும் வழி கொடுக்காமல் போவது,
கண்ட இடத்தில் நிறுத்துவது,
சமிஞை கொடுக்காமல் திருப்பங்களில் திருப்புவது
இவைப் பற்றி நான் பேசவேயில்லை...
லேன் டிசிப்ளைனை மட்டும் அனைவரும் ஓரளவு சரியாக கடைப் பிடித்தாலே 80 சதவிகித போக்குவரத்து பிரச்சினைகள் சரியாகி விடும்...
போக்குவரத்து நெரிசலையும் அதற்கு காவல் துறை எடுக்கும் நடவடிக்கைகளையும் மையமாக வைத்து நான் எழுதிய நகைச்சுவைப் பதிவு இங்கே...
செவ்வாய், ஜூலை 28, 2009
மக்களும் மலிவு விலைக் கார்களும்
மாயப் பலகை 28.07.09
எந்த வலியை வேண்டுமென்றாலும் தாங்கி கொள்ளலாம் ஆனால் பல்வலியையும், காது வலியையும் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாது என்று சொல்வார்கள்...
அப்படிப் பட்ட பல்வலி சில வாரங்களுக்கு முன் என்னை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது... எனக்கு பிடுங்க வேண்டிய ஆணிகள் நிறைய இருந்ததால் இதோ அதோ என்று மாதக்கணக்காய் இழுத்து சென்ற வாரத்தில் பல் மருத்துவரிடத்திடம் சென்றே விட்டேன்..
சிறிய வயதில் பல் பிடுங்கப் பட்ட அனுபவம் இருந்தாலும், கொஞ்சம் பயமாகவே இருந்தது.. நல்ல வேளை அந்த பல் மருத்துவர் சிறிது கலகலப்பாக பேசி பதற்றத்தை தணித்தார்...
“ஹவ் ஓல்டு ஆர் யூ” என்று வழக்கமாய் கேட்பதற்கு பதில்... "ஹவ் யங் ஆர் யூ" என்று வித்தியாசமாய் என் வயதைக் கேட்டறிந்தார் அந்த மருத்துவர்… “இப்படி கேட்டா வர்ற பேஷண்ட்ஸ் ரொம்ப சந்தோஷப் படறாங்க… முக்கியமா பெண்கள்..." என்றார் கண்ணடித்து...
ஆனால் சும்மா சொல்லக் கூடாது... வாங்குகிற பணத்துக்கு ஸ்க்ரூ ட்ரைவர் போன்ற ஒரு ஆயுதம், கட்டிங் ப்ளேயர் போன்ற ஒரு ஆயுதம் என்று எல்லாம் விதவிதமாக கருவிகளைக் கையில் வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்…
பல் வலி நேரங்காலம் தெரியாமல் வந்து படுத்தி எடுக்கும் என்பது ஒரு புறம்... அப்படியே கவனிக்காமல் விட்டால் இதய சம்மந்தமான நோயில் கூட கொண்டு விடும் என்றெல்லாம் பூச்சி காண்பித்து பீதியைக் கிளப்புகிறார்கள்...
நான் என் தோழியிடம் சொன்ன ஜோக்..
"பேசாம டென்டிஸ்ட் ஆயிருக்கலாம்னு தோணுது..."
"இக்கறைக்கு அக்கறை பச்சை... எவ்வளவோ கஷ்டம் தெரியுமா அவங்க வேலை?"
"தெரியும்.. ஆனா நான் இந்த வேலைக்கு வரணும்னு நினைச்சதுக்கு காரணம் வேற..."
"என்ன?"
"ஊர்ல இருக்கிற எல்லா பொண்ணுங்களும்… அவரை பார்த்தா மட்டும் உடனே ஈன்னு பல்லை காட்டுறாங்க..."
"தூ"
பல் சிறிய அளவில் பாதிக்கப் பட்டிருக்கும் போதே அதை கவனித்து சரி செய்து கொள்வது எளிது மட்டுமல்ல.. நேரமும், பணமும் விரயம் ஆகாது... பற்சிதைவு அதிகம் ஆன பின் அதை சீர் செய்வது ஆகட்டும், பிடுங்கி எறிவது ஆகட்டும், சற்று சிக்கலான விஷயம் தான்..
பல் மருத்துவ துறை மற்ற துறைகளை போலவே நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது...(பல் பிடுங்குவதில் மட்டுமல்ல.. பீஸ் பிடுங்குவதிலும் தான்)
அப்படியே போகிற போக்கில் பற்களை பாதுகாக்க சில டிப்ஸ்
1.பிரஷ்ஷில் சுத்தம் செய்யும் போது பேஸ்ட் போட்டு தேய்ப்பதை விட வெறும் பிரஷ்ஷில் தேய்ப்பது அதிக பலன் தருமாம்... ஏனெனில் எங்கு அழுக்கு உள்ளது என்பதை சரியாக உணர்ந்து தேய்க்க முடியுமாதலால்...
2. சிலர் வாயில் பிரஷ்ஷை வைத்து மணிக்கணக்கில் அரைத்து எடுப்பார்கள்... ஆனால் 2 நிமிடம் பற்களை பிரஷ்ஷினால் தேய்த்தால் போதுமானதாம்… (இருக்கிறது 32 பல்லு.. எவ்வளோ நேரம் தேய்ப்பீங்க).. அதன் பிறகு வேண்டுமானால் ஒரு முறை பற்பசை போட்டு தேய்த்து விட்டுக்கொள்ளுங்கள்...
3. 3-4 மாதத்துக்கு ஒரு முறை பிரஷ்ஷை மாற்றி விடுவது நல்லது...
4. ஃப்ளோரைடு கலந்த பற்பசைகளை உபயோகிப்பது நல்லது…
5. பகலில் ஒரு முறை பற்களை சுத்தம் செய்வது என்பது.. கிருமிகளை கட்டுப்படுத்தும்..
6. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பல் தேய்ப்பது நல்லது.. அதற்கு மேற்ப்பட்ட முறைகள் பற்களை சுத்தம் செய்பவர்கள் நல்ல சைக்கால்ஜிஸ்டை பார்க்கவும்..
====================================================
முன்னர் வேலைப் பார்த்த நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி..
என்னுடைய டீமில் இருந்து சிலரும்.. வெவ்வேறு துறையில் இருந்தும் பலர் வந்திருந்த ஒரு பயிற்சி வகுப்பு...
BPO என்று நாம் பொதுவாய் சொன்னாலும் BPO-வில் வாய்ஸ்(Voice), நான் வாய்ஸ்(Non-Voice) என்று இரண்டு பிரிவுகள் உண்டு.. இதில் வாய்ஸ் என்பது வாடிக்கையாளர்களுடன் தொலைபேசியில் தொடர்ப்ய்க் கொண்டு பேசும் பிரிவு.. நான்-வாய்ஸ் என்பது தொலைபேசியில் வாடிக்கையாளருடன் பேசுதல் என்பது குறைவான ஒரு பிரிவு... அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம், பணம் வசூலிப்பது, பொருட்கள், சேவைகள் விற்பது, குறை கேட்பது, தொழில்நுட்ப உதவி செய்வது.. என இந்த பிரிவில் வேலை பார்க்கும் எல்லோரும்.. நன்றாக நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்கள்..
எங்கள் பக்கத்து ஃப்ளோரில் ஒரு டீம் இருந்தது... பொதுவாகவே அலப்பறை அதிகம் செய்யும் கூட்டம் அது.. அதுவும் ஆங்கிலம் சரியாக பேச வராத யாராவது அவர்களிடம் சிக்கினால் அவ்வளவு தான்.. அழ வைத்து நாமெல்லாம் இந்த உலகத்தில் பிறந்தது வீண் என்று எண்ண வைத்து விடுவார்கள்...
அவர்களும் இந்த பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தனர்.. முதல் நாள் வகுப்பெடுக்க வந்த பயிற்சியாளரையே கேலி, கிண்டல் செய்து வெறுப்பேற்றினார்கள் என்றால் சக அலுவலர்கள் கதியை பற்றி சொல்லவும் வேண்டுமா...
சகட்டு மேனிக்கு மிக கேவலமான ஏ ஜோக்குகளும்.. மற்றவருடைய உடை.. நடை பாவனை வரை எல்லாவற்றையும் விமர்சித்து... என்னவோ இவர்கள் லண்டனில் பிறந்து வளர்ந்தாற் போல் ஒரு நினைப்பு..(அந்த குழுவில் இருந்த பெண்கள் விட்ட பந்தாவுக்கு அளவேயில்லை)...
மறுநாள் பயிற்சி துவங்கியது.. கணக்கு பதிவியலின் புதிய பரிமானங்கள் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களை பற்றின ஒரு வகுப்பு.. அன்றும் நம் மக்கள் செம ரகளை செய்தனர்... ஆனால் அன்று வந்திருந்த பயிற்சியாளர் அவ்வளவு ஏமாந்தவரில்லை... இவர்களை பற்றி வந்த ஒரு மணி நேரத்தில் புரிந்துக் கொண்டவராய்.. அவர்களையே நிறைய கேள்விகள் கேட்க தொடங்கி விட்டார்... சும்மா பேசினால் அவர்கள் சிக்ஸர் அடிப்பார்கள்.. கேள்விக்கு பதில் அல்லவா சொல்ல வேண்டும்... சொன்னால் நம்ப மாட்டீர்கள் மாலை வரை அவர்களை வறுத்து எடுத்து விட்டார்... மொத்தக் கூட்டமும் களையிழந்து போய் விட்டது...
கடைசியாக போகும் போது ஒரு பன்ச் டயலாக் வேறு சொன்னார்...
"நுனி நாக்கு ஆங்கிலம் பேசத் தெரியவில்லையே என்று உங்களில் சிலர் வருத்தப்படுவது போல் தெரிகிறது... தகவல் பரிமாற்றத்தின் நோக்கம் நாகரீகமான உச்சரிப்போ, நுனி நாக்கில் பேசுவதோ அல்ல.. நாம் கூற வருவதை தெளிவாக அடுத்தவர் புரிந்து கொள்வதே ஆகும்... அதை சரியாக செய்யும் யாவரும் அதில் வல்லவர்கள் தான்.. இன்னுமொரு விஷயம்.. 'English is a Language… it’s not Knowledge...' ஆங்கிலம் பெசுபவர்களை பார்த்து பயப்படாதீர்கள்… ஆங்கிலேயர்களிலும் கை நாட்டு பேர்வழிகள் உண்டு" என்றாரே பார்க்கலாம்…
ஞாயிறு, ஜூலை 19, 2009
மாயப் பலகை 19.07.09
டுபாக்கூர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் வெற்றுப் பயல்கள் கூட கோல் செட்டிங்க், டார்கெட் என்று காற்றில் கணக்கு போட்டுக் கொண்டு அலையும் நாட்களில் அரசு ஊழியர்களுக்கு ஏன் அப்படி எதுவும் இல்லை?
****************************************************************************************
ஒரு காலத்தில் ஒரு தொலைப்பேசி இணைப்பு வாங்க வேண்டுமென்றால் வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்...
தொலைப்பேசி இலாகா ஜே.ஈ, ஏ.ஈ எல்லாம் கடவுள் போல... அவர்களை சாதாரண வாடிக்கையாளர்கள் பார்க்க கூட முடியாத காலம் எல்லாம் இருந்தது.....
எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் இணைப்புக்கு சிபாரிசு செய்து பணம் பார்த்த காலம் எல்லாம் கூட இருந்தது...
தனியார் நிறுவனம் எல்லாம் களத்தில் குதித்திருக்கா விட்டால் இன்று நாமெல்லாம் அலைபேசியோடு அலைந்து கொண்டிருப்போமா என்பதே சந்தேகம் தான்...
இந்த தனியார் போட்டியால் திருந்திய இன்னும் சில அரசுத் துறைகள் உள்ளன..
வங்கிகள்... அட சாமி இவர்கள் போட்ட ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா? வாடிக்கையாளர்கள் தான் முதலாளிகள் என்று இவர்களுக்கு புரிய உலகத்தின் பல வங்கிகள் இங்கே வந்து சேவை செய்து காண்பிக்க வேண்டியிருந்தது...
எனக்கு தெரிந்த ஒரு வங்கி ஊழியர் அண்ணா சாலையில் உள்ள ஒரு வங்கியில் பணி புரிந்து வந்தார்.. அவருடைய வேலை.. கிளிரயன்ஸுக்கு வரும் 10 செக்குகளுக்கு சீல் போட்டு லெட்ஜரில் என்ட்ரி போடுவது மட்டும் தான்.. ஆனால் அவர் கையில் எப்போதும் ஒரு ப்ரீஃப்கேஸ் இருக்கும்.. அதற்குள் குமுதம், ஆவி, ஜூவி, கல்கண்டு, சாவி, கல்கி உள்ளிட்ட இன்னபிற வாராந்திர, மாதாந்திர வஸ்துக்கள் அடுக்க பட்டிருக்கும்...
செக்குக்கு சீல் போட்ட கையோடு தலைவர் அவைகளுக்கும் சீல் போடுவார்... யார் புத்தகத்தை சொன்ன நேரத்துக்கு திருப்பி தர வில்லையோ அவர்களிடம் சண்டை போடுவார்.... இப்படி வாடிக்கையாளர்களுக்காக உழையோ உழையென்று உழைப்பார்...
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலேயும், வங்கியிலேயும் நன்றாக வேலை பார்க்க தெரிந்த, பார்க்க முன்வரும் இளிச்சவாய் அலுவலர் ஒருவர் அல்லது இருவர் இருப்பார்கள்... அவர்களால் தான் அந்த அலுவலகமே ஓடிக் கொண்டிருக்கும்...
தொலைகாட்சி (தூர்தர்ஷன்)....
என்ன பாடு படுத்தினார்கள்... தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்ப்பதென்றாலே அவர்கள் இஷ்டத்துக்கு தான் காண்பிப்பார்கள்..
தொலைக்காட்சியில் தோன்றுவதென்றால்.. அய்யோ... ஒருவர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி செய்கிறார் என்றால்.. அவார் நிஜமாகவே பிரபலம் அல்லது இயக்குநருக்கு வேண்டப்பட்டவர் என்று அர்த்தம்...
தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு அய்யகோ.. தூர்தர்ஷன் இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை...
சொல்லி கொண்டே போகலாம்.. என்ன தான் பசில தனியார் நிறுவனங்கள் சொதப்பினாலும் அவர்களின் வாடிக்கையாளர் சேவையும், அணுகுமுறையும் அரசுத்துறைகள் நடத்தும் நிறுவனங்களிடம் வர வில்லை என்பதே உண்மை..
திங்கள், ஜூலை 06, 2009
வரிப்பணமும், வழிப்பறியும்
நாம் வரிக்கட்டுகிறோம்...
வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, வணிக வரி(இது வணிகர்கள் தானாக கட்டுவதல்ல. நம்மிடம் பிடித்தம் செய்து கட்டுவது).
இது போக இன்னும் என்னென்னவோ வரிகள்....
சாலை வரியும் அவற்றுள் ஒன்று....
நாம் கட்டும் அத்தனை வரிகளும் மத்திய மாநில அரசுகள் மக்களாகிய நமக்கு தேவையான வசதிகளை பெருக்குவதற்கும், நமக்கு தேவையான வாழ்வாதாரங்களை உண்டாக்குவதற்கும், நம் நாட்டை பகைவர்களிடமும், தீவிரவாதிகளிடமும் இருந்து தற்காத்து கொள்ளவும், நாட்டு முன்னேற்ற பணிகளை செய்யவும் பயன்படுத்தப் படுகிறது எனக் கூறப்படுகிறது...
(நாட்டு முன்னேற்ற பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள், அரசு பணியாளர்கள், ராணுவம், காவல் அனைத்து துறை சம்பளங்களும் உள்ளிணைந்து...)
இப்படி இருக்க,
சாலை அமைத்தலும், பராமரித்தலும் அரசாங்கத்தின் அடிப்படை கடமை தானே?
புறவழிச்சாலை அமைக்கும் போதும், விரைவு வழிசாலை அமைக்கும் போதும், முக்கிய பாலங்கள் கட்டும் போதும்..
அதை கடக்க ஒவ்வொரு முறைக்கும் வாகனங்களிடம் ஏன் கட்டணம் வசூலிக்கபடுகிறது?
சாலை வரியும் கட்டி விட்டு, வருமான வரி மற்றும் இன்னபிற வரிகளையும் கட்டி விட்டு, நாம் ஏன் நம் வரிப் பணத்தில் அரசாங்கம் போட்ட சாலையில், நாம் செல்ல கட்டணம் கட்ட வேண்டும்?
எனக்கு புரியவில்லை...
இதை எப்படி அரசாங்கம் நியாயப்படுத்துகிறது?
இதை எதிர்க்கும் இயக்கம் ஏதாவது இருக்கிறதா?
வழக்குகள் ஏதும் நிலுவையில் உள்ளதா?
யாராவது தெரிந்தவர்கள் விளக்குவார்களா?
(நாம் போகின்ற வழியில் வாங்குகின்ற அநியாய கட்டணமான இவற்றை வழிப்பறி என்று சொல்லலாமா?)
பிற்சேர்க்கை-சென்ற வாரத்தில் மதுரவாயல்-தாம்பரம் புறவழிச்சாலையில் சுங்க கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளனர்..
வியாழன், ஜூன் 18, 2009
சினிமா என்னும் குடிசைத் தொழில்
இப்போதெல்லாம் அப்படி இல்லை... வெள்ளிக்கிழமை தினத்தந்தி பார்த்தால், இந்த படம், அந்த படம் என்று ஏராளமான படங்களுக்கு பூஜை போடப்படுவதாக விளம்பரங்கள் வருகின்றன.
அப்பாவியான கிராமத்து தோற்றத்தில் கொஞ்சமும் சினிமாத்தனம் இல்லாமல், நாயகன் நாயகி படங்களுடன் ஏதாவது ஒரு பெரிய மனிதரின் நல்லாசியோடு படப்பிடிப்பை தொடங்குவதாக ஏராளமான விளம்பரங்கள்...
கதாநாயகன் கதாநாயகியை பார்த்தால் நம்பவே முடியவில்லை... இவர்கள் எல்லாம் நடித்தால் யார் பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது... ஆனால் பசங்க, சுப்ரமணியபுரம், தூத்துக்குடி என்று சில படங்கள் வெற்றியடைய தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் எல்லா படங்களும் இந்த படங்களை போல் நேர்த்தியாக இருப்பதாக தெரியவில்லை...
இவர்கள் இப்படி படம் எடுக்கக் காரணமாய் அமைவது எது?
டிஜிட்டல் தொழில்நுட்ப வரவால் பிலிம் இல்லாமல் குறைந்த செலவில் படம் எடுக்க முடிவது...
பணப்புழக்கம் அதிகரிப்பு,
படமெடுப்பதற்கு உண்டான பணத்தேவைக்கும், கையிருப்புக்கும் உள்ள இடைவெளி குறைவு...
தொழில்நுட்பத்தின் வீச்சு...
மற்றும் தொழிநுட்பம் தெரிந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு... போன்றவற்றை சொல்லலாம்...
பெரிய ஸ்டார் வேல்யூ இல்லாதவர்களின் படங்களை பார்க்கும் போது எனக்கு இப்படி தான் தோன்றும்
1. நிறைய பணம் உள்ள நபர் விளம்பரம், புகழுக்கு ஆசைப்பட்டு படம் எடுக்கிறார்.
2. கலைத்தாய்க்கு தன்னால் தான் சிறப்பு செய்ய முடியும் என்று கண்மூடித்தனமாக நம்பும் இயக்குநரிடம் ஏமாந்த தயாரிப்பாளர்.
3. எப்படியும் போட்ட காசை எடுத்து விடலாம் என்று எண்ணி வேறு வியாபாரத்தில் இருந்து சினிமாவுக்கு வருபவர்கள்.
4. வேறு வியாபாரத்தில் வரும் எக்கசக்க லாபத்தில் கறுப்பு பணமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வெள்ளையாய் மாற்ற, அல்லது கறுப்பு பணமாய் மாற்ற சினிமா எடுக்கும் பணக்காரர்கள்.
5. மகனையோ, மகளையோ வைத்து படம் எடுத்து அவர்கள் பிரபலமானால் வெளி படங்களில் நடிக்க வைத்து நிறைய துட்டு பார்க்கலாம் என்றெண்ணும் இரண்டாம் நிலை சினிமாக்காரர்கள்.
சார் கண்டிப்பா கலெக்ஷன் அள்ளிரலாம் சார் என்று இயக்குநர்களின் வார்த்தைகளுக்கு மயங்கி கையைச் சுட்டு கொள்பவர்கள் பலர்.
அப்படி எடுக்கும் படங்களின் பாடல்கள் சிறப்பாக வராததையோ, அடிப்படைகளான ஒளிப்பதிவு, திரைக்கதை, காட்சி அமைப்புகள் சரியாக அமையாததையோ கண்டுபிடிக்க தெரியாத அப்பவிகளாய் இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இருப்பது தான் வேதனை.
அதே சமயம் திறமையான இயக்குநர் அமைந்து சிறப்பாக படம் எடுத்தால் நிச்சயம் ரசிகர்கள் படத்தை வெற்றியடைய வைத்து விடுவார்கள் என்பதும் உண்மை.. கதாநாயகனோ, நாயகியோ தோற்றப் பொலிவோடு இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை என்பதை 70-களில் இருந்து மக்கள் பலமுறை புரிய வைத்து இருக்கிறார்கள்..
ஆனால் பெரும்பான்மையான படங்களில் ஒரு தொழில் நேர்த்தி இருப்பதில்லை... கதை, நல்ல பாடல்கள், நல்ல நடிப்பு, கோர்வையான காட்சி அமைப்புகள் என்று எதுவுமே இருப்பதில்லை...
ஏனோ தானோ என்று, சில சண்டைகள், ஐட்டம் பாட்டுகள் என்று எதைக் கொடுத்தாலும் படம் ஓடி விடும் என்பது போல அமைச்சூர்த்தனமான சிந்தனைகள் தான் காரணம்.
சமீபத்தில் வெளிவந்த மிக பிரபலமான சண்டை இயக்குனர் ஒருவரின் படமும் இதற்கு விதிவிலக்கல்ல..
சி சென்ட்டர்ல கலெக்ஷன் பாத்துரலாம், பி சென்ட்டர்ல கலெக்ஷன் பாத்துரலாம், என்றெல்லாம் கனவுக் காணும் பல படங்கள்.. உலக தொலைக் காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்பது போன்ற குறைந்தபட்ச அலட்டல்கள் கூட இல்லாமல் நேரடியாக இரவு பதினோரு மணிக்கு கே.TV போன்றவற்றில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கனவுத் தொழிற்சாலையாய் இருந்த சினிமாவை குடிசைத் தொழிலாக்கியவர் என்று ஒரு இயக்குநரை பற்றி குறிப்பிடுவார்கள்... அப்படி சொல்வது சரியாகாது என்பது என் தாழ்மையான கருத்து…
சினிமா என்பது ஒரு ஊடகம்... இது ஜனநாயக நாடு... யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம்... ஆனால் செய்வதை திருந்த செய்தால் மக்களுக்கும் நல்ல படங்களை பார்த்த திருப்தி இருக்கும், தயாரிப்பாளரும் இன்னொரு படத்தை எடுத்து சினிமா தொழில் வளர ஊக்குவித்தது போலவும் இருக்கும்...
அவ்வளவு தான் என் ஆதங்கம்.
செவ்வாய், ஜூன் 16, 2009
கேள்விகள்
ஒரு அநியாய சம்பவம் நடக்கும் போது கேள்வி கேட்க வேண்டும் போல இருக்கும். ஆனால் எல்லோரிலும் நான் ஏன் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என தயக்கம் அனைவருக்கும் இருக்கிறது.
ஒரு அரசு ஊழியர் கடமையை செய்ய மறுக்கிறார் என் வைத்துக் கொள்வோம். நம்மில் எத்தனை பேர் தட்டி கேட்க விழைகிறோம்? நமக்குள்ளேயே சத்தம் போட்டு போட்டு நமக்கு ஒரு சமுதாய செவிட்டு தன்மையே வந்து விடுகிறது...
ஒரு தலைவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறான் என்று சொன்னால், மற்றவர்கள் சேர்ப்பதில்லையா, அவரை பாருங்கள், இவரை பாருங்கள் என்று சொல்லும் தொண்டர்கள் தான் எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள்.
நம் தலைவர் இவ்வளவு சொத்து எப்படி சேர்த்தார் என்று தனக்கு தானே கூட கேட்டு கொள்ள அவர்கள் தயாராயில்லை.. ஏன்?
என்ன தயக்கம்? தலைவர்கள் தவறான வழியில் சொத்து சேர்க்கிறார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரியும் போதும், ஏன் நாம் அதை எதிர்த்து ஒன்றுமே செய்வதில்லை...
இந்த சமுதாயம், இந்த சமுதாயம் என்று நாம் முன்னிலையில் வைத்து பேசும் சமுதாயமே நாம் தான் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
சமுதாயத்தில் தவறுகள் நடக்கிறது என்று சொல்வோமானால் நாம் தான் தவறு செய்துக் கொண்டிருப்பதாக அர்த்தம்.
நாம் செய்யும் சிறு போக்குவரத்து விதிமுறை மீறல், வரி ஏய்ப்பு, சிறு குற்றங்கள் நாம் அறிந்து செய்யாவிட்டாலும், நம் அறிவுக்கு அவை தவறு என்று நன்றாகவே தெரியும்.
வோட்டுக்கு பணம் வாங்கும் வாக்காளர்கள் கண்டிப்பாக தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை தட்டி கேட்க விழைய மாட்டார்கள்.
சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்யும் பெரும் மக்கள் கூட்டம் அதானாலேயே மேற்கூறிய தவறுகளை தட்டி கேட்காமல் இருக்கின்றனரோ?
மற்றவர்கள் செய்யும் தவறுகளை தட்டி கேட்க போனால் நான் செய்த, செய்யும் இந்த விதிமுறை மீறலை கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயம் தான் பெரும்பாலானவர்களை தவறு நடக்கும் போது கேள்வி கேட்க விடாமல் தடுக்கிறது என்று எனக்கு படுகிறது...
சிறு குற்றங்களை உறுத்தல் இல்லாமல் செய்து பழகுவதால் தான், பெரிய தவறுகள் நடக்கும் போது அவை நமக்கு உறுத்தலாக தோன்றுவதில்லை.
போக்குவரத்து விதிகளை ஒழுங்காக கடைப்பிடிப்பதில் ஆரம்பித்து, வரிகளை ஒழுங்காக கட்டுவது, சிறு சிறு விதிமுறைகளை (உ-ம் வரிசையில் செல்லுதல்) மதித்து நடப்பது போன்றவற்றை ஒழுங்காக செய்ய ஆரம்பித்தால் நாட்டில் தவறுகள் குறைய தொடங்கும்.
வியாழன், ஏப்ரல் 23, 2009
பந்த் பண்ணலையோ பந்த்
“ஏங்க ஸ்கூல் காலேஜ் எல்லாம் வேலை செய்யும்னு பேப்பர்ல போட்டிருக்கான்? நீங்க லீவ்னு சொல்றீங்க...”
“பஸ், ஆட்டோ எதுவும் ஓடலை.. எப்படி வாத்திமாருங்க பள்ளிக்கூடம், காலேசு வருவாக? அதான் லீவ்..”
“என்னது பஸ் ஓடலையா? போலீஸ் பாதுகாப்போட ஓடும்னு ஓடும்னு அரசு அறிவிச்சுகிறதா பேப்பர்ல போட்டிருக்கானே?”
“பஸ்ஸை ஓட்ட மாட்டோம்னு தொழிற்சங்கம்லாம் வேலை நிறுத்தம் பண்ணுது?.. அப்புறம் எப்படி ஓடும்...”
“என்னங்க இது அநியாயமா இருக்கு? அரசு அலுவலகம்லாம் வேலை செய்யுதா இல்லையா?”
“வேலை செய்யுது.. ஆனா ஆளுங்க யாரும் இருக்க மாட்டாங்க.. அப்படியே இருந்தாலும், மக்கள் அங்க போறதுக்கு பஸ், ஆட்டோ கிடையாதுல்ல... இப்ப என்ன செய்வீங்க...”
“எப்படிங்க ஒரு முதல்வர் பந்த் அறிவிக்கலாம்? அவர் அறிவிச்சதுக்கு அப்புறம் அரசு தெரிவித்ததுன்னு அது ஓடும், இது ஓடும், அலுவலகம் தொறந்திருக்கும், காலேஜு தொறந்திருக்கும்னு எப்படி சொல்றாங்க? “
"கட்சித் தலைவரா இருந்து பந்த் அறிச்சிருக்கார்.. அரசோட தலைமைப் பொறுப்பில முதல்வரா பந்த் நடக்கிறப்ப
மக்கள் பாதிக்கப்படாம இருக்க போலீஸ் பாதுகாப்போட பஸ்ஸை இயக்கறார்... அரசு அலுவலகம் வேலை செய்ய ஆவண செய்யறார்"
"என்னய்யா குழப்பறீங்க? அதான் பஸ் ஓடலையே?"
"அதுக்கு முதல்வர் பொறுப்பில்லைங்க... போக்குவரத்து தொழிலாளிங்க பஸ் ஓட்டலைன்னா அவரு என்னங்க செய்வாரு...?"
"அப்ப எதுக்குய்யா போலீஸ் பாதுகாப்பு?"
"யாரும் கலாட்டா பண்ண கூடாதுல்ல அதுக்கு தான்"
"என்னய்யா ஒரு கடை கண்ணி இல்ல.. ஓட்டல் இல்ல... எப்படிய்யா கூலித் தொழிலாளிங்க எல்லாம் பொழைப்பாங்க"
"இதுக்கே இப்படி சொல்றீங்களே? அங்க இலங்கையில தமிழர்கள் எப்படி பாதிக்க படறாங்க தெரியுமா?"
"யோவ்... நீங்க தானேய்யா மத்திய அரசுல இருக்கீங்க.. மந்திரி சபையில் பேசி ஒரு முடிவெடுக்க வேண்டியது தானே..."
"யோவ் அங்கே பிரதமரே முடிவெடுக்க முடியலை அந்தம்மா தன் முடிவெடுக்கிறாங்க... நாங்க என்னத்தை முடிவெடுக்கிறது..."
"அப்ப மந்திரி சபையை விட்டு வெளியே வர வேண்டியது தானே..."
"வெளிய வர்றதுக்குள்ள தான் தேர்தல் வந்திருச்சே? எங்க தப்பு இல்லைங்க"
"அவங்க தான் உங்க பேச்சை கேக்க மாட்டேங்கிறாங்களே? மறுபடி எதுக்கு அவங்களோட கூட்டணி?"
"இந்த முறை கேக்கிறதா சொல்லியிருக்காங்க..."
"கேக்கலைன்னா... மந்திரி சபையை விட்டு வெளியே வந்திடுவீங்களா"
"மந்திரி சபையை விட்டுட்டு வர்றதா? வந்தா இலங்கை பிரச்சினை தீர்ந்திடுமா? யார்றா இவன் விவரம் கெட்டவனா இருக்கான்?"
"பின்ன?"
"மறுபடி தந்தி, மனித சங்கிலி, பேரணி, பந்த் எல்லாம் உண்டு... ஆல் தமிழகம் என்ஜாய்"
திருவாளர் பொது ஜனம் மயங்கி சரிகிறார்...
நம் நாட்டில் என்ன பணி முதன்மையாக செய்யப் பட வேண்டும்?
வேலை வாய்ப்பு பெருக்குதலா?
நதிகள் தேசிய மயமாக்கமா?
எல்லாவற்றிலும் முதன்மையாக செய்யப்பட வேண்டிய பணி
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படுவதாக தான் இருக்க வேண்டும்...
ரேஷனுக்கு ஒரு அட்டை, வாக்களிக்க ஒரு அட்டை, ஓட்டுநர் உரிமத்துக்கு ஒரு அட்டை, வருமான வரித்துறைக்கு ஒரு அட்டை என பல அட்டைகளை சுமந்து பெருங்குழப்பத்துக்கு நடுவே நாம் வாழ்ந்து வருகின்றோம்...
ரேஷனில் ஆரம்பித்து, ஓட்டு போட, வங்கி கடன் வாங்க, கார் வாங்க, வெளிநாட்டுக்கு போக இப்படி எல்லாவற்றுக்கும் ஒரே அடையாள அட்டை இருந்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்...
ஒருங்கிணைந்த அடையாள அட்டையில் என்ன விவரங்கள் இருக்க வேண்டும்?
ஒருங்கிணைந்த அடையாள எண், பெயர், பிறந்த தேதி, முகவரி, மருத்துவ விவரங்கள்.
இந்த அடையாள எண்ணில் அரசு தகவல் தளத்தில் அட்டைதாரரின் சொத்து விவரங்கள், உறவினர் விவரங்கள், வருமான வரி குறித்தான விவரங்கள் போன்றவை பதிக்கப்பட்டிருக்கும்...
பெயர், புகைப்படம் மட்டும் அல்ல கருவிழி ரேகை, கைரேகை இரண்டும் அதில் பதிக்கப் பட வேண்டும்.
ஒரு தனி மனிதை பற்றிய அனைத்து விபரங்களும் சேமிக்கப் பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் மான இது இணையம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதி மன்றங்கள் எல்லவிடத்திலும் தொடர்பு கொள்ள முடிந்து தகவல்கள் எடுக்க முடியும்.
இது எப்படி நாட்டு முன்னேற்றத்துக்கு உதவும்?
- உங்கள் ஓட்டை யாரும் மாற்றிப் போட முடியாது... யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின்
வாக்குகளை பதியலாம். - கள்ள ஓட்டு தவிர்க்கப் பட்டாலே தவறான வேட்பாளர் தேர்ந்தெடுக்க படுவதை தவிர்த்திடலாம்... தவறான வேட்பாளர் தேர்ந்தெடுக்கப் படுவது தவிர்க்க பட்டாலே பாதி பிரச்சினை குறைந்து விடும்.
- ஆள் மாறாட்டம், போலி பெயரில் கடன் எல்லாம் ஒழிக்கப்பட்டு ஜாமீன் யாரும் கொடுக்காமலேயே வங்கியில் பணம் எடுக்க முடியும்.
- அரசாங்கம் சம்மந்தமான வேலைகளில் தான் இன்னார் தான் என்று நிருபிக்க பட வேண்டிய தேவைகள் குறைந்து போகும். வேலைகள் விரைவாக நடக்கும்.
- வழக்குகள் நடை பெறும் வேகம் அதிகரிக்கும். சாட்சி, பிரதி வாதிகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு வழக்குகள் விரைவாக முடிவுக்கு வரும்.
- மேற்குறிப்பிட்ட விஷயங்களோடு டி.என்.ஏ சாம்பிளையும் சேமித்து குறித்து வைத்தால் வாரிசு பிரச்சினைகள் விரைவாக தீரும்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட பேன் கார்டுகள், லைசென்சுகள், அடையாள அட்டைகள் எல்லாம் வைத்துக் கொள்ள முடியாது... ஒருங்கிணைந்த அடையாள அட்டை தான் பான் கார்டு, லைசென்சு எல்லாமுமாக இருக்கும்.அதை வைத்து தான் பஸ் டிக்கெட்டு முதற்கொண்டு, விமான டிக்கெட்டு வரை வாங்க வேண்டியிருக்கும்...
- தனி மனித தவறுகள் ஒருங்கிணந்த அடையாள் அட்டையில் பதியப் படும். தேர்தலில் நிற்க வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை எளிதாக பெற்று வேட்பு மனுவை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ள முடியும்.
- சந்தேகத்திடமான நபர் என்று யாருமே இருக்கவும் முடியாது... கைது செய்யப்படவும் முடியாது...(அடையாள அட்டை இல்லாமல் சுற்றும் ஒருவர் போலீசில் சிக்கினாலோ, இல்லை யாருடைய அடையாள அட்டை தொலைந்து போனாலோ கருவிழி அல்லது கை ரேகையை வைத்து அவர் விவரங்களை பெற்று அவரை அடையாளம் காண முடியும்.)
- ஒருவரை பற்றிய மருத்துவ அறிக்கையும் அந்த அடையாள அட்டையில் சேர்க்கப் பட்டால் விபத்து நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு அது பயனுள்ளதாய் இருக்கும்.
- நாட்டின் மக்கள் தொகை விவரம் துல்லியமாக தெரிந்து கொண்டேயிருக்கும். அரசாங்கம் திட்டங்களை இன்னும் தெளிவாக தீட்ட முடியும். மாநிலம், நகரம், பேரூர், சிற்றூர், கிராமம், தெரு வரை தெளிவான மக்கள் தொகை இருப்பை தெரிந்து கொள்ள முடியும். (இப்போதைய சென்ஸஸ் முறை ஒரு மனிதர் ஒரு இடத்தில் இருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. அவரை ஒரே இடத்தில் மட்டும் தான் கணக்கெடுத்தோமா என்பதை உறுதி செய்வதில்லை...)
- ஒரு தனி மனிதனுக்கு எவ்வளவு சொத்து எங்கெங்கு இருக்கிறது என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம்.யாரும் தலை மறைவு வாழ்க்கையெல்லாம் நடத்த முடியாது. தகவல் தெரிவிக்காமல் சுவிட்சர்லாந்து எல்லாம் போய் வர முடியாது...
இன்னும் எவ்வளவோ...
நடைமுறை சிக்கல்கள்...
- அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் எதிர்ப்பார்கள்.
- தகவல் தளத்தை உடைத்து தகவல் திருட முயற்சிப்பார்கள்.
- தகவல் உள்ளீடு செய்வதில் தவறுகள் நடக்கலாம்.
- தகவல் தளத்தை பாதுகாப்பதில் அரசாங்கத்துக்கு சிக்கல்கள் இருக்கும்.
- இத்தகவல்களை முழுதாக திரட்டி ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்குவதற்கு வருடக்கணக்கில் ஆகலாம். பெருமுயற்சியும் திட்டமிடலும் தேவை.
- அடையாள அட்டை என்றால் ப்ளாஸ்டிக், பேப்பர் அட்டை அல்ல... ஆக்சஸ் கார்டு போன்ற விஷயம்...
ஐந்தாண்டுக்கு(?) ஒருமுறை 100 கோடி மக்களுக்கு தேர்தல் நடத்திக் காட்டும், 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நிகழ்த்தும் அரசாங்கத்துக்கு இது பெரிய பணி அல்ல.
14 லட்சம் பணியாளர்கள் உள்ள இந்தியன் ரயில்வேயில் ஆண்டுக்கு 1000 கோடி பயண விவரங்களையும், 73 கோடி டன் சரக்கு பரிமாற்ற விவரங்களையும் அநாயசமாக கையாளும் இந்திய அரசாங்கத்துக்கு இது சாத்தியமே.
"பாய்ஸ்" படத்தில் செந்தில் சொல்லுவார் "Information is Wealth"(தகவல் தான் சொத்து).
Information Wealth மட்டுமல்ல... அது இந்தியா போன்ற வளரும் வல்லரசு நாடுகளுக்கு அது தான் பவர்(Power).
இது குறித்தான திட்டம் ஏதவது இந்திய அரசாங்கம் வசம் உள்ளதா என்று தெரியவில்லை... திட்டம் இது வரையில் இல்லையென்றால் இது போன்ற திட்டங்கள் காலத்தின் கட்டாயம் என்பதை அரசாங்கம் உணரும் நாள் விரைவில் வர வேண்டும்.
திங்கள், ஏப்ரல் 20, 2009
வேட்(டு)பாளர்கள்
முதல் தடவையா எம்.பி சீட் கிடைச்ச நம்ம தலைவர் அந்த கட்சி தலைவி வேட்பாளர்களை மாத்தறாங்கன்னு ஏன் பயப்படறார்னு தெரியலை?
பின்னே பயபடாம எப்படி இருக்க? அவரையும் மாத்திட்டா என்ன பண்றதுன்னு பயம் இருக்கும்ல?
நீங்க வேற இவரு எதிர்க் கட்சில இல்ல இருக்கார்...
======================================
தேர்தல் அதிகாரி போனில்...
“இதோ பாருங்கம்மா.. உங்க கட்சி வேட்பாளரை மட்டும் தான் நீங்க மாத்த முடியும்... எதிர்க் கட்சி வேட்பாளர்களை மாத்த சட்டத்தில இடம் இல்லை...”
=================================
மாவட்ட துணை தலைவர் தலைவரிடம்
“பயப்படாதீங்க தலைவரே... தேர்தல்ல நின்னு ஜெயிச்சிட்டீங்கல்ல? இனிமே உங்களை வேட்பாளர் லிஸ்ட்ல இருந்து நீக்க முடியாது...”
=================================
ஆனாலும் நம்ம கட்சியில குழப்பம் ரொம்ப அதிகமா ஆயிடுச்சு..
ஏன் அப்படி சொல்றே?
24 தொகுதியில 57 முறை வேட்பாளரை மாத்திட்டாங்க... இதுல என்ன கொடுமைன்னா, ஒரு தொகுதியில ஒரே ஆளை 3 முறை வேட்பாளரா அறிவிச்சு வாபஸ் வாங்கியிருக்காங்களாம்..
========================================
ஏன் தலைவர் சோகமா இருக்காரு...
வேட்பாளர் பட்டியில்ல இருந்து அவரு பேரை நீக்கிட்டதா மேலிடத்துல இருந்து செய்தி வந்திருக்கு..
சரி அடுத்த தடவை பாத்துக்கலாம்...
யோவ் அவரை வேட்பாளரா அறிவிக்கவே இல்ல.. பின்ன எப்படி நீக்கினாங்கன்னு கட்சி வட்டாரம் புல்லா கன்ஃப்யூஸன்ல இருக்கு....
மக்கு மேலாளரின் வரைப்படம்
இப்போது புத்தம் புது அட்டகாசம்...
ஒரு நாள் நண்பர் ஒருவர் மக்கு மேலாளர் அழைப்பதாக தகவல் வரவே மனத்தினுள் எல்லா கடவுள்களையும் வணங்கிவிட்டு
"இப்போ தானே டா அந்த கிராஃப் வேணும், இந்த கிராஃப் வேணும்னு ஒன்றரை மணி நேரம் மொக்கை போட்டுட்டு போனாரு... எல்லாம் பண்ணிக் கொடுத்துட்டேன்.. இன்னும் என்னவாம்..."
என்று முனகிய படியே கிளம்பி போனார்...
அனைவரும் பரப்பரப்பாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தோம்... அவர் எப்போது திரும்பி வந்தார் என்பதை கவனிக்க வில்லை... பார்த்தால் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தார்...
"யோவ்.. எப்பய்யா வந்தே? போன காரியம் என்னாச்சு?" என்று மற்றொரு நண்பர் வாயைக் கிளற,
"ஒரு நாலஞ்சு கிராஃப் போட்டுக் கொடுத்தேன்ல?"
"ஆமா?.. எது எந்த டேட்டவோடதுன்னு தெரியலையாமா?"
"அப்படி சொல்லியிருந்தா தான் பரவாயில்லையே... கிராஃபை மாத்தி எடுத்து பாத்துக்கிட்டிருந்தாரு... சார் கிராஃப் மாறிடுச்சுன்னு சொன்னா... இது அதே கிராஃப் தாம்பா... நடந்து கொண்டு வந்தப்ப கோடெல்லாம் கொஞ்சம் அசங்கிடுச்சுன்னு சொல்றாருப்பா..."
அடுத்த விநாடி அங்கே கிளம்பிய வெடிச்சிரிப்புக்கு அனைவரும் வேலையை விட்டு திரும்பி பார்த்தனர்.
சனி, மார்ச் 21, 2009
மலரும் நினைவுகள் - (தூர்தர்ஷன் பார்த்தவர்களுக்கு மட்டும்)
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் ந்ஞ்சு என்பதற்கு சரியான உதாரணம் TV.
80-களிலும், 90-களிலும் தூர்தர்ஷனை கொண்டு நாம் அடைந்த மகிழ்ச்சியில் கொஞ்சமாவது இப்போது இருக்கிறதா? எந்த சானலை பார்ப்பது என்ற சண்டையிலும், குழப்பத்திலுமே ஓய்வு நேரம் ஓடி விடுகிறது.
பழைய நினைவுகளை கிளறுவதில் இசைக்கும், வாசனைக்கும் பெரும் பங்கு உண்டாம்..
வாசனையை ஆன்லைனில் கொடுக்கும் டெக்னாலஜி இருக்கிறதா தெரியவில்லை.. ஆனால் இசை?
இதோ உங்கள் நினைவுகளை கிளறும் ஒரு இசை வீடியோ...
வெள்ளி, மார்ச் 20, 2009
கூட்டணி வைக்கலையோ கூட்டணி
தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களும், யூகங்களும் களைக் கட்டிக் கொண்டிருக்கின்றன.
கூட்டணி என்ற பெயரில், ஐந்து வருடமாய் அடித்துக் கொண்டும், மூன்றாந்தர பேச்சாளர்களை போல அசிங்கமாக பேசிக்கொண்டும் இருந்த கட்சித் தலைவர்கள், வெட்கமில்லாமல் கைக் குலுக்க போகிறார்கள்...
பச்சோந்தித் தனங்கள் பகிரங்கமாய் பட்டியலிடப்படும் நேரம்.
என்னவெல்லாம் நடக்கலாம்..?
==========================================
ஏம்ப்பா இந்த கூட்டணி கூட்டணிங்கறாங்களே அப்படின்னா என்னப்பா?
ஆ... தேர்தலுக்கு மட்டும் ஒண்ணா இருந்துட்டு அப்புறமா அடிச்சிக்கறதுக்கு பேரு தான் கூட்டணி...
==================================
என்னய்யா இது அநியாயமா இருக்கு... சிரஞ்சீவி கட்சி ஆந்திராவில இருக்கு.. அது கூட போய் கூட்டணினு சொல்றாரு தலைவரு?..
யோவ்.. எப்படியும் முக்கால் வாசி கட்சிங்களுக்கு மனசுல தானே இடம் கொடுக்க போறாரு... அப்புறம் கூட்டணி கட்சி ஆந்திராவுல இருந்தா என்ன.. அஸ்ஸாமுல இருந்தா என்ன?
===================================
யாருய்யா அது பிச்சைக்காரன்... வாசல்ல நின்னு கத்திக்கிட்டே இருக்கிறான்... கூட்டணி விவாதம் நடக்குதுல்ல? போயிட்டு நாளைக்கு வரச்சொல்லு...
தலைவரே.. மெதுவா பேசுங்க... அவரு புதுசா வந்திருக்கிற ஜாதிக் கட்சி தலைவரு... அவருக்கு சீட் தரலைன்னா.. எல்லா தொகுதிலயும் தனிச்சு போட்டியிடுவேன்னு மிரட்ட வந்திருக்காரு...
====================================
தலைவர் ஏன் சோகமா இருக்காரு?
மொத ரெண்டு அணியில இடம் இல்லைன்னு கோச்சுக்கிட்டு மூணாவது அணிக்கு போனாரு.. அங்கேயும் இடம் இல்லைன்னு, நாலாவது, அஞ்சாவதுன்னு போய்.. கடைசியா ஏழாவது அணியில பேச்சு வார்த்தை நடத்த வேண்டியதா போச்சேன்னு சோகமா இருக்காரு...
====================================
தேர்தல் ஆணையர் ஏன் டென்ஷனாய் கத்தறார்?
கூட்டணி கட்சிங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு.. ஒரு தொகுதிக்கு ரெண்டு எம்.பி தேர்ந்தெடுக்க சட்டத்துல வழியிருக்கான்னு தலைவர் போன்ல கேட்டுட்டாராம்...
=========================================
போன தடவை அந்த கட்சியோட கூட்டணி வெச்சீங்க... இந்த தடவை இந்த கட்சியோட கூட்டணின்னு சொல்றீங்க.. உங்க கொள்கை தான் என்ன...
யாரு எங்களை சேர்த்துகறாங்களோ அவங்க கூட தான் சேருவோம்... அதான் எங்க கொள்கை
==========================================
ஏன் தலைவரே... யாரு கூடயும் கூட்டணியே வெக்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க...
நான் எப்படா அப்படி சொன்னேன்... எவனோ பத்திரிகையில வதந்திய கிளப்பிட்டான்.. யாருமே என்னை சேர்த்துக்க மாட்டேங்கறாங்கடா... (அழுகை)
=====================================================
என்னது? மூணாவது அணியில சீட்டு குலுக்கிப் போட்டு பார்த்து தான் பிரதமரை தேர்ந்தெடுக்கணும்னு முடிவு பண்ணியிருக்காங்களா? அதுக்கு உங்க கட்சி தலைவியிம் சரின்னு சொல்லிடாங்களா? எப்படிய்யா?
ஆமா.. அப்படியே எல்லா சீட்டுலயும் அவங்க பேரையே எழுத சொல்லிட்டாங்க...
======================================================
இலங்கை பிரச்சினையில வேணும்னா நாங்க சைலண்டா இருந்திருக்கலாம்.. ஆனா பூடான் பிரச்சினைல அப்படி இருக்க மாட்டோம்...
பூடான்ல என்னங்க பிரச்சினை?
ஆள் அனுப்பியிருக்கோம்ல.. இனிமே தான் பிரச்சினை வரும்..
========================================================
இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவ பேசினா போலீஸ் அரெஸ்ட் பண்ணுதுன்னு.. ரஷிய தமிழர்களுக்கு ஆதரவு குரல் தர்றதா தலைவர் முடிவு பண்ணிட்டார்...
ரஷியாவில தமிழர்கள் எங்கய்யா இருக்காங்க?
இது என்ன பிரமாதம்.. அய்யோ ரஷியாவில தமிழர்கள் இல்லையா.. தமிழர்களை விரட்டிய ரஷ்ய ஏகாபத்தியத்தை எதிர்த்து உண்ணாவிரதம், போராட்டம்னு கலக்கிட மாட்டாரு தலைவரு?
திங்கள், பிப்ரவரி 02, 2009
ஒலியும், புலியும்
வெள்ளி, ஜனவரி 30, 2009
குரல் கொடுங்கள், உயிரைக் கொடுக்காதீர்கள்
அப்படி செய்தால் தமிழர் ஆதரவு குரலில் ஒன்று குறைந்து போகுமே தவிர, பெரிய பயன் ஏதும் இராது... அஞ்சலி செலுத்திய அரசியல்வாதிகள் அனைவருக்கும் இன்று அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சியும் அவர்களின் ஒரு அன்றாட அலுவலாக தான் இருக்க போகிறது..
பத்திரிகை நண்பர்கள் எரிக்க வேண்டியது பொய்களையும், புனைச் செய்திகளையும்.
அவர்களின் தலையாய பணி, எந்த பிரச்சினைக்கும் பத்திரிகைகள் தரக்கூடிய, தர வேண்டிய ஆதரவு - மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகளை யாருடைய நிர்ப்பந்தத்துக்கும் பணியாமல் அப்படியே உண்மையாக வெளியிடுவது தான். தன்னை தானே எரித்துக் கொள்வது அல்ல.
இலங்கையில் என்ன பிரச்சினை என்றே தெரியாமல் அறிக்கை மேல் அறிக்கை விடும் திடீர் அரசியல்வாதிகளும், என்ன பிரச்சினை அதற்கு என்ன தீர்வு என்று நன்றாக தெரிந்தும் அரசியல், சுய லாபம் கருதி வாளாவிருக்கும் சுயநல அரசியல் தலைவர்களும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போகும் போது, நம்மை போன்ற பொது மக்கள் செய்வதற்கு அதிகம் ஏதுமிருக்காது... கடவுளிடம் பிரார்த்தனை செய்வதையும், முடிந்த நிவாரண நிதி அளிப்பதையும் தவிர்த்து.
அவர் குடும்பத்துக்கும், தமிழ் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும், தீக்குளிப்பு போராட்டங்களுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்து கொள்கிறேன்.
அவரின் உணர்ச்சி வயப்பட்ட செயலுக்கு வருந்தும் அதே நேரத்தில் அவரின் தமிழ் உணர்வுக்கு தலை வணங்கியே தீர வேண்டும்.
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
(ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாக தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே இறந்தாலும் உயிர் வாழ்பவன் எனக் கருதப்படுவான். அதற்கு மாறானவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்கு சமம்.)
-திருவள்ளுவர் -(அதி: ஒப்புரவறிதல்- Duty To Society)
செவ்வாய், ஜனவரி 27, 2009
ஆளுமைகள்
என்ன பழக்கம் என்கிறீர்களா? சினிமா பார்க்கும் பழக்கம்... இது விநோதமான பழக்கமா என்கிறீர்களா?
அதில் ஒரு விஷேசம் இருக்கிறது...
நண்பர் ஆர்வமாக புது, பழைய எல்லா மொழி திரைப்படங்களும் பார்க்க கிளம்பி விடுவார்...
திரையரங்கு எவ்வளவு தூரமானாலும் சரி... என்ன வசதி இருந்தாலும் சரி... இல்லையென்றாலும் சரி… ஆர்வமாக சென்று படம் பார்ப்பார்...
ஆனால் முதல் பத்து- இருபது நிமிடம் தான் படம் பார்ப்பார்... அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வந்து விடுவார்... எவ்வளவு சுவாரஸியமான படம் என்றாலும் பத்து- இருபது நிமிடம் தான்...
இண்டர்வெலுக்கு 15 நிமிடம் முன்பு பிட் போடப்படும் படமானாலும் சரி... அண்ணன் 10-20 நிமிடங்கள் தான் படம் பார்ப்பார்…
கூட வரும் நண்பர்கள் வந்தாலும் சரி, வரவில்லையென்றாலும் சரி... இவர் மட்டுமாவது கிளம்பி விடுவார்...
ஏதோ ஒரு தமிழ் படத்தை அதிக பட்சமாக இண்டர்வெல் வரை பார்த்த ஒர் உடைக்கப்படாத ரெக்கார்டு இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அக்கம் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பர்களை சினிமாவுக்கு அழைத்தாலும் "இண்டர்வெல் வரைக்கும் படம் பார்க்கலாம் வர்றியா” என்று அழைப்பது தான் தலைவருக்கு வழக்கம்...
இப்போது திருமணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கிறது... ஆளை பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது... திருந்தி விட்டாரா என்று தெரியவில்லை...
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நானும் என் நண்பனும் தணிக்கை நிறுவனத்தில் பயிற்சிக்காக வேலை பார்த்து கொண்டிருந்த போது, ஒரு மத்திய அரசு நிறுவனத்தில்-ல் வணிக பரிவர்த்தனைகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த நேரம்..
நானும், நண்பனும் காலையில் 10 மணிக்கு உள்ளே போனால் மாலை 4 மணி வரை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுவோம்.. ஹைதர் அலி காலத்து கணினியும், டாட் மாட்ரிக்ஸ் பிரிண்ட் அவுட்களையும் நம்பி காலந்தள்ளும் பல மத்திய அரசு நிறுவனங்களுள் அதுவும் ஒன்று...
மொத்தம் 15 அலுவலர்கள் தான் இருப்பர்கள்... ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டு.. ஒரு அரசு அலுவலகம் என்றால்... ஒருவர் அல்லது இருவர் தான் அலுவலகத்தின் 80 விழுக்காடு பணிகளை செய்வர்... மீதம் உள்ள அனைவரும் சும்மா "டம்மி பீஸ்" தான்...
இங்கேயும் அப்படி தான்... ஒரே ஒரு அனுபவம் மிக்க எழுத்தர் எல்லா பணிகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்வார்... மீதம் உள்ள முக்கால்வாசி பேர் குழுக்களாக பிரிந்து அரசியல் விவாதங்கள், சினிமா செய்திகள், தேநீர் கடைகளின் வியாபரத்தை பெருக்குதல் போன்ற அதிமுக்கிய தேசிய பணிகளில் ஈடுபாட்டுடன் செய்வார்கள்…
போன மூன்றாவது நாளில் தான் நம் பதிவின் நோக்கமான அந்த முக்கியமான அலுவலரை பார்த்தோம்... அவர் ஆள் நான்கரை அடி உயரம் இருப்பார்... ஒல்லியான தேகம்... குழுக்களில் எப்போதாவது தான் பங்கெடுப்பார்.. தான் உண்டு தன் வேலை உண்டு(இல்லை) என்று அமைதியாக அமர்ந்திருப்பார்...
எப்போதும் அந்த எப்போது இடிந்தும் விழுமோ என்றிருக்கும் கட்டிடத்தின் மோட்டு வலையை பார்த்தபடி ஏதாவது பலத்த சிந்தனையில் இருப்பார்...
நானும் நண்பரும் சேர்ந்து எங்கள் பங்குக்கு ஏதாவது பேசிக்கொண்டு செம அரட்டையில் இருப்போம்.(ஆனால் வேலையும் பார்ப்போம்... நாங்கள் வேலை செய்த்து தனியார் தணிக்கை நிறுவனம். மத்திய அரசு நிறுவனம் இல்லை என்பதை கவனத்தில் கொள்க).
ஒரு நாள் அலுவலகத்தில் யாரும் இல்லை... எல்லோரும் பக்கத்து தேநீர் கடைக்காரரின் வியாபாரத்தை தூக்கி நிறுத்த போயிருந்தார்கள். நான், நண்பர் மற்றும் நம் முக்கியமான அலுவலர், அலுவலகத்தை தாங்கி பிடிக்கும் மூத்த அலுவலர் நான்கு பேர் தான் இருந்தோம்... வழக்கம் போல மோட்டு வலையை பார்த்து கொண்டே அமர்ந்திருந்த நம் அலுவலர் சட்டென்று தலையை வலது பக்கம் திருப்பி மேல் நொக்கி பார்த்தார்...
அவர் பார்த்த திசையில் அவர் வலது கையை உயர்த்தினார்...சுட்டு விரல் நடு விரல் மட்டும் நீட்டி... புறங்கையை வாயருகே வைத்து ப்ளையிங்க கிஸ்ஸாக பறக்க விட ஆரம்பித்தார்....
ஒரு முறை இரு முறை அல்ல... ஒரு ஏழெட்டு முறை... திடீரென அவர் பார்த்த எனக்கும், நண்பருக்கும் தூக்கி வாரி போட்டு விட்டது...
கலவரமாக திரும்பி மூத்த அலுவலரை பார்த்தோம்.. அவர் எதையும் கண்டும் காணாமல் வேலையிம் மூழ்கியிருந்தார்...
அவருக்கு வலிப்பு ஏதாவது வந்து விட்டதா, இல்லை அமாவாசை, பௌர்ணமிக்கு இப்படி தான் நடந்து கொள்வாரா என்று புரியாமல்... திகைத்து போய் அமர்ந்திருந்த வேளையில் வெளியில் போன ஆட்கள் வந்து விடவும், எங்களுக்கு கொஞ்சம் திகில் அடங்கியது...
எங்களுக்கு ஒன்றும் புரிய வில்லை.. மாலையில் எங்கள் ஆடிட்டர் வந்தவுடன் அவரிடம் சொன்னோம்... பெரிதாக சிரித்தார்...
"பார்த்துட்டீங்களா? நானே உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்... உங்களுக்காவது பரவாயில்லைப்பா.. நான் முதல்ல இதை பார்த்த அன்னைக்கு நானும் அவரும் தனியா பேசிட்டிருந்தோம்... வியர்த்து விறுவிறுத்து போயிட்டேன்... அப்புறம் எல்லார்ட்டயும் விசாரிச்சேன்... அவரு யாரையும் இதுவரைக்கும் அடிச்சு கிடிச்சு எதுவும் பண்ணதில்லையாம்..." என்று ஜோக்கடித்து விட்டு,
"அவருக்கு அப்படி பண்றது சென்டிமெண்ட்டாம்பா.. நினைச்சது நடக்கணும்னா.. நினைச்சவுடனே இப்படி பண்ணா நினைச்சது நடக்குமாம்..."
என்று முடித்தார்...
அந்த சென்ட்டிமெண்டில் இடி விழ...
அங்கே தணிக்கையில் இருந்த ஆறு மாதமும் எங்களுக்கு அல்லு இல்லை...
புதன், ஜனவரி 21, 2009
திருமங்கலம் தேர்தலும் வடிவேலு காமெடியும்
அப்போது அந்த நடிகர் அங்கே கோபமாக வருகிறார்...
"யார்றா என் பொண்டாட்டியை டெபாஸிட் போன கட்சித்தலைவின்னு கிண்டல் பண்ணது?"
அனைவரும் கோரஸாக "ஏன் நாங்க தான் பண்ணோம்.. இப்ப என்ன பண்ண போறே?"
"ஏய் ஏய் ஏய்… மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், நார்த் ஆர்க்காட், சவுத் ஆர்க்காட்... எஃப் எம் எஸ் வரைக்கும் பாத்தவன் நான்.. பத்திரிகை TV எல்லாம் எனக்கு டெபாஸிட் போன மேட்டரை டச்சு பண்ணி டச்சு பண்ணி டயர்டாய் கிடக்கு..."
டென்ஷனான ஒரு கட்சித் தலைவர் போதையில் நாக்கை துறுத்தி கொண்டு எகிற,
"நிறுத்து... மொத்தமா மோதலாம்னு முடிவு பண்ணிட்டயா?"
"ஆமாண்டி"
"சரி இப்ப ஆரம்பி….ஒண்ணு.. ரெண்டு"
"ஏய் இன்னாடா திரும்ப தேர்தல்ல நின்னு ஜெயிக்க் போற மாதிரியே எண்ணறே?"
"பின்ன ஒரு தடவை, ரெண்டு தடவை கூட்டிட்டு போய் தோக்கடிச்சா பரவாயில்லை... அங்கங்க கூட்டிட்டி போய் தேர்தல்ல நிறுத்தி லட்சக்கணக்குல வித்தியாசம் காட்டி டெபாஸிட்டை காலி பண்ணா?... என் கட்சி, இமேஜ் எவ்வளவு தாங்கும்னு நான் கணக்கு வெச்சிக்க வேணாமா? நான் பாட்டுக்கு எண்ணிக்கிட்டு இருக்கேன் நீங்க பாட்டுக்கு டெபாஸிட்டை காலி பண்ணிட்டிருங்க..."
"டேய்"
"உஸ்ஸ்... இப்ப என்ன நான் மறுபடி உன் கூட தேர்தல்ல நிக்கனுமா?... வாடா வா நிக்கலாம்.. "
"அய்ய உன் கூட யார்றா தேர்தல்ல நிப்பாங்க? தூ..."
"அப்படி துப்பிட்டு கிளம்ப பாரு... ஊர்ல பெரிய பெரிய கட்சி தலைவர்லாம் என்ன மாதிரி ஆளுங்க கிட்ட மோதி தேர்தல்ல நிக்க முடியாம ஊரை காலி பண்ணிட்டு ஓடி போயிட்டான்... நீ எங்கயோ டாஸ்மாக்குல தண்ணியடிச்சுட்டு வந்துட்டு என் கிட்ட மோத பாக்குறயா?
அப்போது அங்கே ஒரு ஜீப் வருகிறது...
ஜீப்பில் இருந்து இறங்கிய அலுவலர்..
" யே காசு சொடுத்து ஓட்டு வாங்கிட்டு எல்லா கட்சி ஆளுங்களும் இங்கே தான் இருக்கீங்களா?
எல்லாம் ஜீப்புல ஏறுங்க... தேர்தல் அதிகாரி கூப்பிடுறாரு..."
அனைவரும் முனகிய படி ஜீப்பில் ஏற, அந்த நடிகரும் ஜீப்பில் தொற்றி கொள்ள முயற்சிக்கிறார்...
"ஏய் கட்சி ஆளுங்களை ஏத்த சொல்ல யாருய்யா நீ கோமாளி இங்கே வந்து ஏர்ற?"
"யோவ் நானும் கட்சித்தலைவர் தான்யா..."
"கட்சித்தலைவரா.. இந்த ஏரியாவுல நான் உன்னை பார்த்ததே இல்லை?"
"அவனுங்களுக்கு சரிக்கு சமமா பிரச்சாரம் எல்லாம் பண்ணினே நீ பார்க்கலையா..?"
"பிரச்சாரம் பண்ணா நீ கட்சி தலைவரா?.. யோவ் சொன்னா கேளு… ஏறாதய்யா"
"அங்கங்க கட்சித்தலைவருங்களை பிடிச்சு உள்ள போடற கலவரமான நேரத்துல வாண்ட்டடா வந்து கட்சி நடத்தறேன்னு சொல்றேன்... நம்ப மாட்டேங்கறயே..."
பலவந்தமாக அலுவலரை பிடித்து தள்ளி தானும் ஜீப்பில் தொற்றிக்கொள்கிறார்
"ஏய் எல்லாரும் பாத்துக்குங்க.. நான் தேர்தல் அதிகாரியை பார்க்க போறேன்... நான் தேர்தல் அதிகாரியை பார்க்க போறேன்... நான் தேர்தல் அதிகாரியை பார்க்க போறேன்... நானும் கட்சித்தலைவர் தான்..”
சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் தலையிலடித்து கொள்கிறார்கள்
F9 விசையும், படியெடுத்து ஒட்டலும்
புதிதாக வேலைக்கு சேரும் நண்பர்கள் செய்யும் அழும்புகளுக்கு அளவே இருக்காது...
அவர்கள் தானே கற்றுக் கொள்ளும் முயற்சிகளில் நிகழும் சம்பவங்கள் சுவாரஸியமாக இருக்கும்...
நண்பர்களுடன் அளவளாவி கொண்டிருந்த போது கிடைத்த சில நகைச்சுவை சம்பவங்கள்...
ஒரு நண்பர் புதிதாக சேர்ந்த தன்னுடைய உதவியாளருக்கு வேலை கற்றுக் கொடுத்து கொண்டிருந்தார். புதிதாக சேர்ந்த உதவியாளருக்கு கணினி பற்றி எதுவுமே தெரியாது... அது நண்பருக்கு தெரியாது...
ஒரு குறிப்பிட்ட திரையை வரவழைக்க "F9" விசையை அழுத்த வேண்டும் என்று சொல்லி விட்டு, காபி எடுக்க நகர்ந்தார். காபியை எடுத்துக் கொண்டு அப்படியே ஒரு ஃப்ளோர் வாக் செய்து விட்டு வந்தார்.
நம் புதிய உதவியாளர் ஏதோ சீரியஸாக முயற்சித்துக் கொண்டிருந்தார்.
என்ன தான் செய்கிறார் என்று பார்க்கும் ஆர்வத்தில் அருகே போனால், இரண்டு கைகளையும் உபயோகித்து ஏதோ விசைகளை அழுத்தி தலையை இடமும் வலமுமாக ஆட்டி கொண்டிருக்க, நண்பருக்கு கலவரமாகி விட்டது.
"என்னப்பா பண்றே?"
"சார்... எஃப் நைன் பிரஸ் பண்ணா அந்த விண்டோ ஓபன் ஆகும்னு சொன்னீங்க இல்ல?"
"ஆமா"
"இப்ப எஃபையும், நைனையும் ஒண்ணா பிரஸ் பண்ணா ஓபன் ஆக மாட்டேங்குது சார்..."
நண்பர் வெலவெலத்து போய் விட்டார்.
(இப்ப மல்லிகை பூவும் அல்வாவும் வாங்கி கொடுத்தா வரமாட்டேங்கிறாங்க சார்... நீங்களே பார்த்து ஒரு பைசல் பண்ணுங்க... நடிகர் செந்திலின் புகழ்பேற்ற வசனம்)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
என்னுடைய மற்றொரு நண்பரது அலுவலகத்தில் ஒரு பெண் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தார்.
அது ஒரு கோப்புகள் சரி பார்க்கும் நிறுவனம்.. இரண்டு திரைகள் அருகருகே வைக்கப்பட்டு இரண்டு கணினிகளின் துணையோடு வேலை நடக்கும்.
அந்த பெண் இதற்கு முன் கணினியில் வேலை பார்த்த அனுபவம் மிக குறைவு.
வேலைக்கு சேர்ந்த மூன்றாவது நாள், நண்பர் புது பெண்ணின் டெஸ்க் வழியாக செல்லும் போது அந்த பெண் இரண்டு விசை பலகையிலும் மாற்றி மாற்றி ஏதோ செய்து கொண்டிருப்பது கண்டு...
"என்னம்மா?" என்று கேட்டிருக்கிறார்..
"என்ன பிராப்ளம்னே தெரியலை சார்.. காப்பி பேஸ்ட் ஆக மாட்டேங்குது" என்றிருக்கிறார்...
"அப்படியா எங்க நான் செக் பண்ணட்டும், இப்ப ட்ரை பண்ணுங்க?" என்றப்டி ஆர்வமுடன் கிட்டே சென்றவர்,
அந்த பெண் ஒரு கணினியில் காப்பி செய்து மற்றொரு கணினியில் பேஸ்ட் செய்ய முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்து அடைந்த பீதி சொல்லி மாளாது...
ஞாயிறு, ஜனவரி 04, 2009
அப்பாக்கள் படும் பாடு
பிள்ளைகள் நன்றாக வரவேண்டும் என்று எண்ணும் இவர்களின் நல்ல உள்ளத்தை பாரட்ட வேண்டிய அதே வேளையில் சில குறிப்பிட்ட பள்ளிகளில் படித்தால் தான் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று கண்மூடித்தனமாக நம்பும் அறியாமையையும், சிலர் வெறும் சமூக அந்தஸ்துக்காக அப்பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க நினைக்கும் அவலத்தையும் கண்டிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்..
யார் என்ன சொன்னாலும் எல்.கே.ஜி சீட் வாங்குவதற்கு நம் பொது ஜனங்கள் படும் பாடு இருக்கிறதே...
நீண்ட கியூவில் இரண்டு நாள் நிற்பதில் ஆரம்பித்து, அப்பா அம்மாவுக்கு வைக்க படும் இண்டர்வியூ, பள்ளிகளின் வினோதமான நிபந்தனைகள் வரை செய்தி தாள்கள் படம் போட்டு கிண்டல் செய்யுமளவுக்கு செம கேலிக்கூத்து.... (இதை மையமாக வைத்து ஒரு தமிழ் படமே வந்திருக்கிறது)
எல் கே ஜி சீட் வாங்க அப்போகாலிப்டோ ஹீரோ போல அப்பாக்கள் ஒடும் இதற்கு "அப்பா"-"காலி"-இப்போ என்று பேர் வைக்கலாமா?
அதையே கொஞ்சம் மிகைப்படுத்தி பார்த்த போது உதித்தவை கீழ்க்காணும் துணுக்குகள்…………..
* * * * * * * * * * * * * * * * * * *
ஏன்யா இப்படி வாயிலேருந்து ரத்தம் வர்ற அளவுக்கு பல் தேய்க்கறீங்க...
க்யூல நிக்கிற அப்பா அம்மாக்கள்ல யாருக்கு சுத்தமான பழக்க வழக்கம் இருக்கோ அவங்க பசங்களுக்கு தான் ஸீட்னு எவனோ புரளியை கிளப்பிட்டானாம்...
* * * * * * * * * * * * * * * * *
ஏம்மா வென்னீர் ரெடியா? 4 மணிக்கெல்லாம் குளிச்சுட்டு நம்ம நுங்கம்பாக்கத்துல இருந்து கிளம்பினா தான் அண்ணா நகர் போய் சேர்ந்து கியூல நிற்க சரியா இருக்கும்...
தேவையில்லைங்க... கியூ நம்ம தெரு முனை வரை வந்துடுச்சு... மெதுவா ரெடியாகுங்க… இன்னும் கால் மணி நேரத்துல வீட்டு வாசல்ல இருந்தே நின்னுக்கலாம்...
* * * * * * * * * * * * * * * * * * *
ஏன்டாப்பா உனக்கு நேத்து தானே கல்யாணம் முடிஞ்சது? எல் கே ஜி அப்ளிகேஷன் வாங்கறதுக்கு கியூல நிக்கற?
இப்பவே டிரெயினிங் எடுத்துக்கிறேன் மாமா.. என் மாமனார் ஏற்பாடு...
* * * * * * * * * * * * * * * * * * *
பள்ளி நிர்வாகி - சார்.. பசங்க கண்டிப்பா ஸ்கூல் பஸ்ல தான் ஸ்கூலுக்கு வரணும்.. அப்ப தான் பசங்களுக்குள்ள ஏற்றத்தாழ்வு இருக்காது... ஆனா உங்க கிட்ட கண்டிப்பா கார் இருக்கணும் அப்ப தான் ஸீட் கொடுப்போம்...
குழந்தையின் அப்பா- ???*&*^*#$#??
* * * * * * * * * * * * * * * * * * * * *
ஏங்க உங்க 3 வயசு பையன் உங்களை இப்படி திட்டறான்?
அவனோட எல்.கே.ஜி இண்டர்வியூல 2-3 கேள்விக்கு தப்பா பதில் சொல்லிட்டேன்... அதான்.. ஹி..ஹி..
* * * * * * * * * * * * * * * * * * * * * *
அந்த வாரபத்திரிகைக்கு திடீர்னு என்ன அவ்ளோ கிராக்கியாயிடுச்சு
இந்த வார இஸ்யூவோட அதிர்ஷ்ட போட்டில ஜெயிகிறவங்களுக்கு பரிசா எல்.கே.ஜி சீட் தர்றாங்களாம்...
* * * * * * * * * * * * * * * * * * * * * *
நகை பணம் எதுவும் வேணாம்னு சொல்லியும் ஏன் அந்த வரனை வேணாம்னு சொல்லிட்டே
பின்னே? நகை பணம் வேணாமாம். ஆனா பொண்ணுக்கு குழந்தை பிறந்தா எல்.கே.ஜி ஸீட் நாங்க வாங்கி கொடுக்கணுமாம்...
* * * * * * * * * * * * * * * * * * * * *
என்னய்யா உன் வீட்டுல திடீர்னு இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்ததுன்னு கேள்வி பட்டேன்?
ஆமாங்க... என் ரெட்டை குழந்தைகளை போன வாரம் எல்.கே.ஜியில சேர்த்த விஷயத்தை எவனோ வேண்டாதவன் ஐ.டி. டிபார்ட்மென்ட்ல போட்டு கொடுத்திருக்கான்....
* * * * * * * * * * * * * * * * * * * * * * *
அந்த ஸ்கூலால உங்க வாழ்க்கையே நாசமா போச்சா? எப்படி?
பின்னே? அந்த ஸ்கூல்ல ஸீட் கிடைக்கணும்னா அப்பா அம்மா ரெண்டு பேரும் போஸ்ட் கிராஜுவேஷன் படிச்சிருக்கனும்னு சொன்னதை கேட்டு என் போண்டாட்டி என்னை டைவேர்ஸ் பண்ணிட்டு படிச்ச வேற ஆளை கல்யாணம் பண்ணிக்கிட்டாய்யா...
* * * * * * * * * * * * * * * * * * * * * * *