உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

சனி, ஜூன் 30, 2007

தாஜ்மகாலுக்கு ஓட்டு போடாதீர்கள்

புதிய உலக அதிசயங்கள் வரிசையில் தாஜ்மகாலும் இடம் பிடிக்க இந்த நம்பருக்கு SMS செய்து தாஜ்மகாலுக்கு ஓட்டளியுங்கள் என உங்களுக்கு உங்கள் நண்பர் SMS அனுப்புகிறாரா? நீங்களும் அதை நம்பி SMS ஓட்டு போட்டீர்களா?...

போடாதீர்கள்.. இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை...

“உலகத்தின் புதிய ஏழு அதிசயங்கள் தீர்மாணிக்கப்படுகிறது.. அதற்கான ஓட்டெடுப்பு” என்று நடத்தப்படும் இந்த ஓட்டெடுப்பின் பின்னனி என்ன என்று பார்த்தோமானால் அதிர்ச்சியாக இருக்கிறது...

சுவிட்சர்லாந்தில் உள்ள NOWC (New Open World Cooperation) என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் Bernard Webber என்பவரால் முடுக்கி விடப்பட்டுள்ள இந்த வாக்கெடுப்பு உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது...

இலவச மற்றும் கட்டண ஓட்டுக்கள் உதவியுடன் நடத்த படும் இந்த வாக்கெடுப்பு செல்பேசி SMS, தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

இதை பற்றி மேலும் தகவல்கள்

1) இது முழுக்க முழுக்க தனியார் நடத்தும் வாக்கெடுப்பு... இதற்கும் எந்த நாட்டின் அரசுகளுக்கும் தொடர்பில்லை...

2) உலக பாரம்பரியங்களை அறிவிக்கும், சேர்க்கும், நீக்கும் அதிகாரம் உடையது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) மட்டுமே... UNESCO இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது...


UNESCO இதன் வாக்கெடுப்பு நடத்தப்படும் முறைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அவநம்பிக்கையும், கவலையும் தெரிவித்துள்ளது...

3) இந்த வாக்கெடுப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நமது மத்திய அரசும் மறுத்துள்ளது...

4) இது முழுக்க முழுக்க லாப நோக்கோடு தனியார் நடத்தும் கருத்து கணிப்பு என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்று உலகெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது... எகிப்து நாட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக, “ஓட்டளிக்காதீர்கள்” என்று பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது...

5) ஒவ்வொருவர் போடும் ஒரு SMS வோட்டுக்கும் மொபைல் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி இந்த தனியார் நிறுவனத்தை சென்றடையும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்... நமது அரசாங்கத்தின் BSNL கூட இதற்கு விதிவிலக்கல்ல

6) இன்னும் T சர்ட்டுகள் மற்றும் மெலும் பல வியாபார பொருட்கள், உலக சுற்றுலா மற்றும் பல வியாபாரங்கள் இதன் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன... அதன் லாபங்களும் சர்வதேச நிறுவனங்களிடையே பங்கிடப்படுகின்றன...

அப்பாவி மக்களின் நாட்டுப்பற்றை கூட காசாக்கும் எண்ணம் கொண்ட இத்தகைய நிறுவனங்களை என்ன செய்வது...


http://www.zeenews.com/print_articles.asp?aid=377013&sid=NEW
http://www.timesnow.tv/Sections/Sports/Whos_poll_is_it/articleshow/2161700.cms

புதன், ஜூன் 27, 2007

ஆவியின் அருளால் கிடைத்த ஜனாதிபதி பதவி

"நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகத்தின் தலைவர் தாதாஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஒரு இனிய அனுபவம் கிடைத்தது. தாதாஜியின் உடலில் பாபா ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார்.. நான் அதிருஷ்டசாலி என்றும், மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்திருப்பதாகவும் கூறினார்..."

மேற்கண்டவாறு கூறியது வேறு யாரும் அல்ல....

குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருமதி பிரதீபா பட்டீல்.

-நன்றி:தினத்தந்தி செய்தி

இப்படியே போனால் இந்தியாவை வருங்காலத்தில் காப்பாற்ற போவது யார் என்று அந்த ஆவி சொல்லுமா?

ஞாயிறு, ஜூன் 24, 2007

குழந்தையா குட்டிச்சாத்தானா

நம்மூரு புள்ளைங்க பள்ளிக்கு போக பிடிக்கலைன்னா பொறண்டு பொறண்டு அழும்யா... நமக்கே தெரியும்... ஏன்னா நம்மள்ல பாதி பேரு அப்படி இருந்தவிங்க தான்...

அமேரிக்காவில இருக்கிற இந்த புள்ளைய பாருங்கய்யா.. இது புள்ளையா பூச்சாண்டியா?..

பள்ளிக்கூடத்தையே தரைமட்டமாக்க என்னா பிளான் பண்ணுதய்யா... பள்ளிக்கூடத்தை இடிச்சா மட்டும் பத்தாதாம்... உள்ளாற டீச்சருங்களை வேற வெச்சு நசுக்கனுமாம்..

அது ஏதோ வீட்டு பாடம் நிறைய கொடுத்துடாங்களாம்... அதுக்காக அம்புட்டு பேரையும் உள்ள வெச்சு குண்டு போட்டு காலி பண்ணிடுங்கன்னு.. ஒரு பில்டிங் இடிக்கிற கம்பேனிக்கு போனை போட்டு பேசுதுங்க சாமி.. குழந்தையா குட்டிச்சாத்தானா?...

ஆனா அது பேசுற அழகு இருக்கே அதுக்காக ஆயிரம் பள்ளி கூடத்தை இடிக்கலாம் போங்க....

கேட்டு பாருங்க...




Get this widget | Share | Track details

சனி, ஜூன் 23, 2007

அப்துல் கலாமும் ஐநூற்று சொச்ச திருடர்களும்

அப்துல் கலாம் அய்யாவை ஜனாதிபதியாக்கி அரசியலுக்கு இழுத்ததே தப்பு.
இதுல ஆளாளுக்கு அவரை வெச்சு அரசியல் பண்ண வேற ஆரம்பிச்சிட்டாங்க....

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதுய்யா... அரசியல்னு வந்துட்டா தமிழ் இனமாவது, சிறுபான்மை கொள்கையாவது.. மண்ணாங்கட்டி.... எல்லாம் காற்றுல பறந்துடும்...

இந்திய நாட்டின் 100 கோடி மக்களில் முதல் குடிமகன்...
இந்திய முப்படைகளின் தளபதி...
இந்திய குடியரசின் தலைவர்...

எப்படிபட்ட பதவி... அதை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் கேவலபடுத்தறாங்க...

அப்துல் கலாம் சரி யார் அந்த ஐநூற்று சொச்ச திருடர்கள்... அதை நான் வேற சொல்லணுமா?

எட்டு போட இது ஆர்.டி.ஓ ஆஃபீஸாயா?

சதுர்வேதி அய்யா தெரியாம என்னை எட்டு போட கூப்பிட்டுட்டார்...
அவருக்கு நன்றி.

வாழ்க்கை பாதையில நாம எல்லோரும் எதையோ நோக்கி எட்டு போட்டுகிட்டு தான் இருக்கோம். ஆனா அது என்னன்னு தான் தெரியலை.. எதுவா வேணா இருக்கட்டும்.. இருக்கிற வரை யாருக்கும் தொந்திரவு கொடுக்காம நம்ம வேலையை பாத்துக்கிட்டு இருந்தாலே அதுவே பெரிய சாதனை.

எனக்கு எதுவுமே முழுசா தெரியாதுங்க... எதையுமே அதோட ஆழம் வரை போய் கத்துக்கிற போறுமை எனக்கு இருந்ததில்லை.. ஆனா அரைகுறையா நான் கத்துக்கிட்ட, கத்துக்கிட்டு வர விஷயங்கள் நிறைய...

இப்ப, நான் மறக்க முடியாத சில விஷயங்கள்...

1) பள்ளி படிக்கிற காலத்தில எல்லா பசங்களும் கிரிக்கெட் ஆடிட்டிருக்கிற நாட்கள்ல நான் நூலகமே கதியா கிடப்பேன். இன்னைக்கு அதோட பயன்களை உணர்றேன்..

2) அந்த பக்கம் வேலை இருக்கோ இல்லையோ மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகள்ல எல்லார் முகத்துலேயும் எதையோ தெடிக்கிட்டு நடக்கறது எனக்கு இன்னைக்கும் பிடிக்கும்.

3) கடற்கரையில கடல் அலையில கால் நனைச்சுட்டே நடந்த கல்லூரி நாட்களை மறக்கவே முடியாது.

4) ஒரு காலத்துல எல்லா கவுன்சலேட்களும் போய் ஓசி இனிவிடேஷன் வாங்கி வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள், சினிமாக்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் என மியுசியம் தியேட்டர், மியுசிக் அகாடமி, பிலிம் சேம்பர் என சைக்கிளிலேயே சுற்றி திரிந்தேன்... மறக்க முடியாத அனுபவங்கள்..

5) பொன்னியின் செல்வன்... தூங்காமல் கண்முழிச்சி இந்த காவியத்தை படிச்ச அனுபவம்... சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு...யவன ராணி- எல்லாம் அப்படி தான்... ஒரு மேனியா மாதிரியே ஆயிடுச்சு... வாழ்க்கையில நாம நமக்காக சில கணங்கள் வாழ்ந்திருப்போம்ல... அதுல இதுவும் ஒண்ணு...

6) எந்த பொருளுமே முதல் முதல்ல நமக்கு கிடைக்கும் போது. ஒரு விதமான பரவசநிலையில கொஞ்ச நாள் இருப்போம்... பைக், கம்ப்யூட்டர், கார், செல்போன்... எதுவா வேணா இருக்கட்டும்... அந்த முதல் சில நாள் சந்தோஷம் இருக்கே... அடாடடா.. அதுக்கு ஈடு இணையே கிடையாது போங்க...:-)


7) என் சித்தப்பா... என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பார். நான் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு கண்ணை மூடிட்டு நம்புவார்... வாதாடுவார்... அவருக்காகவே நான் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வேன்... அவரோட திடீர் மறைவு என்னை பாதிச்சுடும்னு தான் நினைச்சேன்..

ஆனா பாதிக்கலை...

அவர் மறைந்து போனதாக என் மனம் இன்னைக்கும் நம்பலை...


8) என் காதலி கிட்ட என் காதலை தைரியமா வெளிப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது... (காதலை சொன்னவங்களை கேட்டு பாருங்க... அதுக்கு நிறைய தில் வேணும்ங்க)

கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேன்னு நினைக்கிறேன்...

சரி நாம ஒரு எட்டு பேரை அழைப்போம்..

1. தீபா
2. யோகன் பாரிஸ்
3. மாயூரேசன்
4. செந்தழல் ரவி
5. தமிழ் சசி
6. நந்தா
7. வவ்வால்
8. நளாயினி

வாங்க வந்து கலந்துக்குங்க...

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர் (கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

வெள்ளி, ஜூன் 22, 2007

அறிவு ஜீவிகளும் ஹைடெக் விஷயங்களும்

அறிவுஜீவிகள்னா பேசும் போது எங்கேயோ பாக்கணும், பேசும் போது ஏதோ யோசிக்கற மாதிரி தெரியணும், நாலு வார்த்தைக்கு ஒரு தடவை நல்லா கேப் விடணும்....

அறிவு ஜீவிகள்னு அறியப்படுற சில பேரு எங்கயாச்சும் TV, மேடையில பேசி கேட்ருக்கீங்களா?

உங்களுக்கு என்னங்க தோணும் கேக்கும் போது?

நம்ம பி.சி. ஸ்ரீராம், எங்க தல கமல், தங்கர் சார் (எனக்கு தெரிஞ்ச அறிவுஜீவிங்க சிலர்) இன்னும் பல பேர் இருக்காங்க... எழுத்துலகில, சினிமாவில, இலக்கியத்துல...

ஏதேதோ பேசுவாங்க... உலகத்துல எங்கெங்க இருந்தோ யார் யார் பேரையெல்லாமோ சொல்வாங்க... அவர படிச்சிருக்கேன்.. இவர படிச்சிருக்கேன்... (பாதி பேரு முழுசா நம்ம வாய்ல நுழைஞ்சா பெரிய விஷயம்ங்க) அந்த படம் இப்படி இருக்கும், இந்த இலக்கியம் இத சொல்லுது... அடாடாடாடா... நாம எல்லாம் இந்த பூமியில் தேவை இல்லாம பிறந்துட்டமோனு ஒரு நிமிஷம் அழ வெச்சுருவாங்க...

ஏன் இப்படி இதை இப்படி எடுத்தீங்க, இல்லை எழுதினீஙன்னு சும்மா சாதரணமா கேட்டா கூட சொல்ற பதில் எல்லாம் சும்மா ஜயன்ட் வீல்ல போட்டு சுத்தி சுத்தி அடிச்சமாதிரி இருக்கும்... ஒண்ணுமே புரியாது..

நாம் பரவாயில்லை... பேட்டி எடுக்கிறவர் நிலைமை இருக்கே... சும்மா அப்படியும் இப்படியும் நெளிவாரு பாருங்க... அதுவும் தமிழ தப்பு தப்பா பேசுற ஹைடெக் அம்மணிங்கள சும்மா சுத்த தமிழ்ல கண்டபடி பேசி கலங்கச்சிடுவாங்க நம்ம அறிவுஜீவிங்க...

இப்படி எல்லாம் பேசுறதால யாருக்குங்க பிரயோசனம்?.. இல்லை கேட்டது தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க... வெகு ஜனங்களுக்கு புரியற மாதிரி இல்லாத எந்த கலையும், ஊடகமும் விளங்கவே விளங்காதுங்கிறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம்...

அதுக்காக வெகு ஜனங்களுக்கு ரசனை கம்மின்னு நான் சொல்ல வரலைங்க... புரியற மாதிரி பேசினா நாமளும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிக்கலாமேன்னு ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேங்க....

செவ்வாய், ஜூன் 19, 2007

மழை- ஒரு அற்புதமான அனுபவம் -சென்னைக்கு மட்டும் பூச்சாண்டி

மழை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் சென்னை மாதிரி ஒரு நகரத்தில் இருந்து கொண்டு மழை பிடிக்கும் என்று சொல்வதற்கு ஒரு தில் வேணும்யா...

காரணமா?

சேற்று குழம்பாகிவிடும் சாலைகள்...

தெப்பக் குளமாகிவிடும் வீதிகள்...

கொசு உற்பத்திச்சாலைகளாகும் சாக்கடைகள் (மலேரியா உள்பட பல பயங்கர ஜூரங்களை உருவாக்கும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தி ஆகுமென்பதை அறிக)...


பயங்கர ஜூரங்கள் (டெங்கு, மலேரியா வந்து குளிர்ல ரெண்டு தடவை பிரேக் டான்ஸ் ஆடினா நான் சொல்ற பயங்கர ஜூரத்துக்கு அர்த்தம் புரியும்),

டூ வீலர் ஸ்கிட்டுகள் (விழுந்து எழுந்து சப்பாணி கமல் மாதிரி போகிற சுகமே சுகம்னு சொல்றீங்களா?.. நமக்கு விருது எல்லாம் கிடையாதுங்க.. பஞ்சரும், டிஞ்சரும் தான்),

பன்னீர் தெளிப்பது போல சேறு தெளிக்கும் பஸ்கள்,

வேரோடு சாய்ந்து ரோடு மறியல் செய்யும் மரங்கள்..

செருப்பை போட்டுக்கொண்டு மேலே சேறடிக்காமல் நடக்க ரொம்ப பயிற்சி வேணுமப்பு... (ரோட்டில் செல்லும் டூ வீலர், ஆட்டோ வேகமாய் சென்று அடிக்கும் சேறு இந்த கணக்கில் வராது)

இடுப்பளவு தண்ணீரில் பள்ளிச்செல்லும் குழந்தையை (புத்தக மூட்டையோடு) தலைக்கு மேல் அனாயசாமாக தூக்கி கொண்டு நடக்க திராணி வேண்டும்....


வீட்டுக்குள் தண்ணீர் புகும் பட்சத்தில் கட்டில் மேல் உட்கார்ந்த படி குடும்பம் நடத்த தெரிய வேண்டும்...

சென்ற வருடம் சென்னை முழுக்க மழை பண்ணாத அட்டகாசம் இல்லை...

மழையை சமாளிக்க மக்கள் குறளி வித்தைகள் காட்ட வேண்டியிருந்தது... பல இடங்களில் எதுவுமே எடுபடாமல் மழை காட்டிய வித்தைகளை மக்கள் பார்க்க வேண்டியதாயிற்று...

இந்த வருட மழையை சமாளிக்க அரசாங்கம் ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மாதிரியும் தெரியவில்லை... (மழைநீர் கால்வாய்கள் அடைப்பு நீக்குதல், ரோடுகளின் குண்டு குழிகளை சரி செய்தல், மழை நீர் தேங்காமல் தடுக்க அமைக்கப்பட்ட வழிகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுதல்.. ம்ஹூம்)

என்ன செய்ய எல்லோரும் தயாராகிக் கொள்ள வேண்டியது தான்.. காரில் போகும் அரசாங்க, அரசியல் சீமான்களுக்கு கால்நடைகளின் கூச்சல் கேட்கப் போகிறதா என்ன? ஹூம் பார்க்கலாம்...

(கால்நடை - நாம தாங்க.. கால்நடையா போறோம்ல)

ஞாயிறு, ஜூன் 17, 2007

சே குவேரா - ஏகாதிபத்தியத்தின் எமன்


“கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)”

சே குவேராவை சுட்டுக் கொல்ல பணிக்கப்பட்டு இருந்த எதிரி வீரனின் கைகள் நடுங்கி கொண்டிருந்தன...

"ஏன்னை கொல்ல போவது நீ தான்.. கோழையே நடுங்காமல் சுடு.. நீ ஒருவனை கொல்ல போகிறாய் அவ்வளவு தான்..."

என்றாராம் மாவீரன் சே குவேரா.....

சே குவேரா - இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை தேசங்களின் தலையெழுத்தை திருப்பி போட்டு இருக்கிறது...

எத்தனை வர்க்கங்களின் போர்முறைகளை மாற்றி போட்டு இருக்கிறது....

யார் இந்த சே குவேரா என்று கெட்பவர்களுக்கு இந்த இரும்பு மனிதனை, வாழ்வு முழுமையையும் போரிலேயே தொலைத்து, உயிரையும் போரிலியே தொலைத்த தோழரை அறிமுகப் படுத்தும் படலமாக இருக்க போகிறது இந்த பதிவு.

சே குவேராவின் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

சே ஒரு தலைசிறந்த சிந்தனையாளர், மார்க்சிய-லெனினிசவாதி...
தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்...
அரசியல்-தத்துவவாதி,
லத்தீன் மற்றும் உலகெங்கிலும் இருந்த கொரில்லா போராளிகளின் தலைவர்....
ஒரு செஸ் வீரர்,
சிறந்த புகைப்பட கலைஞர்,
கவிஞரும் கூட..

Ernesto Guevara de la Serna- இது தான் அவரது இயற்பெயர்... பெற்றோர் இட்ட பெயர்...

1928-ல் அர்ஜன்டைனாவில் 3 சகோததரர்களூம், 2 சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தில் மூத்தவராக பிறந்த குவேரா 3 வயது முதலே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்...

பிறவியிலேயே போராடும் குணம் கொண்ட சே குவேராவை ஆஸ்துமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை... அது தன் கடமையை செய்ய சே எதுவுமே நடக்காதவர் போல் ஒரு சிறந்த தடகள வீரனாகவும், ரக்பி விளையாட்டு வீரனாகவும் உருவானார்.

19வது வயதில் பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்புகாக அடியெடுத்து வைத்த சே. 1951-ல் தன்னுடைய 22வது வயதில்... நண்பரான ஆல்பர்டோ என்பவரது யோசனையின் பேரில் ஒரு வருடம் படிப்பை கைவிட்டு தென் அமெரிக்கா முழுதும் சுற்றி திரிய முடிவு செய்தார்...

இருவரும் தங்கள் பயணதுக்கு தெரிவு செய்த வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள்... வல்லமை பொருந்தியவன் 2 என்று சேவால் பெயரிடப்பட்ட அந்த நார்டான் 500CC வாகனத்தில் எங்கே சென்றார் என்று நினைக்கிறீர்கள்?

தொழு நோயாளிகள் தங்க வைக்கப்படும் இல்லமான LEPER COLONIES எனப்படும் இடத்துக்கு சென்று சில மாதங்கள் தங்கியிருந்து அவர்களுக்கு சேவை புரிய...

சேவை செய்வதற்காக மோட்டார் சைக்கிளிலேயே பல நூறு மைல்கள் தூரம் நாடு விட்டு நாடு கிளம்பிய சே குவேராவின் கண்களில் பட்ட காட்சிகள்...

வறுமை, வறுமை, அடக்குமுறை, பசி, பஞ்சம்.... இவை தாம்

கிட்டத்தட்ட அவர் பயணம் செய்த அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுமே இதே நிலைமையில் தான் இருந்தன...

பெரிய சிந்தனையாளரும், இலக்கியவாதியும், மார்க்சிசிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவருமான சே இந்த சமூக ஏற்ற தாழ்வுகளுக்கும், வறுமைக்கும் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்று நம்பினார்....

அவர் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லவற்றுக்குமான ஒரே தீர்வாக இந்த போராட்டத்தை உருவகம் செய்து கொண்டார்.

-தொடரும்

சனி, ஜூன் 16, 2007

காதல் என்றால் என்ன? அதற்கு என்ன கொம்பா இருக்கிறது?

தினமும் காலையில செய்தித்தாளை பிரிச்சா போதும்...

காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம்...காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை...காதலர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்...

காதல்... காதல்னு ஏதாவது செய்தி இருந்துகிட்டே இருக்கு...

உங்க பார்வையில காதல்னா என்னங்க?

கலாச்சார சீரழிவா?

இல்லை... கலர் கலர் கனவா?

இல்லை... கண்ணீர் தரும் நினைவா?

இல்லை... காதோரம் ரீங்காரமிடும் இசையா?

என்னைப் பொருத்த வரை அதுக்கு முடிவே கிடையாது... முடிவு கிடையாதுன்னா அதை நீங்க ஆரம்பிச்சப்புறம் முடிவு கிடையாதுன்னு அர்த்தம் இல்லை... நீங்க ஆரம்பிக்காட்டியும் அது இருக்கும்... அதுக்கு முடிவே கிடையாதுன்னு அர்த்தம்....

பேசலாமா?

புதன், ஜூன் 13, 2007

ஜாதி, மத பேதம் பேசும் அனைவருக்கும்....



கலை, இலக்கியம் போன்றவைகள், யார் படைத்தார்கள்,யார் எடுத்தார்கள், யார் நடித்தார்கள், அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பார்க்க வேண்டிய விஷயம்.

அவை பெரும்பாலும் அவை பறைசாற்றும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்றாலும், பிற பண்பாட்டை சேர்ந்தவர்களும் அதை ரசிக்கும் படி செய்வது அவற்றின் சிறப்பு. இதற்கு உலக அளவில் வெற்றி பெறும், பரபரப்பாக பேசப்படும் எவ்வளவோ திரைப்படங்களும், கதைகளும், காவியங்களும்,அவற்றின் வழியாக ஆழ்ந்த கருத்துக்களை குறிப்பால் உணர்த்தும் படைப்பாளிகளுமே சாட்சி....

அந்த காலத்து M.R. ராதா முதல் இன்றைய மணிரத்னம் வரை இயக்குனர்களை, அருமையான படைபாளிகளை, அவர் பிறந்த சமூகத்தின் பெயரை சொல்லி சொந்தம் கொண்டாடுவதோ, அல்லது வெறுத்து ஒதுக்குவதோ அறிவீனம் ஆகும்....

தயவு செய்து உங்கள் ஜாதி பிரச்சினைகளை அரசியலோடும், தரங்கெட்ட சிலர் படைப்பாளிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் அவர்களோடும் நிறுத்தி கொள்ளுங்கள்.


திங்கள், ஜூன் 11, 2007

ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?

முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..

எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...

Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.

எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?

நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....

(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)

(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)

ஆமா தமிழ்ல நீளமான வார்த்தை எதுன்னு யாருக்காவது தெரியுமா?

என்ன தான்யா வேணும் உங்களுக்கு?


ப்ராமினிஸம், திராவிடம்....

அவனும் அவங்க மேல திணிக்கப்பட்ட குலத்தொழிலை செஞ்சிட்டு இருக்கலை நீங்களும் உங்க மேல திணிக்கப்பட்ட குலத்தொழில செஞ்சிட்டு இருக்கலை... நாடு நல்லா முன்னேறி கம்ப்யூட்டர் உபயோகபடுத்தி வலைப்பதிவு போடற அளவுக்கு அறிவும், பணமும், வசதிகளும் நமக்கு கிடைச்சிருக்கு....

நானும் இதை பத்தி பேச கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா நடக்கிற சண்டைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட மோசமா பொயிட்டிருக்கு..

எனக்கு தெரிஞ்சு இந்த போராட்டங்களும், சண்டைகளும் நடக்க வேண்டிய இடம் இது இல்லை... எங்கே இன்னும் இந்த ஜாதி பிரச்சினைகள் இருக்கோ அங்கே தான் இந்த போராட்டங்கள் நடக்கனும்…

ஏன் அங்கே போராடறதுக்கு ஆள் இல்லையா? என்ன பண்ணிட்டு இருக்காங்க அங்க உள்ள அரசாங்கமும், சமூகவாதிகளும்?


சாவியை ஒரு இடத்தில இருட்டுல தொலைச்சிட்டு, இன்னொரு இடத்தில வெளிச்சத்துல தேடற மாதிரி இங்கே ஏன் தேவை இல்லாம சண்டை?...

பணம் வந்துட்டா ஜாதி மதம் எல்லாம் காணாம போயிடும்ங்கிறது நிதர்சனமான உண்மை.... இப்ப எல்லாம் 2 ஜாதி தான்... பணக்காரன் ஜாதி, ஏழை ஜாதி... அவ்வளவு தான்... வசதி வந்துட்டா ஏற்ற தாழ்வும் அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்குது....

பணக்காரார்களையும், தொழில் அதிபர்களையும், அரசியல்வாதிகளையும் என்ன ஜாதின்னு யாராவது கேக்கறாங்களா என்ன?

அரசியல்வாதிகள் அவங்க சொந்த லாபத்துகாக இதை பிரச்சினை ஆக்கறாங்க.. நாமும் என்ன ஏதுன்னு புரியாம அடிச்சிகறோம்...

கவனிக்க வேண்டிய பிரச்சினை நிறைய இருக்கு...

அவங்க பண்ணாலும் தப்பு தான் நாம பண்ணாலும் தப்பு தான்... ஆகவே சகோதரர்களே.. நோ சண்டை பிளீஸ்...

சனி, ஜூன் 09, 2007

நேர்மையான கொள்ளை, கள்ளக்கடத்தல் தொழில்..

நேர்மை....
எந்த தொழில் செய்ய நேர்மை தேவை?

எந்த தொழிலில் நேர்மையும், ஒழுக்கமும் உள்ளது...?
நல்லா யோசிச்சி பாருங்க...

தெரியலை தானே?
நான் ஒழுக்கமாக நடக்கும் சில தொழில்களை எல்லாம் சொல்றேன்...
சரியான்னு பாருங்க


கள்ள கடத்தல்
ஆட்க் கடத்தல்
கொள்ளை.. திருட்டு...
மோசடி....

என்னடா இப்படி சொல்றானேன்னு பயந்துக்காதீங்க...

விஷயத்தை முழுசா கேளுங்க...

இதெல்லாம் சட்டத்துக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக நடக்கிற தொழில்கள்...

இதில் உள்ள வேலையாட்கள் மற்றும் பணி சூழ்நிலை குறித்து பார்ப்போம்...

1) தொழில் நடத்தும் இடத்தில் பெரிய வசதியெல்லாம் இருக்காது.
2) உடன் வேலை பார்க்கும் அனைவரும் மகா கோபகாரர்கள், கிரிமனல்கள்.
3) வெளியே தைரியமாக நடமாட முடியாது... (போலீஸ்)
4) உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.
5) உண்மை தெரிந்தால் ஊருக்குள் யாரும் பேச மாட்டார்கள், பழக மாட்டார்கள்.. சொந்த குடும்பமே எதிர்க்கும்.
6) P.F, கிராஜுவிட்டி எதுவும் கிடையாது.
6) எல்லவற்றுக்கும் மேல் அரசாங்க ஒத்துழைப்பு என்பதே கிடையாது.

இத்தனை இருந்தும் இந்த தொழிலில் பாருங்கள்..

அவரவர் வேலையை அவரவர் கச்சிதமாக செய்து முடிக்கின்றனர்...

நன்றாக சம்பாதிக்கிறார்கள்...

எங்கே கிளம்பிட்டீங்க? ஓ... கள்ள கடத்தல் பண்ணவா?

யோவ்.. இரும்மயா...என்ன அவசரம்? நான் இன்னும் முடிக்கலை...

இதெல்லாம் நான் சொன்னது அந்த தொழில்களை நியாயப்படுத்த இல்லை.... இல்லவே இல்லை...

எப்படி இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் இந்த தொழில்களில் நேர்மையும், ஒழுக்கமும், Customer Satisfaction(?)... எல்லாம் இருக்கிறது...

உதாரணத்துக்கு அரசாங்க உத்தியோகங்களை எடுத்து கொள்ளுங்கள்...

இருங்க.. இருங்க.. நான் அரசாங்க உத்தியோகத்தை கள்ள கடத்தலோட ஒப்பிடலை... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப அவசரம்...

நம்ம அரசாங்கம் எவ்வளவு வசதிகளை செய்து தருகிறது?
எவ்வளவு சலுகைகள்?..
எவ்வளவு உரிமைகள்...
கடமையை ஆற்ற எவ்வளவு வசதிகள்..

யாரது எவ்வளவு தொல்லைகள் கூட என்றது?... அதெல்லாம் தருவாங்க தான்.. ஆனால் அதெல்லாம் மீறி கடமை ஆற்ற தான் நிறைய வழிமுறைகள் கொடுத்திருக்காங்க... மனசாட்சி படி கடமை ஆற்ற வழிகள் இல்லாமல் இல்லை...

நம்ம தனியார் தொழில்துறைகளை எடுத்து கொள்ளுங்கள்... எவ்வளவு ஊக்கம்..? எவ்வளவு வசதிகள்.. அங்கீகாரம்..
இருந்தும் எந்த தொழிலாவது மனசாட்சிபடி, நேர்மையாக நடக்கிறதா?...

இவ்வளவு தங்கள் கடமைகளை யாராவது ஒழுங்காக செய்கிறார்களா?

அவரவர் கடமையை செய்ய வைக்க அரசாங்கமும், கோர்ட்டும் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது?
ஒழுக்கமாக,நேர்மையாக தொழில்கள், வேலைகள் நடக்க எவ்வளவு கட்டுப்பாடுகள், சட்டத்திட்டங்கள், விதிமுறைகள்.. அதிலும் ஓட்டைகளை கண்டுபிடித்து குறுக்கு வழிகளை தேடும் கும்பல்கள்...

ஏன் சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடும் நபர்களிடம் இருக்கும் ஒழுக்கம் சட்டப்படி நடக்கும் வேலைகளிலும், தொழில்களிலும் இல்லை?

1) அவர்கள் தொழிலில் பத்திரங்கள் எழுதி வைத்து கொண்டு கோர்ட்டு வழக்கு என்று ஏறி இறங்க முடியாது... அதனால் சட்ட திட்டங்கள், நெறி முறைகள் சரியாக, முறையாக, நடைமுறைக்கு ஏற்ற படி வகுக்கப்படுகின்றன.

2) அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், புரட்சிகளும் உடனே உபயோகத்திற்கு வருகின்றன.

3) விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் மீற பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்கும்.

4) தொழில் ரகசியங்கள், Confidential Info வெளியார்க்கு தெரிவிக்க பட மாட்டாது.. மீறினால்..

5) ஒரு முறை ஏமாற்றினால், சரியாக வேலை முடிக்கா விட்டால் யாரும் மறுபடியும் வேலை தர மாட்டார்கள். தொழில் நடக்கவே நடக்காது.

புரிகிறதா சமூகமும், அரசாங்கமும் எங்கே கோட்டை விடுகிறார்கள் என்று?

இது போல நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் தொழில்கள், வேலைகள் நடக்க

1) சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது. நடைமுறைக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும்.(உங்களுக்கு தெரியுமா? எத்தனை சட்டங்களை வெள்ளையர்கள் இயற்றியவைகளை இன்னும் காலத்துக்கு தக்க படி மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று)

2) தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் கடுமையாக்க பட வேண்டும்..

3) விதிமுறைகளை மீறும் தொழில் அமைப்புகளை மீண்டும் தொழில் செய்ய முடியாத படி தடை செய்ய வெண்டும்.

4) தொழில் செய்வதற்கும், அரசாங்க பணிகளை செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செவ்வனே நிறைவேற்றி தர வேண்டும்... (பாவம் போலீஸ் நண்பர்கள் இன்னும் 303 ரைஃபிள்களை வைத்து கொண்டு தான் ஏ.கே 47 களையும், 9 MM பிஸ்டல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது)

இதெல்லாம் சரியாக இருந்தால் தான் சர்வதேச சந்தையில் நம் பொருட்களின் மதிப்பு புரியும்.
மக்களுக்கு சரியான விலையில், தரமான பொருட்கள் கிடைக்கும்.

அரசு இயந்திரம் மக்களுக்கு இன்னும் பயனுள்ள வகையில் செயல்படும். மேற்சொன்ன நேர்மையான நிழல் தொழில்களை அழிக்க முடியும்...

ஆகவே நண்பர்களே...

கொளுத்தி போட்டுட்டேன்.. ஆதரவு தெரிவியுங்களேன்..

வியாழன், ஜூன் 07, 2007

உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க...


க்ளோபல் வார்மிங்க் (Global Warming)... ஹவுஸ் வார்மிங்க் மாதிரி ஏதோ உலகம் பால் காய்ச்சுதுன்னு தான் நானும் நெனச்சிட்டு இருந்தேங்க....

விட்டா உலகத்த மறந்துட்டு வேற கிரகத்துல நாம எல்லாம் பால் காய்ச்சி குடியேறுகிற மாதிரி ஆயிடுமாம்... அத தான் குளோபல் வார்மிங்க்னு சொல்றாங்க....


சைனாவில இருந்து ஒருத்தன் சொல்றான்... இப்படியே போனா இன்னும் 30 வருசத்துல உலக வரைபடத்துல இருந்து சென்னை, மும்பை, லண்டன், நியூயார்க் நகரம் எல்லாம் காணாம போய்டுமாம்….

அமெரிக்கால இருந்து இன்னொருத்தன் சொல்றான் பனிமலை எல்லாம் உருகுதாம்... 2080-ல உலகத்தோட கடல் மட்டம் 23 அடி ஜாஸ்தி ஆயிடுமாம்... அதனால எல்லார்க்கும் ஆப்பாம்... அட ஆப்பம் இல்லைங்க… ஆப்பு-ஆம்...

ஆக கூடி எல்லாம் நம்ம சிசர் மனோகர் மாதிரி ஒரே மேட்டர தான் சொல்றானுங்க...

“சிரிங்கடா... சிரிங்க...இன்னும் மூணே வருஷம் தான்...
பூமாதேவி சிரிக்க போறா.....
எல்லாரும் உள்ள போப்போறீங்க..." (படம்-துள்ளி திரிந்த காலம்)

(பூமியை குளிர வைக்க என்ன பண்ணலாம்...

சூரியனை பூன்னு ஊதி அணைச்சிடுவோமா?

பெரிய ஏ.சி, மெஷின் செஞ்சு பூமிக்கு மேல மாட்டிடுவோமா?

இல்லை, பூமி மேல அப்பப்ப பெரிய பைப்ல தண்ணி அடிச்சி விட்ருவோம?

அது கூட நல்ல ஐடியா தான்... தரையில பெரிய குழியா தோண்டி பீரை மில்லியன் கேலன் கணக்கில ஊத்தினம்னா பூமி குளிர்ந்திடாது?)


குளோபல் வார்மிங்க்னா என்னங்க?

"புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும்."
(நன்றி:விக்கிபீடியா)

இதுக்கு காரணம்... மனிதர்களாகிய நாம தாங்கோ.. நாம தாங்கோ... அப்படின்னு சென்ட்ரலைஸ்ட் ஏ.சி போட்ட ஹால்ல இருந்து பெரிய பெரிய கண்ணாடி போட்டு, குறுந்தாடி வெச்ச விஞ்ஞானிங்க எல்லாம் சொல்லிட்டாங்க...

அட அது ஒண்ணும் இல்லீங்க...

பூமியோட சராசரி வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் இருந்துதாம்.. இப்போ 2 டிகிரி வரை வந்துடுச்சாம்..

அதுக்கு காரணம்... நாம எல்லாம் வீட்டுல ஃபிரிட்ஜ் பயன்படுத்தறதும், ஏ.சி போட்டு தூங்கறதும் தானாம்...

இந்த பொருள்ல எல்லாம் ஏதோ பச்சை வீட்டு வாயு இருக்காம்...அது வெளிய வருதாம்(கரிமல வாயு, மீத்தேன், நைட்ரோஜன் ஆக்சைட்).
(பேசாம அந்த வீட்டுக்கு சிவப்பு பெயிண்ட் அடிச்சிட்டா என்ன?)

அது காரணமா காற்று, சுற்று சூழ்நிலை வெப்பம் ஜாஸ்தி ஆகி... அண்டார்டிகா, க்ரீன்லாந்து இங்கே இருக்கிற பனி மலை எல்லாம் உருகுதாம்... அதனால தான் ஆபத்தாம்..

அதுமட்டும் இல்லாம... இயற்கையோட சமச்சீர்நிலையும் கெடுதாம்...(அடப்போங்கப்பா...இதை எங்க ஊர் மேதா பட்கர் சொல்லியே எங்களுக்கு புரியலை... கிளம்பிட்டாங்க.. பேர் தெரியாத ஊர்ல இருந்து)

இன்னும் நிறைய சொல்றானுங்க... நமக்கெதுக்கு அதெல்லாம்... யாருய்யா அது? என்ன கூட்டம் அங்கே?... என்னது அரசியல் தலைவருக்கு.. பிறந்த நாளா?.. முக்கியமான விஷயமாச்சே?

இங்கே என்னய்யா கூட்டம்? அரசியல் தலைவர் வீட்டில ரெய்டா?..ரொம்ப முக்கியம்.. இருங்கய்யா நானும் வரேன்...

இதுல இருந்து நானே மாறுபடறேன்...இதையும் படிங்க

திங்கள், ஜூன் 04, 2007

அறிவாலயத்துக்கு ஆபத்து வருமா?

முன்பு விஜய்காந்தின் ஆண்டாள் திருமண மண்டபம், பின்பு கோடை நாடு எஸ்டேட், இன்று அ.தி.மு.க தலைமையகம். என்ன தான் நடவடிக்கை எடுப்பது வெவ்வேறு துறைகளாக இருந்தால் கூட, மாற்று கட்சிகளின் கட்டிடங்கள் மட்டும் இலக்காவது கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. ஒரு தி.மு.க கட்டிடம் கூட இதில் வருவதில்லையே... ஆக்கிரமப்புகளை அகற்ற வேண்டியது தான்... அதற்காக மாற்று கட்சிகளை குறி வைத்து பழி வாங்குதை போன்ற சந்தேகங்களை தலைவர் கலைஞர் தவிர்ப்பது நல்லது என்றே படுகிறது....

அதற்கு பதிலடியாக தி.மு.க கட்டிடங்களை இடிப்பேன், தி.மு.க.வை பூண்டோடு அழிப்பேன் என்று செல்வி ஜெயலலிதா கூறுவதும் சரியில்லை...

ஆரோக்கியமான அரசியல் மாநிலத்தில் அமைந்தால் தான் மக்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். மக்களுக்கு செய்ய வெண்டிய நலப்பணிகள் எவ்வளவோ இருக்க, குடும்ப சண்டையிலும், கட்சி சண்டைகளிலும், அநாகரீக அரசியலிலும் தலைவர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பது மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ளது....