உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

ஞாயிறு, டிசம்பர் 21, 2008

இலங்கை பிரச்சினையும் ஓட்டு அரசியலும்

இலங்கை பிரச்சினையில் மட்டுமல்ல... உலகில் எந்தவொரு நாட்டில் நடக்கும் எந்த மாதிரி பிரச்சினையும் நாம் நினைப்பதை விட சிக்கலானவையாக இருக்கும்...

நாம் வெகுசன பத்திரிகைகளின் கருத்தின் அடிப்படையிலும், பரவலாக பேசப்பட்டும், கேட்கப்பட்டும் வரும் கருத்தின் அடிப்படையிலும் எந்த பிரச்சினையையும் பார்த்து, பேசி பழக்கப் பட்டு விட்டோம்....

தேசிய அளவிலான எந்த ஒரு பிரச்சினைக்கும் நிச்சயம் பலவிதமான பரிமானாங்கள் இருக்கும்... அவற்றுள் அரசியல் ரீதியான பரிமானம் மட்டும் தான் முன்னிலைப் படுத்தப்பட்டு அனைவராலும் பேசப்படும்... ஏனெனில் ராணுவம், பாதுகாப்பு, உளவு ரீதியிலான பரிமாணங்கள் பொதுவில் விவாதததுக்கு வைக்க முடியாது....

ஒரே இந்தியாவாக சுதந்திரம் அடைய விடாமல் பல நாடுகளாக பிரித்து சுதந்திரம் அளித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தில் ஆரம்பித்து, சீனா பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களை ஆரம்பிப்பது வரை எவ்வளவோ அந்தந்த நாட்டுக்கு, அவரவர் வரையில் அரசியல், ராணுவ பாதுகாப்பு சிக்கல்கள் இருக்கும்.

பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் அடைய நமக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை ஈழ தமிழர்களுக்கு உள்ளது.

நமக்கு நம் நாட்டில் இருந்து பிரிவினை கோருபவர்களை எதிர்த்து சண்டையிட எவ்வளவு உரிமை உள்ளதோ அதே அளவு உரிமை சிங்கள ராணுவத்துக்கு உள்ளது...

இது மிகவும் சிக்கலான பிரச்சினை.. நான் தமிழன் அதனால் தமிழனுக்கு ஆதரவு கொடு என்னும் எண்ணம் எழுவது இயல்பு...

இதில் உலகில் நடுநிலை நாடாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை மிகவும் தர்மசங்கடமான நிலை....

ஏற்கனவே இலங்கை பிரச்சினையில் தலையிட்டு கையை சுட்டு கொண்டது... இந்தியாவின் தலையீட்டை கோரிய நாமே இந்திய ராணுவத்தை சபிக்கும் அவல நிலைக்கு சென்று விட்டது...

வங்காள தேசத்தின் விடுதலைக்காக இந்திரா காந்தி ராணுவத்தை அனுப்பியது, கிழக்கில் பாகிஸ்தானின் தொல்லையை குறைக்க... ஆனால் அதே போல இலங்கை மீது இந்தியா கை வைத்தால் இலங்கை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ உதவிக்கு போய் விட்டால் இந்தியாவின் தெற்கு பகுதி பாதுக்கப்புக்கே அது அச்சுறுத்தலாக அமையலாம் என்ற நிலை..
(இதில் தமிழக மீனவர்களை கொலை செய்வது பாகிஸ்தான் ISI அமைப்பு என்னும் உறுதி செய்யப்படாத செய்தி குறிப்பிடத்தக்கது)

மொழியை அடிப்படையாக வைத்து ஒரு நாடு இந்தியாவின் வெகு அருகே உதயமாவதில் மொழிவாரியில் மாநிலங்கள் கொண்ட இந்திய தேசத்துக்கு உளவியல் ரீதியான பிரச்சினைகள் வரலாம் என்ற நிலை...(ராஜீவின் போக்கில் மாற்றம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணம் என்று கூட ஒரு வதந்தி உண்டு)

பொதுவாக ஒரு நாட்டின் சர்தேச கொள்கை என்பது உள்நாட்டு அரசியல் மாற்றத்தைப் போறுத்து பெரிய அளவில் மாறக் கூடாது... உதாரணத்துக்கு அமெரிக்காவில் சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஜனநாயக கட்சி என்பது ஆட்சிக்கு வந்தாலும் அமேரிக்காவின் சர்வதேச கொள்கை என்பது பெரிய அளவில் மாறாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..

ஆனால் இந்தியாவின் நிலை என்ன? மத்தியில் ஆட்சி மாறும் போதெல்லாம் நடுநிலை வாதமும், மதசார்பு வாதமும் மாறி மாறி நிலை கொள்ளும் நிலையில் உள்ளது நம் நாடு.
பிரச்சினையின் தீவிரம் புரியாமல் மேம்போக்காக அதை விவாதிப்பது சரியல்ல... அதற்காக போராடுகிறேன் பேர்வழி என்று கோக்குமாக்காக தேசிய நலனுக்கு எதிராக பேசுவது எல்லாம் தேவை இல்லாதது...

எது நியாயம், எது அநியாயம் என்பதெல்லாம் இடம், பொருள், காலம் இவைகளை பொறுத்து மாறும்...

பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது நமது நோக்கமாக இருக்க வேண்டும். அதில் எந்த தவறுமில்லை... அது நம் கடமையும் கூட...

ஆனால் இப்போது இலங்கை பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை... போராளிகளும் நிறைய தவறு செய்திருப்பார்கள், இலங்கை ராணுவமும் நிறைய தவறு செய்திருக்கும்... அந்த இடியாப்ப சிக்கல்களை கவனிக்க சர்வதேச சமூகமும், நிறைய நாடுகளும், அரசாங்ககளும் இருக்கின்றன..

இதில் நம் அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்று வலியுறுத்த ஒரு பாராளுமன்ற அமைப்பு இருக்கிறது... அதில் நாம் தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் இருக்கிறார்கள்... இந்த பிரச்சினையில் அவர்கள் செயல்பாடுகள் நமக்கு பிடிக்க வில்லையா... தேர்தல் வருகிறது... இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் செயல்படும் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஒற்றுமையாக இந்த அரசியல்வாதிகளும், கலைஞர்களும் செயல்பட்டு அரசாங்கத்துக்கு ஜனநாயக ரீதியாக நெருக்கடி கொடுக்கலாமே?

ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வது நோக்கமாக இருந்தால் அகதிகளாக வரும் தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கவனிக்க ஒரு நலநிதி திட்டம் அமைத்து அதற்கு தமிழ் ஆதரவு நடிகர்களும், கலைஞர்களும், அரசியல்வாதிகளும் நன்கொடை வழங்கி கவனிக்கட்டுமே...

நமது அரசியல்வாதிகள் இந்த பிரச்சினையை உணர்வு ரீதியான பிரச்சினையாய் மாற்றி அதில் குளிர் காய நினைக்கிறார்கள்... அமைப்பு ரீதியாக செயல்ப்பட்டு, தங்கள் நிலையை அரசாங்கத்திற்கு தெரிவித்து, ஜனநாயக ரீதியிலான நெருக்கடி கொடுக்க முடிகிறதா இவர்களால்?

மக்கள் உணர்ச்சி வயப்பட்டு எப்படி வேண்டுமானால் பேசலாம். அது அவர்களை பாதிக்கும். மிஞ்சி போனால் குடும்பத்தை பாதிக்கும். ஆனால் அரசியல் தலைவர்கள் இவ்வாறு பொறுப்பற்று பேசுவது, செயல்படுவது தான் கவலை அளிப்பதாக உள்ளது...

இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கு ஆதரவு தருகிறோம் என்ற போர்வையில் நம் அரசியல் வாதிகள் ஓட்டு அரசியல் செய்வதில் குறியாக இருப்பதாக படுகிறது.

ஈழ மக்களின் விடுதலை வேட்கை ஆதரவு நிலை என்பது ஒர் தளம்.. தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கான ஆதரவு நிலை என்பது ஒரு தளம்.. மனித உரிமை மீறல்/இனப் படுகொலை எதிர்ப்பு என்பது வேறு தளம்...

இவற்றை பிரித்துப் பார்க்க முடியாது என்று வாதாட தோன்றலாம்... உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இவை வெவ்வேறு தளங்கள் என்பது புரியும்...

தனி ஈழம் என்பதை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்ற வாய்ப்பு இருப்பதால் தடை செய்யப் பட்ட போராளி இயக்கத்துக்கு ஆதரவு நிலையை எடுக்காமலே இங்குள்ளவர்கள் இயங்கலாம்...

மனித உரிமை மீறல் என்ற பிரச்சினை உங்கள் பக்கத்து வீட்டில் இருக்கும் வேலை பார்க்கும் சிறுமிகள் கொடுமை படுத்தப்படுவதில் ஆரம்பித்து நேரங்காலம் இல்லாமல் வேலை பார்க்கும் ராணுவ வீரர்களின் நலன் வரை எல்லா இடத்திலும் இருக்கிறது... அதை எதிர்க்க எதற்கு தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றி பேச வேண்டும்? இங்கு தனி நாடு பற்றிய உளறல் ஏன்?

விலைவாசி உயர்வு, சிறு நலன்கள் பற்றிய போராட்டம் நடத்த அதை பற்றின ஆழ்ந்த அறிவோ அனுபவமோ, தேவை இல்லை...
ஆனால் சர்வதேச அளவில் பெரியதான பிரச்சினைகளை கையாள அமைப்பு ரீதியிலான அணுகுமுறையும், அந்த பிரச்சினையின் ஆழம், தீவிரம் அதை பற்றின அனுபவப்பூர்வமான புரிதல் இருத்தல் அவசியம்.

இவை எதை பற்றியுமே கவலைப்படாமல் வாய்க்கு வந்ததை பேசி நினைத்த படி செயல்படும் ஆட்களை என்ன சொல்லி என்ன?

இங்கே போராட்டம் செய்பவர்கள், நாம் எதற்காக போராடுகிறோம் என்பதை உணர்ந்து செயல்படுவதாக தெரியவில்லை....

இங்கே நம் ஆட்கள் செய்யும் போராட்டங்களால் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன நலன் விளைந்துள்ளது என்பதும் புரியவில்லை.

புதன், ஆகஸ்ட் 06, 2008

கால் சென்ட்டர்களும் கார் டிரைவர்களும்

தூக்கத்தில் பல வகை. அதே போல் ஆர்வத்திலும் பல வகை.

ஆர்வக் கோளாறு என்றிருப்பதைப் போல தூக்கக் கோளாறு என்று ஏதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை...
ஆர்வம் அதிகமாக இருக்கும் போது தூக்கமும் அதிகமாக இருந்தால்?

என்னடா இவன் மேட்டரை சொல்லாமல் ஓவராக பம்ப் அடிக்கிறான் என்று தோன்றுகிறதா?

சென்னையின் ஒரு பரபரப்பான IT பன்னாட்டு நிறுவனம். (மெட்ராஸ் பாஷையில் கால் சென்டர். தொலைப்பேசும் செய்யும் வேலை நடந்தாலும் நடக்கா விட்டாலும், அனைத்து BPO மற்றும் IT கம்பெனிகளுக்கும் இது தான் பொது பெயர்)

இந்த மாதிரி நிறுவனங்களில் பணியாளர்கள் ஓவர் டைம் செய்து வேலைப் பார்ப்பதெல்லாம் ரொம்ப சகஜம். முதல் நாள் காலை உள்ளே சென்று மறுநாள் இரவு திரும்புவதெல்லாம் சர்வ சாதாரணம்.

இப்படி கஷ்டபட்டு உழைக்கும் பணியாளர்களை நிறுவனமும் நன்றாக கவனிக்கவே செய்கிறது... அகால நேரத்தில் பணிக்கு வரும், போகும் பணியாளர்களுக்கு அலுவலகம் வந்து போக கார் வசதியும், ஏனையோருக்கு பஸ் வசதி உண்டு... இது போல நேரம் காலம், கண்ணு மண்ணு தெரியாமல் கடுமையாக உழைத்து களைத்த பணியாளர்களை நிறுவன ஒப்பந்த வாகனங்களில் அவர்கள் வீடு வரை கரை சேர்க்கவும், (உடனே )பிக்கப் செய்வதற்குமான வசதியை எல்லா நிறுவனங்களும் தருகின்றன....

இந்த ஒப்பந்த வாகனங்களின் கதை ஒரு சோக கதை...

பெரிய டிராவல் நிறுவனங்கள் இந்த வாகன ஒப்பந்தங்களை IT நிறுவனத்துடன் செய்துக் கொள்ளும்... இத்தனை வாகனங்களை IT நிறுவனத்தின் சார்பாக இயக்க வேண்டும் என்பதாக... பெரிய டிராவல் நிறூவனத்திடம் அவ்வளவு வாகனங்கள் இருக்காது... அவர்கள் சிறிய டிராவல் நிறுவனங்களிடமும், டூரிஸ்ட் வாகன ஓட்டிகளிடமும் துணை ஒப்பந்தங்கள் செய்து கொள்வர்...

இப்படிப் பட்ட வாகனங்களில் டிரைவராக பணியாற்றும் ஜீவன்கள், எப்போது என்ன பிக்கப், என்ன டிராப் தருவார்கள் என்று தெரியாமல் வாகனத்திலேயே IT நிறுவன வளாகத்தில் காத்திருக்க வேண்டும்....

இன்ன இடத்துக்கு, இத்தனை மணிக்கு, இத்தனை பேருக்கு வாகன வசதி தேவை என்ற தகவல் பணியாளரிடமிருந்து IT நிறுவன வாகன உதவி மையத்துக்கு போகும். அங்கிருந்து அதே வளாகத்திலேயே இருக்கும் பெரிய டிராவல் உதவி மையத்துக்கு இந்த தகவல் சேர்க்கப்படும். அங்குள்ள நபர் இதை ஏதவது ஒரு துணை ஒப்பந்த டிராவல் நிறுவன பொறுப்பாளரிடம் தருவார். அவர் எந்த வாகனத்துக்கு இந்த ட்ரிப்பை தருவது என்று வாகன இருப்பை பொறுத்து முடிவெடுத்து வாகனங்களை பணிப்பார்.

இப்படி பெரிய சுற்றுக்கு பின் டிரைவரிடம் அந்த ட்ரிப் ஷீட் வந்து சேரும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பணியாளர் வந்து அமர்ந்தவுடன் வாகனம் அவரை குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு சேர்க்கும்... இப்படி ஒவ்வொரு துணை நிறுவனமும் நூற்றுக்கணக்கில் வாகனங்களை பணியில் அமர்த்தியிருக்கும்.

இவைகளில் டிரைவராக பணியாற்றும் பெரும்பான்மையானோர் தென் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள்..

அங்கன, இங்கன… அங்கிட்டு, இங்கிட்டு என்று வட்டார மொழியில் பேசிய படி சென்னை முழுதும் அதகளம் செய்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருப்பவர்கள்.

இந்த பின் புலம் போதும்...

ஒருநாள் அதிகாலை 3 மணி சுமார்... பின்னிரவு நேரம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்... பணியையும், நிறுவனத்தையும் பெரிதும் நேசிக்க 2 நாட்களாக கட்டாயப் படுத்தப்பட்ட ஒரு கொலைவெறி பணியாளர்.. களைப்பாக அந்த வாகனத்துக்கு வந்து சேர்ந்தார்... வேறு வாகனம் எதும் இல்லாததால், ஒரு புத்தம் புது டிரைவர் ஒருவருக்கு அந்த டிராப் கிடைத்தது... அவர் சென்னைக்கு மட்டுமல்ல, கால் சென்டர் வாகன தொழிலுக்கே புதிது... யாரோ சொந்தக்காரர் ஒருவர் டிராவல்ஸ் ஒன்றில் வண்டி போட்டதால் திடீர் டிரைவராகியிருந்தார்...

நம் ஓட்டுநருக்கு ஆங்கிலம் தெரியாது...ட்ரிப் ஷீட் ஆங்கிலத்தில் தான் இருக்கும்..

"எங்கே சார் டிராப் செய்யனும்" என்று சூப்பர்வைசரை கேட்க, அவர் எரிச்சலாக
"திருமங்கலம்... ஏன் தொரை படிக்க மாட்டீயளோ"

என்று சொல்லிவிட்டு கிளம்ப யத்தனிக்க...

"சார் அவ்வளவு தூரம் போய் வர்றது கஷ்டம் சார்"

"வெங்காயம்... தினம் போய் வர்றவன் பைத்தியக்காரனா... போய்ட்டு வெரசா வாடே"

முதலில் ஓட்டுநருக்கு சற்று குழப்பம் இருந்தாலும் முதன் முதலில் புது கம்பெனியில் கிடைத்த பிக்கப் ஆகையால் அதீத ஆர்வத்துடன் புறப்பட்டார்... பணியாளர் 2 நாள் கம்ப்யூட்டரில் வெந்த களைப்பில் செம தூக்கக் கலக்கத்தில் இருந்தார்... வந்த வேகத்தில் பின் சீட் முழுதும் ஆக்ரமித்து படுத்து...

“திருமங்கலம் வந்ததும் சொல்லுங்க... வீட்டுக்கு வழி சொல்றேன்..."

அவ்வளவு தான் ஆள் மட்டையாகி விட்டார்..

வண்டி சென்றது... சென்றது... சென்றது... டீ குடிக்க ஒன்று இரண்டு இடங்களில் நின்றது... சென்றது.. திண்டிவனம், விழுப்புரம் நடுவே எங்கோ வரும் போது நம்ம கொலைவெறிப் பணியாளர் எழுந்து விட்டார்... ஸ்லோமோஷனில் வாட்ச்சை பார்த்தவர்… குழப்பமாய்…

"என்னங்க... எங்க போயிட்டிருக்கோம்?"

"சார் இப்ப தான் திண்டிவனம் தாண்டிப் போயிட்டிருக்கோம்... திருச்சி, மதுர அப்புறம் தான் திருமங்கலம்… இன்னும் நேரமிருக்கு படுங்க"

சென்னை அண்ணா நகரை அடுத்த திருமங்கலத்துக்கு போக வேண்டிய கொ.வெ. பணியாளர் போட்ட அலறலில் நெடுஞ்சாலை மொத்தமும் திரும்பி பார்த்ததாம்...

அய்யோ…அய்யோ…

இப்போது முதல் பாராவை மறுபடி படியுங்கள்...

(திரைக்கதை வசனம் தான் நான் எழுதியது... கதை உண்மையான சம்பவம்...)

(தலைப்பு முழுதும் ஆங்கிலம்... மன்னிக்க)

செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008

அமெரிக்காவின் திடீர் கரிசனம்

அமெரிக்க உளவு நிறுவனம் திடீரென ஆஃப்கானிஸ்தான் இந்திய தூதரகம் மீதான குண்டு வெடிப்பில் ISI-யின் பங்கும் இருக்கிறதென குற்றம் சாட்டுகிறது...

அமெரிக்க அதிபர் பாகிஸ்தான் பிரதமரை ISI யார் கட்டுப்பாட்டில் உள்ளதென்று கேள்வி கேட்கிறார்..


என்ன மாயம் இது?

இத்தனை நாளாக இல்லாமல் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தவறு செய்கிறதென புரிந்து விட்டதா?


இந்தியாவின் ISI குறித்தான குற்றச்சாட்டுகளில் நம்பிக்கை பிறந்து விட்டதா?

கீழ்க்கண்ட தனித் தனி விஷயங்களை பாருங்கள்...

1) இந்தியா மற்றும் சீனா இரண்டும் கலாச்சார பாரம்பரியம் மிக்க நாடுகள்...

2) கலாச்சார பாரம்பரியம் மிக்க நாடுகளே வல்லரசாக முடியும் என்று கலாச்சார போர்கள் பற்றிய பிரபலமான மேனாட்டு புத்தகங்கள் சில சொல்லும் செய்தி...கலாச்சாரமில்லாமல் இருப்பதே தங்கள் கலாச்சாரம் என்று இருக்கும் அமெரிக்கர்கள் ஒன்று கலாச்சார முகமூடி அணிய வேண்டும் அல்லது கலாச்சாரங்களை கெடுக்க வேண்டும்... இரண்டாவது வழி தான் எளிது...

3) இந்தியா, சைனா இந்த இரண்டு பெரும் கலாச்சார சக்திகளுள் கூட்டு வைக்க அமெரிக்காவுக்கு முதலாளித்துவ இந்தியாவே சரி...

4) பாகிஸ்தானோ சீனாவுடன் மறைமுக உறவு கொண்டுள்ளது... இந்தியாவும் சீனவும் பரம வைரிகள்...


5) இந்தியாவின் அணு சக்தி இப்போது அமெரிக்காவின் கண்காணிப்பில்...

6) என்ன இருந்தாலும் பாகிஸ்தான் ஒரு முஸ்லிம் நாடு... பழமைவாதிகள் அமெரிக்
காவை செத்தாலும் ஆதரிக்க மாட்டர்கள்...

7) மத்திய கிழக்கில் இஸ்ரேல் குவைத் போல, சீனவுக்கு அருகில் அமெரிக்காவுக்கு ஒரு ஸ்ட்ராங்கான தளம், கூட்டாளி தேவை...

8) இந்தியாவில் உள்ள அறிவு வளம் (சேவை மலிவு விலையில் கிடைக்கும்), மனித வளம் (பொருட்களை விற்பனை செய்ய மார்க்கெட்) இரண்டும் அமெரிக்
காவை வழி நடத்தும் பன்னாட்டு நிறுவனங்களை கவர்ந்து இழுக்கிறது...

இவற்றுள் ஒன்றோ, ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களோ அமெரிக்கவின் இந்த திடீர் கரிசனத்துக்கு காரணமாக இருக்க கூடும்...

இதன் கேயோஸ் தியரி, மற்றும் பட்டர்பிளை எஃபக்டுகளை அவரவர் கற்பனைக்கே விடுகிறோம்...

திங்கள், ஆகஸ்ட் 04, 2008

திகிலூட்டும் தினசரிகள்

இன்று ஒரு தமிழ் நாளிதழ் ஒன்றின் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டேன்...

பத்திரிகையில் இன்று என்ன முக்கியமான நிகழ்வை கவர் செய்துள்ளார்கள் என்று தெரியப்படுத்தி பொதுஜனத்தை தினசரியை வாங்க வைக்க கடைகளில் தொங்க விடுவார்களே அந்த தலையங்க பக்கத்தில்,

"2 மணி நேரம் கழிவறையில் சிக்கித் தவித்த நடிகர்" என்றுச் சுடச் சுட அறிவிப்பு கொடுத்து அசத்தியிருந்தார்கள்.

அதுவும் எதன் கீழே... ஹிமாச்சல பிரதேசத்தில் நெரிசலில் சிக்கி 130 பேர் பலி என்ற செய்தியின் கீழே...

ஆஹா பிரமாதம் என்று நீங்கள் புகழ்வது கேட்கிறது...

மக்கள் யாரந்த நடிகர் என்று ஆர்வமாக பத்திரிகையை வாங்கி படித்து விடுவார்களாம்... சேல்ஸ் பிய்த்து கொண்டு போகுமாம்... இது தான் அந்த தலையங்கத்தின் நோக்கமாக இருக்க கூடும்...

மக்களின் ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு இது போன்ற தினசரிகளுக்கு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...

இறந்த வாலிபரின் ஜட்டி அம்பு குறியிட்டு காட்டப்படுவதில் தொடங்கி... கள்ளக் காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை வரை சுவாரசியமாக விவரிக்கும் இன்றைய தினசரிகள் அதில் பாதி சிரத்தையைக் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கு தருவதில்லை...

அமெரிக்காவுடன் ஆன அணு ஒப்பந்தம், அது குறித்தான சர்ச்சைகள், விலைவாசி உயர்வு, பொருளாதார பின்னடைவுக்கான காரணம், உலக மயமாக்கல், உலகம் வெப்பமடைதல், புவிச்சுற்றும் வேகம் குறைதல், ஒஸோன் படலம், உலக நிகழ்வுகள் இப்படிப் பட்ட விஷயங்களை பற்றி உண்மையான சிரத்தையோடு செய்திகளையோ, விவாதங்களையோ முன் வைத்தது உண்டா?

மிஞ்சி போனால் வருடத்தில் ஒரு முறை ஆர்ட்டிக்கிள் ஒன்று எழுதி விடுவார்கள் அல்லது ஒரு சப்ளிமென்ட் போட்டு விடுவார்கள்...

எதிர்மறை விளைவுகளை சமூகத்தில் உண்டாக்கும் செய்திகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை குறைத்து.. பாஸிட்டாவான விஷயங்களுக்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து...

நடிகர் ஸ்ரீமன் கேரவன் கழிவறையில் மாட்டிக்கொண்டதை தெரிந்து தெளிவு பெறுவதை காட்டிலும் நம் மக்கள் தெளிவு பெற இன்னும் நிறைய செய்திகள் இருக்க கூடும்...

நயன்தாராவுக்கு ஏற்பட்ட இடுப்பு சுளுக்கையும், ரஜினிகாந்த் அடித்துக் கொண்ட மொட்டையையும், கமல்ஹாசன் வைத்துக்கொண்டிருக்கும் புது சிகை அலங்காரத்தையும், சினிமா பத்திரிகைகள் எழுதட்டும்... தினசரிகள் ஏன் மெனக்கெட்டு தலையங்கம் எழுத வேண்டும்?

சமுதாயப் பொறுப்புணர்வு என்பது அவரவர்கட்கு வர வேண்டும்.. நாம சொல்லி திருந்தி விடப் போகிறார்களா என்ன?

தனி மனித ஒழுக்கம் என்பது நாம் சார்ந்துள்ள சமூகத்தினால் தான் தீர்மானிக்கப் படுகிறது.. அத்தகைய சமூகம் எதை கேட்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்கும் அதிகாரத்தில் உள்ள தினசரிகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், வார மாத பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் தத்தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

வியாழன், ஜூலை 31, 2008

காற்றில் அந்த குரல் - பாயிருபாய்

என்னுடைய சிறு வயது பெரும்பான்மையாக சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் கழிந்தது.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அங்கே தான்...

சிறுவனும் அல்லாத, பெரியவனும் அல்லாத பிராயத்தில், கூட தன் வயதையொத்த பிள்ளைகள் குடும்பத்தில் யாருமில்லாத சமயத்தில், புது வீட்டுக்கு அதுவும் கோடை விடுமுறையின் போது குடி போவது என்பது கொடுமையான விஷயம்.

அது போன்ற ஒரு கோடை விடுமறையில் வசமாக சிக்கிய சமயம் அது.

அப்போதெல்லாம் TV கூட மாலை 5.30 மணிக்கு மேல் தான் ஒளிபரப்பை துவங்கும். தூர்தர்ஸன் தொலைக்காட்சி துறையில் தனி ஆவர்தனம் செய்து கொண்டிருந்த காலம். பெரும்பாலும் அந்த தனி ஆவர்தனம் அபஸ்வரமாகவே இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.... (வயலும் வாழ்வும், உலா வரும் ஒளிகதிர், இளந்தென்றல் - மறக்கக் கூடிய நிகழ்ச்சிகளா அவை? அவர்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாது சார்)

நூலகம் எல்லாம் தெரியாத வயது... ஒரே பொழுது போக்கு சாலையை பார்த்தபடி இருக்கும் ஜன்னலில் சாலையில் போவோர் வருவோரை வேடிக்கை பார்ப்பதாக தான் இருக்கும்....

இப்போது போல மோட்டார் பைக்குகள் எல்லாம் அதிகம் கிடையாது... ஜாவா, ராஜ்தூத், புதிதாக வந்திருந்த யமஹா, ஹீரோ ஹோண்டா, இண்ட் சுசுகி போன்றவை இங்கொன்றும் அங்கொன்றுமாய் சுற்றிக் கொண்டிருக்கும்...

ஆயிரம் பைக்குகள் சென்றாலும், ஜாவா மோட்டார் பைக்கின் சத்தம் தான் நெஞ்சை அள்ளும்....

அப்போதெல்லாம் பேங்க்கில் நல்ல உத்தியோகத்தில் இருப்பவராயிருந்தால் பஜாஜ் அல்லது எல்.எம்.எல் போன்ற ஏதாவது ஸ்கூட்டர் வைத்திருப்பார்கள்.. கொஞ்சம் வசதியான டாக்டர்கள் எல்லாரும் கட்டாயம் ப்ரீமியர் பத்மினி கார் தான் வைத்திருப்பார்கள்...

காய்கறி, ப்ளாஸ்டிக் சாமான், பேன்ஸி ஐட்டங்கள், ஐஸ் வண்டி, சைக்கிளில் மீன்காரர், பால்காரர் என்று தெருக்கள் எப்போதும் பரபரவென இருக்கும்... அநேகமாக அனைத்து வீடுகளிலும் இருக்கும் பெண்களும் ரிலாக்ஸ்டாக மதிய நேரத்தில் தான் பேரம் பேசி வியாபாரம் செய்வார்கள்... மெகா தொடர்கள் எதுவுமில்லாத காலத்தில் அவர்களின் பிரதான பொழுதுபோக்கே இது போன்ற சில்லறை வியாபரங்களும் அக்கம் பக்கத்தில் அலர் பேசுவதும் தான்...

தினம் தினம் வேடிக்கைப் பார்த்து பார்த்து... மண்ணெண்ணய், புளி, சமையல் கேஸ், கோல மாவு என்று எந்த வண்டி போனாலும் என்னால் சத்தத்தை வைத்தே இனம் காண முடியும்.. பின்னே ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதே வேலை என்று இருந்தால்...

ஆனால் வெகு நாட்களாக ஒரு சத்தம் மட்டும் இன்னது என்று என்னால் அடையாளம் காண முடியாததாய் இருந்து வந்தது...

யாரோ ஒருவர் அடி தொண்டையில் ஆரம்பித்து, உச்ச ஸ்தாயில் சத்தமாக கத்தும் ஒரு குரல்...

"பாயிருபாய்... பாயிருபாய்..."

அதை ராகமாக அவ்ர் சொல்லும் விதமே அலாதி... எங்கள் தெரு சமீபத்தில் அந்த குரல் கேட்டதென்றால் மணி பதினொன்றரை பக்கம் என்று நிச்சயம் சொல்லலாம்... ஞாயிறு தவிர்த்து அநேகமாக எல்லா நாளும் அந்த குரலை கேட்கலாம்...

அது யார்... என்ன வியாபாரம் செய்கிறார் என்று தெரிந்து கொள்ள எனக்கு கொள்ளை ஆசை... எங்கள் தெரு மீது அவருக்கென்ன கோபமோ தெரியவில்லை... அவர் எங்கள் தெருவுக்குள் வருவதேயில்லை... பக்கத்து தெருவிலிருந்து எதிர் தெருவிற்கு போவாராயிருக்கும்... அப்போது குரல் தெளிவாக கேட்கும்...

"பாயிருபாய்...."

* * * * * * * * * *

ரொம்ப நாட்கள் கேட்டு கேட்டு குரல் பழகி என்ன வியாபரம் என்று தெரிந்து கொள்ளும் ஆசை எல்லாம் போன பின் ஒரு நாள் என் தாத்தாவுடன் சைக்கிளில் செல்லும் போது எத்தேச்சையாக வெகு அருகில் அந்த குரல் கேட்டு திரும்பி பார்த்தேன்...

"பாயிருபாய்..."

ஒரு அழுக்கு சட்டையும், பாவாடை போன்ற காக்கி டிராயரும் (சல்லாடம் என்று சொல்வார்கள்) அணிந்து ஒரு இரும்பு தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு ஒரு பெரியவர்... வயது அறுபது பக்கம் இருக்கும்...

ரோடு போடும் போது தார் ஊற்றிய ஜல்லி கற்களை தள்ளி கொண்டு வந்து கொட்ட பயன்படும் இரும்பு சக்கரம் வைத்த தள்ளு வண்டி அது...

அதில் என்ன வைத்து விற்கிறார் என்று பார்பதற்குள்... என் தாத்தா அவரை தாண்டி வேகமாக சென்று விட்டார்...

"பாயிருபாய்...."

குரல் தேய்ந்து காற்றில் கலந்து விட்டது...

* * * * * * * * * *

அதன் பிறகு நாங்கள் வீடு மாற்றி விட்டோம்... இந்த முறை நாங்கள் குடியேறிய வீடு சற்று தள்ளி உள்வாங்கி ஒரு சந்தினுள் அமைந்திருந்தது... எந்த சத்தமும் கேட்காத அமைதியான இடம்...

அதன் பிறகு கொஞ்ச காலம் அப்படியே கழிய, அந்த குரலை பற்றி நான் மறந்தே போனேன்...

நான் வளர்ந்து தி.நகரில் இருக்கும் பள்ளி, நூலகம் என்று எல்லா இடத்துக்கும் தனியாக செல்ல ஆரம்பித்த நாட்கள்.

ஒருநாள் காலையில் எத்தேச்சையாக அந்த பெரியவரை பார்த்தேன்... ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்திய படி யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார்.. அவருடைய தள்ளு வண்டி சற்று தள்ளி சாலை ஓரமாக நிறுத்த பட்டிருந்தது....

மறுபடியும் பழைய ஆர்வம் வந்து என்னை தொற்றிக் கொண்டது... நைசாக சாலையை கடந்து அந்த வண்டிக்குள் என்ன தான் இருக்கும் என்று பார்ப்பதற்காக போனேன்... போய் எட்டிப் பார்த்தால்...

காலியாக இருந்தது... சே.. என்னவொரு ஏமாற்றம்...

* * * * * * * * * *

நான் சைக்கிள் வாங்கி கிரிக்கெட், திருவிழா, நூலகம் என்று சுற்ற ஆரம்பித்த நேரம்...

நுங்கம்பாக்கத்தில் உள்ள பல பிசியான தெருக்களில் ஒன்றில் இருந்த என் மாமாவின் நண்பரின் கடையில் நானும் என் பால்ய சினேகிதன் ஒருவனும் சும்மா பொழுது போக்கிக் கொண்டிருந்த போது...

அந்த சத்தம் கேட்டது...

"பாயிருபாய்...." அந்த பழைய கம்பீரம் சற்று குறைந்தாற் போல தோன்றினாலும், அதே குரல்...

அந்த பெரியவர் இப்போது சற்று தளர்ந்தவராய் அதே வண்டியை உருட்டியபடி எங்களை கடந்து சென்றுக் கொண்டிருந்தார்...

என் நண்பன் ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா... அவனிடம் கேட்டால் ஏதாவது விவரம் தெரியுமோ என்று பேச்சு கொடுத்தேன்..

"டேய்.. அந்த தாத்தா என்ன வியாபாரம்டா பண்றாரு?"

"யாரு பாயா?" என்றான் அசுவாரஸியமாய்...

"அவரு பாயா? பாயிருப்பாய்னு ஏதோ விக்கிறாரே அவரையா சொல்றே?"

"ஆங்.. அவரு தான்.. எங்க ஊட்டாண்ட தான் மின்னாடி குடித்தனம் இருந்தாரு... "

"என்ன தாண்டா விக்கிறாரு அவரு?"

"விக்கிலை டா.. வாங்குறாரு…… பழைய இரும்பு சாமான் வாங்குவாரு"

ஓஹோ

பாயிருபாய் என்பதன் அர்த்தம் "பழைய இரும்பு"-ஆ...

அடக்கடவுளே..

சே இது தெரியாமல் போயிற்றே என்று ஒரு இனம் புரியாத ஏமாற்றம் மனதின் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டாலும்...

ஏதோ தொடர்கதையை படித்து முடித்த திருப்தி அந்த கணத்தில் ஏற்பட்டதை மறுக்க முடியாது...

* * * * * * * * * *

அதன் பிறகு சில சமயம் இங்குமங்கும் அவரைப் பார்த்திருப்பேன்...

நான் போரூருக்கு குடி பெயர்ந்த பின், அவ்வபோது பழைய தொடர்புகளால் நுங்கம்பாக்கம் போய் வந்து கொண்டிருந்தாலும் அவரை பார்க்கும் வாய்ப்பு ஏனோ எனக்கு கிடைக்கவில்லை...

ஆனால் அந்த கம்பீரமான, அடிதொண்டையிலிருந்து புறப்படும் அந்த பிரத்தியேக குரலை மட்டும் என்னால் இதுவரை மறக்கவே முடியவில்லை....

சுயநலச் சுழல் - பாகம் 2 (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

வர்மா அந்த நிறுவனத்தின் மிக பெரிய அதிகாரியான சந்தர் முன் அமர்ந்திருந்தார்.

"வர்மா.. நீங்கள் எங்கள் நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேஸ் நிறுவனத்தைப் பற்றி எந்த விதமான சந்தேகமும் கொள்ள இடம் இல்லை... இது வரை 30000 பேரை பத்திரமாக செவ்வாய் கிரத்துக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறோம்... உங்களுக்கு தேவையான குடியிருப்பு, வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன... இங்கே எங்கள் ஸ்டேஷனில் கிளம்புவதில் இருந்து அங்கே செட்டில் ஆகும் வரை எல்லாம் எங்கள் பொறுப்பு மிஸ்டர் வர்மா... உங்களுக்கு காஸ்மோநாட்டாக வந்து விண்வெளி கலத்தை செலுத்தப் போவது உங்கள் நண்பர் யோகேந்த் தான்.. அவர் தான் எங்கள் நிறுவனத்தின் சிறந்த காஸ்மோநாட்... நீங்கள் எந்த பயமுமில்லாமல் எங்கள் கலத்தில் பயணம் செய்யலாம்..."

யோகேந்தும் ஆமோதித்தார்.

"உண்மை தான் வர்மா... நீங்கள் செலுத்த போகும் 8 மில்லியன் ஸிராவில் உங்களுக்கு கிடைக்கப் போவது இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வேஸின் வழி, செவ்வாய் இந்தியன் ஷெல்ஸ் குடியுரிமை, ஒரு இல்லம் மற்றும் எங்கள் விண்கலத்தில் பாதுகாப்பான பயணம்.. அங்கேயும் நீங்கள் பணம் பண்ண பல வழிகள் உள்ளன. கம்ப்யூட்டர் நிபுணரான நீங்கள் எங்கு சென்றாலும் வாழலாம்."

வர்மா தலையசைத்தார். சம்மதிப்பது போல.

"அப்போது நான் பணத்தை உங்கள் நிதி நிறுவனத்தில் செலுத்தி விடுகிறேன்.. நாளையே நாம் புறப்படலாம்.."

கிளம்பினார்.

மேகலாவை வழியிலேயே தொடர்புக் கொண்டு விஷயத்தை தெரிவித்தார்.

=================================================

எல்லாம் தயாராகி விட்டது.

விண்கலத்தில் பிரத்யேக உடைகளில் புறப்பட தயாராக யோகேந்த், வர்மா, மேகலா.

சந்தர் எதிரே லேசர் போனில் தெரிந்தபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்..

"சரி கவுண்ட் டவுன் ஆரம்பிக்கட்டும்"

பூஜ்யம் வந்தவுடன், லேசான அதிர்வு ஆரம்பித்தது. வெண்மையான ஒளி விண்கலத்தின் வாலில் தோன்றியது.

வெண்மையான ஒளியில் ஆரம்பித்து, நீலம்- பச்சை- மஞ்சள்- ஊதா நிற ஒளிக்கற்றைகள் ஊடுருவ ஆரம்பித்து,

'ச்சுய்ய்ய்ய்' என்ற ஒலியை தொடர்ந்து விண்கலம் மேல் நோக்கி சீறி பாய்ந்தது. உடனே அடுத்த நொடியே, விநாடிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய ஆரம்பித்தது.

பூமியை விட்டு மூன்று நிமிடங்களில் விலகி அண்டத்தை நோக்கி சென்று கலந்தது.

பல்வேறு ஏரியல் சிக்னல்களில் கிளியராகி,

இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வே எனப்ப்டும் பால்வீதியின் பிரத்யேக வழியில் விரைய ஆரம்பித்தது அந்த விண்கலம்.

======================================


"யோகேந்த.. இந்த அண்டத்தில் எந்த இடையூரும் இல்லை.. ஏன்.. எதற்கு இந்த இந்தியன் கேலக்ஸி டிரான்ஸ்வே?"

"இல்லை. இந்த டிரான்ஸ்வே மூன்று லட்சம் ஒளிமைல் தூரம் வரை தான்.. அதற்கு மேல் நாம் செவ்வாய் கிரகத்தை பார்த்தபடி பயண தூரத்தை கடக்க வேண்டும். வழியில் இரண்டு இடங்களில் எரிபொருள் நிலையங்கள் இருக்கின்றன.. நாம் அங்கே கூட நிற்க தேவை இராது.. தேவைக்கு மேலேயே நம்மிடம் எரிபொருள் இருக்கிறது...இதை பாருங்கள்.. இங்கே தான் மஞ்சள் நிற ஒளிர்வுடன் இருக்கிறதே இது தான் இந்திய வல்லரசு அணுக்கழிவுகளை குவித்து வைத்திருக்கும் இடம். இது பழைய விண்கலங்கள் குப்பையாக கொட்டப்படும் இடம்.."

எதிரே ஸ்க்ரீனில் அண்டம் எனப்படும் பால்வீதியின் பிரம்மாண்டம் நீலமாக தண்ணீர் தெளித்தாற் போல ஒளிப்புள்ளிகளுடன் தெரிந்து கொண்டிருந்தது.

ஒரு அரை மணி நேரம் பின்

லேசர் போனில் தொலை தொடர்பு ஆள் தெரிந்தார்..

"உங்களுக்கு உங்கள் பழைய குறியீட்டில் ஒரு தகவல் வந்திருக்கிறது.. அதை உங்களுக்கு கனெக்ட் பண்ணலாமா?"

"நிச்சயமாக. காத்திருக்கிறேன்.. இணைப்பு கொடுங்கள்..."

அவர் மறைந்து சைலேஷ் தெரிந்தான்... அணைந்தான்...

தொலைதொடர்பு ஆள் மறுபடி தோன்றினார்.. "இணைப்பு துண்டித்து கொண்டது.. மன்னிக்கவும்"

"அவர் மறுபடி தொடர்பு கொண்டால் உடனே இணைப்பு கொடுங்கள்" என்று போனை கட் செய்தார்.

மேகலா அதே நேரம் யோகேந்திடம் ஏதோ கேட்டு கொண்டிருந்தாள்..

"என்ன யோகேந்த் என்ன நடக்கிறது இங்கே?"

"கருந்துளையை பற்றி மேகலா கேட்கிறார்கள்"

"கருந்துளையா?"

"ஆமாம்.. விண்வெளியில் உள்ள பல ஆபத்துகளில் ஒன்று..."

"ரொம்ப ஆபத்தானவையா என்ன ஆபத்து?

மேகலா கேட்டவுடன் சொல்ல ஆரம்பித்தார்..

"இதுவும் சூரியன் போல ஒரு நட்சத்திரம் தான்.. சூரியனை விட பெரிய நட்சத்திரம் என்று கூட சொல்லலாம்.. இவ்வாறான நட்சத்திரங்கள் அண்டத்தில் கோடிக்கணக்கில் உள்ளன.

இந்நட்சத்திரங்கள் காலப்போக்கில் தங்கள் ஒளி கொடுக்கும் எரிபொருள் தீர்ந்த நிலையில் ஒளியை இழக்க ஆரம்பித்து விடுகின்றன. ஆரம்பத்தில் இவற்றின் ஈர்ப்பு சக்தியானது பூமியை விட சிறியதாக தான் இருக்கும்.. எரிபொருள் தீர்ந்தவுடன் அவற்றின் சீதோஷணம் குளிர ஆரம்பிக்கும்.. அது தானே அழிய ஆரம்பிக்கும்...

அதனுள் இருக்கும் அணுக்கள் உடைந்து எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டானாக பிரியும்.. இப்படியாக அழிவை நொக்கி பயணித்து தான் இருந்த அளவை விட 100 மாங்கு சின்னதாக ஆகும்.. ஆனால் என்ன காரணத்தாலோ அதன் ஈர்ப்பு சக்தி 10000 மடங்கு அதிகமாகும்... மேலும் மேலும் எலக்ட்ரான் ரிபல்ஷன் என்று சொல்லப்படும் எலக்ட்ரான் தாக்குதல்கள் அதனுள் நடந்து ஈர்ப்பு அக்தி ஏலும் வலுவடையும்..

இப்படியாக நியூட்ரான் ஸ்டார் என்று சொல்லப்படும் நிலைக்கு வந்து 500 மடங்கு பழைய உருவத்தில் குறைந்து ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும்...அப்போது அதன் ஈர்ப்பு சக்தி 100,000,000,00 மடங்கு அதிகரித்திருக்கும். கடைசியாக ஒளி உமிழ்தலால் சக்தி இழப்பு ஏற்பட்டு மேலும் சிறியதாகி ஒரு கட்டத்தில் ஒளி கதிர்கள் வருவது கூட நின்று விடும்..

அப்போது இது கருப்பாக காணப்படுதால் கருந்துளை எனப்படும்.. இதன் ஈர்ப்பு சக்தியின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் காரணத்தால் நெருங்கும் எந்தப் பொருளையும் இழுத்து உள்வாங்கி கொள்ளும்.. அவ்வளவு தான் உள்ளே போன எதுவும் திரும்பி வரவே வராது...

இந்திய வல்லரசு அணுக்கழிவுகளை ரகசியமாக கருந்துளைக்குள் தள்ளி விடுவதாக கூட வதந்திகள் உண்டு..."

"நாம் போகும் வழியில் ஒரு கருந்துளை தெரியும்... இதோ தெரிகிறது பாருங்கள்..." என்று திரையில் ஒரு இடத்தை சுட்டி காட்டினார்...

வர்மா பேச்சை மாற்ற விரும்பியவராய்

"செவ்வாய் கிரகம் பூமியை விட குளிர்ந்த கிரகம் இல்லையா?" என்று கேட்டார்...

"நிச்சயமாக..ஆனால் நீங்கள் குடியேற போகும் மார்ஸ் இந்தியன் ஷெல்ஸ் செயற்கையான் முறையில் அணு கதிர்வீச்சால் பாதுகாப்பான முறையில் வெப்பமூட்டப் பட்டிருக்கிறது.. கவலையே இல்லை. செவ்வாய் கிரகத்தில் வாழ்க்கை முறை ரொம்ப எளிமையானது... அதிகமான மக்கள் தொகை கிடையாது... விஷேச எந்திர மனிதர்களின் காவல் 24 மனி நெரம் 37 நிமிஷங்களும் இருக்கும்... பூமியுடன் எந்த நெரமும் தொடர்பு கொள்ளலாம்... அதுவுமில்லாமல் செவ்வாய் கிரகம் யுத்தமில்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பது மற்றொரு வசதி..."

யோகேந்த் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அந்த லேசர் போன் கூப்பிட்டது...

திரையில் சைலேஷ் தெரிந்தான்...

ஆன் பண்ணியவுடன்

சிரித்தான்...

"புதிய இடத்துக்கு குடிபெயர்ந்து விட்டீர்களா வர்மா? பழைய குறியீட்டில் தாங்கள் இல்லையே?"

என்று ஆரம்பித்தான்..

"ஆமாம்" என்றார் குறும்பு சிரிப்புடன் வர்மா.

"நினைத்தேன்.. உங்கள் முதல் ஜாப் அபாரம்.. எங்கள் நிறுவன தலைவர் உச்சி குளிர்ந்து விட்டார்.. இரண்டாவது ஜாப் தரப்போகிறோம் நாளையே..."

"அப்படியா.. அந்த பொருளை என்ன தான் செய்தீர்கள்?"

ஆர்வ மிகுதியில் பக்க்த்தில் இருந்த யோகேந்தை மறந்தவராய் கேட்டார் வர்மா.

"நீங்கள் கொடுத்த இன்ட்ரூடர் வைரஸ்களில் எங்கள் விஷேச நிரலிகளை நிரப்பி எதிரி நிறுவன கணினி கேந்திரங்களை தாக்கி விட்டோம்... உங்களிடம் மறைப்பானேன்.. எதிரி நிறுவனத்தின் தானியங்கி வழிக்காட்டி நிரல்களை குழப்பி விட்டோம்... அவர்கள் எந்த கிரகத்துக்கு பயணம் புறப்பட்டாலும்... அவர்களுக்கு சரியாக போவது போல தான் தெரியும்... ஆனால் அவர்களுக்கே தெரியாமல்.... கருந்துளை என்று கேள்வி பட்டிருக்கிறீர்களா? சரி அது எதற்கு நமக்கு விடுங்கள்... நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேக்கு இன்று முதல் போதாத காலம்..."

அடுத்து சைலேஷ் சொன்ன எதுவுமே காதில் விழாமல் யோகேந்த் உடனடியாக ஆன் போர்டு கேமிராவை இயக்க திரையில் ஒரு கருப்பு வட்டம் பெரிதாகிக் கொண்டிருந்தது....

"ஹோ" என்று அலறிய படி மூவரும் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே

படு பயங்கரமான அந்த கருந்துளையின் ஈர்ப்பு விசையில் இவர்களின் விண்கலம் சிக்கிக் கொண்டது...

இதே போன்று ஈர்ப்பு விசையில் சிக்கி நுழைந்திருந்த பல்வேறு பாறைகள், குப்பைகள், துகள்களோடு வேக்மாக ஒரு சுழல் போல...

அனைத்தையும் தன் கருப்பு உடலுக்குள் இழுத்துப் போட்டுக் கொன்டிருந்த கருந்துளைக்குள்,

கிர்ரென்ற புயல் வேகத்தில் விண்கலம் செல்ல ஆரம்பித்து இருந்தது...

சுயநலச் சுழல் - பாகம் 1 (அறிவியல் சிறுகதை போட்டிக்காக)

அந்த மிக உயரமான 910 மாடி கட்டிடத்தின் 903-வது மாடியில் இருந்த அந்த ஆஃபீஸில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

சைலேஷ்- ஒரு மிகப்பெரிய கம்பெனியின் கம்ப்யூட்ட்ர் பிரிவு தலைவர். ஹார்மோன் பிறப்பு மூலம் பிறந்திருந்த அவரது உருவம் டாக்டர்களால் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருந்தது.

டி.என்.ஏ மூலக்கூறுகளை விஞ்ஞானிகள் படிக்க முடிந்தது ஒரு மிகப்பெரிய மருத்துவப்புரட்சி என்று இந்திய வல்லரசு சொல்லிக்கொண்டிருந்த நேரம் அது.

கி.பி.2220.

பூமியே ரசாயன போர்களால் அல்லோலோகப் பட்டிருக்கும் நேரம். சிதறி கிடந்த நாடுகள் ஒன்றாகி 7 வல்லரசுகளாகி பூமியையே ரணகளம் ஆக்கியிருந்த ஒரு இக்கட்டான நேரம்.

எங்கு நோக்கினும் சண்டை நடக்கும் பண்டைய காலம் போல் அல்லாமல் விஷேச உடை அணுகுண்டு பாதுகாப்பு உடை அணிந்து விஷேசமாக சண்டையிடுவதற்கென்றே உருவாக்கப்பட்டிருந்த வீரர்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி ரசாயன போர்கள் செய்து உலகின் ஒரு பக்கத்தில் தங்கி சண்டையிட்டு கொண்டிருந்தனர். மறுப்பக்கம் அமைதியான உலகம் அமைந்திருந்தாலும், ரசாயன போர்களின் பாதிப்புகள் அவர்களையும் அலைக்கழித்து கொண்டிருந்தன.

எய்ட்ஸ் போன்ற பண்டைய கால வியாதிகள் காற்றில் பரவக்கூடிய புதிய ரூபத்தில் வந்து மக்களை சேதப்படுத்திக் கொண்டிருந்தன.
ஏரியல் ட்ராஃபிக் (Arial Traffic) என்று சொல்லப்படும் வான்வழி போக்குவரத்து நெரிசலாகி விட்டிருந்தது. ஓஸோன் படலத்தை செயற்கையாக தயாரித்துப் படர விட்டிருந்தாலும் சூரிய அல்ட்ரா வயலட் கதிர்கள் தங்கள் கோர ரூபத்தை காட்டிக்கொண்டு தான் இருந்தன.

விண்வெளி நிலையங்கள் பல்வேறு கோள்களில் அமைக்கபட்டிருந்தன. செவ்வாய் கிரகம் மனிதர்கள் வாழும் இடமாகியிருந்தது. மனிதர்கள் பலர் அமைதி வாழ்வைத்தேடி த்ங்கள் கலங்களில் விண்வெளியில் சுற்றியலைந்துக் கொண்டிருந்தனர்.

செவ்வாய் கிரகத்தை இந்திய வல்லரசு கைப்பற்றி தங்கள் நாட்டவரை அங்கே குடி வைத்திருந்தது. இருந்தாலும் மணி ஆஃப் கேலக்ஸி (Money of Galaxy) என்று சொல்லப்படும் விண்வெளியில் உள்ள அனைத்து இடங்களிலும் செல்லும் பொதுவான பணத்தைப் பெற்றுக்கொண்டு பிறரையும் அனுமதித்தது. ஸிரா (Zira) என்று சொல்லப்பட்ட இந்த பணம் சர்வதேச பணம் மட்டுமல்ல சர்வ கிரக பணம்.

வேற்று கிரகத்தவருடன் பல்வேறு வகைகளில் தொடர்புக்கொண்டு நமது பால்வீதியின் பக்கத்து நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருந்த கோள்களில் ஒன்றில் காணப்பட்ட விண்வெளி மனித இனத்துடன் நட்பு பூண்டிருந்தனர், மனிதர்கள்.

பூமி வேகமாக காலியாகிக் கொண்டிருந்தது. பனிப்பொழிவு கடல் கொந்தளிப்பு பூமி சுற்றும் வேகம் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டிருந்த ஆபத்து இவைக் காரணமாக பூமியில் இன்னும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ முடியாது என்பதால் அனைவரும் வாழக்கூடிய கோள்களில் குடியேறிக் கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் நம் கதை துவங்குகிறது. 910 மாடி கட்டிடத்தில் பேசிக்கொண்டிருந்த மற்றொரு நபர், வர்மா.

"என்ன சொல்கிறீர்கள் சைலேஷ்? அந்த கம்ப்யூட்டர் வைரஸ்கள் ஆபத்தானவையாயிற்றே?"

"தெரியும் வர்மா! அதுவும் தெரியும்! நீங்கள் எப்படிப்பட்ட புத்திசாலி கம்ப்யூட்டர்களையும் ஏமாற்றி தகவல்களை அழிக்கக் கூடிய வைரஸ்களை படைக்கக் கூடியவர் என்பதும் தெரியும்! வைரஸ்களை அனுமதிக்காத கம்ப்யூட்டர்களையும் தாக்கும் வல்லமைப்படைத்த வைரஸ்களை நீங்கள் எங்களுக்காக உருவாக்கித்தர வேண்டும்..."

"மிஸ்டர் சைலேஷ்! உங்களுக்கு தெரியும்.. கம்ப்யூட்டர் வைரஸ்கள் த்யாரிப்பது கம்ப்யூட்டர் சட்ட்த்தின் கீழ் மரண தண்டனை வழங்கும் அளவுக்கு கொடிய குற்றம்.. காரணம் கம்ப்யூட்டர்கள் இல்லாவிட்டால் இந்த உலகத்தில் குழந்தை கூட பிறக்க முடியாது... அதுமில்லாமல் வீட்டுக்கு வீடு, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது... மிக ஆபத்தான விஷயம்...."

அவர் தயங்கி தயங்கி இழுப்பதை பார்த்த சைலேஷ் சிரித்தான்..

"நீங்கள் எங்கு வருகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எவ்வளவு ஸிரா வேண்டும் என்பது உங்கள் விருப்பம்... அந்த வைரஸ்களை எம்ப்டியாக 5000 எண்ணிக்கையில் தயாரித்து தரவேண்டும் உடனடியாக... ஒரு 5 லட்சம் பைட்கள் பிடிக்கும் அளவிற்கு ஒவ்வொரு வைரஸும் இருக்க வேண்டும்...தாய் வைரஸ்கள் 2000 இருந்தால் கூட போதும்.. நான் லேசர் போனில் தடர்பு கொள்கிறேன். உங்களுடைய திறமைக்கு எங்கள் கம்பெனி கடமைப்பட்டதாகும்...இன்த ஜாபை வெற்றி கரமாக முடித்துக் கொடுத்தால் இன்னும் மூன்று ஜாப்கள் தருவோம்.வருகிறேன் மிஸ்டர் வர்மா" என்று பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பினார்...

மனிதக்காற்று சமீபிப்பதை அறிந்த ஏர் சென்சார் ஒர்க்கில் கதவு தானாக திறந்தது. வெளியேறியவுடன் மூடியது...

வர்மா எழுந்து ரிலாக்ஸ்டாக ஃப்ரீ மைண்ட் நாற்காலியில் அமர்ந்தார். உடனே அறையில் அவருக்கு பிடித்த மென்மையான இசை அறையில் பரவியது...

தொடர்ந்து பக்கத்து அறையிலிருந்து அவரது இப்போதைய லைஃப் பார்ட்னர் மேகலா வந்தாள்.

"வர்மா.. என்ன சொன்னார் சைலேஷ்"

"சைலேஷ் நமக்கு எவ்வளவு ஸிரா வேண்டுமானாலும் தர தயார்...அவருக்கு அந்த வைரஸ்கள் தயாரித்து தர வேண்டுமாம்"

"வர்மா இதை விட நமக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது! செவ்வாய் கிரகத்தில் குடியேற நமக்கு தேவைப்படும் 7 மில்லியன் ஸிராவையும் இந்த ஒரே ஜாபில் சம்பாதித்து விட முடியும்.. நாம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருக்கும் 16 மில்லியன் ஸிராவை தாராளமாக செலவு செய்து வாழலாம்.. இன்று இரவு முழுவதும் வேலை செய்தாலே போதும் அவ்ர்கள் கேட்கும் வைரஸ்களை தயாரித்து விட முடியும்..."

வர்மா மௌனமாக தலையாட்டினார்.

உடனே தன்னுடைய பிரத்யேக லேபில் வைரஸ் தயரிக்க கிளம்பினார்..

==============================

மறுநாள்

வர்மா அந்த மெகா டி.வி.யில் த்ரீ.டீ என்று சொல்லப்படும் முப்பரிமாண தொலைக்கட்சியில் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தார்.
பாடிக்கொண்டிருந்த டி.வி பெண் த்ரீ டீ எஃபக்ட்டில் நெருங்கி நெருங்கி வந்தாள். அவரை சுற்றி சுற்றி பாடினாள். அவர் தலைக்கு மேல் தாவினாள்.

அப்போது அந்த உருவம் திடீரென ஒரு மூலையில் தெரிந்தது. அது சைலேஷ். லேசர் போனில் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

அவன் உருவம் முதலில் தெரிந்தவுடன் இவர் கனெக்ஷனை ரிசீவ் செய்யும் பட்ட்னை ரிமோட்டில் தட்ட, இவர் உருவம் அங்கே தெரிந்தவுடன் சைலேஷ் புன்னகைத்தான்.

டி.வி.யை அணைத்தார், வர்மா.

"என்ன சைலெஷ்? எப்படியிருக்கிறது பொருள்?"

"சூப்பர்.... நன்றாக வேலை செய்கிறது. எங்கள் கம்பெனிக்கு நீங்கள் செய்த உதவிக்கு எங்கள் கம்பெனி செய்யும் பதிலுதவி... லேசர் பிரிண்டரை ஆன் பண்ணுங்கள் வர்மா.."

என்றவுடன் ரிமோட்டில் அந்த போனின் அருகிலிருந்த பிரிண்டரை ஆன் செய்தார் வர்மா.

சைலேஷ் பட்டனைத் தட்டியவுடன் பிரிண்டர் வேலை செய்தது.
'உய்ய்ய்' என்ற மெல்லிய உறுத்தாத உறுமல். தொடர்ந்து அந்த கார்டு அவர் கைக்கு வந்தது.

10 மில்லியன் ஸிராவிற்கான காசோலை கார்டு.

எல்லா நிதியமைப்பிலும் செல்லுபடியாகும் ப்ளூட்டோனியம் கார்டு. பரவசமானார் வர்மா.

"உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சைலேஷ்..இவ்வளவு பணத்தை கொடுக்குமளவு பெரிய கம்பெனி.. அது என்ன கம்பெனி சொல்லுங்கள் சைலேஷ்?"

"சொல்கிறேன் வர்மா... இப்போதல்ல... நாளை மறுநாள் இரண்டாவது ஜாபை ஒப்படைக்கும் போது... அதுவரை பை பை"

அவனது உருவம் மறைந்தது. வர்மா மேகலாவை அழைத்தார்.

"மேகலா 10 மில்லியன் ஸிரா கிடைத்திருக்கிறது... ஹே... நாம் உடனே செவ்வாய் கிரகம் போகிறோம்.. நான் இப்போதே டிராவல் ஏஜன்ஸி ஒன்றை தொடர்பு கொள்கிறேன்.. பாவம் சைலேஷ்.. இரண்டாவது ஜாபை ஒப்படைக்கிறேன் என்றான்.. சரி என்று சொல்லி விட்டேன்.. அவன் அடுத்த முறை தொடர்பு கொள்ளும் போது நாம் விண்வெளி கலத்தில் இருப்போமோ, செவ்வாய் கிரகத்தில் இருப்போமோ தெரியவில்லை.. ஆனால் தொடர்பு கொண்டு விட முடியும்.. நாம் தான் அவனுக்கு உதவ முடியாது..."

"வர்மா.. நான் ஏரியல் ஷாப்பிங்கில் நமக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன்.. நீங்கள் நீல் ஆகாஷ் கேலக்ஸி டிரான்ஸ்வேக்கு போய் நம் நண்பர் யோகேந்தை காண்டக்ட் பண்ணுங்கள்"

என்று சொல்லிவிட்டு பரபரப்பாக கிளம்பினாள்..

வியாழன், ஜூலை 24, 2008

சென்னையின் மர்மக்கொலைகள்

சென்னையில் கடந்த சில மாதங்களாக எல்லோரது தூக்கத்தையும் கெடுத்து வருவது சைக்கோ கொலைகாரன் பற்றிய பீதி...

பரபரப்பு செய்திகளை காசு பண்ணும் பத்திரிகைகள்...

தூக்கமிழந்த ஊர்காவல் படையினர், காவல் துறையினர்...

திடீர் ஹீரோவாக ரோந்து சுற்றி வரும் இளவட்டங்கள்...

ஒதுங்க இடமின்றி அலையும் சென்னையின் பரிதாபத்தற்குரிய நடைபாதை வாசிகள்,

அநாதை சிறுவர்கள், பிச்சைக்காரர்கள், பேப்பர் பொறுக்கும் வேலை செய்வோர்...

தெருவில் படுத்துறங்கும் வெளியூர் தொழிலாளிகள்... என்று

பகட்டான மனிதர்கள் முதல் பரிதாபத்துக்குரிய மனிதர்கள் வரை அனைவரின் அன்றாட சாதாரணமான வாழ்வியலை ஏதோ ஒரு வகையில் பாதித்துக் கொண்டு இருக்கிறது...

இத்தனை கொலைகள் நடந்தும் ஏன் இன்னும் கொலைகாரனை பிடிக்கவில்லை என்று எல்லா தரப்பும் போலீசை சாடிக் கொண்டிருக்கின்றனர்....

சென்னையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான வீதிகளில், படுத்துறங்கும் லட்சக்கணக்கான மனிதர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது என்பது நடவாத செயல்... நடைமுறையில் சாத்தியம் இல்லையும் கூட...

சைக்கோ கொலைக்காரன் பேரில் வேறு யாராவது முன்விரோதத்தில் கொன்றிருப்பார்களோ என்பதில் ஆரம்பித்து, தடயங்கள் சேகரித்தல், விசாரணை என்று ஒரு கொலைக்கே போலீசாரின் உயிர் போய் விடும்... இதில் இது வரை 8 கொலைகள் நடந்துள்ளது... நிச்சயம் அவ்வளவு சுலபத்தில் விசாரணையை முடித்து விட முடியாது..

இதில் மீடியாக்களின் பிரஷர், அரசாங்கத்திலிருந்து பிரஷர்... என்ன தான் செய்யும் போலீஸ்...

எல்லா TV-களிலும் பேட்டி அளிக்கும் பொது மக்கள் அனைவரும் போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை ஒரு ஸ்டாண்டர்ட் கேள்வியாக கேட்பதை பார்த்தால் வெறுப்பாக இருக்கிறது...

நம்மை சுற்றியுள்ள சமூகத்தில் நடைபெறும் தவறுகளை தட்டிக்கேட்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது... குறைந்தபட்சம் நாம் பாதிக்கப்படும் போதாவது எதிர்த்து குரல் கொடுக்க பழகிக்கொள்ள வேண்டும்...

நம் அண்டை வீடுகளில், நம் தெருவில் வசிப்பவர்கள் யார் யாரென நாம் தெரிந்து வைத்துக்கொண்டாலே பல சிறு குற்றங்களை தடுத்து விடலாம்.. சிறு குற்றங்கள் தான் பெரும் திருட்டு கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு அடிப்படையாக அமையும்....

மக்களுக்கு குற்றங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு, வாழும் மனிதர்களுக்குள் ஒற்றுமை, பிறருக்கு உதவி செய்யும் மனிதநேய மனம் இவை ஏற்படும் வரை போலீசாருக்கு அதிக வேலை இருந்து கொண்டு தான் இருக்கும்...

புதன், ஜூலை 23, 2008

குதிரை பேரமும், குப்பனும் சுப்பனும்

MP-கள் தேர்தலில் குதிரை பேரம்- MP-களுக்கு 50 கோடி வரை லஞ்சம் (பத்திரிகை செய்திகள்)

அந்தாளு அப்பாவி வியாபாரி போல... டெல்லியில குதிரைப்பேரம் நடக்குதுன்னு பேப்பர்ல படிச்சுட்டு தன் குதிரையெல்லாம் லாரியில ஏத்தி விக்க கொண்டு வந்துட்டாராம்...

அப்புறம் தான், அடடா… நடந்தது கழுதை பேரம்னு தெரிஞ்சு வருத்தப்பட்டாராம்....




சே.. இப்படி ஆகி போச்சே... காங்கரசுக்கு பதிலா ஆட்சியில பி.ஜே.பி இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?

ம்ம்... பி.ஜே.பி அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிச்சு இருக்கும்.. காங்கிரஸ் எதிர்த்து இருக்கும்... என்னடா நாட்டு நடப்பு தெரியாம கேள்வி கேட்டுக்கிட்டு?




நம்பிக்கை வாக்கெடுப்பு முடிஞ்சு போச்சு.. இனிமே என்னண்ணே ஆகும்

புடிச்சு கட்டி வெச்சிருந்த எம்.பிங்களை அவுத்து விட்டுருவாங்க... ஜெயில்ல இருந்து கூட்டிட்டு வந்த MP-ங்க தப்பிச்சு போகாம இருந்தா மறுபடியும் கொண்டு போய் ஜெயில்ல போட்ருவாங்க... கட்சி மாறி ஓட்டு போட்டவங்களுக்கு அவங்கவங்க கட்சி கல்தா கொடுக்கும்...2-3 கட்சி உடையும், எப்படியும் மினிமம் 10 பேரு அணி மாறுவாங்க... நிறைய வேலை இருக்கும்பா...




ஏன் அந்த MP-கள் எல்லாம் ஆளுங்கட்சி அமைச்சரை சுத்தி நின்னு கத்தி கலாட்டா பண்ணிட்டு இருக்காங்க?

5 கோடி பணம் மட்டுமில்லாம அதை பத்திரமா கொண்டு போக ஆளுக்கு 5 கேடியும் சப்ளை பண்ணனும்னு கேட்டு தகராறு பண்றாங்க...…




செய்திய ஒழுங்கா கேக்குறானுங்களா? கம்முனாட்டிங்க... காதை மூடி கேட்டுட்டு கண்டபடி கதை கட்டி விட்டுடுறானுங்க...

என்னாச்சுப்பா?

எம்.பிங்க ஓட்டு போடறதுக்கு 5 கோடின்ற செய்தியை அரைகுறையா கேட்டுட்டு.. வரப்போற எம்.பி தேர்தல்ல ஓட்டு போட 5 கோடி தர்றாங்களாம்னு எவனோ ஊதி விட்டுட்டான்.. என் தாத்தா மாரை பிடிச்சுட்டு சாஞ்சுட்டார்...




நாங்கள் MP-களை விலைக்கு வாங்கவில்லை...

மக்கள்-
பாவிங்களா... விலை என்னன்னு போஸ்டர் ஒண்ணு தான் அடிக்கலை.. பக்கத்துல இருந்துக்கிட்டு தொகுதி பக்கம் கூட வராத அத்தனை பயலும் பின்னே அங்கே எதுக்கு வந்தானுங்க?...

விலைக்கு வாங்கவில்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்? ஓஹோ....அவங்க விலை அதிகம்… படியாதுன்னு தான் ஒரு நாள் வாடகைக்கு எடுத்துக்கிட்டீங்களா? சூப்பர்ங்க... MPங்கல்லாம் ஹயர் சைக்கிள் மாதிரி ஆயிட்டாங்க...




எங்கள் வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி...

யோவ் பேசிக்கினே காந்தி சிலையாண்ட போய்க்கினு கீற பாரு... சிலை கையில தடி கீது.... ஜாக்கிரதை




2 தமிழ்க்கட்சி MPங்க கொறடா கட்டளையை மீறி கட்சி மாறி ஓட்டு போட்டங்களாமே... ப்தவி பூடாது?

டேய்... விஷயம் புரியாத ஆளாருக்கியே? இன்னும் 6 மாசம் அப்புறம் தேர்தல் வரப்போது.. எப்படியும் கட்சியில இருந்து கல்தா கொடுத்துட்டாங்க... 6 மாசத்துல பெரிசா என்னத்தை சம்பாதிச்சிட முடியும்?...அதான் வந்த வரை லாபம்னு செட்டில் ஆயிட்டாங்க போல...


இவரு கட்சி கொறடா சரி... அவரு யாருப்பா?

அவரு கட்சி மொறடா சார்... நம்பிக்கை வாக்கெடுப்பு முடியற வரை MP-களை கடத்தி கொண்டு வந்து மொறட்டுத்தனமா கட்டிப்போட்டு வெச்சுடுவாரு சார்...

அவரு?

அவரா? அவரு கட்சி தொறடா... மத்த கட்சி MP-ங்களுக்கு பணப்பொட்டிய தொறந்து தொறந்து காட்டி நம்ம பக்கம் இழுப்பார்...




ஏன் எல்லா கூட்டணி தலைவர்களும் வாழ்த்து சொல்ல நேர்ல போறாங்க?

பண விஷயத்துல எப்பயுமே கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்



திங்கள், ஜூலை 21, 2008

அங்கிள் சாமும், அறிவிக்கப்பட்ட மின்வெட்டும்

எப்படியோ அறிவிக்கப்படாத மின்வெட்டை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாய் அறிவிக்கப்பட்ட மின்வெட்டாய் மாற்றி விட்டார்கள்...

ஒரு மணி நேரத்துக்கு அதிகமாய் கரண்ட் கட் இருக்காது என்ற உத்திரவாதமாவது இதன் மூலம் இருக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்....

இதில் புதிதாய் கிளம்பியுள்ள இன்னொரு புரளி தமிழகத்தில் எப்போதும் பழக்கத்தில்(?) இல்லாத அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இப்போது மட்டும் ஏன்?

தமிழகம் அல்லாது பல மாநிலங்களிலும் இதே போல மின்வெட்டு நடைமுறையில் இருக்கிறது... ஏன்?

நம் ஆட்சியாளர்களுக்கு புதிதாக ஏற்படப்போகும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திண்ணமாய் ஒரு காரணம் வேண்டும்....

புள்ளி விவரங்கள், எதிர்கால கணிப்புகள் விஞ்ஞானிகளையும், பொருளாதார அறிஞர்களையும் வேண்டுமானால் திருப்தி படுத்தலாம்.. ஆனால் மக்கள்? அவர்களுக்கு விளங்க வைக்க ஒரே வழி மின்வெட்டு தான்....

இந்தியாவின் மின் தேவையின் எதிர்காலத்தை மக்களுக்கு புரிய வைக்க தேர்தலை கூட மனதில் வைத்துக் கொள்ளாமல் மின்வெட்டு அறிவிக்குமா அரசாங்கங்கள்?

இந்த அணுசக்தி காண்டிராக்ட் 50000 கோடி மதிப்புள்ளது... அது கைக்கு கிடைத்தாக வேண்டும்... அணு ஒப்பந்தத்தை ஆதரித்தால் மீண்டும் ஆட்சி அமைக்க சி.ஐ.ஏ உதவி செய்வதாக கூட வாக்களித்து இருக்கலாம்....(சி.ஐ.ஏ இது போன்ற காரியங்களுக்கு பெயர் போனது.. யாருக்கு தெரியும் வலைப்பூக்களை கூட ட்ரான்ஸ்லேட்டர் வைத்து கண்காணித்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...)

உண்மையில் நம் நாட்டில் மின்வெட்டு கொண்டு வரும் அளவிற்கு மின் பற்றாக்குறை இல்லையாம்...

இப்படி போகிறது அந்த புரளி...

எது உண்மையோ, எது நன்மையோ ஆண்டவனுக்கே சாரி... அங்கிள் சாமுக்கே வெளிச்சம்...

ஞாயிறு, ஜூலை 20, 2008

மழலை சிரிப்பின் மாயம்...

நான் சமீபத்தில் வலை மேய்ந்து கொண்டிருந்த போது இந்த வீடியோக்களை பார்க்க நேர்ந்தது...

குழந்தையின் சிரிப்புக்கு தான் என்ன சக்தி... மனம் அப்படியே லேசாகி விடுகிறது... இரண்டு வீடியோவையும் இறக்க்ம் செய்து வைத்துக் கொண்டேன்.. இப்போதெல்லாம் டென்ஷன் மிகுந்த வேலையின் நடுவே இந்த வீடியோக்களை பார்க்க தவறுவதில்லை நான்....

அப்பா கொடுக்கும் வித்தியாசமான சப்தத்துக்கு.. மூச்சு முட்ட சிரிக்கும் குழந்தை...



அப்பா கொடுக்கும் வித்தியாசமான சப்தத்துக்கு.. மூச்சு முட்ட சிரிக்கும் குழந்தை...



உலகத்தில் உள்நாட்டு கலவரங்களும், போர் அபாயத்தில் சிக்கி கிடக்கும் நாடுகளிலும் ஊர்களிலும் இது போன்ற கள்ளமில்லா குழந்தைகள் இருக்குமில்லையா?

ம்ம்ம்ம்... நினைத்தால் மனது பாரமாக தான் இருக்கிறது.. அந்த பாரத்தை போக்கி கொள்ளவும் இந்த வீடியோவை தான் பார்க்க வேண்டியிருக்கிறது....

PKP-யின் பயனுள்ள பதிவுகள்...

PKP

இவருடைய பதிவுகளுக்கு அறிமுகம் தேவை இருக்காது என்றே நினைக்கிறேன்.. என்றாலும் புதியவர்களின் வசதிக்காக இந்த பதிவு...

www.pkp.blogspot.com

என்ற blog முகவரியில் இயங்கி வரும் நண்பர் PKP-யின் பிலாகைப் பற்றி எனக்கே 2 வாரம் முன்பு தான் தெரிய வந்தது...

மிக எளிய மொழி நடையில், அருமையான உதாரணங்களோடு பல புதிய தொழில்நுட்பங்களைப் பற்றியும், புதிய கணினி விஷயங்களையும் அருமையாக விளக்குகிறார்...

4 வருடங்களாக இவர் பதிவிட்டு வருகிறார்... 2004-ம் வருடம் 71 பதிவுகள் ஆரம்பித்து 2006-ல் 207, 2007-ல் 224 எனப் பதிவுகளாக எழுதிக் குவித்து இருக்கிறார்... இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையான பதிவுகள் நமக்கு புதிய விஷயங்களை அறிமுகப் படுத்தும் விதமாகவும், நமக்கு உதவிகரமான கணினி டிப்ஸ் பதிவுகளாக இருப்பதும் தான்....

கணினி அறிமுகம் அதிகம் இல்லாதவர்களுக்கும் புரியும் விதமாக சுவாரஸ்மான தகவல்களை தருவது அருமை... இதில் இன்னும் சிறப்பு நிறைய தமிழ் மின்னூல்களும் தேடிப் பிடித்து பதிவிறக்கம் செய்ய தோதாக இணைப்புகள் கொடுக்கிறார்....

இன்னும் முடிந்து விடவில்லை... பயனாளர்களின் டெக்னிக்கல் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவே ஒரு FஓறூM ஒன்றையும் நடத்தி வருகிறார்...(இதை நான் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை).. http://wiki.pkp.in/forum:start


பொதுவாக நான் வாரம் ஒரு பதிவரை தேர்ந்தெடுத்து கூகிள் ரீடரில் இணைத்து படிக்க ஆரம்பிப்பேன்... PKP அவர்களின் இடுகைகளை 2 வாரமாக படித்து வருகிறேன்... நிறைய பயனுள்ள தகவல்கள் இருக்கின்றன...

நேரம் ஒதுக்கி அவசியம் அவர் பதிவுக்கு ஒரு முறை சென்று பாருங்கள்....

PKP தங்கள் பணி மேலும் வளர, சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

எனது பதிவில் தங்களின் பதிவுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்... அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்....

நன்றியும்.. வாழ்த்துக்களும்...

வியாழன், ஜூன் 26, 2008

க்ரெடிட் கார்டும் கிரகம் பிடிச்ச ஏஜெண்டுகளும்

நீங்கள் உலக மகா முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது வேலையில் மூழ்கி இருக்கும் போது க்ரெடிட் கார்டு, இன்சூரன்ஸ், பெர்ஸனல் லோன், க்ளப் மெம்பர்ஷிப் இப்படி தமிங்கலத்தில் பேசி உங்களை திணறடிக்கும் அழைப்புகளின் போது உங்களுக்கு என்ன தோன்றும்?

உங்கள் தெள்ளுத்தமிழ் பெயரை பிய்த்து காக்காய்க்கு போட்டு அழைத்து, உங்களை அலைபேசியில் விடாமல் துரத்தும் குரல்களை கேட்கும் போது என்ன தோன்றும்?

வெவ்வேறு சந்தர்ப்பத்தில் இந்த அழைப்புகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதைப் பற்றி ஒரு கற்பனை...


ஹலோ....
சார் நாங்க XXX பேங்கல இருந்து கால் பண்றோம்...
உங்களுக்கு க்ரெடிட் கார்டு ஆஃபர் பண்ணியிருக்காங்க...

அப்படியா? நொ ப்ராப்ளம்...உடனே அனுப்பி வைங்க... யூஸ் பண்ணிக்கறேன்...பில்லை நீங்களும், உங்க மேனேஜரும் சேர்ந்து கட்டிடுங்க....




சார் நாங்க.. XXX பேங்க்ல இருந்து பேசறோம்... உங்களுக்கு லோன் ஏதாவது தேவைப்படுதா?

ஆமா தேவைபடுது... அட்ரஸ் தரேன்.. உடனே மணியார்டர் பண்ணிடுங்க....




சார் தேவநாதன் சாருங்களா?

இல்லை... அவரோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட மச்சினி புருஷனோட சகலபாடி பேசறேன்... என்ன விஷயம்னு சொல்லுங்க...




சார் கிருஸ்ணன் சார் இருக்காருங்களா?

இல்லைங்க... அவன் பக்கத்து வூட்டுக்காரன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஓடி போயிட்டான்... போற அவசரத்துல செல்லை விட்டுட்டு போயிட்டான்.. சொல்லுமா என்ன வேணும்?




சார் புது இன்சூரன்ஸ் ஸ்கீம் ஒண்ணு வந்திருக்கு... அதை பத்தி உங்கக்கிட்ட ஒரு 5 நிமிஷம் பேசலாமா?

அந்த நாயோட ஏஜண்டா நீ? கம்முனாட்டி லேடீஸ் காலேஜ் வாசல்ல ஈவ் டீசிங்க் பண்ற நாய்க்கு இன்சூரன்ஸ் ஒரு கேடா? 15 நாள் ரிமாண்டுக்கு அப்புறம் வெளிய வந்தான்னா பேசிக்க... வை ஃபோனை....




சார் ஒரு க்ளப் மெம்பர்ஷிப் பத்தி உங்களுக்கு எக்ஸ்ப்ளெயின் பண்ணலாமா?

பண்ணுங்களேன்... உங்க க்ளப்புல, சீட்டாட்டம், காபரே இதெல்லாம் இருக்கா? காபரே பார்க்க ஃபேமிலியோட வரலாமா? குழந்தைகளுக்கு ஏதாவது டிஸ்கவுண்ட் தருவீங்களா?




உங்க க்ரெடிட் கார்டு பேஸ் பண்ணி உங்களுக்கு 1 லேக் லோன் எலிஜிபிலிட்டி கொடுத்திருக்காங்க...

1 லேக் எல்லாம் பத்தாதுமா.... என் பையன் வாங்கியிருக்கிற மார்க்குக்கு இன்ஜினியரிங் சீட் வாங்கனும்னா உங்க பேங்கை கொள்ளை தான் அடிக்கணும்... அட்ரஸ் தர்றீங்களா?




சார் உங்களுக்கு 2 லேக்ஸ்க்கு மேல லோன் வாங்கற ஐடியா இருக்கா?

இப்போதைக்கு கைமாத்தா 100 ரூபா வாங்கிர ஐடியா தான் இருக்கு... சைட் டிஷ்க்கு குறையுது... உனக்கெல்லாம் யாரும்மா நம்பர் தராங்க? ..... தண்ணியடிக்க கூட வுடாம நொய்யி நொய்யின்னு... வைம்மா?




சார்... ரஞ்சித் சாருங்களா? சார் நாங்க டீமாட் அக்கவுண்ட் ஓப்பன் பண்றோம்....

ஓ... அதுக்கு நான் ஃபைனான்ஸ் பண்ணனுமா? முன்னாடியெல்லாம் திருப்பதி உண்டியில போட பணம் கேட்டு வீட்டுக்கு நாமம் போட்டுக்கிட்டு நேரா வந்துக்கிட்டு இருந்தீங்க... இப்பல்லாம் ஷேர் மார்கெட்ல பணம் போட போன் போட்டு கலெக்ஷன் பண்றீங்களா?... வேலையைப் பார்த்துக்கினு போய்யா...




செவ்வாய், ஜூன் 24, 2008

கேபிள் கனெக்ஷனும் கேணப்பய மக்களும்

என்னடா பக்கதுக்கு ஒண்ணா ஹால்ல மூணு TV வெச்சு பாத்துட்டிருக்கே? எந்த சீரியல் பார்க்கிறதுன்னு உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதாவது பிரச்சினையா?

அட நீ ஒண்ணு... வேற வேற கட்சி கேபிள்காரங்க மிரட்டி ஆளுக்கு ஒரு செட் டாப் பாக்ஸ் கொண்டு வந்து வெச்சுட்டு பொயிட்டாங்க.. எப்படி சந்தா கட்டரதுன்னு தெரியாம முழி பிதுங்கி உக்காந்திருக்கேன்...




உங்க வீட்டுல எதுக்குடா ரெண்டு கேபிள் கனெக்ஷன் வாங்கியிருக்க?..

ஒண்ணுத்துல சன் TV தவிர எல்லா சேனலும் வரும்... அடுத்ததுல சன் TV மட்டும் வரும்....




ஏங்க ரெண்டு நாளா கேபிள் கட் ஆயிருக்கே... கேபிள் ஆபிஸுல புகார் கொடுத்தீங்களா? இல்லையா?

அடி போடி... அவனுக்கே யார்ட்ட இருந்து கனெக்ஷன் வருதுன்னு தெரியலையாம்... நாலஞ்சு MSO-க்கு சொல்லி விட்டிருக்கானாம்... பார்க்கலாம்...




கேபிளை அரசு ஏற்று நடத்தும் அரசு ஏற்று நடத்தும்னு தலைவர் அறிக்கை விட்டதை நம்பி ஏமாந்துட்டேங்க...

ஏன் என்னாச்சு....

அரசு ஏற்று நடத்தும்னு பார்த்தா கடைசியா தலைவரோட அக்கா பையன் அரசு கேபிளை ஏற்று நடத்தறான்...




ஒரு பேரன் சினிமா எடுக்கிறார்... ஒருத்தர் புதுசா கேபிள் நடத்தறேன்னு உயிரை எடுக்கிறார்... ஒரு பேத்தி மாநாட்டுல அரசியல் வாதியா அவதாரம் எடுக்கிறார்...
எக்ஸ் பேரன் மறுபடி அமைச்சராக முடியுமான்னு தாத்தா வீட்டுக்கு படை எடுக்கிறார்... மக்கள் என்னயா பண்றது?

வழக்கம் போல பிச்சை எடுக்க வேண்டியது தான்...




சார் என் வீட்டுல TV இல்லை... உங்களுக்கு வீட்டுக்கு ஒரு இணைப்பு கண்டிப்பா கொடுக்கனும்னு ரேடியோவுக்கு கேபிள் கனெக்ஷன் கொடுத்துட்டு காசு கேட்டு மிரட்டுறது நல்லாயில்லை...




1 கோடி ரூபாய்க்கு இன்ஸ்யூர் பண்ணியிருக்காரா யார் அவரு? ஸ்டண்ட் மேனா?

இல்லைங்க.. அதுக்கும் மேல ரிஸ்கான தொழில் பண்றார்... கேபிள் TV நடத்தறார்...




எங்கிட்ட ஏற்கனவே செட் டாப் பாக்ஸ் இருக்குங்க...ஏன்யா இப்படி மிரட்டி இன்னொரு செட் டாப் பாக்ஸ் வாங்கிக்க சொல்றீங்க இது நியாயமா?

அந்தம்மா ஆட்சிக்கு வந்தா TVயும் சேர்த்து வாங்கிக்க சொல்லும்.... அய்யாவுக்கு எப்படி வசதி?




ஏங்க உங்க அய்யாவை பத்தி உயர்வா அந்த வெளிநாட்டு நியூஸ் TVல காட்டிட்டாங்கிறதுக்காக எல்லா சேனல்லயும் அதே TV-ய காமிக்கிறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க.....




ஏம்பா நல்ல வருமானம் வர்ற முக்கியமான தொழில்(கேபிள், சாராயம், மணல் எடுத்தல்) எல்லாத்தையும் அரசாங்கமே ஏத்து நடத்துது?

முன்னாடியெல்லாம் அரசாங்கம்னு சொன்னா கட்சின்னு அர்த்தம்... இப்ப எல்லாம் அரசாங்கம்னா குடும்பம்னு அர்த்தம்டா... அதான்...




இன்றைய பஞ்ச்

எப்படி தலைவர்கள் எல்லாம் கோடி கோடியாக சேர்க்கிறார்கள் என்று ஒரு தொண்டனுமே கேள்வி கேட்பதில்லை... அவன் பங்கு பத்து ரூபாய் ஒட்டு போடும் போதே அவனுக்கு கிடைத்து விடுகிறதே......


வியாழன், ஜூன் 19, 2008

அரசியலும் அல்பாயுசான கொள்கைகளும்...

ஒவ்வொரு அமைப்பும், அமைப்பு சார்ந்த இயக்கமும் சில கோட்பாடுகளினாலும், தத்துவங்களினாலும் துவக்கப்பட்டு, அந்த பொருள், கோட்பாடு, கொள்கை, தத்துவம் வழி நடக்கும்.

அரசியல் கட்சி என்பதும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் சில கொள்கைகள் இருக்கும்... அக்கொள்கைகளை நோக்கிய பயணமாகவே கட்சியின் நடவடிக்கைகள் அமைய வேண்டும். ஒரு வேளை கட்சி வழி மாறி பயணிக்கும் எனில் கேள்வி கேட்க உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு. மக்களுக்கும் ஓட்டளித்தவர்கள் என்ற முறையில் அவ்வுரிமை உண்டு. ஏனெனில் கட்சியின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு தான் கட்சிக்கு அவர்கள் வாக்கு அளிக்கிறார்கள். (?).அப்படியிருக்க கொள்கை மாறுவது துரோகம் இல்லையா?

கொள்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவம் பற்றி சில மலரும் நினைவுகள்...

ஜெயலலிதாவுடன் இ.காங்கிரஸ் கூட்டு செருவதை எதிர்த்து மூப்பனார் அவர்களால் துவங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியில் அவருடனே கூட்டணி அமைத்து போட்டியிட்டது....

கலைஞர் குடும்ப அரசியல் செய்வதாக கூறி வெளியேறி ம.தி.மு.க ஆரம்பித்த வை.கோ திரும்ப கலைஞருடனே கூட்டு வைத்துக் கொண்டது....

கடவுள் மறுப்பு இயக்கங்களான தி.மு.கவும், அ.தி.மு.கவும் மாறி மாறி மத வெறி கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது...

உயர்சாதி மனப்பான்மைக் கொண்ட வன்னியர்களை எதிர்ப்போம் என்று குரல் கொடுத்து வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சகோதரர்கள் அவர்களுடனே கூட்டணி அமைத்தது...

Secularist காங்கிரஸுக்கு socialist இடது சாரிகள் ஆதரவு அளிப்பது...

பிரச்சினை அடிப்படையிலான அரசியல் என்ற பெயரில், கொள்கைகளை காற்றில் பறக்க விடும் அரசியல் கட்சிகள் இன்னும் என்னென்ன செய்ய போகின்றன?

இவ்வளவு கொள்கை மீறல்கள் நடக்கிறது... ஏன் யாருமே கேள்வி எழுப்புவதில்லை? கண்டுக்கொண்டதாக கூட தெரியவில்லை?

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி சொல்வதைப் போல மக்களை பழக்கி வைத்து இருக்கிறார்கள்...

சரியான தலைவர் அடையாளப்படுத்த படாவிட்டால் கலைஞருக்கு பிறகு தி.மு.க உடையும் சூழ்நிலை உருவாகலாம். அப்படி நடந்து விட்டால் யார் கண்டது அ.தி.மு.க - தி.மு.க கூட்டணி கூட சாத்தியமே.

விஜயகாந்த்-மு.க.அழகிரி கூட கூட்டணி அமைக்கலாம்...

பணமும் பதவியும் கிடைக்கும் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?

நம் தலையெழுத்து... இருக்கும் பல திருடர்களில் ரொம்ப கம்மியா திருடும் திருடனாய் பார்த்து ஓட்டளிக்க வேண்டிய நிலை தான் எப்போதும் இருக்கும் போல இருக்கிறது....




ஏதாவது அத்தியாவசிய பொருளின் விலை ஏறினால் போதும்... நம் அரசியல் தலைவர்கள் அறிக்கை விட கிளம்பி விடுவார்கள்... அறிக்கையை சீண்டுவாரில்லாத நடிகர் சரத்குமார் ஆரம்பித்து, அமைச்சர்கள் வரை ஒரே அறிக்கை தான்.... “ஆன்லைன் வர்த்தகத்தை தடைச்செய்ய வேண்டும்...”

ஆன்லைன் வர்த்தகத்தில் எத்துணை வகை உள்ளது... அதில் அத்திவாசிய பொருட்களின் விலையை பாதிக்கும் வர்த்தகம் எது... அது அரசு அனுமதியுடன் தான் நடத்த படுகிறது.. அதில் வரும் வருமானத்துக்கு பல வரிகளும், சேவைக்கட்டணங்களும் அரசாங்கமே வசூலித்து கொழுக்கிறது... என்பது உள்பட அடிப்படை தகவல்கள் ஏதாவது இவர்களுக்கு தெரியுமா?

பொத்தாம் பொதுவாக அவன் அறிக்கை விட்டான், இவன் அறிக்கை விட்டான் என்பதற்காக ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று வீராவேசமாக அறிக்கை விடுவதெல்லாம் அடாத செயல் என்று இவர்களுக்கு யார் சொல்வது...




சென்னையில் கட்சிக் கொடிகளுடன் வலம் வரும் பெரிய ரக கார்களின் அராஜகம் மிக அதிகமாகி கொண்டிருக்கிறது...

வட்டம், மாவட்டம் கொடிக் கட்டியது போய், எடுப்பு, தொடுப்பு, அல்லக்கைகள் வரை கார்களில் கொடிக் கட்டி கொண்டு அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறார்கள்... இவர்களை போக்குவரத்து போலீசாரும் கண்டும் காணாமல் விடும் போக்கு தான் நிலவுகிறது....

பிற வாகனங்களை உரசுவது போல முந்திச்செல்லுதல் , படுவேகமாக வாகனத்தைச் செலுத்துதல், பின்னால் வரும் வாகனத்துக்கு வழி விடாமல் செல்லுதல்(ஆம்புலன்ஸ் கூட இதற்கு விதி விலக்கல்ல) இப்படி எல்லாமும் இவர்கள் அராஜகத்தில் அடக்கம். இவ்வளவும் கொடி கட்டியிருக்கும் தைரியத்தில் தான் செய்கிறார்கள்.

இந்த பதவியில் இருப்பவர்கள் தான் சிவப்பு சுழல் விளக்கு பொருத்த வேண்டும் என்று விதிகள் இருப்பதை போல கொடி கட்டுவதற்கும் ஒரு விதிமுறை கொண்டு வந்தால் தான் இவர்கள் கொட்டம் அடங்கும்...




நெருவுக்கு பின் இந்திரா, இந்திராவுக்கு பின் ராஜீவ், ராஜீவுக்கு பின் சோனியா, சோனியாவுக்கு பின் ராகுல், பிரியங்கா...

லாலுவுக்கு பின் ராஃப்ரி தேவி,

கலைஞருக்கு பின் ஸ்டாலின், அழகிரி

மாறனுக்கு பின் தயாநிதி, கலாநிதி,

ராமதாஸுக்கு பின் அன்புமணி,

மூப்பனாருக்கு பின் வாசன்,

என்.டி.ஆருக்கு பின் சந்திரபாபு நாயுடு,

தேவகௌடாவுக்கு பின் குமாரசாமி,

யார் சொன்னது இந்தியாவில் மன்னர் ஆட்சி முறை ஒழிந்து விட்டது என்று?




அரசியல் நிச்சயம் ஒரு சாக்கடை தான். அதனால் தான் அது சீக்கிரம் சுத்தப் படுத்தப் பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புதன், ஜூன் 18, 2008

தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு


தசாவதாரம் குறித்து சலிக்க சலிக்க விமரிசனங்கள் பார்த்தாயிற்று...

தசாவதாரம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள், தசாவதாரம் பேசும் ஒழுங்கின்மைக் கோட்பாடு பற்றி மட்டும் சில கருத்துக்கள்

மதங்கள் எவ்வாறு தான் வாழும் காலத்தில் தன்னை சுற்றியிருந்த சிறு மதங்களையும், நம்பிக்கைகளையும் வாரி சுருட்டி தன்னகத்தே கொண்டு வளர்ந்திருக்கின்றன என்பதை இப்படம் தெளிவாக உணர்த்துகிறது...

ஒரு காலத்தில் ஒன்றுக்கொன்று பெரும் சவாலாய் இருந்த சைவம், வைணவம் என்ற இரு பெரும் மாற்று மதங்களை ஒன்றாக இணைத்து தழைத்தோங்கி நம்முன் நிற்கிறது இன்றைய இந்து மதம்... ராமானுஜர், நம்பி(?), அப்பர் போன்றோர் அவரவர் மதத்துக்கு செய்த தியாகங்கள் விழுங்கி ஏப்பம் விடப்பட்டு இருக்கிறது...

என் மதம் தான் சிறந்தது.. பிற மதத்துக்கு தலை சாய்க்க மாட்டேன் என்று முழங்கி அவர்கள் தங்கள் மதத்துக்கு செய்த தியாகம், கலகம், போராட்டம்….. இன்று வைணவம், சைவம், ஜைனம் எல்லாம் ஒன்றாகி ஒரே இந்து மதமானதில் காணாமல் போய் விட்டது அல்லவா?

ஒரு வேளை எதிர்காலத்தில் வேற்று கிரகத்து உயிரினங்கள் கண்டுபிடிக்கப் பட்டு பிரபஞ்சம் ஒரே குடையின் கீழ் வரும் போது, இந்து, இசுலாம், கிருத்துவம் எல்லாம் கலந்து விடக்கூடும்... என் மதம் என் மதம் என்று ஏன் இந்த அர்த்தமற்ற மோதல்கள் நமக்குள்...

ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை தான் ஒழுங்கின்மை கோட்பாடு. (Chaos Theory). (கிட்டத்தட்ட)

பிரபஞ்சமே ஒரு ஒழுங்கான நிலையில் இருந்து, ஒரு ஒழுங்கற்ற நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது...

ஒழுங்கின்மை கோட்பாடு, வண்ணத்துப்பூச்சி விளைவு ஒரு அறிமுகம்...

ஒழுங்கற்ற ஒரு அமைப்பிலோ, ஒரு தொடர் செயற்பாட்டிலோ ஒரு ஒழுங்கை தேடும் இயலை பற்றி விவரிப்பது தான் இந்த ஒழுங்கின்மைச் சித்தாந்தம் (Chaos Theory).

ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் மேல் நுண்-உணர்வினை கொண்டுள்ள எந்த ஒரு அமைப்பையும், இந்த சித்தாந்ததின் கீழ் வகை படுத்த முடியும்.

உதாரணத்திற்கு, ஒரு நாள் நீங்கள் தங்கள் நண்பரிடம் சற்று மாறுபட்ட வகையில் நடந்து கொள்வதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் சொன்ன யோசனைக்கு "சரி" என்று கூறுவதற்க்கு பதிலாக "சரி. எனக்கு தெரியும்" என சொல்லிவிட்டீர்கள். அதை அவர் மனதில் வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல உங்களை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்.
ஒரு 20- 25 வருடம் கழித்து உங்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையில் 10 கோடி ருபாய் பணம் தேவைப்படுகிறது. அது உங்கள் நண்பரிடம் இருக்கிறது. நீங்கள் அவரிடம் சென்று கேட்கின்றிர்கள். தங்கள் மேலுள்ள தவரான எண்ணத்தால் அவர் அதை தர மறுக்கின்றார். சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாத்தால் உங்கள் தொழிற்சாலை மூடப்படுகிறது...இதன் விளைவாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. ..
நீங்கள் அவ்வாறு 20 வருடத்திற்க்கு முன் "சரி" என்று மட்டும் சொல்லியிருந்தால், இன்று 10 கோடி உங்கள் கையிலே. இவ்வகைப்பட்ட உங்கள் நண்பனின் செயல்பாட்டை இந்த சித்தாந்ததின் கீழ் வகைப்படுத்தலாம்.

இவ்வகை விளைவினை விஞ்ஞானிகள் வண்ணதுப்பூச்சி விளைவு என அழைக்கின்றனர்.
அதாவது, மயிலாபூரில் பறந்து கொண்டிருந்த வண்ணத்துபூச்சியின் சிறகினால் அசையப்பெற்ற காற்றானது, காற்றுமண்டலத்தில் மிகச்சிறு மாறுதல் ஒன்றை ஏற்படுத்துகிறது., இது படிபடியாக பிற மாற்றங்களை ஏற்படுத்தியதன் விளைவாக, 6 மாதம் கழித்து ஒரிசாவில் ஏற்படவிருந்த புயல் ஏற்படவில்லை.

சுருங்கச் சொன்னால், ஆரம்ப கட்ட சூழ்நிலைகளில் மேல் நுண்-உணர்வினை கொண்டுள்ள தன்மை.
”( நன்றி - sivam - agarathai.blogspot.com

தசாவதாரம் படம் பார்த்த பலர் மனதிலுள்ள ஒரு கேள்வி..... முதலில் காட்டப்படும் 12-ம் நூற்றாண்டு ரங்கராஜன் நம்பி கடலில் வீசபடும் கதைக்கும், 21-ம் நூற்றாண்டில் நடக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம்?

அங்கே தான் ஒழுங்கின்மை கோட்பாட்டியல் வருகிறது.......

12-ம் நூற்றாண்டில் கடலில் எறியப்படும் கருங்கல்லால் ஆன பெரிய சிலை கடலில் ஏற்படுத்தும் சிறு பாதிப்பு பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து நடக்கும் பல தொடர் விளைவுகளுக்கு காரணமாகி 21-ம் நூற்றாண்டில் ஏற்படும் சுனாமிக்கு வழிவகுத்து அதன் மூலம் மனித குலத்துக்கு ஏற்படவிருந்த பேராபத்தை நீக்குகிறது...

அன்று அந்த சிலை எறியப்படாமல் போயிருந்தால், சுனாமி இல்லை... சுனாமி இல்லையென்றால் புதிய கிருமி ஆயுதத்தால் மனித குலம் கூண்டோடு அழிந்து பொயிருக்கும்.. என்பதே தசாவதாரத்தில் காட்டப்படும் பட்டர்பிளை எஃபக்ட்...

ஒழுங்கின்மை கோட்பாட்டை மறைத்து அண்டம் என்ற ஒரு ஒழுங்கற்றத் தன்மைக்கு இறைவன் என்ற பெயரில் ஒரு ஒழுங்கு வடிவம் கொடுக்க முயலும் ஆன்மீகம்... அதில் ஆரம்பித்து, ஒழுங்கின்மை கோட்பாட்டை விளக்க முயலும் விஞ்ஞானத்தில் கொண்டு வந்து முடிக்கிறார்கள்...

ரொம்ப ஹெவியான ஒரு விஷயத்தை ஜனரஞ்சகமாக சொல்ல முயலும் போது திரைக்கதையில் பல குழப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு... குழப்பங்களை தவிர்த்து தெளிவான திரைக்கதை அமைந்ததில் தான் படத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது....

எனக்கென்னவோ இந்தியன் படத்தில் மேக்கப் நன்றாக பொருந்தியது போல தசாவதாரம் படத்தில் மேக்கப் பொருந்தவில்லையோ என்று படுகிறது....


செவ்வாய், ஏப்ரல் 08, 2008

வலையுலகிற்கு ஒரு வேண்டுகோள்

நாம் எத்தனையோ பதிவு எழுதுகிறோம்... சில பதிவுகள் புள்ளி விவரங்கள் எல்லாம் சேகரித்து எழுதி வெளியிடுவதற்குள் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி விடுகிறது...

எல்லா பதிவர்களுமே ரொம்ப மெனக்கெட்டு தான் பதிவெழுதுகிறார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை....

ஆனால் ஒரு பெரிய விஷயத்தில் நாம் அனைவரும் கோட்டை விடுகிறோமோ என்று எனக்குப் படுகிறது...

பதிவர்கள் எல்லா விஷய்ங்களையும் பற்றியும் எழுதுகிறார்கள்... அறிவியல் ஆரம்பித்து அடுத்த வீட்டு ஆன்ட்டி வரை( சும்மா ஆனாவுக்கு ஆனா ஒரு ரைமிங்க்..)

எனக்கு ஒரு விஷயம் பற்றி பதிவுகளில் என்ன என்ன யார் யார் சொல்லி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.. இல்லை நான் தேடும் அந்த விஷயத்தை பற்றி யாராவது ஒரு கட்டுரை எழுதியுள்ளார்களா என்று தேட என்ன வழி இருக்கிறது...

குறிச்சொற்களை (label) பயன்படுத்தி தேடுவோம்...

அங்கே தான் பிரச்சினையே... அனைவரும் ஒரே மாதிரியான குறிச்சொல் பயன் படுத்துவதில்லை....

உதாரணத்துக்கு ஒரு நகைச்சுவை பதிவு எழுதப்படுகிறது என்று வைத்து கொள்வோம் ... ஒரு பதிவர் நகைச்சுவை என்று லேபிள் கொடுத்தால் மற்றொரு பதிவர் மொக்கை என்று லேபிள் கொடுப்பார். இன்னொரு பதிவர் எழுத்து பிழையோடு நகச்சுவை என்று கொடுப்பாராய் இருக்கும்... இப்படி வித விதமாய் குறிச்சொற்கள் கொடுக்க படும் போது... தேடுப்பொறிகளின் நேரம் வீணடிக்கப் படுவதோடு... செயல் திறனும் பாதிக்கப்படும்....

நமக்கும் நாம் தேடும் கட்டுரையோ, விஷயமோ கிடைப்பது கடினம்.. நாம் தேடும் பொருளில் நல்ல கட்டுரைகள் பல இருக்கும்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குறிச்சொல்லை கொண்டு இருக்கும்... ஒரு குறிச்சொல் போட்டு தேடும் பொது ஒரு சில கட்டுரைகள் தேடுபொறியில் வெளிவரும்...

நாமெல்லாம் உயிரை கொடுத்து எழுதுவது நாம் மட்டும் படித்து பயன்பெற அல்ல... பலரும் படிக்க வேண்டும்... பலருக்கும் நம் எழுத்துக்கள் பயன் பட வேண்டும் என்று தான் நினைக்கிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது...

எப்படி அச்சில் ஏற்றப்படும் புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், கதை, கவிதை, கட்டுரைகள் எல்லாம் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்களோ... அதே போல் வலையுலக எழுத்துக்களும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும்...

பாதுக்காக்கப் பட்டால் மட்டும் போதாது.. அனைவரும் பயனுற வேண்டும் என்பதும் முக்கியம்...

சரி இதற்கு என்ன செய்ய முடியும் என்று கெட்கிறீர்களா?

நாம் பேசி கொண்டிருக்கும் இது ஒரு சாதாரண விஷயம் அல்ல... வலையை முற்றிலுமாக நம்பியிருக்க போகும் நம் எதிர்கால சந்ததிகள் பயன் பெற போகும் ஒரு இயக்கம்...

இதுவரை வெளிவந்திருக்கும் லட்சக்கணக்கான கட்டுரைகள் சரியான ஒரே சீரான குறிச்சொல்லை கொண்டிருக்கவில்லை என்பது ஒரு பயமுறுத்தும் விஷயம் ஆக இருந்தாலும்... இனிமேலும் இது தொடரக்கூடாது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்....

என்ன செய்ய வேண்டும்

1) கட்டுரைகள், இடுகைகள் இவற்றுக்கு தேடுசொற்கள்(குறிச்சொற்கள்) அமைப்பதில் ஒரு ஒற்றுமை இருப்பது அவசியம்...

2) நகைச்சுவை கட்டுரைக்கு, பதிவுக்கு இந்த குறிச்சொல் தான் கொடுக்க வேண்டும், அறிவியல் பதிவுக்கு இந்த மாதிரி குறிச்சொல் தான் தரப்பட வேண்டும் என்று எல்லாவற்றிர்கும் என்ற நிச்சயமான விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்....

3) ஒவ்வொரு கட்டுரையிலும் இடுகையிலும் அதை எழுதியவரின் பெயர் அதே பாட்டர்னில்(Pattern) இடம் பெற வேண்டும். ஒரு குறிப்பிட்ட பதிவரின், எழுத்தாளரின் எழுத்தை தேடும் போது இது உதவியாக இருக்கும்...

4) உடனடியாக ஒரு குறிச்சொல் அகராதி உருவாக்கப்பட்டு அதிலுள்ள குறிச்சொற்கள் மட்டுமே பதிவுகளில், கட்டுரைகளில் குறிச்சொற்களாக கையாளப்பட வேண்டும்...

5) இது ஒரு சாதாரண பணியல்ல... ஒரு முக்கியமான மிகுந்த முயற்சியும் உழைப்பும் தேவைப்படுகிற விஷயம்... ஒரு பதிவர் சந்திப்பிலோ, ஒரு பதிவர் பட்டறையிலோ பதிவர் வட்டத்தில் இது போன்ற முயற்சிகளில் துணிந்து ஈடுப்படும் அன்பர்கள், பதிவர்கள் இதை அஜெண்டாவில் சேர்த்து ஒரு பொருளாக விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

(பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை என்பதை விட குறிப்பிட முடியாத ஒரு கசப்பான சூழ்நிலை வலையுலகில் நிலவுகிறது என்பதே உண்மை)

என்னால் முடிந்த உதவிகளை நானும் செய்ய காத்திருக்கிறேன்...

6) ஒரு சீரான குறிச்சொல் அகராதி உருவாக்கப்பட்ட பின் அவரவர் வெளியிட்டுள்ள இடுகைகள், கட்டுரைகளுக்கு முடிந்த அளவுக்கு குறிச்சொற்களில் மாற்றம் செய்ய வேண்டும்...(கஷ்டமான காரியம் தான்... பரிசீலிப்பதில் தவறில்லை... நம் தமிழ் மக்களுக்கு நம் எழுத்துக்களை சரியான முறையில் கொண்டு சேர்க்கும் முயற்சி)...

பதிவர்கள் விவாதத்துக்கு என் கருத்துக்களை முன் வைக்கிறேன்.. சரியா தவறா என் புரிதலில் ஏதேனும் குழப்பமா என்று தெரிவிக்கவும்....

திங்கள், ஏப்ரல் 07, 2008

ஸ்கூபா கார்- தயாராகும் தமிழகம்


சென்ற இடுகையில் ஸ்கூபா காரைப் பற்றி சில விவரங்களை தெரிவித்து இருந்தோம்... இந்த இடுகையில் மேலும் சில தகவல்கள் உங்களுக்காக....

ஒரு வேளை இந்த காரை இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வர்றாங்கன்னு வெச்சுப்போம்... அந்த காரை வெச்சு யார் யார் என்ன என்ன பண்ணுவாங்கன்னு ஒரு சின்ன கற்பனை....

ரஜினிகாந்த் உடம்பில் மோட்டாரைக் கட்டி கொண்டு நீரில் குதித்து ஏற்கனவே மூழ்கிய காரை மூழ்கடித்து எதிரிகளை அழித்து கதாநாயகியையும் அவரின் கொள்ளுப் பாட்டியையும் காப்பாற்றுவார்.... இந்த படத்தின் வசூல் பெங்களூர் தமிழர்களுக்கும், நதிநீர் திட்டத்துக்கும் பிரித்து கொடுக்கப் படும்...

விஜயகாந்த் இந்த காரில் தப்பிச்செல்லும் எதிரியின் திட்டத்தை முறியடிப்பதோடு, எதிரி நாட்டு வில்லனை நடுக்கடலில் நிற்க வைத்து தமிழிலேயே நாற்பது பக்கத்துக்கு நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்பார்... அவரின் உச்சரிப்பை பார்த்து பீதியில் மிரண்டு போய் செயலற்று நிற்கும் எதிரியை பேக் கிக் அடித்து வீழ்த்து தூக்கி கொண்டே கடலில் 20 மைல் நடந்து வந்து கரையேறுவார்... படம் பார்க்கும் அனைவரும் சீட்டியடித்து சீட்டை பிறாண்டுவார்கள்...

ஷங்கர் அருமையான ஒரு டூயட் காட்சியை நீருக்கு அடியில் எடுப்பார்.... கிராபிக்ஸ் எஃபக்டில் கார் கப்பலாய் மாறும் காட்சி கட்டாயம் இடம் பெறும்... இளிச்சவாய் தயாரிப்பாளர் பட்ஜட்டை கேட்ட உடனே பணத்தையும் போட்டு விட்டு படம் ஜெயிக்க வேண்டுமே என்று திருப்பதிக்கு போய் மொட்டையும் போடுவார்(குடும்பம் மொத்தத்துக்கும்)

மணிரத்னம் யாருக்கும் புரியாத கோணத்தில் திரைக்கதை அமைத்து படம் எடுப்பார்... கடலுக்கு அடியில் சந்தித்து காதலிக்கும் காதலர்கள் பற்றி... படத்தில் ஒரு வில்லனும் உண்டு... அனைவரும் பேசிக்கொள்வது நீருக்கு அடியிலேயே நேரடியாக விஷேச மைக் வைத்து பதிவு செய்யப்படும்... ஹீரோவாக அபிஷேக் பச்சனும், ஹீரோயினாக ஐஸ்வர்யாவும் ஏகமனதாக தேர்வு செய்ய படுவார்கள்..(அபிஷேக்கை வாங்கினால் ஐஸ் இலவசம் போல...)
ஒரு பத்து பேராவது படத்தை பார்த்து விட்டு வாழப்பிடிக்காமல் அந்த கார் போலவே தண்ணீருக்குள் போய் விடுவார்கள்... திரும்பி வரவே மாட்டார்கள்...

அந்த காரின் விஷேச தன்மைகளை பற்றியும் அதை மணிரத்னமும், ஷங்கரும் படமாய் எடுத்த விதம் பற்றியும், கமல் சன் TVக்கு ஒரு பிரத்யேக பேட்டியளிப்பார்... படம் புரியாமல் போயும் மனசை தேத்தி கொண்டு விளிம்பு நிலையில் நின்ற சிலர் இந்த பேட்டியை பார்த்தவுடன் உடனடியாக கடலுக்கு போய் விடுவார்கள்...

இதே போன்ற காரை ஒண்ணே முக்கால் லட்சத்துக்கு விற்பனை செய்ய போவதாக TATA அறிவிக்கும்... ஆனால் உண்மையான விலை இரண்டே முக்கால் லட்சத்து முப்பத்து மூன்று ரூபாய் மூணு பைசாவாக இருக்கும்...

இந்த மாதிரி ஏராளமான கார்களை வாங்கி அதில் நகை, பணம் நிரப்பி கடலுக்கு அடியில் மறைத்து வைத்திருப்பதாக கட்சித்த்லைவர்கள் ஒருவர் மேல் ஒருவர் குற்றஞ்சாட்டி அறிக்கை விடுவார்கள்...

இந்தியா இந்த கார்களில் வந்து தங்கள் துறைமுகங்களை வேவு பார்ப்பதாக பாகிஸ்தான் ஐ.நா சபையில் புகார் கொடுக்கும்...

இந்த காரை வாங்க, ஓட்ட கடும் கட்டுப்பாடுகளை சென்னை போக்குவரத்து காவல் துறை விதிக்கும்... (பின்னே கடல் உள்ளே போய் கட்டிங் வாங்க முடியாதே.. அந்த கடுப்பு தான்)

எல்லவற்றையும் விட பெரிய ஹைலைட்டாக இந்த கார் தயாரிப்புக்கு பின் புலத்தில் CIA இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதோடு மட்டுமல்லாமல் விஜயகாந்துக்கும் இந்த கார் தயாரிப்பு கம்பெனியில் கணிசமான பங்கு இருக்கிறது என்பதும், இதை பற்றி வருமான வரித்துறைக்கு தான் எழுதியுள்ளதாகவும் சுப்பிரமணியம் சாமி விடும் அறிக்கையில் அமெரிக்கா, தே.தி.மு.க இரண்டுமே கலகலத்து போகும்....

பெசண்ட் நகரில் இருந்து மெரீனாவுக்கு கடல் வழி பயணம்

கடல் வழி பயணம்னு சொன்ன உடனே படகு பயணம்னு நினைச்சுட்டீங்களா? படகு பயணம் இல்லை... கார் பயணம்....
அதுவும் கடல் மேல் இல்லை... கடல் உள்ளே...


இது என்ன உளறல்னு யோசிக்கிறீங்களா... கார் கடல் உள்ளே போகுமான்னா?

ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான கார் இது.



The Spy who loved me படத்தில் ஜேம்ஸ் பாண்ட் பயன் படுத்தும் LOTUS ESPRIT என்ற கற்பனை காரின் உண்மை வடிவமாக ஒரு கார் தயாரிக்கப்பட்டுள்ளது...



சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரின்ஸ்பீடு(Rinspeed) என்னும் கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் Frank M Rinderknecht என்னும் தயாரிப்பாளர் உருவாக்கியிருக்கும் ஸ்கூபா (sQuba) என்னும் கார் தான் அது.....



இந்த அற்புதமான காரை பற்றி சில தகவல்கள்...

• Amphibious convertible - (நீரிலும் நிலத்திலும் ஓடக்கூடிய) வகையை சேர்ந்த கார் இது...



• இந்த வகையை சேர்ந்த மற்ற தனி நபர் வாகனங்களான Amphicar, Gibbs Aquada, Gibbs Humdinga, ஆகிய கார்கள் நீரின் மேலே செல்லும் தன்மை கொண்டவை... ஸ்கூபா மட்டுமே தண்ணீரின் அடியில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது...



• நீருக்கு அடியில் சென்று ஆழ்கடல் காட்சிகளை காணும் விளையாட்டிற்கு, ஸ்கூபா டைவிங் என்று பெயர்... அதிலிருந்து ஸ்கூபா என்பது எடுக்கப்பட்டு காருக்கு பெயரிடப்பட்டிருக்கிறது....



• self-contained underwater breathing apparatus - என்னும் வார்த்தையின் சுருக்கமே SCUBA



• இது மூன்று மின்சக்தியால் இயங்கும் மின்விசைகளால் ஓடக்கூடியது... பின் பக்கம் இருக்கக்கூடிய ஒரு விசையின் உதவியால் தரையிலும், நீர் நிரப்பி நீரில் அமிழ்ந்த பின், 2 சக்தி வாய்ந்த ப்ரொப்பல்லர்கள் உதவியுடன் முன்னோக்கி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது...



• 10 மீட்டர் ஆழத்தில் செல்லக்கூடிய இந்த காரில், Lithium Ion ரீச்சார்ஜபிள் மின்கலன்கள் பயன் படுத்த படுவதால், நீர் மாசுப்பாடு என்பது முற்றிலுமாக தடுக்கப்படுகிறது...



• தரையில் 120 கி.மீ வேகத்திலும், தண்ணீரின் மேற்பரப்பில் 6 கி.மீ வேகத்திலும், நீருக்கு அடியில் 3 கி.மீ வேகத்திலும் செல்லக்கூடிய திறன் படைத்தது....



• நீரின் அடியில் பயணிக்கும் போது காரில் சேமிக்கப்பட்டிருக்கும் பிராண வாயுவை சுவாசித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது...



• இது தவிர சக்தி வாய்ந்த 2 நீர் நிரப்பிகளும் உண்டு. இவை வாகனத்தை மூழ்க வைக்க நீரை நிரப்பவும், வாகனம் நீரில் இருந்து வெளியே வரும் போது நீரை வெளியேற்றவும், வாகனம் நீரினுள்ளே செல்லும் போது வழி நடத்தவும் உதவுகின்றன...



• லேசர் சென்சார் தொழில்நுட்பத்தில் இது நீரின் அடியில் தானாகவும் இயங்கக்கூடிய வல்லமையும் பெற்றுள்ளது...



• பாதுகாப்பு காரணங்களுக்காக மேற்கூரையற்றதாக இந்த கார் வடிவமைக்கப் பட்டிருக்கிறது...



• இதன் தயாரிப்பாளர் இந்த காரைப் பற்றிக் குறிப்பிடும் போது "இது பணக்காரர்களுக்கான ஒரு விளையாட்டுப்பொருள்" என்கிறார்...



• ஜெனீவாவில் 2008, மார்ச் 13ந் தேதி நடந்த கார் கண்காட்சியில் அறிமுகபடுத்தப் பட்ட இந்த காரின் வணிக ரீதியிலான தயாரிப்பு எப்போது துவஙும் என்பது உறுதி செய்யப்படவில்லை... ஆனால் விற்பனைக்கு வந்தால் ரோல்ஸ் ராய்ஸை விட குறைவான விலையில் இந்த காரை வாங்க முடியும் என்று தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவிக்கிறார்...



• அப்படின்னா நிச்சயம் நம்மூர் அரசியல்வாதிங்களோட வாரிசில யாரோ ஒருத்தரோ, இல்லை சினிமா கதாநாயகன் யாரோ ஒருத்தரோ இதை வாங்கிடுவாங்க... அப்ப இதை பெசண்ட் பீச்சுல பார்க்கலாம்ல?
(நாம எல்லாம் பார்க்க தான் முடியும்...இதை வாங்கனும்னா சம்பாதிச்சா பத்தாது.. கொள்ளை அடிக்கணும்... சினிமா, அரசியல், பன்னாட்டு கம்பெனி இப்படி ஏதாவது பண்ணி மறைமுக கொள்ளை அடிச்சா தான் வாங்க முடியும்..)

தனிமை - ஏப்ரல் மாத புகைப்படப் போட்டி




வெளிச்சத்தை எதிர்நோக்கி - ஒவ்வொரு
விடியலிலும் கிழக்கு பார்த்தே
விழி இழக்கும்
விந்தை நிறைந்த
விசித்திர வாழ்க்கை

வியாழன், ஏப்ரல் 03, 2008

மக்கு மேலாளரும் ஒரு புதிய லேப்டாப்பும்

இந்த ஆளை எல்லாம் எப்படிய்யா வேலைக்கு எடுத்தாங்க என்று சிலரை பார்க்கும் போது நம்மில் பலருக்கு தோன்றியிருக்கும்....

ஒவ்வொரு நிறுவனத்திலும் இது போன்ற ஆட்கள் பொறுப்பான பதவியில் உட்கார்ந்து கொண்டு அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது...

நண்பர்கள் அபூர்வமாய் ஒன்றாய் கூடும் தருணங்களில் இது போன்ற விஷயங்கள் பல பரிமாறிக்கொள்ளப்படும்...

இதை கேளுங்கள்...

என் நண்பரின் அலுவலகதில் ஒரு மேலாளர் பற்றிய ஒரு நகைச்சுவைச் சம்பவம்...

அந்த அலுவலகத்தில் மேலாளர்களுக்கு மட்டும் லேப்டாப் வசதி உண்டு...

அவருக்கும் புதிதாக ஒரு லேப்டாப் வந்து சேர்ந்தது...

1 நாளாயிற்று, 2 நாளாயிற்று, 1 வாரம் ஆனது... அவர் லேப்டாப் உபயோகிக்கிற வழியைக்காணோம்...

ஏற்கனவே கஞ்ச தனங்களுக்கு பெயர்ப்போனவர் அந்த மேலாளர் என்பதால் சக ஊழியர்களுக்கு ஒரு சந்தேகம்.. ஏன் இவர் லேப்டாப் கிடைத்தும் உபயோகிப்பதில்லை என்று...

உடனே அனைவரும் சீட்டு குலுக்கி போட்டு ஒரு பலியாட்டை தேர்வு செய்து அவரிடம் இதைப்பற்றி பேச வைப்பது என முடிவு செய்தார்கள்....

ஏன் பலியாடு என்கிறீர்களா? மனிதர் செம மொக்கை.. பேசப் போனால் காது அறுபடாமல் மீண்டு வருவது கடினம்... காய்கறிகாரன் ஏமாற்றிய 50 பைசாவிலிருந்து, பஸ் கண்டெக்டர் ஏமாற்றிய 50 பைசா வரை புலம்பித் தள்ளி விடுவார்...(யெஸ் யுவர் ஆனர்.. பஸ்ஸில் தான் ஆபீஸ் வருவார்.. சம்பளம் எவ்வளவு என்று கேட்கிறீர்களா? ஆண்டுக்கு ஒரு 12 லட்சம் பக்கம் வரும்).....

ஒரு நல்ல நாளான வெள்ளிக்கிழமையாக பார்த்து, தலைக்கு குளிக்க வைத்து, பொட்டு வைத்து, மாலைப் போட்டு பலியாட்டை தயார் செய்து அனுப்பி வைத்தனர்...

மேலாளர், கேபின் வாசலில் தயங்கி தயங்கி வந்து நின்ற நம் பலியாட்டு நண்பரை பார்த்ததும் சந்தோஷம் பொங்கியவராக... "வாய்யா.." என்று ஆரம்பித்தவர் தான்... பலியாடு அப்படியும் இப்படியும் நகர்ந்து தவித்து துடித்தும்.... படுக்க வைத்து, உட்கார வைத்து, நிற்க வைத்து ரத்தம் வர வர காது கழுத்து எல்லாம் அறுத்து தள்ளி விட்டார் ...

கடைசியாக அவர் ஓய்ந்த ஒரு சிறு இடைவெளியில் நண்பர் புகுந்து விட்டார்..
"என்ன சார் லேப்டாப்பை யூஸ் பண்ணாம வெச்சிருக்கீங்க... நல்ல நாளுக்காக வெயிட் பண்றீங்களா?" என்று மெதுவாக பிட்டை போட்டார்...

மேலாளர் மெதுவாக தலையை உயர்த்தி, " வர வர நம்ம IT டீம் சரியில்லைப்பா... மானிட்டர், கீ பேடு, மௌஸ் எல்லாம் கொடுத்துட்டாங்க... CPU இன்னும் தரவேயில்லைப்பா... இன்னைக்கு தான் மெயில் போடலாம்னு இருக்கேன் " என்றாரே பார்க்கலாம்...

(விஷயத்தை கேள்விப்பட்ட சக அலுவலர்கள் மீட்டிங் ரூமில் கதவை சாத்திக் கொண்டு லாஃபிங் தெரபி அளவுக்கு சிரித்தது தனிக்கதை...)

புதன், ஏப்ரல் 02, 2008

எக்குதப்பு ஏகாம்பரம்.


எக்குதப்பு ஏகாம்பரம். ஏதாவது கோக்குமாக்காக செய்து எல்லோரையும் வம்பிழுப்பதே இவர் வேலை... அவரின் வம்படியான வாழ்க்கையிலிருந்து சில துளிகள்.....

சாலையில் நண்பருடன்,

இத பாருங்க.. ஜோதி தியேட்டர் இங்கே தான் இருக்கு... சீனாவுக்கு கொண்டு போனது ஒலிம்பிக் ஜோதி தான்... பரங்கிமலை ஜோதி இல்லை.........
----------------------------------------------------------------

போலீஸ் ஸ்டேஷனில்

இதை பாருங்க விவசாய கடனை ரத்து பண்ணியிருக்கிறது உண்மை தான்.. அதுக்காக உள்ளூர் விவசாயி கிட்ட நீங்க வாங்கின கடனை எல்லாம் ரத்து பண்ண முடியாது…..
---------------------------------------------------------------

வீட்டில் மனைவி,

மெரினாவில கடல்ல குளிக்கறவங்களை விரட்ட போலீஸ் ரோஸின்னு ஒரு நாயை கூட்டிட்டு வருது.. உண்மை தான்... அது மெரினாவில மட்டும் தான்... வீட்டில குளிச்சா எல்லாம் அந்த நாய் ஒண்ணும் பண்ணாது... போய் குளிங்க....
---------------------------------------------------------------

TV கடையில்,
சார்... எல்லா ரேஷன் கார்டுக்கும் இலவச TV தர்றதா அறிவிப்பு வந்திருக்கிறது உண்மை தான்... ஆனா அதை அரசாங்கம் தான் தரும்... இது விக்கிறதுக்காக வெச்சிருக்கிற TV... இதையெல்லாம் இலவசமா தர முடியாது...

--------------------------------------------------------------
கல்லூரியில் பிரின்ஸிபால்,

உங்க மகன் சின்ன வயசுல வாளியில பந்தை போட்டு விளையாடுவங்கறதுக்காக, வாலிபால் ப்ளேயர்னு சொல்லி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில சீட் கேக்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லை சார்....


செவ்வாய், ஏப்ரல் 01, 2008

நடிகர்களும் நாடாளும் ஆசையும்

அவர் இவர் என்று இல்லாமல்... அநேகமாக எல்லா நடிகர்களுக்கும் அரசியல் ஆசை இருப்பதாகவே படுகிறது...
நடிப்புலகில அரசியல் இருக்கிறதும், அரசியல்ல நடிப்பு இருக்கிறதும் சகஜம் தானே...
ஒரு பெரிய நடிகர்... அரசியலுக்கு இவர் வந்து விடக்கூடாதே என்று பல கட்சிகளும் கூட்டணி வைத்துக்கொண்டு இவரையும் அப்பாவி (?) ரசிகர்களையும் குமுறு கஞ்சி காய்ச்சின... "முதலமைச்சர் ஆக போறியாமே? வீட்டை புல்டோசர் வெச்சு நிரவிடுவோம் " என்று கவுண்டமணிக்கு ஒரு படத்தில் மிரட்டல் வரும். தொல்லை பொறுக்க மாட்டாமல் "அடாடாடா கருமாந்திரம் புடிச்சவனுங்களா..." என்று படுக்கையில் கிடந்து புரளுவார்... அந்த ரேஞ்சுக்கு மிரட்டல் விடப்பட்டதால் அர்ஜண்டாக அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றும் (அட்லீஸ்ட் ஒரு கமா) போட்டு கொண்டு இமய மலை, ஐஸ்வர்யா ராய் என்று செட்டில் ஆகி விட்டார் என்று படுகிறது...

ஒரு நடிகருக்கு மேற்கூறப்பட்ட புல்டோசர் இத்யாதிகள் இன்று நடந்து கொண்டு இருக்கிறது... அவரின் கல்யாண மண்டபம் முதற்கொண்டு அவர் கஷ்டப்பட்டு களவாண்டு வைத்த காலி இடம் வரை புல்டோசரை விட்டு புல் செதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள்...(என்னவோ புல்டோசர் இதற்காகவே கண்டுப்பிடிக்கப்பட்டது போல... நடிகருக்கு இப்போதெல்லாம், JCB, புல்டோசர் என்றாலே பிடிப்பதில்லையாம்... காலி இடத்தில புல்டோசர் வெச்சு எதைய்யா இடிப்பீங்க? உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?)

அவரும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு உளறி, T.ராஜேந்தர் முதல் தீப்பொறி ஆறுமுகம் வரை அனைவரிடமும் நன்றாக பதிலுக்கு வாங்கு வாங்கு என்று வாங்கி கட்டிக் கொள்கிறார்......

“வீட்டில தெலுங்கு பேசிட்டு, வெளியே தமிழ் பேசுற ஆள் அவரு”- உபயம் டி.ஆர்... தமிழ்நாட்டுல தெலுங்கு பேசினா யாருக்காவது புரியுமா? அதான் வீட்டில மட்டும் தெலுங்கு பேசிட்டு வெளிய தமிழ்ல பேசுறார்... இதெல்லாம் ஒரு பிரச்சினையாய்யா?

ஆமா.. அவருக்கு தெலுங்கு, தமிழ் தான் தெரியும்... ஹிந்தி, இங்கிலீஷ் தெரியாது.. அதனால தான் தீவிரவாதிகளை பிடிச்சா அவங்ககிட்ட தமிழ்லயே பேசி சவால் விடுறார்... அதுக்கென்ன இப்போ? இதெல்லாம் தேசிய ஒருமைப்பாடுங்க... கர்நாடகாவில தான் தமிழ் பேசினா தப்பு.. இங்கே தெலுங்கு பேசினா கூடவா தப்புன்னு அவரு கேக்க போறாரு...

அறிக்கை இவரைப்பொறுத்த வரை அரிக்கையாவே அமைஞ்சுடுது...

இவ்வளவு வாங்கிய பிறகும் அஞ்சாமல் அசராமல் மேலும் அறிக்கை விடுகிறார்....

ஒரு வேளை ஆட்சியை பிடித்தால் எல்லாவற்றையும் சரி செய்துக் கொள்ளலாம் என்ற வழக்கமான தைரியமாக இருக்குமோ?

இவரது கட்சிக்காரர்களும், ஆட்சியில் இருக்கும் கட்சிக்காரர்களுக்கும் எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ.. டாடா சுமோ, ஸ்கார்பியோ, குவாலிஸ் போன்ற பெரிய வண்டிகளில் கொடிக்கட்டி பறக்க விட்டுக்கொண்டு வேகமாக சாலையில் சென்று மக்களை விரட்டிக்கொண்டும், மிரட்டிக்கொண்டும் போவதில் கடும் போட்டி....

அப்படி என்ன தான் ஆணிப்புடுங்கற வேலை இருக்குமோ...

ஆட்சியில இருக்கிறவங்க தான் அம்பது வருஷமா இதுல எல்லாம் ஊறி கரைக்கண்டவங்கன்னு பார்த்தா... இவரு பிஞ்சிலயே பழுத்தவரா இருக்காரு...
சீட் கேட்டு வந்த கட்சி பிரமுகர்களை எவ்வளவு சொத்து இருக்கு என்று கேட்டு அசரடித்தவர் அல்லவா.. (தேர்தல் கமிஷனுக்கு சொல்றதுக்காக கேட்டிருப்பாரு...தேர்தல் கமிஷனுக்காகவோ... தேர்தல் 'கமிஷனு'க்காகவோ...)

இப்ப இருக்கிற அதிரடி ஸ்டைல் ஒரு வேளை ஆட்சியை புடிச்சா நல்லது பண்ணுறதுலயும் இருக்கும்னு நம்புவோம்....

ஜனங்க பாவம்... அவங்களும் ஒரு நல்லவன் கிடைக்க மாட்டானான்னு தேடறாங்க... கிடைக்கவே மாட்டுறான்... ம்...

இவரு யானை வெடியை கொளுத்திப்போட்டு துவைச்சு, துடைச்சு துவம்சம் பண்ணிக்கிட்டிருக்காரு... சைடுல இன்னும் 2 நடிகர்கள் ஊசிப்பட்டாசு, கேப் வெடியெல்லாம் வெடிச்சு சத்தம் கேக்குதா, கேக்குதான்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க...

அதுல ஒருத்தருக்கு ஜாதி அரசியல் பண்ணலாமா இல்லை கிடைச்ச தலைவர் பதவியில அப்படியே ஒட்டிக்கிட்டு லைஃபை ஓட்டிடலாமான்னு குழப்பமாவே இருந்தாரு போல... கட்சியே அவருக்கு கல்தா கொடுத்துடுச்சு...

இன்னொருத்தர் என்னென்னவோ பண்ணி பார்க்கிறார்.. ஆனா கூட்டம் தான் சேரவே மாட்டேங்குது... (ஆனானப்பட்ட நமீதாவை வெச்சு எடுத்த படத்துக்கே கூட்டம் சேரலை... இவரு தனியா மீட்டிங் போட்டா கூட்டம் சேருமா.. யாருப்பா அது.. இப்படியெல்லாம் அநாகரீகமா கமெண்டு அடிக்கக் கூடாது…)

ஒழுங்கா TV சீரியல் தயாரிச்சுக்கிட்டு இருந்த துணைவியாரையும் இதுல இழுத்து, என்ன நடக்க போகுதோ பாவம்... அவங்க பாட்டுக்கு பெண்களை மெகா சீரியல் காமிச்சு அழ வெச்சுட்டு இருந்தாங்க...

இன்னொரு நடிகர்... அவரு இப்போ எந்த கட்சியில இருக்காருன்னு அவருக்கே தெரியுமோ தெரியாதோங்கிற லெவல்ல காலையில, சாயங்காலம் ரெண்டு வேளையும் மாத்தி, மாத்தி பேசி சொந்த மகனையே குழப்பிக்கிட்டு இருக்காரு...

இதுல லேட்டஸ்ட்டா ஒருத்தர் கிளம்பியிருக்கார்... மெதுவா அடி(கொடி) போட ஆரம்பிச்சிருக்கார்... இப்பவே ஆரம்பிச்சா தானே 45-50 வயசுல ஒரு தனிக்கட்சி, அறிக்கைன்னு செட்டில் ஆக முடியும்... ஆனா அவர் ஒண்ணு யோசிச்சுக்கணும்.. அவருக்கும் கொஞ்சம் கல்யாண மண்டபம், அசையா சொத்து எல்லாம் இருக்கு...... அவ்ளோ தான் சொல்ல முடியும்...

ஆனா ஒண்ணு இப்போ ஆட்சியில இருக்கிற பழம்பெரும் திராவிட கட்சி அடுத்து ஆட்சியை பிடிக்க முடியாம போய், ஒரு வேளை யானைவெடி நடிகர் ஆட்சியை பிடிச்சுட்டார்னு வைங்க... அவரு ரிவன்ஜ் எடுத்தா என்ன ஆகிறதுன்னு யோசிக்காம ஏதேதோ பண்றாங்க.....

தமிழ்நாட்டு ஜனங்களை ரொம்ப நம்புறாங்க போல...

நல்லா நடிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு ஹீரோ திடீர்னு சம்மந்தம் இல்லாம ஒரு படத்துல சட்டுன்னு விரலை காமிராவைப் பார்த்து நீட்டி வசனம் பேச ஆரம்பிச்சுட்டாருன்னு வெச்சுக்குங்க... உடனே தெரிஞ்சுக்கலாம்... எவனோ குழப்பிட்டான்னு...

இவங்கெல்லாம் பத்தாதுன்னு டைரக்டர் ஒருத்தர் கிளம்பியிருக்கார்... அவர் பண்ற அட்டகாசம் இருக்கே... ஆரம்பகால ராமராஜன் மாதிரி இருந்துக்கிட்டு ராம்போ ஸ்டையில்ல வசனம் பேசுறாரு பாருங்க... தியேட்டர்ல சீட் இல்லைன்னா அவனவன் தரையில படுத்து புரண்டு புரண்டு சிரிப்பான்... அவ்ளோ காமெடி...

இவரு சும்மா இல்லாம, ஒழுங்கா நடிச்சுக்கிட்டிருந்த ஒரு இளம் நடிகரை ஆக்சன் ஹீரோ ஆக்கறேன்னு கிளம்பி... இப்போ அந்த இளம் நடிகர் “நான் யாரு நல்லவனா கெட்டவனா”ங்கிற ரேஞ்சுக்கு அலைஞ்சுக்கிட்டு இருக்கார் பாவம்... அய்யோ, அய்யோ...

மறைந்த ஒரு பெரும் நடிகர்.. அதிர்ஷ்ட கட்டை, கட்சியில இவரு காலை வெச்சாலே கட்சி கண்டம்டா என்று நாத்திகம் பேசும் திராவிட கட்சிகளாலேயே செண்டிமெண்ட் பார்க்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்... தனிக்கட்சி எல்லாம் ஆரம்பித்து... பெயரைக் கெடுத்துக்கொண்டார்...

இன்னொரு வில்லன் நடிகர் ஒருத்தர் இருந்தார்... செம டைம் பாஸ்... என்னன்னவோ பண்ணி பரபரப்பா இருந்தாரு... ஒரே மாதிரி தலையை ஆட்டி ஆட்டி டயலாக் பேசி சம்பாதிச்ச காசையெல்லாம் அரசியல் படமா எடுத்து அம்போன்னு விட்டுட்டு காணாமயே போயிட்டார்...
இன்னும் பலப் பேரு சொல்லாம ஃபீல்டு அவுட் ஆயிட்டாங்க...

பொதுவா ஒருத்தரோட தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்து எந்த முடிவுக்கும் வரக்கூடாதுன்னு சொல்வாங்க...

ஆனா தனிப்பட்ட வாழ்க்கையில தானே வரி ஏய்ப்பு, நில ஆக்கிரமிப்பு, பண மோசடி போன்ற சமூகத்தை பாதிக்கிற தப்புக்களும் அடங்கியிருக்கு... பணத்துக்கு ஆசைப்பட்டு அவர்களை விரும்பும் ஆயிரம் பெண்களை சேர்த்துக்கிட்டு கும்மாளம் அடிக்கட்டும்.. நாறி நைந்து போகட்டும்.. அவர் பணம் அவர் இஷ்டம்...அது அவங்களை பாதிக்கும் தனி விஷயம்... சட்டத்துல மாட்டிக்காத வரை யாரும் கேள்வியே கேட்க மாட்டாங்க... ஆனா மக்களையும், அவங்களுக்கு சேர வேண்டிய வரி முதலான விஷயங்களையும் பாதிக்கிற மாதிரி கை சுத்தம் இல்லாத ஆளுங்களா இருந்துக்கிட்டு என்னத்துக்கு இவங்களுக்கு அரசியலும் இன்னொன்னும்...

தெலுங்கு சினிமா நடிகர்கள் கதை இதை விட காமெடி... இங்கே நாயகர்கள் மட்டும் தான் வேட்டியை வரிந்து கட்டுகிறார்கள் என்றால்... அங்கே நாயகிகளும் அரசியலில் புகுந்து விளையாடுகிறார்கள்... ஆந்திராவில் அனுதினமும் அதிரடி நகைச்சுவை காட்சிகள் தான்...

பொதுவா அரசியல்வாதிங்க அரசியலுக்கு வந்தப்புறம் தான் பிரபலமாகுறாங்க.. லைம்லைட் அவங்க மேல விழுந்த அப்புறம் தான் அவங்க பேண்ட், வேட்டி, டவுசர் எல்லாம் கிழியும்... நடிகர்கள் எல்லாம் நடிக்கும் போதே பிரபலம் ஆயிடறாங்க.. பேண்ட், டவுசர் எல்லாம் அப்பவே கிழிஞ்சு போகுது... அதை அப்படியாவது ஒட்டு போட்டுக்கிட்டு வந்து மறுபடியும் கிழிச்சுக்கணுமா?
(ஒரிஜினல் டவுசர் கிழிதல்-TM என்ற பதத்தின் காப்பிரைட் லக்கிபீடியாவசம் உள்ளது... பதிவுக்கு மிகவும் பொருந்தி வருவதால் GNU லைசன்ஸ் முறையில் இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது)

திங்கள், மார்ச் 31, 2008

ஆபத்தில் உதவும் ICE…..

நவீன உலகம்... பல புதிய வசதிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் அதே நேரத்தில் பல புதிய ஆபத்துகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறது...

புதிய புதிய வியாதிகள், புது விதமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள், வெப்ப மயமாக்கல் மூலம் புதிய இயற்கை சீரழிவுகள், சாலை விபத்துகள், தரமற்ற கட்டிடங்கள், பூகம்பம், மழை-வெள்ளம்....

நீங்களோ நானோ ஆபத்தில் சிக்கிக்கொள்வது என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்...

இந்த சூழ்நிலையில் தான் முளைத்திருக்கிறது இந்த இயக்கம்.... ICE

ICE என்பது In case of emergency என்ற ஆங்கில பதத்தின் சுருக்கம் ஆகும்...

இந்த பரபரப்பான பரந்த பெரிய உலகில் மனிதநேயம் என்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது... மனிதநேயம் குறைவாக போனதற்கான காரணிகளுல் முக்கியமான ஒன்று.. நேரமின்மை..

(இப்போதெல்லாம் மனித நேயம் என்பது ஆபத்தில் இருப்பவரை பார்த்து பரிதாபப்பட்டால் போதும் என்கிற அளவில் சுருங்கி போய் விட்டது... இதற்கு நானும் விதிவிலக்கல்ல... குற்ற உணர்வுடன் தான் இதை சொல்கிறேன்...)

தன்னை கவனித்துக்கொள்ளவே நேரம் இல்லாத பரபரப்பான நகர வாழ்க்கை சூழலில்.. பிறரை கவனிக்க ஏது நேரம்... (கிராமங்களும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வருகின்றன...)

அப்படியே நேரத்தையும், சிரமத்தையும் பொருட்படுத்தாமல் ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி புரிய வரும் நபர் ஆபத்திலிருக்கும் நபரின் உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் சொல்லலாம் என்றால்... லாண்டரிக்கடை எண்ணிலிருந்து... லஸ்ஸிக்கடை எண் வரை எல்லாம் பதிந்து வைத்திருப்பார் ஆபத்தலிருக்கும் நண்பர்...

அப்படியே அம்மா, அப்பா, மனைவி, கணவன் எண் என்று ஏதாவது இருந்தாலும், ஆபத்து சமயத்தில் உடனே வர முடியும் நிலையில் யார் இருப்பர் என்று எப்படி தெரியும்? ஒரு வேளை ஆபத்திலிருக்கும் நண்பர் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம்.. உள்ளூரில் அவரின் அலுவலகத்தையோ, உறவினரையோ, நண்பரையோ அழைக்க வேண்டியிருக்கலாம்...

இதை உதவி செய்ய வரும் யாரோ ஒருவர் எப்படி தெரிந்து கொள்வது?

இதை விட முக்கியமாக மயக்க மருந்துக்கோ, சில விதமான உயிர் காக்கும் மருந்துகளோ உங்களுக்கு ஒவ்வாததாக இருக்கலாம்... சிலருக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் இருக்கலாம்...அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்குமுன் அவருக்கு என்ன மருந்து கொடுக்கலாம், கொடுக்கக்கூடாது, எந்த மாதிரி சிகிச்சை அவருக்கு கொடுக்கக்கூடாது என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டால் மருத்துவர்கள் இன்னும் சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியும்.

iஇதற்காக பரிந்துரைக்கப்படும் முறை தான் ICE என்கிற முறை...

இந்த வேகமான நவீனமான கால சூழ்நிலையில் (கவனியுங்கள்.. நவீனமான என்று தான் சொன்னேன்.. பின் நவீனமான என்று சொல்லவில்லை) அநேகமாக அனைவரும் மொபைல் தொலைபேசி வைத்திருப்பதாகவே படுகிறது... அனைத்து தொலைபேசி எண்களும் அதில் தான் பதிந்து வைக்க பட்டிருக்கும்.... மொபைல் தொலைபேசி இல்லாதவர்கள் ஒரு சின்ன நாட்குறிப்பான்(டைரி) போல வைத்துக்கொண்டு வேண்டியர்கள் எண்ணை எழுதி வைத்து இருப்பார்கள்...

அவ்வாறு குறித்து வைக்கும் போது ICE, ICE1 என்று உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கு உதவ வரும் நபர், யாரை முதலில் தொடர்பு கொள்வது என்பதை குறித்து வைக்க வேண்டும்...

இது ஆபத்தில் இருக்கும் போது யாரை நீங்கள் நம்பிக்கையுடன் உங்களுக்கு உதவ அழைக்க நினைப்பீர்களோ அவர்களை அழைக்க உதவும்...

வயதான பெற்றோர், பதட்டப்படும் மனைவி, கணவன் இவர்களை தவிர்த்து சமயோசிதமாக செயல்படும் நண்பர்களுக்கு நாம் ஆபத்திலிருக்கும் செய்தி முதலில் தெரிவது வசதி தானே....?

லண்டனில் கடந்த 1995-ம் நடந்த குண்டு வெடிப்பின் போது அங்கே,மீட்புக்குழுவில் இடம் பெற்றிருந்த Bob Bratchie என்கிற அவசர மருத்துவக்குழு உறுப்பினருக்கு தோன்றிய ஓர் எண்ணமே ஒரு இயக்கமாக மாறி இன்று உலகை வலம் வந்து கொண்டிருக்கிறது....

அவர் BBC-க்கு அளித்த ஒரு பேட்டியில் பின் வருமாறு கூறியிருக்கிறார்...

"அன்று குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலரால் பேசவே முடியவில்லை... அவர்கள் யார் என்பதையும் யாரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்பதும் எங்களுக்கு தெரியவில்லை... அவர்களில் பெரும்பாலானோர் கைத்தொலைபேசி வைத்திருந்தனர். அதை உபயோகித்து அவர்களின் அடையாளங்களை தெரிந்து கொள்ள எங்கள் குழுவினர் முயன்றுக்கொண்டிருந்தனர்.... காயமடைந்தவருக்கு இன்னும் எளிதாக உதவ, இதற்கு பதிலாக ஒரு உலகலாவிய முறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இருந்ததை உணர்ந்தேன்..."

கைத்தொலைபேசி தயாரிப்பாளர்கள் இது குறித்த விழிப்புணர்வை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த இயக்கத்துக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்...

இது குறித்த மின்னஞ்சல் கூட பலருக்கு வந்திருக்கலாம்... ஆனால் கூட ICE குறித்த விழிப்புணர்வும், செயல்படுத்தலும் குறைவாகவே உள்ளது...

இன்னும் ஒரு படி மேலாக, கனடா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மருத்துவ குறிப்புகள், அவர்களின் அவசர தொடர்பு, அடையாளங்கள் ஆகியவற்றை இதற்கென உள்ள சேவை நிறுவனங்கள் மூலம் ஆவணப்படுத்தி ஒரு அடையாள அட்டை (கடன் அட்டை போன்றது) போல வழங்குகிறார்கள்.. உலகில் எந்த இடத்தில் ஆபத்து நேர்ந்தாலும் இந்த அட்டையை உபயோகப்படுத்தி அவரது விபரங்களை தெரிந்துக்கொண்டு சிகிச்சை அளிக்க உதவி செய்யும் நோக்கில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது...

நாம் செய்ய வேண்டியது:

மொபைல் போனின் அட்ரஸ் புக்கில்

ICE என்பதை பெயராக பதிந்து, உங்கள் ஆபத்து நேரத்தில் யாரை முதலில் தொடர்பு கொள்ள வேண்டுமோ அவர்களுடைய எண்ணை பதிந்து வையுங்கள்...

ஒன்றுக்கு மேற்பட்ட எண்கள் எனில்(ஒரு வேளை முதல் நம்பர் கிடைக்காவிட்டால்)
ICE1, ICE2 என்று பெயர் பதிந்து எண்களை பதிக்கவும்...

அவ்வளவே... ஆபத்து நேரத்தில் உங்களுக்கு உதவும் மனித நேயமிக்க நண்பரின் நேரத்தை மிச்சப்படுத்தவும், உங்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கவும் இது உதவும்...

For further Reference

www.icesticker.com
www.icecontact.com
www.iceincaseofemergency.ca