உலகப் பொதுமறை


உலகப் பொதுமறை

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் , அந்த பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவு கடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும்.
-திருவள்ளுவர் -(அதி: அறிவுடைமை)
Hold on To Your Dreams ! Your Day Will Come !!

வெள்ளி, அக்டோபர் 26, 2007

மனித (உடல்கள்) உரிமை மீறல்..

அனுராதபுரத்தில் போரிட்டு மடிந்த புலிகளின் உடல்களுக்கு செய்யப்பட்ட அவமரியாதை குறித்து...

பதிவுலகம் முழுக்க அவர் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை இவர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை என்று கேள்விகள்...

போர்க்கைதிகளை, அவர் தம் உடல்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து சர்வதேச அளவில் சட்டங்கள் உள்ளன.

http://www.unhchr.ch/html/menu3/b/91.htm

இவையெல்லாம் இருந்தும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பது மன்னிக்கமுடியாத தவறு...

இந்த புகைப்படம் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும், சரியான கவன ஈர்ப்பை பெறவில்லை என்பது வேதனையான உண்மை...

இலங்கை தமிழர்களுக்கும், புலிகளுக்கும் ஆதரவாக குரல் கொடுத்து வருவதாக நம்பப்படும் அரசியல், சமூக தலைவர்களின் கண்டன குரல்கள் கூட அடக்கி வாசிக்கப்படும் மர்மம் என்ன என்பது புரிய வில்லை...
(கலைஞர், வைகோ, அய்யா ராமதாஸ் உள்பட தமிழகத்தின் தலைவர்கள் யாருமே கண்டனம் தெரிவித்தார்களா என்று எனக்கு தெரியவில்லை..)

ஒரு வேளை இந்த மாதிரி கொடுமைகள் பழக்கப்பட்டு விட்டதால் எப்போதும் நடப்பது தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு விட்டார்களா?..

புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் தான். அதற்கு ஆதரவாக பேசுவது தவறு தான். ஆனால் மனிதாபிமான அடிப்படையில் கண்டனங்களை பதிவு செய்வதில் தவறு இருக்க முடியாது...

இந்த விஷயத்தில் யாருமே அவ்வளவு பலமான எதிர்ப்பு குரல் கொடுக்காதது போல் தான் இருக்கிறது..

தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் நாடுகளின் மௌனம் கவலையை அளிக்கிறது...

செய்யப்படும் செயல்களால் தான் தீவிரவாதம் தீர்மாணிக்கப்படுகிறது... யார் செய்கிறார்கள் என்பதால் அல்ல...

அப்படிப் பார்த்தால் இலங்கை அரசு செய்த செயல் கேடு கெட்ட தீவிரவாத செயல் என்றால் அதில் தவறில்லை...

(ஏற்கனவே அந்த புகைப்படங்கள் பலமுறை வெளியிடப்பட்டு விட்டதால் நான் அதை இங்கே வெளியிடவில்லை...)

ஞாயிறு, அக்டோபர் 21, 2007

டூ வீலர் இன்சூரன்ஸ் என்னும் கிரகம்...

இரு சக்கர வாகனம் வைத்து இருக்கும் அனைவருக்கும் செம தலைவலியான விஷயங்களில் ஒன்று...

வண்டிக்கு இன்சூரன்ஸ் போடுவது...

புதிதாக வண்டி வாங்கும் பொது வண்டி விற்கும் ஷோரூம்காரர்களே ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் செய்து கொடுத்து விடுவார்கள்... வருடா வருடம் சரியாக முடிவு தேதிக்கு முன்னரே அதை புதுப்பித்து வருபவர்கள் பிழைத்தார்கள்..

நம்ம கிரகம், ஒரு முறை அதை புதுப்பிக்க தவறி விட்டால் அவ்வளோ தான்.... தீர்ந்தது...

வாரத்தில் நாம் பிஸியாக இருக்கும் அதே வார நாட்களில் தான் அவர்களும் (இன்சூரன்ஸ் கம்பெனிகள்) பிஸியாக இருக்கிறார்கள்...

வாரக்கடைசியில் ஓய்வெடுக்க போய் விடுகிறார்கள்...

அதுவும் மூன்றாம் நபர் விபத்து காப்பீடு போட வேண்டும் என்றால் கூட வண்டியை ஆய்வு செய்து பார்த்து விட்டு தான் இன்சூரன்ஸ் பொடுவார்களாம்...

அதுவும் வண்டியை பார்த்து ஆய்வு செய்ய அவர்கள் வைத்திருக்கும் நேரம் இருக்கிறதே.. காலை 10-11 மணி வரை... ஒரு மணி நேரம் தான்...

அநேக நிறுவனங்கள் அப்படி தான்... ஒரு வேளை நம் இடத்திற்கே வந்து வண்டியை ஆய்வு செய்ய வேண்டுமானால், அதற்கு அவர்கள் வசூலிக்கும் தொகை இன்சூரன்ஸ் தொகையை விட அதிகமாக இருக்கிறது... இந்த வசதி முக்கால்வாசி கார்களுக்கு தான் இருக்கிறது...

அதுவும் முதன் முதலில் எந்த கம்பெனியில் இன்சூரஸ் போட பட்டதோ அதே நிறுவனத்தில் தான் மறுபடியும் இன்சூரன்ஸ் போட வேண்டும்... நிறுவனத்தை மாற்றினால் பிரிமியம் லோடு செய்ய வேண்டும், அன்லோடு செய்ய வேண்டும் என்று இரு மடங்கு தொகை கேட்கும் அவலமும் உள்ளது...

இன்னும் பல அரசு சார்ந்த காப்பீடு நிறுவங்களில் இரு சக்கர வாடிக்கையாளர்களை இளக்காரமாக பார்க்கும் நிலை தான் உள்ளது... (பிரிமியம் கம்மிங்க.. ஒரு காரின் காப்பீடு பிரிமியத்தில் 10 இரு சக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடலாம்.)

இன்சூரன்ஸ் இல்லையென்பது வண்டியின் பாதுகாப்புக்கு பெரிய சவால் என்பது ஒருபுறம்.. போலீஸ் சோதனையில் இன்சூரன்ஸ் இல்லாமல் சிக்கினால் 1000 ரூபாய் அபராதம் (பேரம் நேரடியாக 300 ரூபாயில் தான் ஆரம்பிக்கும்.. பெரிய கேஸாம்)...

நம்மால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் வண்டியை கொண்டு சென்று ஆய்வுக்குட்படுத்தி இன்சூரன்ஸ் போட முடிவதே இல்லை...

எந்த நிறுவனமாவது இந்த பிரச்சினைகளை புரிந்து கொண்டு.. வண்டியை ஆய்வு செய்யும் நேரத்தை அதிகமாக்கினால் தேவலாம்.. அல்லது அதிகம் டூ வீலர்கள் கூடும் பெரிய நிறுவனங்களில் அல்லது போது இடங்களில் சின்னதாய் ஒரு கௌண்டர் அமைத்து அங்கேயே வண்டிகளை ஆய்வு செய்து காப்பீடு செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்..

அவர்களுக்கும் நல்ல வியாபாரம் நடக்கும்.. நமக்கும் அலைச்சல் மிச்சமாகும்..

காப்பீடு என்பது முக்கியமான விடயம்.. இது போன்ற வசதிகளை பெறும் முறைகளை இன்னும் எளிமையாக்கினால் நிறைய மக்கள் அந்த வசதிகளை பெற்று பயனடைவார்கள்..

இன்றைய காலக்கட்டத்தில் எல்லோரிடமும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வும், பணமும் இருக்கிறது ஆனால் அதை அணுகும் முறைகளும், பெறும் முறைகளும் எளிமையாக இருந்தால் நலம்...

சனி, அக்டோபர் 20, 2007

ஒரு காஷ்மீரத்து காதல். - தொடர்கதை பாகம்-1


காஷ்மீர்

பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்திய அற்புதம்.
இந்திய அற்புதம் என்று சொன்னதில் காரணம் இருக்க தான் செய்கிறது.

சில அந்நிய சக்திகள் காஷ்மீரை தங்கள் அற்புதம் என்று உரிமை கொண்டாட முயற்சி கொண்டிருக்கும் நேரமிது. விளைவு,

காஷ்மீர் ஒரு அழகான ஆபத்தாக மாறி போய் விட்டது.
இன்று காஷ்மீரில் நிலவும் பதற்றத்தில் எந்த நேரம் என்ன நடக்கும் என்று தெரியாமல் உயிரை கையில் பிடித்து கொண்டு தான் வாழ்க்கை நடக்கிறது.

நமது ராணுவம் உயிரை காற்றில் விட்டு, தங்கள் உயிரை கொடுத்தாவது காஷ்மீரை காப்போம்.. காத்தே தீருவோம் என்று கடுமையாக பாதுகாவல் நடவடிக்கைகள் மேற்க்கொண்டு இருக்கின்றனர்.

என்றாலும் எல்லைப்புற மாவட்டங்களில் பதற்றம் தணியவே இல்லை...

தீவிரவாதிகளின் கொட்டம் அதிகமாகி இருக்கும் பகுதிகள் அவை.

ஒரு சுகமான அனுபவம் வேண்டி.,
காஷ்மீரின் அழகைக் காண்போம்.

வளமான நதிகள்.
பனி மலைகள்.
உயர உயரமான மரங்கள். செர்ரி, ப்ளம் பழ மரங்கள். கேட்பாரின்றி உதிர்ந்துக் கிடக்கும் பழக்குவியல்கள்.

உயரமான அந்த மலை பிரதேசத்தில் மேகக்கூட்டம் கூட நம் காலடியில் தான் மிதக்கும்.

சரிந்து சரிந்து போகும் சாலையிலிருந்து திடீரென சரியும் பயங்கர பள்ளதாக்குகள்.

பசுமையும் வெண்மையும் கலந்த பனிக்காடுகள்.

தூரத்தில் எங்கோ தெரியும் இமயத்தின் மறு பாதிகள்.

இந்த பக்கம் பாகிஸ்தானின் தூரமான வானத்து காட்சிகள்.

நான் ஒரு பத்திரிகையாளன். பெயர் விக்கி.

நான் விக்கவில்லை. என் பெயர் விக்கி என்ற விக்னேஷ்வர்.

சென்னையை சேர்ந்த நான்,
அப்பாவின் விபரீத ஆசையால்

பி.ஏ, எம்.ஏ ஜர்னலிசம் படித்து, ஒரு பெரிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் வேலையும் கிடைத்து, காஷ்மீருக்கு அகதியாக துரத்தப்பட்டேன்.

ஆபத்து நிறைந்த காஷ்மீரில் செய்தி சேகரித்து அனுப்பும் நிருபர் பணி என்னுடையது.

நீங்கள் கூட பார்த்திருக்கலாம். போன ஞாயிறன்று தீவிரவாதிகள் சிலர் ஒரு வேனில் ஒருவரை இழுத்துக்கொண்டு ஏறும் ஒரு பரபரப்பான காட்சியை பார்த்து

வியந்து போயிருக்கலாம்.

பயந்து போயிருக்கலாம்.

எடுத்தவன் நானே. சுமார் 200 மீட்டர் தொலைவிலிருந்து பாறை இடுக்கில் மறைந்து நின்று படம் எடுத்தேன். எத்தேச்சையாக தான்.

அவர்கள் என்னை பார்த்திருந்தால்?

இந்நேரம் என்னை படமெடுத்து சுவற்றில் சட்டத்துக்கு நடுவே வைத்து தொங்க விட்டிருப்பார்கள், மாலையையும் போட்டு.

இவ்வளவு ஆபத்தான பணிக்கு எப்படி வீட்டில் அனுமதியளித்தனர் என்கிறீர்களா?

என் அப்பா ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி.

அம்மா… மகனை மண்ணுலகின் சொர்க்கத்திற்கு துரத்தி விட்டு,
வாரா வாரம் கடிதம் எழுதும், அடிக்கடி தொலைபேசியில் உடல் நலம் விசாரிக்கும் பரிதாபமான சராசரி இந்திய அம்மா.

ஆரம்பத்தில் காஷ்மீர் வித்தியாசமான அனுபவமாக தான் எனக்கு இருந்தது.

தினசரி சிறு தூறலாவது காட்டும் வானம்.

ஜூன் மாத கோடை உச்சம் கூட 21 டிகிரியை தாண்டாத வெயில் சுகம்.

டிசம்பரிலோ மைனஸ் 10 டிகிரி செல்ஷியஸ் குளிர் ஆளை அங்கம் அங்கமாக அறுக்கும் கொடுமை.

இப்படி.

நான் இருந்த இடம்,
வைஷ்ணோ தேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கட்ராவிற்கு வரும் மலைப்பாதையிலிருந்து பிரியும் ஒரு சிறு ஊர். பெயர் சோட்டா பூஞ்ச்.

இங்கிருந்து தான் பயங்கரமான எல்லையோர மலைச்சரிவுகள் ஆரம்பிக்கின்றன.

பெயர் தெரியாத ஏராளமான கிளை நதிகளை கொண்டு விளங்கிய அந்த பள்ளத்தாக்கு தீவிரவாதிகளின் நடமாட்டத்திற்கும் இடம் கொடுத்து கொண்டிருந்தது.

எல்லையோர மாவட்டமான பூஞ்ச் இங்கே தான் தன் எல்லையை தொடங்குகிறது.

நான் இருந்த இடம் சிறிது பிரசித்தமானது, இங்கிருக்கும் ஒரு பழமையான சிவன் கோவிலுக்கு.

அந்த கோவிலையும் அதன் எதிரே நீண்டிருக்கும் அந்த சாலையையும், அதன் ஓரங்களில் படர்ந்திருக்கும் கடைகளையும், அவர்கள் வசிக்கும் நெரிசலான பள்ளத்தாக்கு குடியிருப்புப் பகுதியையும் விட்டால் ஊர் என்று ஒன்றுமே கிடையாது.

இருந்தாலும் ராணுவம் இந்த பகுதியில் காவல் புரியும்.
காஷ்மீரில் சகஜமான விஷயமாகி விட்டிருந்தது ராணுவ காவல்.

ராணுவ வீரர்கள் பொதுமக்களுடன் நம்மூர் ட்ராஃபிக் போலீஸ் போல சிரித்து பேசியபடி கையில் அபாயகரமான இயந்திர துப்பாக்கிகளோடு வலம் வருவது சாதாரணமான விஷயம்.

நான் முன்பு கூறியபடி

முதலில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்த காஷ்மீர் வாசம் பின்பு அலுக்க தொடங்கிய காலத்தில்,
மனம் சலிக்க தொடங்கிய காலத்தில்,

அந்த பெண் எனக்கு அறிமுகமானாள்.

ஹசாரிகா.

அற்புதமான பெண்.

அவளை நீங்கள் சந்திக்க வேண்டுமே?

அடட? என்ன மாதிரி பெண் அவள் தெரியுமா?

இந்த உற்சாக பானம், சோம பானம், தேவ பானம், அமிர்தம் எல்லாம் அவள் பேச்சிலேயே வழியும்.

அவ்வளவு அருமையாக பேசுவாள்.

அந்த சலனமற்ற, தூய வெண்மையான பளபளப்பான விழிகளுக்கு எல்லோருமே அடிமையாகி போவார்கள்.

அந்த பூனை கண்களுக்கு சொந்தமான ரோஸ் நிற முகமும் கவர்ச்சியான அதன் பாங்கும் மெலிந்த தேகமும், நாசூக்கான நடை, உடை பாவனைகளுமாய் அவள் என்னை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறாள்.

மனம் சலிக்க மறந்து களிக்க தொடங்கி விட்டது.

தினமும் அந்த பஜார் வீதியில் சுற்றுவேன் (வேறு என்ன வேலை எனக்கு)

சில நாட்கள் மழையில், பல நாட்கள் பனியில்,
சில நாட்கள் அபூர்வமாய் வெயிலில்.

நான் காஷ்மீர் வந்து 3 மாதமிருக்கும். வந்த புதிதில் ஒருநாள் சும்மாவேனும் கோவிலுக்கு போகலாமே என்று நான் தங்கியிருந்த இடத்திலிருந்து கிளம்பினேன்..

பூஜை தட்டுக்கள் இதர சாமன்கள் விற்கும் கடைகளிடையே நான் தேர்ந்தெடுத்தது ஹஸாரிகாவின் கடையை தான்...

என் வயது அப்படி.

சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டு இடையிடையே தன் தம்பியிடம் என்னவோ வேலை வாங்கி கொண்டு,

முதல் நாளே நான் பணிந்து விட்டேன். தினந்தோறும்

மாலை ஃபேக்ஸ் கொடுக்க பஜார் வரும் போது அந்த கடையை பார்த்து கொண்டே போவேன்...

ஒரு நாள் பழக்கத்திலேயே ஹஸாரிகா சிநேகமாய் சிரிக்க தொடங்கியிருந்த நேரமது.

ஏன் என்று ஆயிரம் குண்டூசிகள் உள்ளே தைக்க அடிக்கடி அந்த பக்கம் போவேன்...

எதையாவது சில சமயம் வாங்குவேன்...

பேச்சு கொடுப்பேன். ரொம்ப ஆழமாக இல்லை.

லேசாக. மேலோட்டமாக தான். ஆனால் ஹஸாரிகா ஆழமாகவும், அற்புதமாகவும் பேசுவாள். அவளை எனக்கு அணு அணுவாய் பிடித்திருந்தது.

அடிக்கடி கத்ரா செல்லும் பேரூந்துகள் வந்து போகும். அப்போது ஹஸாரிகாவின் வியாபாரம் சூடு பிடிக்கும்.

அந்த நேரம் நான் தொந்திரவு செய்ய மாட்டேன்.

இரவு நேரங்களில் ராணுவத்தினரோடு சில சமயம் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் போக வேண்டியிருக்கும்...

பல சமயங்களில் நிருபர்கள் சிலர் சேர்ந்து தன்னிச்சையாக கிளம்புவோம். அந்த அடையாள அட்டை இல்லா விட்டால், பல சமயம் நாங்கள் உதைப்பட வேண்டி வந்திருக்கும்.

காஷ்மீரின் எல்லையோர மாவட்டத்தின் பல கிராமங்களுக்கு ஜீப்பில் தான் போய் வருவோம். உயிரை கையில் பிடித்து கொண்டு.

சில முறை தீவிரவாதிகள் வந்து போய் சில நிமிடங்கள் தான் ஆயின என்று சொல்லும் வகையிலும், அதிர்ஷ்டவசமாக நாங்கள் கிளம்பியவுடனே அவர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்று சொல்லும் வகையிலும் எமன் வீட்டை எட்டி பார்த்த நிகழ்வுகள் உண்டு.

இந்த பகுதியில் ஏற்கனவே எங்கள் பத்திரிகை சார்பாக வேலைப்பார்த்த ஆசாமி நடுநிசியில், தீவிரவாதிகள் நடமாட்டத்தையும், சில கொலைகளையும் பார்த்து விட்டு வேலையை விட்டே ஓடி விட்டாராம். சக நிருபர்கள் சொல்லி சிரித்தனர்.

நான் உள்ளுக்குள் திகிலடைந்தாலும், வெளியே சிரித்து வைத்தேன். என்ன செய்வது?

ஆபத்திற்கு நடுவே ஹஸாரிகா எனக்கு ஒரு ஆறுதலாய் இருந்தாள்.

நான் கேட்டேன் என்பதற்காக ஸ்ரீநகரில் இருந்தும், ஜம்முவில் இருந்தும் வரும் பத்திரிகை ஏஜண்டுகளிடம் சொல்லி வைத்து தமிழ் பத்திரிகைகள் சிலவற்றை வாங்கி கொடுப்பாள்.

வழக்காமாக நான் இரவு வேளையில் விரும்பி உண்ணும் வாழைப்பழங்களை எனக்காக எடுத்து வைப்பாள்.

மார்க்கெட் பகுதியில் எல்லோரும் ஹஸாரிகாவுக்கு மரியாதை கொடுப்பார்கள். காரணம் ஹஸாரிகா அமைதியான பெண். எப்போதோ ஒருமுறை அனைவருக்கும் ஏதாவது உதவி செய்து இருக்கிறாள். அந்த நன்றி தான்.

ஹஸாரிகாவிற்கு என்னை விட ஓரிரு வயது கூடுதலாக இருக்கும்.

ஆனால் பார்த்தால் ஹஸாரிக்கவை இளம்பெண் என்பதற்கு மேல் வயதை மதிப்பிட முடியாது

அந்த அடர்த்தியான பிரவுன் நிற ஒற்றை பின்னலும், சூரிதார் உடையும், காற்றில் பறக்கும் ஷாலுமாய் ஹஸாரிகா கவிதையாய் இருப்பாள்.


உடைந்த பூசணிக்காயும் உடைந்த சில மண்டைகளும்..

பூசணிக்காய், பூசணிக்காய் என்று ஒரு வஸ்து இருக்கிறது...

அதை வைத்து குழம்பு பண்ணலாம்...
பொரியல் பண்ணலாம்..
கிச்சடி பண்ணலாம், பச்சடி பண்ணலாம்,

ஆட்களை விழ பண்ணலாம் என்று கண்டுபிடித்தவர்கள் நம்மூர் ஆட்களாய் தான் இருப்பார்கள்...

திருஷ்டி கழிக்க வேண்டும் அதற்கு பூசணிக்காய் சுற்றி உடைக்க வேண்டும் என்று எந்த சாத்திரத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை...

கோலம் போட்டு அதன் நடுவில் சாணம் வைத்து அதில் பூசணி பூ சொருகுவார்கள்... சரி பூசணிப்பூ சின்னது ஆபத்து கம்மி...

உடைத்த ஒரு பாதி பூசணியில், டூ வீலரின் முன் சக்கரம் போய் சரியாக புதைந்து வண்டியை அடியோடு குடை சாய்க்கும் படி செய்யும் ஜப்பான் டெக்னாலஜி நம்மாட்களுக்கு எப்படி தான் கை வந்ததோ தெரியவில்லை...

டூ வீலர்கள் எவ்வளவு நிதானமாக சென்றாலும், ஆயுத பூஜை என்பது பப்ளிக் எக்ஸாம் மாதிரி...

2 நாளைக்குள், பல பேர் நிறைய ஸ்கோர் பண்ணி விடுவார்கள்...

நம்மூர் கமிஷனர் நேற்று அறிக்கை எல்லாம் விட்டு பார்த்தார்.. ஒன்றும் பலனில்லை...

காலையில் தி.நகர் போய் வருவதற்குள் வண்டியுடன் லாங் ஜம்ப், ஹை ஜம்ப் எல்லாம் பண்ணி வேண்டியதாயிற்று...

என் கண் முன்னே ஒருவர் ஒரு டர்னிங் பூசணிகாயை சரியாக கணிக்க முடியாமல் திணறி, வண்டியுடன் அனந்த சயன போஸில் படுத்துக் கொண்டே ரோட்டை கடந்து சென்றதை பார்த்து திகிலடைந்து, 20 கி.மீ வேகத்தில் வண்டி ஓட்டி வீட்டை அடைந்தேன்...

அடுத்தவன் எப்படி போனால் என்ன நம்ம கடை வீடு நல்லா இருந்தால் போதும் என்று பூசணிக்காயை ரோட்டில் உடைக்கும் இவர்கள் நல்ல மனதை என்னவென்று சொல்ல?

பூசணிக்காயை ஆபரேஷன் செய்து குங்குமம் காசு போட்டு நிரப்பி, கற்பூரம் ஏற்றி, சுற்றி நடுரோட்டில் போட்டு உடைக்கிறார்கள்....( எப்போ எப்படி ஆரம்பித்தது இந்த பழக்கம்.. வவ்வால் சார் உங்களுக்கு தெரியுமா?)

உடைந்த பூசணிக்காயில் இருந்து காசை எடுக்க இருக்கும் ஆர்வம், அதை ஓரமாய் போடுவதில் இல்லை பாருங்களேன்..

ஏன் உடைந்த பூசணியை திரும்ப எடுத்தால் தீட்டா?.. அதில் வழுக்கி விழுந்து யார் மண்டையாவது உடைந்தால் அந்த பாழாய் போன தீட்டு கிடையாதா?..

ஒன்று சாத்திரங்கள் தப்பு தப்பாய் இருக்க வேண்டும்..
இல்லை அதை யாரோ இவர்களுக்கு தப்பு தப்பாய் சொல்லி கொடுத்திருக்க வேண்டும்...

சனி, அக்டோபர் 13, 2007

போக்குவரத்து நெ(சி)ரிசல்

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளாக ஆக அதிகமாகிக்கொண்டே போகிறது...

இதை தவிர்க்க சென்னை போ.காவலர்கள்..(போக்குவரத்து காவலர்கள்!!!) அவர்களால் ஆன வரை முயற்சி செய்கிறார்கள்... முடிந்த வரை எல்லா சாலைகளையும் ஒரு வழிப்பாதையாக்கி அவர்கள் குழம்புவதோடு இல்லாமல் வாகன ஓட்டிகளையும் சகட்டுமேனிக்கு குழப்பி விடுகிறார்கள்...

எழும்பூர், கிண்டியை தொடர்ந்து இப்போது தி.நகர் சாலைகளும் ஒரு வழிப்பாதையாக்கப் பட்டிருக்கிறது....

இது இப்படியே தொடர்ந்தால் என்னாகும் என்று ஒரு கற்பனை...

அலுவலகத்தில்,

“ஏன்யா கண்ணு சிவந்திருக்கு.. ராத்திரி சரியா தூங்கலையா?”

“அத ஏன்யா கேக்கற.. அடிக்கடி ட்ராஃபிக் ஜாம் ஆகுதுன்னு எங்க தெருல ரெண்டு பக்கமும் "நோ என்ட்ரி" போர்டு வெச்சுட்டாங்க... வீட்டுக்கே போக முடியலை...”

=========================================

சாலையில் ஒரு போக்குவரத்து காவலரிடம் ஒருவர்,

"சார், ஒன் வே பண்ண ரூட்டை நல்லா சரிப்பார்த்துட்டீங்களா?.. நான் 20வது தடவையா உங்களை க்ராஸ் பண்றேன்... "


=========================================

தொலைபேசியில் இருவர்,

"என்னய்யா? திடீர்னு வீட்டை விழுப்புரத்துக்கு மாத்திட்ட?"

"எல்லா ஒன்வேயும் சுத்திட்டு மயிலாப்பூர்ல இருக்கிற வீட்டுக்கு விழுப்புரம் வழியா தான் போக வேண்டியிருக்கு.. எதுக்கு மறுபடியும் மயிலாப்பூர் போகனும்னு.. வீட்டை விழுப்புரத்துக்கே மாத்திட்டேன்.. ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வந்துடுறேன்பா..."

=========================================

ரெயில் பாதையில் ரெயில் ட்ரைவரும், போ.காவலரும்

"சார் நல்லா விசாரிச்சீங்களா?.. ரெயிலுக்குமா ஒன் வே மாத்த சொல்லியிருக்காங்க?"

=========================================

காரில் போகும் ஒருவர் மொபைலில் அலறுகிறார்,

"அடியே உன்னை தாண்டி.. உடனே வக்கீலுக்கு ஃபோனை போட்டு உயிலை ரெடி பண்ண சொல்லு... பாழா போனவனுங்க.. டைவர்சன் டைவர்சன்னு ஏர்ப்போர்ட் ரன்வேக்குள்ள என் வண்டிய திருப்பி விட்டானுங்க... எதிர்த்த மாதிரி ஒரு ஃப்ளைட் லேண்டிங் ஆயிட்டிருக்கு..."

=========================================

பஸ்ஸில் இருவர்,

"என்னடா நான் கேட்டப்ப வேலை இருக்கு.. ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு.. இப்ப நீயும் திருச்சி பஸ்ஸுல ஏர்ற? மனச மாத்திக்கிட்டயா? அமைஞ்சிக்கர பஸ் அங்கே இருக்கு"

"ஆஃபீஸ் தாண்டா போறேன்.. இந்த பஸ் தான் ஷார்ட்கட்ல சீக்கிரம் போகும்..."

=========================================

ஆஃபீசில் இருவர்

"டேய் எங்கடா உன் காரை காணோம்..."

"அதையேண்டா கேக்கற?.. போன மாசம் ஸ்பென்சர்ல ஷாப்பிங் பண்றதுக்காக போய் வண்டியை பார்க் பண்ணேன்.. ஷாப்பிங் முடிஞ்சு வந்து பார்த்தா என் வீட்டுக்கு போக வழியே இல்லாதபடிக்கு எல்லாத்தையும் ஒன் வே பண்ணிட்டாங்க... மறுபடியும் ரூட் எப்ப மாத்துவாங்கன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்.."



எனது சிறு முயற்சி...

ஒரு சிறு முயற்சி...


சிறுகதை, நாவல் இரண்டிலும் சேர்க்க முடியாத படிக்கு ஒரு நீளம் கொண்ட எனது சிறுகதை(?) சிலவற்றை தொடராக தர எண்ணியுள்ளேன்...


பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ எதுவாக இருப்பினும் வலைஞர்கள் ஒரு வரி எழுதினால் மகிழ்ச்சி அடைவேன்...


முதல் கதையின் முதல் பகுதியை அடுத்த வாரம் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்..


தாள்களில் எழுதி வைத்திருப்பவற்றை தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப இந்த மாதிரி தொடராக தரும் முறை எனக்கு சுலபம் என்பதால் கூட நான் இதை தேர்வு செய்திருக்கலாம்...



இந்த மாதிரி தருணத்தில், இணையம் இந்த அளவு முன்னேறி நான் நினைத்ததை எழுதும் அளவிற்கு வாய்ப்பை உண்டாக்கி தந்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்....(Charles Babbage முதல் இன்றைய கடைநிலை வலை நிரலமைப்பாளர்-வன்பொருள் பொறுப்பாளர் வரை)


முதல் கதையின் தலைப்பு


ஒரு காஷ்மீரத்து காதல்




கோடை அரசியின் எழில் தோற்றங்கள்....



கோடை அரசியின் எழில் தோற்றங்கள்....


















































விஜய் TVயின் ஜோடி நம்.1 நிகழ்ச்சி...

விஜய் TVயின் ஜோடி நம்.1 நிகழ்ச்சி...

பிரபலங்களின் ஒரு நடனப்போட்டி என்பதில் இருந்து, அமெரிக்க தொலைக்கட்சிகள் நடத்தும் ரியாலிடி கேம் ஷோ போல மாறிக்கொண்டு வருகிறது...

ஒரு போட்டியாளர் எப்படி தன்னை போட்டிக்கு தயார் படுத்திக்கொள்கிறார் என்பதில் ஆரம்பித்து அவர்களின் ஓய்வறை வரைச் சென்று வெற்றி தோல்விகளை எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பது வரை காண்பிப்பது தான் ரியாலிட்டி கேம் ஷொக்கள்...

வித்தியாசமான இந்த முயற்சிகள் வரவேற்கத்தக்கதே ஆனாலும் பரபரப்பை கூட்டி TRP புள்ளிகளை அதிகப்படுத்த முயற்சிப்பதை வரவேற்க முடியவில்லை...

ஒரு போட்டியாளரின் தாயார் கூச்சல் போட்டதையும், சிம்பு-பப்லு (பிருதிவிராஜ்) மோதலை அப்படியே ஒளிபரப்பு செய்ததும், அதற்காக சிம்புவின் ரசிகர்கள், அவரின் குடும்பம், மக்கள் என அனைவரையும் பப்லுவிற்கு எதிராக பேச விட்டு ஒளிப்பரப்புவதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்...

"அவனை விடக்கூடாது..அவனை என்ன பண்ணட்டும் சொல்லுங்க.. " என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டதாகவும் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று பெரிய மனதுடன் தாங்கள் சொன்னதாகவும் சிம்புவின் சித்தப்பா... கூறியதைக்கூட தணிக்கை செய்யாமல் அப்படியே ஒளிப்பரப்பியது பப்லுவிற்கு எதிராக வன்முறையை தூண்டுவதைப்போல இருந்தது.....

விஜய் TV தன்னுடைய எல்லா போட்டிகளிலும் இந்த பாணியை நுழைத்து வருகிறது..

இது எங்கே கொண்டு போய் விட போகிறதோ...

வெள்ளி, ஆகஸ்ட் 03, 2007

சஞ்சய்தத்தின் தண்டனை

சஞ்சய் தத்துக்கு ஜெயில் தண்டனை கிடைத்தாலும் கிடைத்தது.. ஆளாளுக்கு ஜெயிலில் வசதி அப்படி இருக்குமாம், இப்படி இருக்குமாம்.. என்று ஒரே அளப்பறை..

போதாததற்கு பத்திரிகைகள் வேறு.. 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமாம்.. 6.15கு உடற்பயிற்சி பண்ண வேண்டுமாம்.. 7 ம்ணிக்கு வெளிக்கு போக வேண்டுமாம் என்று கட்டம் கட்டி செய்திகள் வெளியிட்டு மக்களை கவலையில் ஆழ்த்த முயற்சி செய்கின்றன..

எனக்கு ஒன்றே ஒன்று தான் தோன்றியது.. அவர் என்ன வெள்ளையர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுப்பட்டா ஜெயிலுக்கு போகிறார்... ? இல்லை மக்கள் பிரச்சினைக்காக போராட்டத்தில் ஈடுப்பட்டு ஜெயிலுக்கு போகிறாரா...

ஏன் இவ்வளவு கரிசனம்...

டே டே போங்க.. டே

நண்பர்கள் தினம்னு ஒரே வாழ்த்துக்களா அங்கேயும் இங்கேயும் பறக்குது.. பஸ்ஸுல பாத்தவன், பப்ளிக் டாய்லட்ல பாத்தவனுக்கெல்லாம் ஹாப்பி பிரெண்ட்ஷிப் டேன்னு வாழ்த்து சொல்றாங்க....

காதலர் தினம் இருக்கு.. அன்னையர் தினம், தந்தையர் தினம், ஒண்ணு விட்ட சித்தப்பா தினம், மூணு விட்ட சகலை தினம்னு இன்னும் எவ்வளவோ தினமெல்லாம் இருக்கு..

இன்னும் ஒரு பிரபலமான மின்-வாழ்த்துக்கள் அனுப்புற தளத்துல போய் பார்த்தா..

இந்த நாளெல்லாம் இருக்கு..

Blackmail Day
Lighthouse Day
Grab Some Nuts Day
Send an Email Day
Work like a Dog Day
Dance a Polka Day

இதையெல்லாம் யாருங்க உருவாக்கறாங்க...

உங்களுக்கு அவங்களை தெரிஞ்சா இந்த Day-க்களையும் உருவாக்க சொல்லுங்களேன்...

1. படகு மறைவில் படுத்துக்கொண்டு பகலிரவு பாராமல் காதலிப்போர் Day

2. ஒர்க்கிங் டே என்றூம் பாராமல் தாறுமாறாய் தண்ணியடிப்பவர் Day

3. எந்த படத்தில் யார் நடித்தாலும் யார் எடுத்தாலும் கண்ணிமைக்காமல் கருமமே கண்ணாய் பார்ப்பவர் Day


4. மொத்த குடும்பமும் சிரிப்பாய் சிரிப்பது தெரியாமல் சீரியசாய் சீரியல் பார்க்கும் பெண்கள் Day

5. கணக்கு வழக்கு இல்லாமல் கஜானாவில் கைவைக்கும் அமைச்சர்கள் Day

6. எட்டணா பெறாத விஷயத்துக்கு எல்லாம் பாராளுமன்றத்தில் எம்பி எம்பி குதிக்கும் எம்.பிக்கள் Day

7. வந்தா வரட்டும் போனா போகட்டும் என்று வளைச்சு வளைச்சு வண்டி ஓட்டும் கால்சென்டர் ட்ரைவர் Day

8. உயிரையும் பொருட்படுத்தாமல் ரோட்டில் உருண்டு பிரண்டு ஹெல்மெட் கேசு பிடிக்கும் போலீஸ் Day

9. யார் பாத்தாலும் பாக்கலைனாலும் பயங்கரமா படம் எடுத்து மிரட்டுவோர் Day

10. படமே இல்லைன்னாலும் பரபரன்னு பேட்டி கொடுத்து பந்தா காட்டுவோர் Day

11. எத்தனை உண்ட வாங்கினாலும் கண்டபடி முண்டா தட்டும் கிரிக்கெட் வீரர்கள் Day

12. எவன் பூ முடிச்சு எத்தனை பெரிய கொண்டைய போட்டாலும் மண்டைய மண்டைய ஆட்டும் மக்(கு)கள் Day


சொல்றீங்களா?

சனி, ஜூலை 28, 2007

அரசியல்வாதிகளும் குரங்குக்கூட்டமும்

ஒரு நாளு ஒரு தொப்பி வியாபாரி காட்டு வழியே தனியா நடந்து போய்கிட்டு இருந்தான்.. ஊர் விட்டு ஊர் போய் தொப்பி விக்கிறது அவன் வேலை. அது மாதிரியே ஒரு நாள் போகும் போது வெயில் அதிகமாக இருந்ததுன்னு அப்படியே அசதியா காட்டுல இருந்த மரத்தடியில் கட்டய சாச்சுட்டான். எழுந்து பார்த்தா கூடையில இருந்த தொப்பில ஒண்ணை கூட காணோம்... அட இது என்னட சோதனைன்னு பரபரன்னு தேடி பாத்தான்..

குர்ரு.. குர்ருன்னு ஒரே சத்தம்.. செம சவுண்டு.. என்னடன்னு அண்ணாந்து பாத்தாக்கா.. நம்ம மூதாதையருங்க எல்லாம் சாலியா காலை ஆட்டிக்கிட்டு ஆளுக்கு 3-4 தொப்பிய மாட்டிக்கிட்டு ஒரே குஜால்ஸ் தான்..

விட்டா இவனுக்கே தொப்பிய விக்கற மூட்ல இருக்காங்க.. இருக்கிற அத்தனை பல்லையும் காட்டி பழிப்பு வேற... நம்மாளுக்கு வேற மரம் ஏற தெரியாதா... என்ன பண்றதுன்னு முழிக்கிறான்..

ஏய் சூ சூ.. அப்படின்னு விரட்டறான்.. குரங்குகளும் அப்படியே.. எகிறி எகிறி எட்டி புடிக்க குதிக்கறான்.. நம்ம மரத்து ஆளுங்களும் அப்படியே குதிச்சு அவனை வெறுப்பேத்தறாங்க...

உடனே நம்மாளுக்கு ஒரு ஐடியா.. தலையில இருக்கிற தொப்பிய தூக்கி அடிக்கிறான்... குரங்குங்க ஒரு தடவ ஒண்ண ஒண்ணு பாத்துக்கிடுச்சு.. உடனே தொப்பிய அவன மாதிரியே தூக்கி வீசிட்டு அப்படி ஒரே எக்காளம்.. நம்மளுக்கு சந்தோஷம் பிடிபடலை.. அட முட்டாப்பய குரங்குகளான்னு சிரிச்சுட்டே எல்லத்தையும் பொறுக்கிக்கிட்டு ஒரே ஓட்டமா ஓடி போயிட்டான்..

காலம் வேகமா போச்சு.. விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறுச்சு..

ஆனா நம்மாளுங்க என்னைக்கு முன்னேறி இருக்காங்க..

முதல்ல போன அந்த தொப்பிக்காரனோட பையனும் அதே வேலை பண்ணிட்டு, அவனோட மகனும் அதே வேலைக்கு வந்துட்டான்...

அதே காட்டு பாதை... அதே மரம்.. அதே வெயில்.. அதே மாதிரி இவனுக்கும் தூக்கம் வந்துடுச்சு... என்ன செய்ய அப்படியே தொப்பி கூடையை ஓரமா வெச்சுட்டு இவனும் கட்டையை சாச்சுக்கிட்டான்...

அதே குரங்குக்கூட்டம்.. அழகா இறங்கி வந்து எல்லா தொப்பியையும் எடுத்து போட்டுக்கிட்டு மரத்து மேல போய் உக்காந்துக்குச்சு...

நம்மாளு கனவுல நமீதா கூட டூயட் பாடிட்டு பொறுமையா எந்திரிச்சு பாத்தா தொப்பியை காணோம்.. திக்குனு ஆயிடுச்சு...
மரத்து மேல ஒரே கூச்சல்.. அண்ணாந்து பாத்தாக்கா குரங்கு எல்லாம் இவனோட தொப்பிய ஆளுக்கு 2-3ன்னு போட்டுக்கிட்டு ஒரே அலம்பல்..

இவன் அசரலை.. என்ன பண்றதுன்னு யோசிச்சான்..


அட நம்ம தாத்தா தான் சொல்லியிருக்காறே?.. இதே மாதிரி அவருக்கு நடந்தப்ப என்ன பண்ணாருன்னு...

உடனே ஆ ஊன்னு கத்தி குரங்கும் திருப்பி பண்ணுதான்னு செக்கெல்லாம் பண்ணாம சட்டு புட்டுன்னு தலையில இருந்த தொப்பிய தூக்கி வீசியெறிஞ்சான்...

மேல கூட்டத்துல மயான அமைதி.. என்னடா ரியாக்சனே காணோம்.. அப்படின்னு டென்ஷனா பாத்துக்கிட்டு இருக்கும் போதே.. ஒரு குரங்கு.. ஸ்லோ மோஷன்ல இறங்கி வந்துது... தலைவன் குரங்கு போல.. நேரா போய் அவன் வீசி எறிஞ்ச தொப்பிய எடுத்துக்கிட்டு மரத்து மேல உக்காந்துக்குச்சு...

இது என்னடா புதுசா இருக்குன்னு நம்ம பய ஆடி போயிட்டான்.. மரத்து மேல இருந்து ஒரு குரல்..

"டேய் உனக்கு மட்டும் தான் தாத்தா இருக்காரா.. எங்களுக்கும் இருக்காரு.. போடா"

என்னடா இந்த கதை இப்ப எதுக்குன்னு பாக்கறீங்களா?

நம்ம அரசியல்வாதிங்களும் இப்படி தான் பாட்டன் பூட்டன் காலத்து தந்திரமெல்லாம் மக்கள் கிட்ட ட்ரை பண்ணிட்டு இருக்காங்க.. குரங்கு கூட்டம் மாதிரி நம்ம மக்கள் என்னைக்கு முழிச்சிக்க போறாங்கன்னு தெரியலை...

வியாழன், ஜூலை 19, 2007

புகைப்படப்போட்டியில் நானும்...

எனது 2 MP Nokia 6630 மொபைல் போனில் எப்போதோ எடுத்த எனக்கு பிடித்த இரண்டு புகைப்படங்கள்

என்னுடைய மாமாவின் 5 வயது மகன் விக்னேஷ்...







காகிதப் பூக்கள் கசங்காமல்...

(clarity பற்றி கவலை பட மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்..)

செல்லாவின் நல்ல முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்....


திங்கள், ஜூலை 09, 2007

மாலன் VS செல்லா - சில கருத்துக்கள்

பத்திரிகைகளுக்கு ஒரு இப்படி தான் செய்திகளை தர வேண்டும் ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது... அல்லது உள்ளதாக நினைத்துக் கொள்கின்றன... அதன் அடிப்படையில் நாகரீகம் என்று தங்களுக்கு படுவதை செய்திகளாக வெளியிடுகிறது..

அங்கே ஒரு எடிட்டர் இருப்பார், பப்ளிஷர் இருப்பார் ஒரு கொள்கை இருக்கும், கட்சி சார்பு இருக்கும், மக்களிடம் பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும்... இவை எல்லாம் சேர்ந்தோ, தனி தனியாகவோ இருக்கும்... இருந்தே தீரும்.. ஒரு எழுத்தாளர் தான் நினைத்ததை அப்படியே எழுதி வெளியிட முடியாது... இந்த கட்டுக்குள் அடங்கியே தீர வேண்டும்...

ஆனால் வலைப்பதிவுகள் அப்படி அல்ல... அது ஒரு தனிப்பட்ட மனிதரால் எழுதப்படுவது... எண்ணங்களின் பிரவகங்களை அப்படியே எழுத முடியும்...யாரும் கட்டுப்படுத்த முடியாது... கிட்டத்தட்ட லாபநோக்கு இல்லாத ஒரு சிற்றிதழ் போல.. அது அப்படி உணர்ச்சி பூர்வமாக தான் இருக்கும்...

பத்திரிகைகளில் எப்படி குமுதம், விகடன், தந்தி, நக்கீரன், தராசு, நெற்றிக்கண், ஹிந்து என்று ஆரம்பித்து, வார மாத தினசரி, காலாண்டு, தேசிய, மாநில, மொழி வாரியாக, பொருளாதரம், அரசியல், நடப்பு, ஆட்டோமொபைல், கணினி என்று வகை வாரியாக நல்ல இதழ்களிருக்கிறதொ, அதே போல சரோஜாதேவி போன்ற வேறு விதமான பத்திரிகைகளும் வருவதில்லையா...?

அய்யோ கெட்ட பத்திரிகைகள் வருகிறதே நான் பத்திரிகையே படிக்க மாட்டேன் என்பது அறிவீனம் இல்லையா?

அப்படி தான் வலைப்பதிவும்... நல்லதும் கெட்டதும் நிறைந்து இருக்கும்.. ஆன்மீகமா அய்யா இருக்கு, நாத்திகமா அதுவும் இருக்கு, நகைச்சுவையா, நையாண்டியா? நாட்டுநடப்பா, அரசியலா, பொதுஅறிவா பொருளாதாரமா? எல்லாமே இலவசங்க... மெனக்கெட்டு தேடி தேடி பதிவுகள் எழுதி தமிழ் கட்டுரைகள் வளர்க்க பாடு படறாங்க... பொத்தாம் பொதுவில வலையுலகை குறை சொல்வதை நான் ஒத்து கொள்ள மாட்டேன்...

மாலன் அய்யா நல்ல கருத்துக்கள் பலவும் சொல்லியிருக்கார்.. ஆனால் வலையுலகில் கெட்டதும், பின்னூட்ட கயமைகளும் மட்டும் நடப்பது போல ஒரு தோற்றம் உண்டாக்குவதை ஒப்புக்கொள்ள இயலாது...

பதிவர்கள் பலர் தாங்கள் நம்பும் கருத்தை நேசிக்கறாங்க அய்யா... அதை ஒருத்தர் மறுக்கும் போது தாங்கிக்க முடியாம தனிமனித தாக்குதல்ல இறங்கிடறாங்க... பத்திரிகை உலகத்துல கூட இது நடக்குங்க..... மாத்திப்பாங்க.. அதையும் மீறி அப்படி தொடர்ச்சியா தனிமனித தாக்குதல்ல ஈடுபடறவங்க தானாவே மற்றவர்களால் ஒதுக்கப்பட்டுருவாங்க....

//தனிநபர் புகழ்ச்சி, தனிந்பர் தாக்குதல் இல்லாமல் பதிவுகளை எழுதுவேன். பின்னூட்டம் இடுவேன், பின்னூட்டங்களைப் பிரசுரிப்பேன்.//

ஒப்புகொள்கிறேன்...


//எழுதப்பட்ட பொருளுக்குத் தொடர்பற்ற பின்னூட்டங்களை அனுமதியேன்//
கும்மியடிக்கும் மக்கள் பாவம்ங்க... ஆபாசம் இல்லைன்னா அனுமதிக்கறதுல என்ன தப்பு? அது என் பதிவை ஒருத்தர் படிச்சிருக்கார் அப்படிங்கறது ஒரு அங்கீகாரம்ங்க... மனிதன் உணர்ச்சிகளால் ஆனவன்... என்ன செய்ய?

//மாற்றுக் கருத்துக்களை பொறுமையுடனும், சமனுடனும் அணுக முயற்சிப்பேன்;//
நிச்சயமாக முயற்சி பண்றேன்..

//ஒருவரது கருத்துக்களை மறுப்ப்தையோ, நிராகரிப்பதையோ, தரவுகளின் அடிப்படையில் செய்வேன்
தான் சார்ந்துள்ள ஜாதி, மதம், அரசியல் கட்சி, அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரம் இவற்றை மற்றவர்கள் மீது திணிக்கும் வன்முறையை
அனுமதியேன்.//


வன்முறை என்று எதை சொல்கிறீர்கள்.. ரத்த களரியாக பத்திரிகைகளிலும் TVயிலும் நடக்கும் விமரிசனங்களை என்ன செய்ய முடிகிறது? தான் சார்ந்துள்ள ஜாதி அடிப்படையில் சாதகமான ஒரு விமரிசனம் வரும் போது சாதி அடிப்படையில் தான் எதிர்வினையும் இருக்கும்.. நியாயப்படுத்தவில்லை.. சமூகத்தில் மலிந்து கிடக்கும் விஷயங்கள் பதிவுலகிலும் எதிரொலிக்கிறது... பதிவர்கள் வானத்தில் இருந்து வந்தவர்கள் அல்லவே?.. நம்ம மக்கள் தானேய்யா? காலம் கனியும்ங்க

//வெறும் பரபரப்பிற்காக்வோ, கவனம் பெறவோ, எழுதுவதையும் அப்படி எழுதுவதையே தங்கள் இயல்பாகக் கொண்டவர்களையும் தவிர்ப்பேன்//

பரபரப்பான தலைப்புகளை எழுதினால் தான் உங்களால் பத்திரிகையே விற்க முடிகிறது... பல சமயம் அவர்களும் நல்ல கருத்துக்களையும் எழுதுகிறார்கள்... இடுகைகளை ஒதுக்கலாமே தவிர பதிவர்களை அல்ல... நல்லதை எடுத்து கொண்டு கெட்டதை விட்டால் போச்சு... உங்கள் பதிவில் செய்தது போல...

எழுத்தார்வமிக்க எல்லோரும் அவ்வளவு எளிதாக பத்திரிகையில் எழுதி விட முடியாது... தங்கள் எழுத்தார்வத்துக்கு ஒரு வடிகாலாக தான் வலைப்பதிவை பயன்படுத்துகிறார்கள்...
சில சமயம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் செய்திகளை விடவும், கவர் ஸ்டோரிகளை விடவும் வலைப்பதிவுகள் சுவாரசியமாக இருக்கின்றன என்பதை மாலன் கூட மறுக்க மாட்டார் என்று நம்புவோமாக...

வலையுலகில் இல்லாவிட்டால் மாலனுடனும் மற்றும் பல மூத்த எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்களோடு பேசக்கூடிய வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா? அதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி கூறி.. அய்யா எழுதுங்க.. அம்மா எழுதுங்கன்னு.. கேட்டுக்கறேன்...

ஞாயிறு, ஜூலை 08, 2007

கவுண்ட்டர் அடித்து வாழ்வாரே வாழ்வார்...

முன்பு ஜூனியர் போஸ்ட் என்ற ஆ.வி குடும்ப இதழ் ஒன்றில் ஒரு செய்தியை எடுத்து அதற்கு வாசகர்கள் கவுண்ட்டர் போடுவார்கள்.. செம கலக்கலாக இருக்கும்..
அந்த பாணியில் நான் சில செய்திகளை கவுண்ட்டர் செய்திருக்கிறேன்..


சிவாஜி பட கெட்டப்பில் திருட்டு வி.சி.டி விற்றவர் கைது...

கூவி கூவி விக்க முடியுமா? அதான் பார்த்தவுடனே எந்த சி.டி விக்கிறார்னு தெரியற மாதிரி வித்துருக்கார்னு நினைக்கறேன்...

கேபிள் டி.வியை அரசே ஏற்று நடத்த திட்டம்?

இனிமே கேபிள் கனக்சன் கட் ஆனா அதுக்கும் மனு எழுதி போட வேண்டியது தான்.. என்ன இதுக்கு மகளிர் சப்போர்ட் அதிகமா இருக்கும்...

இங்கிலாந்தில் வெடி வைத்து ஏராளமானோரை கொல்ல முயற்சி செய்த டாக்டர்கள் கைது...

மக்கள் தொகை அதிகமாயிட்டே போகுது.. ஒத்தை ஒத்தை ஆளா ஆப்பரேஷன்ல எப்பய்யா அவங்க கொன்னு முடிக்கறது.. அதான் அந்நியன் மாதிரி ஒரே ஆபரேஷன்ல ஒரேடியா அட்டவணை போட்டு தூக்கிடலாம்னு பாத்திருக்காங்க... (டாக்டர்கள் மன்னிக்க)

கொட்டிவாக்கத்தில் அடிக்கடி மின்வெட்டு..

வெட்டிவாக்கம்னு பேரை மாத்திடலாமா?

தாம்பரத்தில் குறைகளா? டயல் செய்தால் போதும்...

உடனே ஆட்டோ அனுப்பிடுவாங்களா... அட்ரஸ் தெரிஞ்சுக்க என்னா டெக்னிக் பாத்தீங்களா?

பிரபல ரவுடி வெட்டிக் கொலை..

வெட்டியா எல்லாம் கொல்லலீங்க.. காசு வாங்கிகினு தான் கொன்னோம்.. கூலிப்படையினர் தகவல்...

முகமூடி அணிந்த கணவரை தாக்கிய மனைவி...

முகமூடி இருந்ததால தான் அடி கம்மியா விழுந்தது.. முகமூடி மட்டும் இல்லைன்னா மரண அடி விழுந்திருக்கும்..கவர்மென்ட்டு ஆஸ்பத்திரியில் கணவரின் கலவர பேட்டி..

வந்தனாவோட சேர்ந்து வாழ சம்மதிப்பாரா ஸ்ரீகாந்த்?

ஸ்ரீகாந்த் உங்க மிஸஸ் பேரை கவனிங்க.."வந்த"னா.. அதான் வந்து ரொம்ப தொல்லை பண்றாங்க.. "சென்ற"னான்னு பேரை மாத்திடுங்க.. பொயிடுவாங்க...

திருமண சிக்கலில் பிரபலங்கள்.. ஏன்?

அவிங்க சிக்கல்லாம் வெளியே தெரிஞ்சுடுது... எங்க சிக்கல் எல்லாம் வெளியே தெரியறது இல்லை அவ்ளோ தான் .. அங்கலாய்த்து கொள்கிறார் அப்பாவி பொதுஜனம்..

ஜனாதிபதி தேர்தல் தலைமை செயலகத்தில் நடக்கும்..

அதுலயாவது கள்ள வோட்டு இல்லாம பாத்துக்குங்கய்யா என்கிறார் கள்ள ஓட்டால் கடுமையாக பாதிக்கப்பட்ட நண்பர்..(பின்ன அவர் குடும்பத்தோட அத்தனை ஓட்டையும் ஆட்டைய போட்டுட்டாங்க இல்ல?)


கவுண்ட்டர் அடித்து வாழ்வாரே வாழ்வார்... மற்றோரெல்லாம் கவுண்ட்டர் வாங்கியே சாவார்..

சனி, ஜூலை 07, 2007

புரட்சி என்றால் என்ன?

புரட்சி புரட்சி என்று எல்லோரும் பேசுகிறார்களே.. புரட்சி என்றால் என்ன..? அரசாங்கத்தை கவிழ்ப்பதா?... முதலாளிகளை எதிர்ப்பதா.. ஆயுத போராட்டம் நடத்துவதா?...

எதை புரட்சி என்று எண்ணிக்கொண்டு பேசுகிறோம்..?

புரட்சி என்றால் புரட்டி போடுவது...( A drastic and far-reaching change in ways of thinking and behaving)

பெரும்பான்மையிலிருந்து பெரும்பான்மை வித்தியாசப்படுவது...

நாம் சமூக, பழக்க வழக்கங்களில் ஏற்படும் மிகப்பெரிய திட்டமிடப்பட்ட உடனடி மாற்றம்... (உடனடி என்பது அது சார்ந்த சமூகத்தின் அளவை பொறுத்து கால அளவில் மாறும் என்பதை நினைவில் கொள்க...)

புரட்சி எது சம்மந்தப்பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.. பொருளாதாரம், விவசாயம், அரசியல், கல்வி... இப்படி..

யாரால் வேண்டுமானாலும் திட்டமிடப்படலாம்.. சிறு குழு, பெரும் மக்கள் வெள்ளம்... அரசியல் குழுக்கள், ஏன் அரசாங்கமே கூட புரட்சிகள் செய்யலாம்.

எங்கே பார்த்தாலும் புரட்சி குறித்து விவதம் நடப்பது போல் எனக்கு ஒரு பிரமை.. எந்த புரட்சியை பற்றி பேசுகிறோம் என்பதில் தெளிவு இருக்கிறது என்றால் மகிழ்ச்சியே.. விவதத்தில் பங்கெடுக்கும் அனைவரும் அதே புரட்சியை பற்றி தான் பேசுகிறார்களா என்பதும் முக்கியம்..

நான் புரட்சி என்றால் இவைகளை தான் சொல்லுவேன்

இந்தியாவில் அரசாங்கத்தின் செயல்பாடுகளில், அது செயற்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு சரியாக சென்றடையும் வகையில் புரட்சி நடக்க வேண்டும்..

அரசை இன்னும் செம்மையாக்க, அது செயல்படும் ஹைதர் அலி காலத்து நடைமுறைகளை மாற்றி நவீனத்துவப் படுத்துவதில் புரட்சி வேண்டும்... (கவனிக்க கணினி மயமாக்கல் வேறு.. நான் குறிப்பிடும் நவீனப்படுத்துதல் வேறு.. இருக்கும் நடைமுறைகள் அப்படியே கணினிமயமாக்கப்படுதல் நவீனத்துவம் ஆகாது )

உதாரணம் சொல்கிறேன் ஒருவருக்கு அரசிலிருந்து எதற்கோ இழப்பீடு வழங்கப்படுகிறது... காசோலைகளை மட்டும் நம்பியிருந்த காலத்தில் அதற்கு 15 நாள் தேவைப்பட்டது என்று வைத்து கொள்வோம்.. இப்போது ECS எல்லாம் வந்து விட்ட காலத்தில் இன்னும் 15 நாட்கள் நேரம் கேட்பது நவீனப்படுத்துதல் ஆகாது...

கடமை தவறும் அதிகாரிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் செயல்பாடுகளில் புரட்சி வேண்டும்..

மக்கள் நலனை பேணுவதிலும் காப்பதிலும் புரட்சி வேண்டும்...

அரசு சாரா நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்டங்களை இயற்றுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் புரட்சி வெண்டும்...

முதலாளிகளின் நலனை(சிறு முதலீட்டாளர்களை பாதுகாப்பதாக சொல்லிகொண்டாலும்) பாதுக்காக்கும் SEBI-க்கு இருக்கும் அதிகாரங்களை போல.. வரி வசூலிக்கும் வருமான வரித்துறைக்கும், வணிகவரித்துறைக்கும் இருக்கும் அதிகாரம் போல, சமூக நலத்துறைக்கும், சுற்றுப்புற சூழல் மற்றும் சுகாதார துறைக்கும் இருப்பதாக தெரியவில்லையே...

அப்படியே இருக்கிறது என்றாலும் அந்த அதிகாரங்களை நடைமுறை படுத்துவதாக தெரியவில்லையே...
இதிலெல்லாம் மாற்றம் வர வேண்டும்.. புரட்சி வேண்டும்...

பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் நம்மால் அனுப்பப்படும் நண்பர்கள் நன்றாக செயல்படுகிறார்களா என்பதை மதிப்பீடு செய்வதில் புரட்சி வேண்டும்.. 5 வருடத்துக்கு ஒரு முறை ஆட்சியை மக்கள் மாற்றி விட்டால் அது புரட்சி ஆகாது... யார் ஆட்சி வந்தாலும்… மக்கள் நலம் தழைக்கும் வகையில் நடக்கவும், தவறினால் தண்டிக்கவும் புரட்சி வேண்டும்..

ஜனநாயம் செயல்படும் முறைகளை மாற்ற தான் புரட்சியே தவிர... ஜனநாயகத்தையே மாற்றுவது புரட்சி அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து...

புதன், ஜூலை 04, 2007

ஏழைகளின் நட்சத்திர கலை விழா...

இன்னைக்கு செய்தித்தாள் பார்த்தீங்களா?.. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடடம் கட்டுறதுக்காக நட்சத்திர கலை விழா நடத்த போறாங்களாம்...

இது என்ன அன்றாடங்காய்ச்சி தொழிலாளர்கள் சங்கமா? இல்லை அடுத்த வேளை சோற்றுக்கு அவதிப்படும் காண்டிராக்டு ஊழியர் சங்கமா...

கோடி கோடியாய் சம்பாதிக்கும் வர்க்கம் தானே? பெரிய-சிறிய நடிகர், நடிகைகளிடம் ஒரு லட்சமோ, 2 லட்சமோ வாங்கும் சம்பளத்துக்கு ஏற்ப நன்கொடை வாங்கி அந்த கட்டிடத்தை நடிகர் சங்கமே கட்டி கொள்ள கூடாதா?

அதற்கு ஒரு கலை விழா ஏற்பாடு செய்து அதற்கு டிக்கெட் போட்டு வசூலித்து தான் கட்டிடம் கட்ட வேண்டுமா?

அதற்கும் ரசிகர்கள் என்ற ஏமாளிகள் தலையில் தான் கைவைக்க வேண்டுமா?

என்னமோ மனசுல பட்டுச்சு...

ஞாயிறு, ஜூலை 01, 2007

இலக்கியவாதிகளும் வெகுசன இலக்கியமும்..

பதிவர்கள் இடையே நடைபெறும் விவாதங்களும், கருத்து மோதல்களும் நிச்சயம் அறிவை வளர்ப்பதாக இருக்கிறது.. பற்பல நூல்களையும், இலக்கியங்களையும், சமூக கலாச்சார பின்னனிகளையும் ஆராய்ந்து அறிந்த பின்னரே பலரது வாதங்கள் அமைகிறது... பதிவர்களின் மீது நடத்தப்படும் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து பார்த்தால் பதிவுலகம் அறிவுச்செறிவு நிறைந்ததாகவே இருக்கிறது..

ஆனால் பல கருத்து மோதல்கள் நான் ஏற்கனவே எனது பதிவொன்றில் சொன்னது போல்.. ரொம்ப கனமான பொருள் கொண்ட விவாதங்களாய் இருக்கிறது.. விவாதங்களை பற்றிய புரிதலுக்கு அதன் பின்புலங்களை சென்று ஆராய வேண்டிய அளவிற்கு கனம்...

உதாரணத்திற்கு சு.ரா-வின் எழுத்து குறித்த விவாதங்கள்...

நிற்க... சமூகத்தின் தன் தாக்கங்களை பெரிய அளவில் வெளிப்படுத்துவது இவர் போன்ற எழுத்தாளர்களாய் இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? சினிமா கவிஞர்கள், வெகு சனங்கள் படிக்கும் கிரைம் இன்னபிற நாவல்கள், பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளர்களே பெரும்பான்மையான தாக்கத்துக்கு காரணமாக இருக்க முடியும்...

இலக்கியங்கள் என்று பொதுவாக சொல்லப்படுகின்ற Conventional இலக்கியம்.. நல்ல கருத்துகளை கொண்டிருக்கிறது, சமூகத்தில் ஒரு புரட்சியை, மாற்றத்தை உண்டு பண்ணும் கருத்துக்கள் பெரும்பாலும் கடினமான வெகு சனங்கள் படிக்க முடியாத இலக்கிய வகையாகவே உள்ளது...
அதனாலேயே அதில் சொல்ல படும் கருத்துக்கள் எல்லாம் நல்லவையாக தான் இருக்கும் என்ற பொதுக்கருத்தும் ஏற்ப்பட்டு விடுகிறது...

வெகு சன இலக்கியங்கள் அதிகமாய் பயன்பட்டில் இருக்கும் ஊடகங்களை யாரும் விமரிசப்பதே இல்லை.. அதன் விவாதங்களும் கனமானவைகளாகவோ, கருத்து செறிந்தவையாகவோ இருப்பதில்லை...

இந்த வெகுசன இலக்கியங்கள் நிறைய அந்நிய வார்த்தைகளை சேர்த்து மக்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி நமது மொழியின் போக்கையே மாற்றி இலக்கிய வகைகளை நமக்கு புரியாத ஒரு பொருளாகவே செய்து விட்டது...

இத்தகைய ஆற்றல் மிக்க வெகுசன இலக்கியங்கள் கேட்பாரற்று, எந்த தணிக்கையும் இல்லாமல், எந்த விமரிசனமும் இல்லாமல் மக்களை எளிதாக சென்றடைந்து அவர்கள் வாழ்வியலையும் சிறிது சிறிதாக மாற்றி கொண்டே தான் இருக்கிறது..

திராவிட இயக்கங்களின் வெற்றிக்கும், வீச்சுக்கும் முக்கிய காரணம் இந்த வெகுசன இலக்கியங்களை சரியாக பயன்ப்படுத்தி கொண்டது தான் என்பதில் இருந்தே வெகுசன இலக்கியங்களின் ஆற்றலை புரிந்து கொள்ளலாம்

வெகுசன இலக்கியங்களை பெரும்பாலும் தரமான, விஷய ஞானம் மிக்க, சமூக ஆர்வலர்களும், சமூக இலக்கியவாதிகளும் விவாதிக்க தயங்க காரணம்.. அதைகுறித்து விவாதிப்பதோ, விமரிசப்பதோ தங்கள் தகுதிக்கு ஒவ்வாத செயல் என்று எண்ணுவது...

மக்களை சென்றடையாத எந்த இலக்கியமும், விமரிசனமும் நாம் எதிபார்க்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.. ஒரு வேளை ஏற்படுத்தினாலும்... அதற்கு வெகுக்காலம் பிடிக்கும்...


இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கும் புதுமையை பேச விழையும் இலக்கிய ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் இலக்கியங்களை விவாதிப்பதை பொருத்தவரை பழமைவாதிகளாகவே இருப்பதாய் தோன்றுகிறது..

சனி, ஜூன் 30, 2007

தாஜ்மகாலுக்கு ஓட்டு போடாதீர்கள்

புதிய உலக அதிசயங்கள் வரிசையில் தாஜ்மகாலும் இடம் பிடிக்க இந்த நம்பருக்கு SMS செய்து தாஜ்மகாலுக்கு ஓட்டளியுங்கள் என உங்களுக்கு உங்கள் நண்பர் SMS அனுப்புகிறாரா? நீங்களும் அதை நம்பி SMS ஓட்டு போட்டீர்களா?...

போடாதீர்கள்.. இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை...

“உலகத்தின் புதிய ஏழு அதிசயங்கள் தீர்மாணிக்கப்படுகிறது.. அதற்கான ஓட்டெடுப்பு” என்று நடத்தப்படும் இந்த ஓட்டெடுப்பின் பின்னனி என்ன என்று பார்த்தோமானால் அதிர்ச்சியாக இருக்கிறது...

சுவிட்சர்லாந்தில் உள்ள NOWC (New Open World Cooperation) என்னும் தனியார் நிறுவனத்தின் தலைவர் Bernard Webber என்பவரால் முடுக்கி விடப்பட்டுள்ள இந்த வாக்கெடுப்பு உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது...

இலவச மற்றும் கட்டண ஓட்டுக்கள் உதவியுடன் நடத்த படும் இந்த வாக்கெடுப்பு செல்பேசி SMS, தொலைபேசி அழைப்பு மற்றும் இணையத்தின் மூலம் நடத்தப்படுகிறது.

இதை பற்றி மேலும் தகவல்கள்

1) இது முழுக்க முழுக்க தனியார் நடத்தும் வாக்கெடுப்பு... இதற்கும் எந்த நாட்டின் அரசுகளுக்கும் தொடர்பில்லை...

2) உலக பாரம்பரியங்களை அறிவிக்கும், சேர்க்கும், நீக்கும் அதிகாரம் உடையது ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) மட்டுமே... UNESCO இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்துள்ளது...


UNESCO இதன் வாக்கெடுப்பு நடத்தப்படும் முறைகள் மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்து அவநம்பிக்கையும், கவலையும் தெரிவித்துள்ளது...

3) இந்த வாக்கெடுப்புக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நமது மத்திய அரசும் மறுத்துள்ளது...

4) இது முழுக்க முழுக்க லாப நோக்கோடு தனியார் நடத்தும் கருத்து கணிப்பு என்றும் இதை தடை செய்ய வேண்டும் என்று உலகெங்கிலும் எதிர்ப்பு குரல் கிளம்ப ஆரம்பித்துள்ளது... எகிப்து நாட்டில் ஏற்கனவே இதற்கு எதிராக, “ஓட்டளிக்காதீர்கள்” என்று பிரச்சாரம் கிளம்பி இருக்கிறது...

5) ஒவ்வொருவர் போடும் ஒரு SMS வோட்டுக்கும் மொபைல் நிறுவனங்களால் வசூலிக்கப்படும் கட்டணத்தில் ஒரு பகுதி இந்த தனியார் நிறுவனத்தை சென்றடையும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்... நமது அரசாங்கத்தின் BSNL கூட இதற்கு விதிவிலக்கல்ல

6) இன்னும் T சர்ட்டுகள் மற்றும் மெலும் பல வியாபார பொருட்கள், உலக சுற்றுலா மற்றும் பல வியாபாரங்கள் இதன் மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளன... அதன் லாபங்களும் சர்வதேச நிறுவனங்களிடையே பங்கிடப்படுகின்றன...

அப்பாவி மக்களின் நாட்டுப்பற்றை கூட காசாக்கும் எண்ணம் கொண்ட இத்தகைய நிறுவனங்களை என்ன செய்வது...


http://www.zeenews.com/print_articles.asp?aid=377013&sid=NEW
http://www.timesnow.tv/Sections/Sports/Whos_poll_is_it/articleshow/2161700.cms

புதன், ஜூன் 27, 2007

ஆவியின் அருளால் கிடைத்த ஜனாதிபதி பதவி

"நான் சமீபத்தில் பிரம்மகுமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக்கழகத்தின் தலைவர் தாதாஜியை சந்தித்து பேசிய போது, எனக்கு ஒரு இனிய அனுபவம் கிடைத்தது. தாதாஜியின் உடலில் பாபா ஆவி வந்து அவர் மூலம் பாபா எனக்கு அருள்வாக்கு சொன்னார்.. நான் அதிருஷ்டசாலி என்றும், மிகப்பெரிய பொறுப்பு எனக்காக காத்திருப்பதாகவும் கூறினார்..."

மேற்கண்டவாறு கூறியது வேறு யாரும் அல்ல....

குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருமதி பிரதீபா பட்டீல்.

-நன்றி:தினத்தந்தி செய்தி

இப்படியே போனால் இந்தியாவை வருங்காலத்தில் காப்பாற்ற போவது யார் என்று அந்த ஆவி சொல்லுமா?

ஞாயிறு, ஜூன் 24, 2007

குழந்தையா குட்டிச்சாத்தானா

நம்மூரு புள்ளைங்க பள்ளிக்கு போக பிடிக்கலைன்னா பொறண்டு பொறண்டு அழும்யா... நமக்கே தெரியும்... ஏன்னா நம்மள்ல பாதி பேரு அப்படி இருந்தவிங்க தான்...

அமேரிக்காவில இருக்கிற இந்த புள்ளைய பாருங்கய்யா.. இது புள்ளையா பூச்சாண்டியா?..

பள்ளிக்கூடத்தையே தரைமட்டமாக்க என்னா பிளான் பண்ணுதய்யா... பள்ளிக்கூடத்தை இடிச்சா மட்டும் பத்தாதாம்... உள்ளாற டீச்சருங்களை வேற வெச்சு நசுக்கனுமாம்..

அது ஏதோ வீட்டு பாடம் நிறைய கொடுத்துடாங்களாம்... அதுக்காக அம்புட்டு பேரையும் உள்ள வெச்சு குண்டு போட்டு காலி பண்ணிடுங்கன்னு.. ஒரு பில்டிங் இடிக்கிற கம்பேனிக்கு போனை போட்டு பேசுதுங்க சாமி.. குழந்தையா குட்டிச்சாத்தானா?...

ஆனா அது பேசுற அழகு இருக்கே அதுக்காக ஆயிரம் பள்ளி கூடத்தை இடிக்கலாம் போங்க....

கேட்டு பாருங்க...




Get this widget | Share | Track details

சனி, ஜூன் 23, 2007

அப்துல் கலாமும் ஐநூற்று சொச்ச திருடர்களும்

அப்துல் கலாம் அய்யாவை ஜனாதிபதியாக்கி அரசியலுக்கு இழுத்ததே தப்பு.
இதுல ஆளாளுக்கு அவரை வெச்சு அரசியல் பண்ண வேற ஆரம்பிச்சிட்டாங்க....

உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதுய்யா... அரசியல்னு வந்துட்டா தமிழ் இனமாவது, சிறுபான்மை கொள்கையாவது.. மண்ணாங்கட்டி.... எல்லாம் காற்றுல பறந்துடும்...

இந்திய நாட்டின் 100 கோடி மக்களில் முதல் குடிமகன்...
இந்திய முப்படைகளின் தளபதி...
இந்திய குடியரசின் தலைவர்...

எப்படிபட்ட பதவி... அதை எப்படியெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் கேவலபடுத்தறாங்க...

அப்துல் கலாம் சரி யார் அந்த ஐநூற்று சொச்ச திருடர்கள்... அதை நான் வேற சொல்லணுமா?

எட்டு போட இது ஆர்.டி.ஓ ஆஃபீஸாயா?

சதுர்வேதி அய்யா தெரியாம என்னை எட்டு போட கூப்பிட்டுட்டார்...
அவருக்கு நன்றி.

வாழ்க்கை பாதையில நாம எல்லோரும் எதையோ நோக்கி எட்டு போட்டுகிட்டு தான் இருக்கோம். ஆனா அது என்னன்னு தான் தெரியலை.. எதுவா வேணா இருக்கட்டும்.. இருக்கிற வரை யாருக்கும் தொந்திரவு கொடுக்காம நம்ம வேலையை பாத்துக்கிட்டு இருந்தாலே அதுவே பெரிய சாதனை.

எனக்கு எதுவுமே முழுசா தெரியாதுங்க... எதையுமே அதோட ஆழம் வரை போய் கத்துக்கிற போறுமை எனக்கு இருந்ததில்லை.. ஆனா அரைகுறையா நான் கத்துக்கிட்ட, கத்துக்கிட்டு வர விஷயங்கள் நிறைய...

இப்ப, நான் மறக்க முடியாத சில விஷயங்கள்...

1) பள்ளி படிக்கிற காலத்தில எல்லா பசங்களும் கிரிக்கெட் ஆடிட்டிருக்கிற நாட்கள்ல நான் நூலகமே கதியா கிடப்பேன். இன்னைக்கு அதோட பயன்களை உணர்றேன்..

2) அந்த பக்கம் வேலை இருக்கோ இல்லையோ மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகள்ல எல்லார் முகத்துலேயும் எதையோ தெடிக்கிட்டு நடக்கறது எனக்கு இன்னைக்கும் பிடிக்கும்.

3) கடற்கரையில கடல் அலையில கால் நனைச்சுட்டே நடந்த கல்லூரி நாட்களை மறக்கவே முடியாது.

4) ஒரு காலத்துல எல்லா கவுன்சலேட்களும் போய் ஓசி இனிவிடேஷன் வாங்கி வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள், சினிமாக்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் என மியுசியம் தியேட்டர், மியுசிக் அகாடமி, பிலிம் சேம்பர் என சைக்கிளிலேயே சுற்றி திரிந்தேன்... மறக்க முடியாத அனுபவங்கள்..

5) பொன்னியின் செல்வன்... தூங்காமல் கண்முழிச்சி இந்த காவியத்தை படிச்ச அனுபவம்... சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு...யவன ராணி- எல்லாம் அப்படி தான்... ஒரு மேனியா மாதிரியே ஆயிடுச்சு... வாழ்க்கையில நாம நமக்காக சில கணங்கள் வாழ்ந்திருப்போம்ல... அதுல இதுவும் ஒண்ணு...

6) எந்த பொருளுமே முதல் முதல்ல நமக்கு கிடைக்கும் போது. ஒரு விதமான பரவசநிலையில கொஞ்ச நாள் இருப்போம்... பைக், கம்ப்யூட்டர், கார், செல்போன்... எதுவா வேணா இருக்கட்டும்... அந்த முதல் சில நாள் சந்தோஷம் இருக்கே... அடாடடா.. அதுக்கு ஈடு இணையே கிடையாது போங்க...:-)


7) என் சித்தப்பா... என்னை ஊக்கப்படுத்திட்டே இருப்பார். நான் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு கண்ணை மூடிட்டு நம்புவார்... வாதாடுவார்... அவருக்காகவே நான் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்வேன்... அவரோட திடீர் மறைவு என்னை பாதிச்சுடும்னு தான் நினைச்சேன்..

ஆனா பாதிக்கலை...

அவர் மறைந்து போனதாக என் மனம் இன்னைக்கும் நம்பலை...


8) என் காதலி கிட்ட என் காதலை தைரியமா வெளிப்படுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டது... (காதலை சொன்னவங்களை கேட்டு பாருங்க... அதுக்கு நிறைய தில் வேணும்ங்க)

கொஞ்சம் ஓவரா தான் போயிட்டேன்னு நினைக்கிறேன்...

சரி நாம ஒரு எட்டு பேரை அழைப்போம்..

1. தீபா
2. யோகன் பாரிஸ்
3. மாயூரேசன்
4. செந்தழல் ரவி
5. தமிழ் சசி
6. நந்தா
7. வவ்வால்
8. நளாயினி

வாங்க வந்து கலந்துக்குங்க...

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர் (கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

வெள்ளி, ஜூன் 22, 2007

அறிவு ஜீவிகளும் ஹைடெக் விஷயங்களும்

அறிவுஜீவிகள்னா பேசும் போது எங்கேயோ பாக்கணும், பேசும் போது ஏதோ யோசிக்கற மாதிரி தெரியணும், நாலு வார்த்தைக்கு ஒரு தடவை நல்லா கேப் விடணும்....

அறிவு ஜீவிகள்னு அறியப்படுற சில பேரு எங்கயாச்சும் TV, மேடையில பேசி கேட்ருக்கீங்களா?

உங்களுக்கு என்னங்க தோணும் கேக்கும் போது?

நம்ம பி.சி. ஸ்ரீராம், எங்க தல கமல், தங்கர் சார் (எனக்கு தெரிஞ்ச அறிவுஜீவிங்க சிலர்) இன்னும் பல பேர் இருக்காங்க... எழுத்துலகில, சினிமாவில, இலக்கியத்துல...

ஏதேதோ பேசுவாங்க... உலகத்துல எங்கெங்க இருந்தோ யார் யார் பேரையெல்லாமோ சொல்வாங்க... அவர படிச்சிருக்கேன்.. இவர படிச்சிருக்கேன்... (பாதி பேரு முழுசா நம்ம வாய்ல நுழைஞ்சா பெரிய விஷயம்ங்க) அந்த படம் இப்படி இருக்கும், இந்த இலக்கியம் இத சொல்லுது... அடாடாடாடா... நாம எல்லாம் இந்த பூமியில் தேவை இல்லாம பிறந்துட்டமோனு ஒரு நிமிஷம் அழ வெச்சுருவாங்க...

ஏன் இப்படி இதை இப்படி எடுத்தீங்க, இல்லை எழுதினீஙன்னு சும்மா சாதரணமா கேட்டா கூட சொல்ற பதில் எல்லாம் சும்மா ஜயன்ட் வீல்ல போட்டு சுத்தி சுத்தி அடிச்சமாதிரி இருக்கும்... ஒண்ணுமே புரியாது..

நாம் பரவாயில்லை... பேட்டி எடுக்கிறவர் நிலைமை இருக்கே... சும்மா அப்படியும் இப்படியும் நெளிவாரு பாருங்க... அதுவும் தமிழ தப்பு தப்பா பேசுற ஹைடெக் அம்மணிங்கள சும்மா சுத்த தமிழ்ல கண்டபடி பேசி கலங்கச்சிடுவாங்க நம்ம அறிவுஜீவிங்க...

இப்படி எல்லாம் பேசுறதால யாருக்குங்க பிரயோசனம்?.. இல்லை கேட்டது தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க... வெகு ஜனங்களுக்கு புரியற மாதிரி இல்லாத எந்த கலையும், ஊடகமும் விளங்கவே விளங்காதுங்கிறது என்னோட தாழ்மையான அபிப்பிராயம்...

அதுக்காக வெகு ஜனங்களுக்கு ரசனை கம்மின்னு நான் சொல்ல வரலைங்க... புரியற மாதிரி பேசினா நாமளும் கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிக்கலாமேன்னு ஒரு ஆர்வத்துல கேட்டுட்டேங்க....

செவ்வாய், ஜூன் 19, 2007

மழை- ஒரு அற்புதமான அனுபவம் -சென்னைக்கு மட்டும் பூச்சாண்டி

மழை எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்.. ஆனால் சென்னை மாதிரி ஒரு நகரத்தில் இருந்து கொண்டு மழை பிடிக்கும் என்று சொல்வதற்கு ஒரு தில் வேணும்யா...

காரணமா?

சேற்று குழம்பாகிவிடும் சாலைகள்...

தெப்பக் குளமாகிவிடும் வீதிகள்...

கொசு உற்பத்திச்சாலைகளாகும் சாக்கடைகள் (மலேரியா உள்பட பல பயங்கர ஜூரங்களை உருவாக்கும் கொசுக்கள் நன்னீரில் உற்பத்தி ஆகுமென்பதை அறிக)...


பயங்கர ஜூரங்கள் (டெங்கு, மலேரியா வந்து குளிர்ல ரெண்டு தடவை பிரேக் டான்ஸ் ஆடினா நான் சொல்ற பயங்கர ஜூரத்துக்கு அர்த்தம் புரியும்),

டூ வீலர் ஸ்கிட்டுகள் (விழுந்து எழுந்து சப்பாணி கமல் மாதிரி போகிற சுகமே சுகம்னு சொல்றீங்களா?.. நமக்கு விருது எல்லாம் கிடையாதுங்க.. பஞ்சரும், டிஞ்சரும் தான்),

பன்னீர் தெளிப்பது போல சேறு தெளிக்கும் பஸ்கள்,

வேரோடு சாய்ந்து ரோடு மறியல் செய்யும் மரங்கள்..

செருப்பை போட்டுக்கொண்டு மேலே சேறடிக்காமல் நடக்க ரொம்ப பயிற்சி வேணுமப்பு... (ரோட்டில் செல்லும் டூ வீலர், ஆட்டோ வேகமாய் சென்று அடிக்கும் சேறு இந்த கணக்கில் வராது)

இடுப்பளவு தண்ணீரில் பள்ளிச்செல்லும் குழந்தையை (புத்தக மூட்டையோடு) தலைக்கு மேல் அனாயசாமாக தூக்கி கொண்டு நடக்க திராணி வேண்டும்....


வீட்டுக்குள் தண்ணீர் புகும் பட்சத்தில் கட்டில் மேல் உட்கார்ந்த படி குடும்பம் நடத்த தெரிய வேண்டும்...

சென்ற வருடம் சென்னை முழுக்க மழை பண்ணாத அட்டகாசம் இல்லை...

மழையை சமாளிக்க மக்கள் குறளி வித்தைகள் காட்ட வேண்டியிருந்தது... பல இடங்களில் எதுவுமே எடுபடாமல் மழை காட்டிய வித்தைகளை மக்கள் பார்க்க வேண்டியதாயிற்று...

இந்த வருட மழையை சமாளிக்க அரசாங்கம் ஏதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த மாதிரியும் தெரியவில்லை... (மழைநீர் கால்வாய்கள் அடைப்பு நீக்குதல், ரோடுகளின் குண்டு குழிகளை சரி செய்தல், மழை நீர் தேங்காமல் தடுக்க அமைக்கப்பட்ட வழிகளில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றுதல்.. ம்ஹூம்)

என்ன செய்ய எல்லோரும் தயாராகிக் கொள்ள வேண்டியது தான்.. காரில் போகும் அரசாங்க, அரசியல் சீமான்களுக்கு கால்நடைகளின் கூச்சல் கேட்கப் போகிறதா என்ன? ஹூம் பார்க்கலாம்...

(கால்நடை - நாம தாங்க.. கால்நடையா போறோம்ல)

ஞாயிறு, ஜூன் 17, 2007

சே குவேரா - ஏகாதிபத்தியத்தின் எமன்


“கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)”

சே குவேராவை சுட்டுக் கொல்ல பணிக்கப்பட்டு இருந்த எதிரி வீரனின் கைகள் நடுங்கி கொண்டிருந்தன...

"ஏன்னை கொல்ல போவது நீ தான்.. கோழையே நடுங்காமல் சுடு.. நீ ஒருவனை கொல்ல போகிறாய் அவ்வளவு தான்..."

என்றாராம் மாவீரன் சே குவேரா.....

சே குவேரா - இந்த ஒற்றை வார்த்தை தான் எத்தனை தேசங்களின் தலையெழுத்தை திருப்பி போட்டு இருக்கிறது...

எத்தனை வர்க்கங்களின் போர்முறைகளை மாற்றி போட்டு இருக்கிறது....

யார் இந்த சே குவேரா என்று கெட்பவர்களுக்கு இந்த இரும்பு மனிதனை, வாழ்வு முழுமையையும் போரிலேயே தொலைத்து, உயிரையும் போரிலியே தொலைத்த தோழரை அறிமுகப் படுத்தும் படலமாக இருக்க போகிறது இந்த பதிவு.

சே குவேராவின் திறமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

சே ஒரு தலைசிறந்த சிந்தனையாளர், மார்க்சிய-லெனினிசவாதி...
தேர்ச்சிப் பெற்ற மருத்துவர்...
அரசியல்-தத்துவவாதி,
லத்தீன் மற்றும் உலகெங்கிலும் இருந்த கொரில்லா போராளிகளின் தலைவர்....
ஒரு செஸ் வீரர்,
சிறந்த புகைப்பட கலைஞர்,
கவிஞரும் கூட..

Ernesto Guevara de la Serna- இது தான் அவரது இயற்பெயர்... பெற்றோர் இட்ட பெயர்...

1928-ல் அர்ஜன்டைனாவில் 3 சகோததரர்களூம், 2 சகோதரிகளும் கொண்ட பெரிய குடும்பத்தில் மூத்தவராக பிறந்த குவேரா 3 வயது முதலே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்...

பிறவியிலேயே போராடும் குணம் கொண்ட சே குவேராவை ஆஸ்துமாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை... அது தன் கடமையை செய்ய சே எதுவுமே நடக்காதவர் போல் ஒரு சிறந்த தடகள வீரனாகவும், ரக்பி விளையாட்டு வீரனாகவும் உருவானார்.

19வது வயதில் பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்புகாக அடியெடுத்து வைத்த சே. 1951-ல் தன்னுடைய 22வது வயதில்... நண்பரான ஆல்பர்டோ என்பவரது யோசனையின் பேரில் ஒரு வருடம் படிப்பை கைவிட்டு தென் அமெரிக்கா முழுதும் சுற்றி திரிய முடிவு செய்தார்...

இருவரும் தங்கள் பயணதுக்கு தெரிவு செய்த வாகனம் ஒரு மோட்டார் சைக்கிள்... வல்லமை பொருந்தியவன் 2 என்று சேவால் பெயரிடப்பட்ட அந்த நார்டான் 500CC வாகனத்தில் எங்கே சென்றார் என்று நினைக்கிறீர்கள்?

தொழு நோயாளிகள் தங்க வைக்கப்படும் இல்லமான LEPER COLONIES எனப்படும் இடத்துக்கு சென்று சில மாதங்கள் தங்கியிருந்து அவர்களுக்கு சேவை புரிய...

சேவை செய்வதற்காக மோட்டார் சைக்கிளிலேயே பல நூறு மைல்கள் தூரம் நாடு விட்டு நாடு கிளம்பிய சே குவேராவின் கண்களில் பட்ட காட்சிகள்...

வறுமை, வறுமை, அடக்குமுறை, பசி, பஞ்சம்.... இவை தாம்

கிட்டத்தட்ட அவர் பயணம் செய்த அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளுமே இதே நிலைமையில் தான் இருந்தன...

பெரிய சிந்தனையாளரும், இலக்கியவாதியும், மார்க்சிசிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவருமான சே இந்த சமூக ஏற்ற தாழ்வுகளுக்கும், வறுமைக்கும் ஆயுதமேந்திய போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்று நம்பினார்....

அவர் இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள் எல்லவற்றுக்குமான ஒரே தீர்வாக இந்த போராட்டத்தை உருவகம் செய்து கொண்டார்.

-தொடரும்

சனி, ஜூன் 16, 2007

காதல் என்றால் என்ன? அதற்கு என்ன கொம்பா இருக்கிறது?

தினமும் காலையில செய்தித்தாளை பிரிச்சா போதும்...

காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம்...காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை...காதலர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்...

காதல்... காதல்னு ஏதாவது செய்தி இருந்துகிட்டே இருக்கு...

உங்க பார்வையில காதல்னா என்னங்க?

கலாச்சார சீரழிவா?

இல்லை... கலர் கலர் கனவா?

இல்லை... கண்ணீர் தரும் நினைவா?

இல்லை... காதோரம் ரீங்காரமிடும் இசையா?

என்னைப் பொருத்த வரை அதுக்கு முடிவே கிடையாது... முடிவு கிடையாதுன்னா அதை நீங்க ஆரம்பிச்சப்புறம் முடிவு கிடையாதுன்னு அர்த்தம் இல்லை... நீங்க ஆரம்பிக்காட்டியும் அது இருக்கும்... அதுக்கு முடிவே கிடையாதுன்னு அர்த்தம்....

பேசலாமா?

புதன், ஜூன் 13, 2007

ஜாதி, மத பேதம் பேசும் அனைவருக்கும்....



கலை, இலக்கியம் போன்றவைகள், யார் படைத்தார்கள்,யார் எடுத்தார்கள், யார் நடித்தார்கள், அவர்கள் என்ன ஜாதி, என்ன மதம் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு பார்க்க வேண்டிய விஷயம்.

அவை பெரும்பாலும் அவை பறைசாற்றும் சமூகத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கும் என்றாலும், பிற பண்பாட்டை சேர்ந்தவர்களும் அதை ரசிக்கும் படி செய்வது அவற்றின் சிறப்பு. இதற்கு உலக அளவில் வெற்றி பெறும், பரபரப்பாக பேசப்படும் எவ்வளவோ திரைப்படங்களும், கதைகளும், காவியங்களும்,அவற்றின் வழியாக ஆழ்ந்த கருத்துக்களை குறிப்பால் உணர்த்தும் படைப்பாளிகளுமே சாட்சி....

அந்த காலத்து M.R. ராதா முதல் இன்றைய மணிரத்னம் வரை இயக்குனர்களை, அருமையான படைபாளிகளை, அவர் பிறந்த சமூகத்தின் பெயரை சொல்லி சொந்தம் கொண்டாடுவதோ, அல்லது வெறுத்து ஒதுக்குவதோ அறிவீனம் ஆகும்....

தயவு செய்து உங்கள் ஜாதி பிரச்சினைகளை அரசியலோடும், தரங்கெட்ட சிலர் படைப்பாளிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு அலைகிறார்கள் அவர்களோடும் நிறுத்தி கொள்ளுங்கள்.


திங்கள், ஜூன் 11, 2007

ஆங்கில மொழியின் நீளமான சொல் எது தெரியுமா...?

முதன் முதலில் 1936-ல் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் இடம்பெற்ற இந்த சொல் தான் ஆங்கில சொற்களில் நீளமான சொல் ..

எரிமலை பகுதிகளில் காணப்படும் மிக சன்னமான சிலிக்கா மணற்துகளை சுவாசிப்பதினால் ஏற்படும் ஒரு வகை நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயை குறிப்பிடும் சொல் தான் இந்த சொல்...

Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis

45 எழுத்துக்களை உள்ளடக்கிய இந்த சொல் எல்லா அகராதிகளிலும் இடம் பிடித்துள்ளது.

எல்லாம் சரி தான்.. இந்த சொல்லை எப்படி உச்சரிப்பது?

நிமோனோ-அல்ட்ரா-மைக்ரோஸ்கோபிக்-சிலிகோ-வோல்கனோ-கோனியாஸிஸ்.....

(உனக்கு வந்திருக்கிறது இன்ன வியாதின்னு நோயாளிக்கு விளக்கி சொல்றதுக்குள்ள டாக்டர் அம்பேல் ஆயிடுவாரு...)

(வியாதி பேரை சொல்லி எப்படியா லீவ் போடறது?... எப்படி மெடிக்லைம் கிளெயிம் பண்றது....?)

ஆமா தமிழ்ல நீளமான வார்த்தை எதுன்னு யாருக்காவது தெரியுமா?

என்ன தான்யா வேணும் உங்களுக்கு?


ப்ராமினிஸம், திராவிடம்....

அவனும் அவங்க மேல திணிக்கப்பட்ட குலத்தொழிலை செஞ்சிட்டு இருக்கலை நீங்களும் உங்க மேல திணிக்கப்பட்ட குலத்தொழில செஞ்சிட்டு இருக்கலை... நாடு நல்லா முன்னேறி கம்ப்யூட்டர் உபயோகபடுத்தி வலைப்பதிவு போடற அளவுக்கு அறிவும், பணமும், வசதிகளும் நமக்கு கிடைச்சிருக்கு....

நானும் இதை பத்தி பேச கூடாதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா நடக்கிற சண்டைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சியை விட மோசமா பொயிட்டிருக்கு..

எனக்கு தெரிஞ்சு இந்த போராட்டங்களும், சண்டைகளும் நடக்க வேண்டிய இடம் இது இல்லை... எங்கே இன்னும் இந்த ஜாதி பிரச்சினைகள் இருக்கோ அங்கே தான் இந்த போராட்டங்கள் நடக்கனும்…

ஏன் அங்கே போராடறதுக்கு ஆள் இல்லையா? என்ன பண்ணிட்டு இருக்காங்க அங்க உள்ள அரசாங்கமும், சமூகவாதிகளும்?


சாவியை ஒரு இடத்தில இருட்டுல தொலைச்சிட்டு, இன்னொரு இடத்தில வெளிச்சத்துல தேடற மாதிரி இங்கே ஏன் தேவை இல்லாம சண்டை?...

பணம் வந்துட்டா ஜாதி மதம் எல்லாம் காணாம போயிடும்ங்கிறது நிதர்சனமான உண்மை.... இப்ப எல்லாம் 2 ஜாதி தான்... பணக்காரன் ஜாதி, ஏழை ஜாதி... அவ்வளவு தான்... வசதி வந்துட்டா ஏற்ற தாழ்வும் அதுக்கு ஏத்த மாதிரி மாறிக்குது....

பணக்காரார்களையும், தொழில் அதிபர்களையும், அரசியல்வாதிகளையும் என்ன ஜாதின்னு யாராவது கேக்கறாங்களா என்ன?

அரசியல்வாதிகள் அவங்க சொந்த லாபத்துகாக இதை பிரச்சினை ஆக்கறாங்க.. நாமும் என்ன ஏதுன்னு புரியாம அடிச்சிகறோம்...

கவனிக்க வேண்டிய பிரச்சினை நிறைய இருக்கு...

அவங்க பண்ணாலும் தப்பு தான் நாம பண்ணாலும் தப்பு தான்... ஆகவே சகோதரர்களே.. நோ சண்டை பிளீஸ்...

சனி, ஜூன் 09, 2007

நேர்மையான கொள்ளை, கள்ளக்கடத்தல் தொழில்..

நேர்மை....
எந்த தொழில் செய்ய நேர்மை தேவை?

எந்த தொழிலில் நேர்மையும், ஒழுக்கமும் உள்ளது...?
நல்லா யோசிச்சி பாருங்க...

தெரியலை தானே?
நான் ஒழுக்கமாக நடக்கும் சில தொழில்களை எல்லாம் சொல்றேன்...
சரியான்னு பாருங்க


கள்ள கடத்தல்
ஆட்க் கடத்தல்
கொள்ளை.. திருட்டு...
மோசடி....

என்னடா இப்படி சொல்றானேன்னு பயந்துக்காதீங்க...

விஷயத்தை முழுசா கேளுங்க...

இதெல்லாம் சட்டத்துக்கும், மக்கள் நலனுக்கும் எதிராக நடக்கிற தொழில்கள்...

இதில் உள்ள வேலையாட்கள் மற்றும் பணி சூழ்நிலை குறித்து பார்ப்போம்...

1) தொழில் நடத்தும் இடத்தில் பெரிய வசதியெல்லாம் இருக்காது.
2) உடன் வேலை பார்க்கும் அனைவரும் மகா கோபகாரர்கள், கிரிமனல்கள்.
3) வெளியே தைரியமாக நடமாட முடியாது... (போலீஸ்)
4) உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.
5) உண்மை தெரிந்தால் ஊருக்குள் யாரும் பேச மாட்டார்கள், பழக மாட்டார்கள்.. சொந்த குடும்பமே எதிர்க்கும்.
6) P.F, கிராஜுவிட்டி எதுவும் கிடையாது.
6) எல்லவற்றுக்கும் மேல் அரசாங்க ஒத்துழைப்பு என்பதே கிடையாது.

இத்தனை இருந்தும் இந்த தொழிலில் பாருங்கள்..

அவரவர் வேலையை அவரவர் கச்சிதமாக செய்து முடிக்கின்றனர்...

நன்றாக சம்பாதிக்கிறார்கள்...

எங்கே கிளம்பிட்டீங்க? ஓ... கள்ள கடத்தல் பண்ணவா?

யோவ்.. இரும்மயா...என்ன அவசரம்? நான் இன்னும் முடிக்கலை...

இதெல்லாம் நான் சொன்னது அந்த தொழில்களை நியாயப்படுத்த இல்லை.... இல்லவே இல்லை...

எப்படி இவ்வளவு பிரச்சினைகள் இருந்தும் இந்த தொழில்களில் நேர்மையும், ஒழுக்கமும், Customer Satisfaction(?)... எல்லாம் இருக்கிறது...

உதாரணத்துக்கு அரசாங்க உத்தியோகங்களை எடுத்து கொள்ளுங்கள்...

இருங்க.. இருங்க.. நான் அரசாங்க உத்தியோகத்தை கள்ள கடத்தலோட ஒப்பிடலை... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப அவசரம்...

நம்ம அரசாங்கம் எவ்வளவு வசதிகளை செய்து தருகிறது?
எவ்வளவு சலுகைகள்?..
எவ்வளவு உரிமைகள்...
கடமையை ஆற்ற எவ்வளவு வசதிகள்..

யாரது எவ்வளவு தொல்லைகள் கூட என்றது?... அதெல்லாம் தருவாங்க தான்.. ஆனால் அதெல்லாம் மீறி கடமை ஆற்ற தான் நிறைய வழிமுறைகள் கொடுத்திருக்காங்க... மனசாட்சி படி கடமை ஆற்ற வழிகள் இல்லாமல் இல்லை...

நம்ம தனியார் தொழில்துறைகளை எடுத்து கொள்ளுங்கள்... எவ்வளவு ஊக்கம்..? எவ்வளவு வசதிகள்.. அங்கீகாரம்..
இருந்தும் எந்த தொழிலாவது மனசாட்சிபடி, நேர்மையாக நடக்கிறதா?...

இவ்வளவு தங்கள் கடமைகளை யாராவது ஒழுங்காக செய்கிறார்களா?

அவரவர் கடமையை செய்ய வைக்க அரசாங்கமும், கோர்ட்டும் எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது?
ஒழுக்கமாக,நேர்மையாக தொழில்கள், வேலைகள் நடக்க எவ்வளவு கட்டுப்பாடுகள், சட்டத்திட்டங்கள், விதிமுறைகள்.. அதிலும் ஓட்டைகளை கண்டுபிடித்து குறுக்கு வழிகளை தேடும் கும்பல்கள்...

ஏன் சட்ட விரோதமான வேலைகளில் ஈடுபடும் நபர்களிடம் இருக்கும் ஒழுக்கம் சட்டப்படி நடக்கும் வேலைகளிலும், தொழில்களிலும் இல்லை?

1) அவர்கள் தொழிலில் பத்திரங்கள் எழுதி வைத்து கொண்டு கோர்ட்டு வழக்கு என்று ஏறி இறங்க முடியாது... அதனால் சட்ட திட்டங்கள், நெறி முறைகள் சரியாக, முறையாக, நடைமுறைக்கு ஏற்ற படி வகுக்கப்படுகின்றன.

2) அனைத்து விஞ்ஞான கண்டுபிடிப்புகளும், புரட்சிகளும் உடனே உபயோகத்திற்கு வருகின்றன.

3) விதிமுறைகள், சட்டத்திட்டங்கள் மீற பட்டால் தண்டனைகள் கடுமையாக இருக்கும்.

4) தொழில் ரகசியங்கள், Confidential Info வெளியார்க்கு தெரிவிக்க பட மாட்டாது.. மீறினால்..

5) ஒரு முறை ஏமாற்றினால், சரியாக வேலை முடிக்கா விட்டால் யாரும் மறுபடியும் வேலை தர மாட்டார்கள். தொழில் நடக்கவே நடக்காது.

புரிகிறதா சமூகமும், அரசாங்கமும் எங்கே கோட்டை விடுகிறார்கள் என்று?

இது போல நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் தொழில்கள், வேலைகள் நடக்க

1) சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது. நடைமுறைக்கு ஏற்ற மாதிரியும் இருக்க வேண்டும்.(உங்களுக்கு தெரியுமா? எத்தனை சட்டங்களை வெள்ளையர்கள் இயற்றியவைகளை இன்னும் காலத்துக்கு தக்க படி மாற்றாமல் அப்படியே வைத்துள்ளார்கள் என்று)

2) தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் கடுமையாக்க பட வேண்டும்..

3) விதிமுறைகளை மீறும் தொழில் அமைப்புகளை மீண்டும் தொழில் செய்ய முடியாத படி தடை செய்ய வெண்டும்.

4) தொழில் செய்வதற்கும், அரசாங்க பணிகளை செய்ய தேவையான அடிப்படை வசதிகளை செவ்வனே நிறைவேற்றி தர வேண்டும்... (பாவம் போலீஸ் நண்பர்கள் இன்னும் 303 ரைஃபிள்களை வைத்து கொண்டு தான் ஏ.கே 47 களையும், 9 MM பிஸ்டல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது)

இதெல்லாம் சரியாக இருந்தால் தான் சர்வதேச சந்தையில் நம் பொருட்களின் மதிப்பு புரியும்.
மக்களுக்கு சரியான விலையில், தரமான பொருட்கள் கிடைக்கும்.

அரசு இயந்திரம் மக்களுக்கு இன்னும் பயனுள்ள வகையில் செயல்படும். மேற்சொன்ன நேர்மையான நிழல் தொழில்களை அழிக்க முடியும்...

ஆகவே நண்பர்களே...

கொளுத்தி போட்டுட்டேன்.. ஆதரவு தெரிவியுங்களேன்..

வியாழன், ஜூன் 07, 2007

உலகத்துக்கு பால் ஊத்திடாதீங்க...


க்ளோபல் வார்மிங்க் (Global Warming)... ஹவுஸ் வார்மிங்க் மாதிரி ஏதோ உலகம் பால் காய்ச்சுதுன்னு தான் நானும் நெனச்சிட்டு இருந்தேங்க....

விட்டா உலகத்த மறந்துட்டு வேற கிரகத்துல நாம எல்லாம் பால் காய்ச்சி குடியேறுகிற மாதிரி ஆயிடுமாம்... அத தான் குளோபல் வார்மிங்க்னு சொல்றாங்க....


சைனாவில இருந்து ஒருத்தன் சொல்றான்... இப்படியே போனா இன்னும் 30 வருசத்துல உலக வரைபடத்துல இருந்து சென்னை, மும்பை, லண்டன், நியூயார்க் நகரம் எல்லாம் காணாம போய்டுமாம்….

அமெரிக்கால இருந்து இன்னொருத்தன் சொல்றான் பனிமலை எல்லாம் உருகுதாம்... 2080-ல உலகத்தோட கடல் மட்டம் 23 அடி ஜாஸ்தி ஆயிடுமாம்... அதனால எல்லார்க்கும் ஆப்பாம்... அட ஆப்பம் இல்லைங்க… ஆப்பு-ஆம்...

ஆக கூடி எல்லாம் நம்ம சிசர் மனோகர் மாதிரி ஒரே மேட்டர தான் சொல்றானுங்க...

“சிரிங்கடா... சிரிங்க...இன்னும் மூணே வருஷம் தான்...
பூமாதேவி சிரிக்க போறா.....
எல்லாரும் உள்ள போப்போறீங்க..." (படம்-துள்ளி திரிந்த காலம்)

(பூமியை குளிர வைக்க என்ன பண்ணலாம்...

சூரியனை பூன்னு ஊதி அணைச்சிடுவோமா?

பெரிய ஏ.சி, மெஷின் செஞ்சு பூமிக்கு மேல மாட்டிடுவோமா?

இல்லை, பூமி மேல அப்பப்ப பெரிய பைப்ல தண்ணி அடிச்சி விட்ருவோம?

அது கூட நல்ல ஐடியா தான்... தரையில பெரிய குழியா தோண்டி பீரை மில்லியன் கேலன் கணக்கில ஊத்தினம்னா பூமி குளிர்ந்திடாது?)


குளோபல் வார்மிங்க்னா என்னங்க?

"புவி வெப்பநிலை அதிகரிப்பு (Global warming) என்பது காலப்போக்கில் புவியின் காற்று மண்டலம் மற்றும் கடல்களின் சராசரி வெப்பநிலை அதிகரிக்கும் நிகழ்வைக் குறிக்கும்."
(நன்றி:விக்கிபீடியா)

இதுக்கு காரணம்... மனிதர்களாகிய நாம தாங்கோ.. நாம தாங்கோ... அப்படின்னு சென்ட்ரலைஸ்ட் ஏ.சி போட்ட ஹால்ல இருந்து பெரிய பெரிய கண்ணாடி போட்டு, குறுந்தாடி வெச்ச விஞ்ஞானிங்க எல்லாம் சொல்லிட்டாங்க...

அட அது ஒண்ணும் இல்லீங்க...

பூமியோட சராசரி வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸ் இருந்துதாம்.. இப்போ 2 டிகிரி வரை வந்துடுச்சாம்..

அதுக்கு காரணம்... நாம எல்லாம் வீட்டுல ஃபிரிட்ஜ் பயன்படுத்தறதும், ஏ.சி போட்டு தூங்கறதும் தானாம்...

இந்த பொருள்ல எல்லாம் ஏதோ பச்சை வீட்டு வாயு இருக்காம்...அது வெளிய வருதாம்(கரிமல வாயு, மீத்தேன், நைட்ரோஜன் ஆக்சைட்).
(பேசாம அந்த வீட்டுக்கு சிவப்பு பெயிண்ட் அடிச்சிட்டா என்ன?)

அது காரணமா காற்று, சுற்று சூழ்நிலை வெப்பம் ஜாஸ்தி ஆகி... அண்டார்டிகா, க்ரீன்லாந்து இங்கே இருக்கிற பனி மலை எல்லாம் உருகுதாம்... அதனால தான் ஆபத்தாம்..

அதுமட்டும் இல்லாம... இயற்கையோட சமச்சீர்நிலையும் கெடுதாம்...(அடப்போங்கப்பா...இதை எங்க ஊர் மேதா பட்கர் சொல்லியே எங்களுக்கு புரியலை... கிளம்பிட்டாங்க.. பேர் தெரியாத ஊர்ல இருந்து)

இன்னும் நிறைய சொல்றானுங்க... நமக்கெதுக்கு அதெல்லாம்... யாருய்யா அது? என்ன கூட்டம் அங்கே?... என்னது அரசியல் தலைவருக்கு.. பிறந்த நாளா?.. முக்கியமான விஷயமாச்சே?

இங்கே என்னய்யா கூட்டம்? அரசியல் தலைவர் வீட்டில ரெய்டா?..ரொம்ப முக்கியம்.. இருங்கய்யா நானும் வரேன்...

இதுல இருந்து நானே மாறுபடறேன்...இதையும் படிங்க

திங்கள், ஜூன் 04, 2007

அறிவாலயத்துக்கு ஆபத்து வருமா?

முன்பு விஜய்காந்தின் ஆண்டாள் திருமண மண்டபம், பின்பு கோடை நாடு எஸ்டேட், இன்று அ.தி.மு.க தலைமையகம். என்ன தான் நடவடிக்கை எடுப்பது வெவ்வேறு துறைகளாக இருந்தால் கூட, மாற்று கட்சிகளின் கட்டிடங்கள் மட்டும் இலக்காவது கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது. ஒரு தி.மு.க கட்டிடம் கூட இதில் வருவதில்லையே... ஆக்கிரமப்புகளை அகற்ற வேண்டியது தான்... அதற்காக மாற்று கட்சிகளை குறி வைத்து பழி வாங்குதை போன்ற சந்தேகங்களை தலைவர் கலைஞர் தவிர்ப்பது நல்லது என்றே படுகிறது....

அதற்கு பதிலடியாக தி.மு.க கட்டிடங்களை இடிப்பேன், தி.மு.க.வை பூண்டோடு அழிப்பேன் என்று செல்வி ஜெயலலிதா கூறுவதும் சரியில்லை...

ஆரோக்கியமான அரசியல் மாநிலத்தில் அமைந்தால் தான் மக்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். மக்களுக்கு செய்ய வெண்டிய நலப்பணிகள் எவ்வளவோ இருக்க, குடும்ப சண்டையிலும், கட்சி சண்டைகளிலும், அநாகரீக அரசியலிலும் தலைவர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பது மனதிற்கு கவலை அளிப்பதாக உள்ளது....

ஞாயிறு, மே 27, 2007

அதிக பின்னூட்டங்களை பெற எளிய வழிகள்..

அதிக பின்னூட்டங்களை பெற எளிய வழிகள்..

எந்த மாதிரி வலைப்பதிவானாலும் அதிக பின்னூட்டங்கள் பெற வழி...............

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

எனக்கு தெரியவில்லை... உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...

ப்ளீஸ்...

திரைப்பட ரசிகரா நீங்கள்?

நாம் எவ்வளவோ திரைப்படங்களை பார்க்கிறோம். சில நாட்களிலேயே மறந்தும் போகிறோம்.

சில திரைப்படங்கள் மட்டும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் அப்படியே படிமனாய் படிந்து விடும்... அதற்கு காரணங்கள் எவ்வளவோ இருக்கும்...

என் மனதில் பதிந்த இந்த ஆங்கில திரைப்படத்தை பற்றி கொஞ்சம்...

"The Last of the Mohicans"(1992)

சிறந்த ஒலியமைப்பிற்கான ஆஸ்கார் விருது வாங்கிய ஆங்கில திரைப்படம்.

1992-ல் வெளி வந்த இத்திரைப்படம் 1750-களில் நடந்த ஆங்கில-பிரெஞ்ச்/அமெரிக்க பூர்வகுடியினர் இடையே நடந்த போர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவலையும், 1936-ல் எடுக்கப்பட்ட Last Of the Mohicans (1936) திரைப்படத்தையும் தழுவி எடுக்க பட்டது.

ஆங்கிலேயர்களும் பிற ஐரோப்பிய குடிகளும் காலனி குடியேற்றங்களுக்காக ஒருவரோடு ஒருவர் யுத்தம் செய்யும் பின்னனி... பிரெஞ்சு படைகள் சிவப்பிந்தியர்களோடு சேர்ந்து ஆங்கிலேயரோடு யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் பிரதான அம்சம் உயிரோட்டமான போர் காட்சிகள்,
உயிரோட்டமான இசை.. துல்லியமான ஒளிப்பதிவு... சிறந்த கதையமைப்பு.. கதைக்களன்..

கதைப்படி MOHICANS என்ப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்த 3 பேர் தங்களுக்கு பழக்கமான ஆங்கிலேய குடும்ப நண்பர் ஒருவரின் மகள்களுடன் அவர்கள் தந்தையின் இருப்பிடம் நோக்கி புறப்படுகிறார்கள். ஆங்கிலேய ராணுவ அதிகாரியான அவர் பொறுப்பில் உள்ள கோட்டை கடும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவரை போல போலி கடிதம் அனுப்பி மகள்களை கடத்த, அவரால் பாதிக்கப்பட்ட மாகுவா (Magua)(Actor-Wes Studi) எனப்படும் பூர்வகுடி முயற்சிப்பது 3 பேருக்கும் தெரிய வருகிறது. கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்து கோட்டையை அடைந்து, திரும்பவும் அங்கே இருந்து கோட்டை வீழ்ந்த காரணத்தால் எதிரிகளிடம் தப்பித்து, மாகுவாவிடமும், அவருக்கு உதவும் ஹியுரான் இனத்தவரிடமும் சிக்கி கொள்கின்றனர்.

அவர்களுக்கு என்னாகிறது என்பதை க்ளைமேக்ஸ் சொல்கிறது.

அழிவை காட்டுவதற்காகவும், போர்களின் தன்மையை அவற்றின் விளைவுகளை சித்தரிக்கும் திரைப்படங்களில் காதல் காட்சிகள் அவ்வளவு உயிரோட்டமாக இருக்காது. மாறாக இப்படத்தில் சகோதரிகளில் அக்கா கோரா(Cora) (actress- Madeleine Stowe)விற்கும், கதாநாயகன் ஹாகேயேக்கும்(Hawkeye)(Actor- Daniel Day-Lewis) இடையே ஏற்படும் காதலும், இளையவள் அலைஸுக்கும்(Alice)(Actress-Jodhi May) அன்காஸுக்கும்(Uncas)(Actor- Eric Schweig) ஏற்படும் காதலும் மென்மையாக சொல்லப்பட்டுள்ளது..

படத்தில் இடம்பெறும் விலாவரியான சண்டை காட்சிகள் காலனி ஆதிக்க வெறியில் ஐரோப்பியர்கள் செய்த கொடுமைகளை உலகிற்கு தெரிவிப்பதாக உள்ளது. காலனி அமைப்பதிலும், தத்தம் மக்களை குடியேற்றுவதிலும் அவர்களுக்கு இடையே இருந்த போட்டியும் பொறாமையும், போர்களும்.... இத்திரைப்படம் தோலுரித்து காட்டுகிறது.

தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் கொடுமை செய்த ஆங்கிலேயர்களை பழி வாங்க துடிக்கும் அமெரிக்க பூர்வகுடியினரின்(சிவப்பிந்தியர்கள்) கோபம் தான் படத்தின் முக்கியமான கரு.

சண்டைக்காட்சிகள் அருமையாக படம் பிடிக்க பட்டுள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.


மாகுவாவும் ஹியுரான்(Huron) இனத்தவரும் பிடிப்பட்ட சகோதரிகளை பங்கு பிரித்து கொள்கிறார்கள். கோராவிற்கு பதிலாக தன்னுயிரை இழக்க முன்வருகிறார் ஒரு ஆங்கிலேய தளபதி. (Actor-Steven Waddington) பதிலுக்கு கோரா ஹாகேயேவிடம் ஒப்படைக்க படுகிறாள்.

மாகுவாவால் கொண்டு செல்லப்படும் அலைசை காப்பாற்ற போராடுகிறான் அன்காஸ். போராட்டத்தில் மாகுவாவால் கொல்லபடுகிறான். மாகுவாவிடம் சிக்கி சின்னாபின்னமாகி சாக விரும்பாமல் அன்காஸ் செத்து விழும் அதே இடத்தில் அலைஸும் குதித்து உயிரை விடுகிறாள்.

இவை அனைத்தும் கோராவை மீட்டு கொண்டு ஹாவேகேயும், சிங்காகுகும் (Chingachgook) (Actor-Russell Means), வருவதற்குள் நடந்து விடுகிறது.

தப்பி செல்லும் மாகுவாவையும் அவன் ஆட்களையும் இருவரும் விரட்டி செல்கிறார்கள்.

மாகுவாவை சின்காகுக் கொல்கிறான். கோராவும், ஹாவேகேவும், சின்காகுக்கும் காலனி ஆதிக்கம் எப்போது முடிந்து எப்போது அமைதி திரும்பும் என்று எதிர்காலத்தை பற்றிய கவலைகளோடும், கனவுகளோடும் பேசிக்கொள்வதோடு படம் நிறைவடைகிறது.

உச்சக்கட்ட காட்சி மொத்தம் பத்தே நிமிடங்கள் தான் அந்த பத்து நிமிடங்கள் காரணமாக படம் பத்தாயிரம் மடங்கு நம் மனதினுள் விசுவரூபம் எடுத்து விடுகிறது.

கண்களில் மட்டும் கொலை வெறி காட்டி மிரட்டும் மாகுவா, கண்களில் இயலாமையை வெளிக்காட்டும் அன்காஸ், தன் வாழ்க்கை சூனியமானதை சிறு உணர்ச்சி ததும்பலில் வெளிபடுத்தும் அலைஸ் இப்படி…..

பத்து நிமிடத்தில் பதற வைக்கிறார்கள். கோராவிற்கு பதிலாக உயிர் துறக்க சம்மதித்து நெருப்பில் இறக்கப்படும் ஸ்டூவர்ட் எனப்படும் ஆங்கிலேய அதிகாரியை ஹாவேகே தூரத்தில் இருந்து சுட்டு கருணை கொலை செய்யும் காட்சியில் கலங்காத உள்ளத்தை கூட கலங்க வைக்கிறார் இயக்குனர் மைக்கேல் மேன் (Michael Mann). மனதை விட்டு அகலாமல் வெகு காதினுள்ளே ரீங்காரமிடும் இசை (Randy Edelman & Trevor Jones).

செல்டிக் வயலின்(CELTIC Violin) எனப்படும் பத்து நிமிட உச்சக்கட்ட இசை, இசை ரசிகர்கள் இடையே வெகு பிரபலம்.

பிரமாதமான இந்த திரைப்படத்தை நேரம் ஒதுக்கி அவசியம் பார்த்து விடுங்கள்.


க்ளைமேக்ஸ் காட்சியை பார்க்க விரும்பும் அன்பர்களுக்காக...


ஞாயிறு, மே 06, 2007

மூக்கின் மேல் கோபம்

மூக்கு
வேண்டாம் இறைவா- இதை
போக்கு

நாசி அதுவும்
நாட்டப்பட்டது
நறுமணங்களை நுகர தான்.

நச்சு மணமே
நறுமணமானதே
நரகமான நகரத்தில்.

விரல் வைத்து
சமூகத்தை யோசிக்க தான்
மூக்கு.
யோசிப்பாரில்லை
எதற்கு மூக்கு.

உயிர் மூச்சே
ஒழுக்கம் தானாம்.
அதுவே இல்லை
மூச்சு எதற்கு
மூக்கு எதற்கு?...

பலர் நகரப்
பாதைகளில்
பறக்கும் போது
சுவாசிப்பதே
வாயால் தான்.
வாய்க்கு பாவம்
வாய்ப்பு இல்லை நுகர்ந்திடவே!
நுகர்ந்திட்டால்
பின்பக்கம்
நகர்ந்திடுமே...

அண்டை வீட்டை
மோப்பம் பிடிக்கும்
மோசமான நாசி
இனியும் வேண்டுமோ?

ஜாதியென்றால்
வியர்த்து போகும்
மூக்கதுவும்
முக்கியமோ?

சுவாசிக்க வாயொன்று
ஜீவிக்கிறதே
மூக்கெதற்கு
முன்னால் நீட்டிக் கொண்டு?

பலருக்கு
பக்க்த்து மனிதரின் தனி
பட்ட விஷயங்களில்
நுழைத்து
நுழைத்தே
மூக்கு சுருங்கி விடுகிறது

வாய் செய்யும்
வழிசலுக்கு
பாவம்
மூக்கெதற்கு
அறுபட வேண்டும்?
வேண்டாம்
மூக்கு!

எங்கள்
மூக்குகளில்
காற்று ஏற வேண்டாம்
கண்டிப்பாக வெண்டாம்
காற்று முழுதும்
சமூகத்தின்
கசப்பு சிந்தனைகள்
கலந்து கிடக்கிறது.

மூக்கு வேண்டாம்
இந்த பாழும்
மனிதனின்
மூக்கில் தான்
மூவுலகின் தீமையும்
முளைத்திருக்கிறது..

மூக்கே கெட்ட சக்தி!
நல்ல பிராண வாயுவை
நைச்சியமாய் நுகர்ந்து விட்டு
கரிமல வாயுவை
கமுக்கமாய் கற்றில்
கலக்கும்
கள்ளி செடி.

மூக்கை போல தான்
முன்னிற்கும் மனிதரும்.

மூக்கு
மனிதனை வாழ வைக்கிறது.
மனிதனோ
அதை மூட வைக்கிறான்.

வாகனங்கள்,
வாசஸ்தலங்கள்,
ஆலைகள்,
அணுகுண்டுகள்.....
நாங்களே நீக்கி கொள்ளும் முன்பு
கொடுத்த நீயே
எடுத்து கொள்!

பணக்கார சமூகம்
ஏழையின்
தலையில் தட்டும்
தடாலடியில்
மூக்கிலிருந்து ரத்தம்
முளைக்காமல் இருந்தால்
போதும்....

நாசியே
நாச சக்தியாய்
போன நிலையை கண்டோம்.
மதுவை, மாதுவை
நுகர்ந்தால் தான்
இன்றைய இளைய நாசிகள்
இனிக்கின்றன.

இளமை மாறியும்
இன்னும் மாறாமல் பல
நாசிகள் இருக்கின்றன.

தட்டி எடுத்து போ
எட்ட கடுத்து போ
மட்டமான மூக்கதனை....

வெள்ளி, ஏப்ரல் 27, 2007

சிரிங்க... சிந்திக்காதீங்க... (3)

கிரிக்கெட் ரசிகரான தருமி இந்தியாவின் உலக கோப்பை ஆட்டத்தை பார்த்து வாந்தி எடுத்து, வயத்தால போய் ஆட்டங்கண்டு புலம்பி கொண்டு இருக்கிறார்...

"அய்யோ நாலு வருஷமாச்சே, நாலு வருஷமாச்சே... கோப்பை நமக்கில்லை, நமக்கில்லை எவனோ தள்ளிட்டு போகப்போறான்... நான் எங்கே போவேன் என்ன பெட் கட்டுவேன்? சொக்கா... ஐ சி சி கொடுக்கற கோப்பை இந்தியாக்கே கிடைக்கற மாதிரி அருள் புரிய மாட்டியா? ஆமா சூப்பர் எய்ட்டுகே சுக்கிர திசை இல்லை... கோப்பை வேறயா? கோழிகுஞ்சு கூட கிடைக்காது.."

அப்போது அங்கே சிவபெருமான் தோன்றுகிறார்...

"தருமியே..."

"யாருய்யா கூப்பிட்டது?"

"அழைத்தது நான் தான்"

"யாருய்யா நீ?"

"செஞ்சுரியும், சிக்ஸரும் அடித்து, பவுண்டரியும், பவுலரையும் அடிக்கும் கிரிக்கெட் பேட்ஸ்மேன் நான்"..

சிறிது நேர விவாதத்துக்கு பிறகு தருமி கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறார்....

பிரிக்க முடியாதது என்னவோ?

நம்மாளுகளும் பெவிலியனும்

சேர்க்க கூடாதது?

நம்மாளும் பார்ட்டிகளும்..

சேர்ந்தே இருப்பது?

நம்மாளும், செல்போனும்

சேராமல் இருப்பது?

நம்மாளு பேட்டும் எதிர் டீம் பாலும்...

சொல்ல கூடாதது

நம்ம ஆட்டம்

சொல்ல கூடியது

எதுவுமே இல்லை

செஞ்சுகிட்டே இருக்கிறது?

விளம்பர சூட்டிங்

செய்யாமயே இருக்கிறது?

பிட்ச்ல பேட்டிங்

நம்மாளு அறியாதது?

அடித்து ஆடுவது..

நன்றாக அறிந்தது?

குடித்து ஆடுவது...

விக்கெட் என்பது?

நாம் வேகமாக இழப்பது...

ரன் என்பது

மற்றவர்கள் வேகமாய் எடுப்பது...

பவுண்டரி என்பது..

எங்கேயோ இருப்பது...

சிக்ஸர் என்பது..

எட்டாமலே இருக்குது..

பால்னு சொன்னா?

நோ பால்

அதுக்கு மேல

வைடு பால்

விக்கெட்டுக்கு

சேவாக்

விளம்பரத்துக்கு

சச்சின்

அடக்குவது

ஐ சி சி

அமுக்குவது

பி சி சி

அய்யா நீர் வீரர் நீர் வீரர்...

நீர்?

நான் வீரர் இல்லை நான் அம்பயர்.

புதன், ஏப்ரல் 25, 2007

புலம்பல் மணி

நாட்டுல எவ்வளோ விதமான ஆளுங்க இருக்காங்க... சில பேருக்கு சமுதாயத்து மேல அக்கறை இருக்கும்... சில பேருக்கு இருக்காது.. சமுதாயத்து மேலயும், நாட்டு மேலயும் அக்கறை இருக்கிறவங்க பல விதம்..

சில பேரு தப்பு நடக்கும் போது உடனே ரியாக்ட் பண்ணி தப்பு பண்றவங்களை ஒரு அறை, ஒரு முழுசு விட்டுருவாங்க... சில பேரு மொட்டை பெட்டிஷன் முடி வெச்ச பெட்டிஷன் எல்லாம் போட்டுருவாங்க... சில பேரு இந்து, சந்து பொந்து எல்லாத்தலயும் எழுதிருவாங்க...
பல பேரு பஸ்ஸுல், ட்ரெயின்ல, சலூன்ல எல்லாம் மூஞ்சி முகம் தெரியாதவங்க கூட எல்லாம் தொண்டை கிழிய வாக்குவாதம் பண்ணுவாங்க...

ஆனா சிலபேரு பாருங்க … தனக்கு தானே புலம்பிப்பாங்க.. புலம்பல்னா புலம்பல் அப்படியொரு புலம்பல்... அந்த மாதிரி ஒரு கேரக்டர் தான் நம்ம "புலம்பல் மணி"....

(அப்பாடா ஒரு வழியா கேரக்டர் இன்ட்ரொடக்க்ஷன் முடிச்சாச்சு...)

இனி அப்பப்ப அவர் வந்து புலம்பரதை உங்களுக்காக ஒட்டு கேட்டு சோல்லலாம்னு இருக்கேன்...

லேட்டஸ்ட் புலம்பலை கேளுங்க..

"என்னாங்கடா... பாராளுமன்றதுக்கு போய் அரசாங்கம் தப்பு பண்ணா கேள்வி கேளுங்கடான்னு அனுப்பி வெச்சா.. இவனுங்க விதவிதமா தப்பை பண்ணிட்டு போலீசுக்கும், CBI-கும் பதில் சொல்லிட்டு இருக்கானுங்க...

இன்னொரு பக்கம் விளையாட ஒரு க்ரூப்பை அனுப்பிச்சா அவனுங்க பாலிடிக்ஸ் பண்ணிக்கிட்டு திரியரானுங்க.. அரசியல்வாதிங்க விளையாடிட்டு இருக்கானுங்க...

என்ன பண்றதுன்னே தெரியலை...

சரி நாட்டுப்பற்றை வளர்க்க தியாகிகளுக்கு அங்கங்கே சிலை வைக்கலாம்.. நம்ம ஏரியால எந்த தியாகிக்கு சிலை வைக்கலாம்னு பசங்க கிட்ட கேட்டேன்பா..
ஒட்டு மொத்தமா அபிஷேக் பச்சன்னு சொல்றானுங்க.. எங்க போய் அடிச்சிகறது?"

செவ்வாய், ஏப்ரல் 24, 2007

கோவில்கள்

நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

நீங்கள் கஷ்டபட்டு அங்குலம் அங்குலமாக நகர்ந்து கடவுளை தரிசிக்க நிற்கும் போது... 100, 500, 1000 என பணத்தை வாரி இறைத்து, உங்களை தாண்டி சென்று கடவுள் அருளை பெறுபவர்களை பற்றியும்? அவர்களுக்கு பணத்தை பெற்று கொண்டு அவ்வசதியை அளிக்கும் கோவில்களை பற்றியும்..

உங்களை ஒரு அரை நிமிடம்... இல்லை இல்லை 20 நொடிகள் கூட நிற்க விடாமல் 'ஜரகண்டி', 'ஜரகண்டி' என்று விரட்டும் கோவில் நிர்வாகிகள், பணமும், அதிகாரமும் படைத்தவர்களை பூரண கும்ப மரியாதையோடு வரவேற்று கடவுள் சிலை அருகிலேயே அமர வைத்து எவ்வளவு வேண்டுமானலும் தரிசித்து கொள்ள அனுமதிப்பது பற்றி?

கேட்பாரன்றி ஆயிரக்கணக்கான கோவில்களும், கடவுள்களும் இருக்க ஒரு சில குறிப்பிட்ட கோவில்களுக்கே எல்லோரும் வாரி வழங்குவது ஏன் என்பது பற்றி?

சமதர்மத்தையும், அருளையும் போற்றி பரப்புவதற்காக அமைக்கப்பட்ட கோவில்களும், மடங்களும் லாபங்களை குறித்து செயல்படும் வியாபார தலங்களாகவும், சுற்றுலா தலங்களாகவும் மாறி போனது பற்றி...?

யாரது? எங்களுக்கு கோவிலில் நுழையவே அனுமதி இல்லை... ஆதலால் இந்த கேள்வி எங்களுக்கு அநாவசியம் என்றது?

அதெல்லாம் பழைய கதை நண்பர்களே... கோவில்கள் மத, சாதி வெறியிலிருந்து பண வெறிக்கு மாறிவிட்டன.

ஏழைகள் எந்த சாதியாயினும் எள்ளி நகையாட படுகின்றனர்... பணக்காரர்களின் சொர்க்கமாகவும், ஏழைகளின் நரகமாகவும் இந்த உலகம் மாறி கொண்டு வருகிறது.. முன்னெப்போதையும் விட வேகமாய்.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2007

சிரிங்க... சிந்திக்காதீங்க... (2)

தலைவரே...

மழையை வரவழைக்கிற ரசாயன பவுடரை தூவினா போதும்னு மழை வரும்னு தலைவர்கிட்ட சொன்னது தப்பா போச்சு....

ஏன்?

ரசாயன பவுடர் கிடைக்கலைன்னா டால்கம் பவுடராவது தூவுங்கன்னு பப்ளிக்கா சொல்லி மானத்தை வாங்கிட்டாரு...
------------------------------------------------------------------------------------------------


ஆனாலும் தலைவர் ரொம்ப மோசம்..

ஏன் என்னாச்சு?

நேத்து மழைனால மீட்டிங் கேன்சல் ஆனதுக்கு எதிர்க்கட்சி சதி தான் காரணம்னு பத்திரிகைக்கு பேட்டி கொடுத்துருக்காராம்.
------------------------------------------------------------------------------------------------


ஆனாலும் நம்ம தலைவர் அநியாயத்துக்கு புளுக ஆரம்பிச்சிட்டார்.

ஏன் அப்படி சொல்றே?

அடுத்த வாரம் நம்ம கட்சி சார்பா பறக்கும் பிளேனை வானத்தில் படுத்து மறியல் பண்ணப் போறதா சொல்லியிருக்கார்.
------------------------------------------------------------------------------------------------


தலைவரோட ஊழல் எல்லை மீறி போய்கிட்டிருக்கு..

என்ன விஷயம்?

சென்னை ஜார்ஜ் கோட்டை அகழிக்கு தண்ணி விட்ட வகையில 5 கோடி செலவுன்னு சொல்லி ஊழல் பண்ணியிருக்கார்...
------------------------------------------------------------------------------------------------


சினிமா தயாரிப்பாளரா இருந்தவரெல்லாம் தலைவரானா இப்படி தான்...

என்னடா ஆச்சு?

நாம நடத்த போற பிரம்மாண்டமான விழாவுக்கு பட்ஜெட் எவ்வளவு? வினியோகஸ்தர் யாராவது கிடைப்பாங்களா?..ஏ சென்டர்ல தேறுமான்னு எல்லாம் கேட்டுட்டு திரியறாம்...
------------------------------------------------------------------------------------------------


எதுக்கு தலைவரை C.M திட்டினாரு?

கலப்படம் பண்றேன் பேர்வழின்னு தேங்காயெண்ணெய்ல மண்ணெண்ணையை கலந்துட்டு, கேட்டா தேங்காய் மண்ல தானே முளைக்குதுன்னு சால்ஜாப்பு சொல்றாராம்.
------------------------------------------------------------------------------------------------


தலைவருக்கு ஆனாலும் தலைக்கனம் ரொம்ப ஜாஸ்தி..

ஏன்பா?

நாம போன விழாவில பரிசளிச்ச கைக்கெடிகாரம் விலை கம்மின்னு காமிக்கறதுக்குகாக அதை கால்ல கட்டிட்டு அலையறாராம்.
------------------------------------------------------------------------------------------------


தலைவரு தன் தாத்தா பேரை பார்லிமென்ட்டுக்கு வைக்க ரொம்ப முயற்சி பண்ணார்.. முடியலை...

அப்புறம்..

அப்புறமென்ன? தாத்தா பேரை பார்லிமென்ட்டுன்னு மாத்தி வெச்சுட்டாரு...
------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, ஏப்ரல் 20, 2007

32 பேர் படுகொலை

ஜோ என்ற மாணவரின் வெறிச்செயல்...........

"இன்றைய பொருளாதாரத்தின் படி.. ஏழைகள் மேலும் ஏழைகளாகிக் கொண்டே போவார்கள். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே போவார்கள்..."

"இப்படியே உலகம் போனால் இருப்பவனிடத்தில் இல்லாதவன் பிடுங்கி தின்பான்..."

"வசதி படைத்தவன் தர மாட்டான்... வயிறு பசித்தவன் விட மாட்டான்..."

"கலாச்சாரமே இல்லாமல் இருப்பது தான் கலாச்சாரமாகி வருகிறது..."

படுகொலையின் பின்னனி, செய்தவரின் பின்னனி, சூழ்நிலை... வெறிச்செயலுக்கு அவர் கூறும் விளக்கங்கள்...

மேற்சொன்ன கருத்துக்கள், சம்பவத்தின் பின்னனி இவற்றிக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதாக எனக்கு படுகிறது...


பல கேள்விகளுக்கு விடை காண முடியாமல், அந்த இளைஞர் இப்படிப்பட்ட வெறிச்செயலை செய்திருப்பதாக படுகிறது... அந்த கேள்விகளுக்கு முன்பே அவருக்கு விடை கிடைத்திருக்குமானால் இந்த சம்பவமே நிகழ்ந்து இருக்காதோ...

அடக்குமுறைக்கும், ஆடம்பரத்துக்கும் எதிரான போராட்டங்கள் பல வகை... பல களம்.. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழியும், இடமும், அப்பாவிகளை இந்த இளைஞர் கொன்ற விதமும் அந்த ஆவேசத்தையே அர்த்தமில்லாமல் செய்து விட்டது...

இதற்கு இந்த உலக சமூகத்தில் இப்படிபட்ட ஏற்றத்தாழ்வுகளை படைத்து, மக்களை அதில் உழல விட்ட அனைவருமே வெட்கி தலைக் குனிந்து.. இறந்தவர்களிடமும், அவர்களின் குடும்பங்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்...

அனைவரின் ஆத்மாவும் சாந்தியடைய.. இறைவன் அருள் புரிவானாக..

முதலாம் ராஜேந்திரன்

சரித்திரம் என்றாலே எனக்கு இப்பொழுதெல்லாம் நினைவுக்கு வருவது சோழர்கள் தான்.

அதுவும் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், யவன ராணி போன்ற புதினங்களை படித்த பின்பு.... நாமும் அவர்கள் காலத்தில் வாழ்ந்திருக்கலாமே என்று கூட தோன்றுகிறது.

எவ்வளவோ மன்னர்கள், தளபதிகள், வீரர்கள். ஆனால் என்னைக் கவர்ந்தவர் முதலாம் ராஜேந்திரன்.

பல்லாயிரம் கடல் மைல்களுக்கு அப்பால் இருந்த கடாரம், ஸ்ரீ விஜயம் போன்ற நாடுகள் கூட அவன் இலக்கில் இருந்து தப்பவில்லை என அறியும் போது, எப்படிப் பட்ட பட்டறிவும், தொலைநோக்கும் உள்ள வீரனாக அவன் இருந்திருப்பான் என்று வியப்பாக இருக்கிறது.

பல்லயிரக்கணக்கான யானைகளையும், குதிரைகளையும், போர் தளவாடங்களையும், ஆட்களையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு அவ்வளவு தூரம் பயணப்படுவது என்றால், எவ்வளவு பெரிய, திறம் வாய்ந்த, அசாத்தியமான கடற்படை அவனிடத்தில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது.

முதலாம் ராஜேந்திரனின் வீர வாழ்க்கையை மையமாக வைத்து ஏதாவது புதினங்கள் வந்துள்ளனவா என்று அறிய ஆவல்.

(சாளுக்கிய சோழ மன்னர்களில் முதல்வனான முதலாம் குலோதுங்கனுடைய வரலாற்றை சுவைப்பட விவரிக்கும், விஷ்வக்சேனன் எழுதிய "பாண்டியன் மகள்" என்னும், கல்கி இதழில் தொடர்கதையாக வந்த புதினம் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது)

செவ்வாய், ஏப்ரல் 17, 2007

காற்றுள்ள போதே கார் வாங்குங்க...


காற்று சக்தியில் இயங்கும் கார்.

வியப்படைய வேண்டாம். காற்று சக்தி துணைக் கொண்டு இயங்கும் கார் இப்பொழுது சாத்தியாமாகியிருக்கிறது.

காற்று சக்தி என்றால் என்ன? அது எப்படி காரை இயக்கும்?

காற்று சக்தி என்பது உயர் அழுத்தத்தில்(90M3) ஒரு உருளைக்குள்(Cylinders) அடைக்கப்படும் காற்றின் வெளியேறும் சக்தியாகும்.(90M3 Compressed Air) உயர் அழுத்தத்தில் அடைக்க படும் காற்றானது சீராக வெளிப்படும் பொழுது எந்திரத்தின் குதிரையை(Piston) இயக்குமாறு எந்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த அதிசய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை பற்றிய சில தகவல்கள் இதோ உங்களுக்காக...

பத்து வருட ஆராய்ச்சிக்கு பின் "மோட்டார் டெவெலெப்மென்ட் ஆஃப் ஃபிரான்ஸ்"(Moteur Development International of France) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது இந்த கார்.
(இந்தியாவின் டாடா நிறுவனம் (Tata Motors) கூட வர்த்தக ரீதியாக இந்த வகை கார்களை தயாரிக்க இவர்களோடு ஒப்பந்தம் செய்திருப்பதாக ஒரு செய்தி கூறுகிறது)

மற்ற சாதாரண ரக கார்களை போல இந்த காரினால் எந்த சுற்றுப்புற சுகாதார சீர்கேடும் உண்டாகாது என்பது இந்த காரின் முக்கியமான அம்சமாகும். சாதரண எரிபொருள் கார்களை விடவும் இது மலிவானதாகவும் இருக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.(ரூ.350000)

இது இருவிதமான செயல்பாடுகள் கொண்ட இயந்திரங்களோடு வருகிறது.

ஒருமுக சக்தி - காற்றழுத்ததில் இயங்கும் இயந்திரம்.(Single energy compressed air engines)

பன்முக சக்தி - காற்றழுத்ததில்/எரிபொருளில் இயங்கும் இயந்திரம்.(Dual energy compressed air plus fuel engines)

ஒருமுக சக்தி கொண்ட இயந்திரங்கள் நகரத்தில் குறைந்த தூரம் செல்ல பயன்படும் கார்களில் பொருத்தப்படும்.(MiniCAT and CityCAT)

பன்முக சக்தி கொண்ட இயந்திரங்கள் அதிக தூரம் செல்லும் வாகனங்களில் பயன்படுத்தப்படும். உயரழுத்த காற்று கொள்கலன்க காலியாகும் போது எரிபொருள் உபயோகித்து வாகனத்தை செலுத்தலாம் என்பது இந்த வகை இயந்திரத்தின் கூடுதல் சிறப்பு.

இரண்டு வகை இயந்திரங்களுமே முறையே 2,4,6 கொள்கலன்கள்(Tanks-Cylinders)கோண்டவையாக இருக்கும்.
இதன் வேகம் மணிக்கு 50 KM (வேகத்தை மணிக்கு 220KM. ஆக அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன) . இதற்கு சாதாரண வேக அளவீட்டு கருவிகள் பொருத்தப்பட மாட்டா. இதற்கென ஒரு கணினி திரை அமைக்கப்பட்டிருக்கும். அதில் வேகம், இயந்திர சுழற்சி, எரிபொருள்/காற்று அளவு முதலியன குறித்த தகவல்கள் தெரியும். இது ஒரு அதிர்வில்லாத, மாசுப்படுத்தாத இலகு ரக காராக இருக்கும்.

ஒரு முறை எரிபொருளை(காற்று) நிரப்ப ரூ.90 மட்டுமே செலவாகும். சந்தை இதற்கென தயாராகும் போது.. உள்ளூர் எரிபொருள் நிலையத்திலேயே 2-3 நிமிடத்தில் எரிபொருளை(காற்று) நிரப்பிக் கொள்ளலாம். இது 200 KM வரை ஓடும். இதனுள் அமைக்கப்பட்டிருக்கும் சிறிய ரக கருவியை உபயோகித்து 2-3 மணி நேரத்தில் வீட்டிலேயே கூட காற்றை நிரப்பிக் கொள்ளலாம்.

இந்த கார் வெளியிடும் உபயோகிக்கப்பட்ட காற்று சுத்தமானதாக, 0-15 டிகிரி பதத்தில் தான் இருக்கும். அதே காற்று மறுசுழற்சி முறையில் காரை குளிரூட்ட பயன்படும். தனியாக AC இயந்திரம் பொருத்த தேவை இல்லை.

மேலும் தகவல்களுக்கு http://www.theaircar.com/ என்னும் இணைய தளத்தை பாருங்கள்.